Monday, March 3, 2014

1096


சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் அநேகமாக 1197 என்று நினைக்கிறேன். முதல் மதிப்பெண் பெற்றது ஒரு பெண் குழந்தை என்றும் நினைக்கிறேன். இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதற்குக் காரணம் உறுதியாய் எனக்குத் தெரியாது என்பதுதான்.

நண்பர்கள் கேட்கிறார்கள்,

“மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் நீயே இப்படி சொல்வது சரிதானா?”

சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மதிப்பெண்கள், முதலிடம், மூன்றாமிடம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகப் படுவதில்லை. யாருக்கேனும் இது தவறாகப் படும் பட்சத்தில் அவருக்கான எனது பதில்,

“இருந்துவிட்டுப் போகட்டும்”

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தன் நிதிப் பள்ளிகள் என்கிற வகையில் பெரிதும் சிறிதுமாய் ஏறத்தாழ 6000 மேல் நிலைப் பள்ளிகளாவது தேறும். இவை தவிர ஆங்கில வழிப் பள்ளிகள் வேறு.

 நிறையக் குழந்தைகள் 1100 மதிப்பெண்களுக்குமேல் பெற்றிருக்கிறார்கள். 1148  மதிப்பெண்கள் பெற்ற ஒரு குழந்தைக்கு மருத்துவம் அரசுக் கோட்டாவில் கிடைக்கவில்லை. சக ஆசிரியர் ஒருவரின் மகள் 1123 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாள். அவளுக்கு அவர்கள் விரும்புகிற பொறியியல் கல்லூரிகள் எதிலும் இடம் கிடைக்காது என்று சோர்ந்து போயிருக்கிறார்.

1115 மதிப்பெண்கள் எடுத்திருக்கக் கூடிய ஒரு குழந்தைக்கு மிகுந்த யோசனைக்குப் பிறகே இளங்கலை இயற்பியல் பிரிவில் சேர்த்துக் கொண்டார் அருட்சகோதரி ஒருவர்.

காரணம் இதுதான். 1150 மதிப்பெண்களுக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே பிரசித்தி பெற்ற கல்லூரிகளில் அரசு கோட்டாவின்வழி இடம் கிடைக்காது போலிருக்கிறது. மதிப்பெண்களை அள்ளிக் குவித்திருக்கிறார்கள் பிள்ளைகள்.

வஞ்சனையோ கஞ்சத்தனமோ இல்லாமல் வாழ்த்திவிடவேண்டும்.

ஆனால் இன்னொரு புறமும் இருக்கிறது

மேற்சொன்ன 6000 பள்ளிகளில் ஏறத்தாழ 3000 பள்ளிகளிலாவது ஆயிரத்திற்கும் குறைவான மதிப்பெண்களே குறைவான மதிப்பெண்களாக இருந்திருக்கும்.

எனில்,

மாநில அளவிலான இடத்தை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு புறத்தைப் பார்ப்போம். 1197 எடுத்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற அதே குழந்தைதான் அந்தப் பள்ளியிலும் முதல் மாணவி.

அதே நேரத்தில் 900 மதிப்பெண்களைப் பெற்ற ஒரு குழந்தை அவனது அல்லது அவளது பள்ளியில் முதல் மாணவணாகவோ முதல் மாணவியாகவோ வந்திருக்க வாய்ப்பு உண்டு.

1197 மதிப்பெண்கள் பெற்ற மாணவியின் பெயர் அவளது பள்ளியின் BOARD OF HONOURS இல் பதிக்கப் படும் எனில் 900 மதிப்பெண்கள் பெற்று அவனது பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனது பெயர் அவனது பள்ளியின் " BOARD OF HONOURS" இல் பதிக்கப் படும்.

அவன் 1197 ம் இவன் 900 மும் பெறுவதற்கு அவர்களது படிப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் சமூகப் பின்புலம் மட்டுமல்ல பள்ளியின் சமூகப் பின்புலமும் சேர்த்தே பரிசீலிக்கப் படவேண்டும்.

அந்தந்தப் பள்ளிகளின் கட்டுமான, கல்வி மற்றும் சமூகக் கட்டமைப்புகளும் சேர்ந்துதான் இரண்டு பள்ளிகளின் முதல் மதிப்பெண்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தத் தீர்மானிக்கின்றன.

அது 1197, இது 900. ஆனால் அது அது அந்தந்தப் பள்ளிகளின் முதல் மதிப்பெண்கள்.

அதை அந்தப் பள்ளி கொண்டாடுமெனில் இதை இந்தப் பள்ளி உச்சி மோர்ந்து கொண்டாடவேக் கொண்டாடும்.

இதில் இன்னொரு விஷயம் உண்டு.

900 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் பெயர் இந்தப் பள்ளியில் “BOARD OF HONOURS "இல் பதியப்பெறும் ஆனால் 1197 மதிப்பெண்கள் பெற்ற குழந்தை படித்த பள்ளியில் படிக்கும் ஒரு பிள்ளை 1170 பெற்றிருந்தாலும் அவன் பெயர் பலகையில் ஏறாது.

எனில்,

900 ஐ விட 1170 குறைவா எனில், இந்தப் பள்ளியில் 900 என்பது அந்தப் பள்ளியின் 1170 க்கு இணையானதே. மேலே பார்த்த விஷயங்களே இதற்கானக் காரணங்கள்.

அந்த வகையில் எங்கள் பள்ளியில் சென்ற ஆண்டு 975 மதிப்பெண்கள் பெற்றுமுதலிடம் பெற்ற ரஞ்சிதவள்ளி என்ற குழந்தைக்கு “ரோட்டரி”, மற்றும் “லயன்ஸ்” போன்ற அமைப்புகளும் சில தொண்டு நிறுவனங்களும் பொருளும் பரிசுகளுமாக கொடுக்கவே செய்தன.

1197  முதற்கொண்டு 750 மதிப்பெண்கள்வரை பெற்று அந்தந்த பள்ளிகளில் முதலிடத்தைப் பெற்றவர்கள் அனைவருமே இரண்டாண்டுகள் பள்ளிகளுக்கு சென்று படித்து, ஆசிரியர்களின் தொடர் கண்கானிப்பையும் ஆலோசனைகளையும் பெற்று, சிறப்பு வகுப்புகள் மற்றும் தனி வகுப்புகள் சென்று அவ்வப்போது தேர்வுகளை எழுதி, தயாரித்து கடந்து வந்தவர்கள்.

ஆனால் பள்ளியின் வாசலை ஒரு நாளும் மிதிக்காமல், எந்த ஆசிரியரின் வழிகாட்டுதலுமில்லாமல், சிறையிலிருந்தபடியே தேர்வெழுதி பேரறிவாளன் 1096 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான்.

பொதுவாகவே நல்ல மதிப்பெண்களை எடுத்த பிள்ளைகளை படிக்க வைக்க வசதி இல்லாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோரைப் பார்த்து ஏன் படிக்கிற பிள்ளையை இப்படி வீணடிக்கிறீங்க என்று கேட்போம்.

ஆனால் 1096  மதிப்பெண்கள் பெற்ற, நன்கு படிக்கிற பிள்ளைக்கு பணமோ பரிசுகளோகூட வேண்டாம்.

கொல்லவே கொல்வோம் என்றால் எப்படி?

இரண்டு பிள்ளைகளைப் பெற்ற ஒரு தந்தை இரண்டு கை ஏந்தி யாசிக்கிறேன்

அவனையும் மற்ற இருவரையும் உசிரோடு விடக்கூடாதா? 

10 comments:

  1. 1096 மதிப்பெண்கள் இருக்கட்டும்... உயிருக்கு மதிப்பே இல்லையா...?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபால்

      Delete
  2. உலுக்குகின்ற பதிவு தோழர்..

    ReplyDelete
  3. பலநூறு கதைகள் படித்தாலும், ஜெயகாந்தனின் பல கதைகள் மறக்காமல் இருப்பதில் முக்கியக் காரணம் தலைப்புகள். ஜே.கே.யின் கதையைச் சுருக்கி வச்சா தலைப்பு வந்துவிடும்! அதுமாதிரி... உன் கட்டுரைகளின் உச்சம் அவற்றின் தலைப்பு எட்வின்! இந்த 1096ஐ பார்த்தவுடனே புரிந்துகொண்டேன் என்ன சொல்லப்போறேன்னு. அதையும் அருமையாச் சொல்லிட்டே! (கா.சி.கட்டுரையின் மிச்சம்?) அருமையடா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அண்ணா

      Delete
  4. மதிப்பெண்கள் அல்ல குழந்தைகள் .தற்போது தங்களின் குழந்தைமை பண்புகளை தொலைத்து மதிப்பெண்கள் விரட்ட ஓடுவது சிந்தனைக்குரியது .தவறே செய்தாலும் சிறையில் இருந்தால் மனத்தில் வன்முறை எண்ணங்களே வளரும் ஆனால் தூக்கு தலைக்கு மேல் தொங்கிய நிலையிலும் கல்வியின் மூலம் தன்னை மெருகேற்றிக்கொண்ட பேரறிவாளன் பண்பு பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் அற்புதம் அம்மாவிற்கும் ,பேரறிவாளனுக்கும் .

    ReplyDelete
  5. மதிப்பெண்கள் அல்ல குழந்தைகள் .தற்போது தங்களின் குழந்தைமை பண்புகளை தொலைத்து மதிப்பெண்கள் விரட்ட ஓடுவது சிந்தனைக்குரியது .தவறே செய்தாலும் சிறையில் இருந்தால் மனத்தில் வன்முறை எண்ணங்களே வளரும் ஆனால் தூக்கு தலைக்கு மேல் தொங்கிய நிலையிலும் கல்வியின் மூலம் தன்னை மெருகேற்றிக்கொண்ட பேரறிவாளன் பண்பு பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் அற்புதம் அம்மாவிற்கும் ,பேரறிவாளனுக்கும் .

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...