Sunday, January 29, 2012

திருவிழாவில் தொலையாத வாசகன்

சாக்ரட்டீஸ் கையில் விஷக் குப்பி வந்து விட்டது.  அருந்திப் பறந்துவிட வேண்டும், அவ்வளாவுதான். அந்த நேரம் பார்த்து ஒரு காவலாளி ஒரு பாடலைப் பாடுகிறான். அந்த ராகம் பிடித்துப் போகவே அந்த ராகத்தைக் கற்றுத் தருமாறு கேட்கிறான் சாக்ரட்டீஸ்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஒலிக்கப்போகும் ஆலய மணியோசையைக் கேட்க அநேகமாக இவன் இருக்கப் போவதில்லை. அவ்வளவு ஏன், இந்த ராகத்தை முழுவதுமாகக் கற்பதற்கு போதுமான அவகாசம் இவனுக்கு இருக்கப் போவதில்லை. இவன் ஏன் இப்படி அலைகிறான்? என்பது மாதிரி அந்தக் காவலாளி பார்க்கவே, புரிந்துகொண்ட சாக்ரட்டீஸ் சொன்னானாம்,

" i want to learn one more thing before i die"

கூடுதலான ஒரு விஷய ஞானத்தோடு சாக விரும்பியதாக சொல்லியிருக்கிறான்.

மரணத்தை மகிழ்ச்சியோடு சாப்பிட்ட பகத் கொட்டடிக்கு அழைத்துப் போக ஆள் வரும் வரைக்கும் படித்துக் கொண்டிருந்தான் என்பது வரலாறு. மரணத்திற்கும் அவனுக்கும் ஒரு நூறு அல்லது நூற்றி ஐம்பது தப்படிகளே மீதம் இருக்கும் தருவாயிலும் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறான். அவனது விடுதலை வேட்கை, தியாகம் எல்லாம் எவ்வளவு உசத்தியானதோ அதற்கு கொஞ்சமும் குறைச்சலானதல்ல அவனது ஞானத்திற்கான தேடல்.

 அறுவை சிகிச்சைக்கு முன்னர் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த அண்ணா, “ எதற்கும் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நூலை வாசித்து முடித்ததும் அறுவையை வைத்துக் கொள்ளலாமே” என்று கேட்டதாக எங்கோ வாசித்திருக்கிறேன். ஒருக்கால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனால் தொடங்கிய புத்தகத்தை முடிக்காமலே,  இருபத்தி ஐந்து கிராம் குறைவான அறிவோடு செத்து விடுவோமோ என்று பயந்து தொலைத்திருக்கிறார்.

நூறு விழுக்காடு அவர்தானா என்று தெரியவில்லை. பேரதிக அளவிற்கு அநேகமாக மார்க்ஸ்தான், உங்களுக்கு அதிகம் பிடித்த மூன்று விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்று கேட்ட போது இப்படி பட்டியலிட்டாராம்,

புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்.

தங்களுக்கு கல்லறைக் குழி வெட்டுவதற்கு ஆட்கள் மயானம் போயிருக்கிறார்கள் என்பதை அறிந்த பிறகும் கிடைக்கிற அவகாசத்தில் ஏதேனும் புதிதாய் கற்றுக் கொண்டு சாக ஆசைப் பட்டிருக்கிறார்கள் .

படித்து கிடைக்கும் ஞானத்தை பயன்படுத்த நிச்சயமாய் இருக்கப் போவதில்லை என்பது தெரிந்த பின்னரும் இருக்கிற ஞானத்தோடு ஒரு புளியங்கொட்டை அளவுக்கேனும் கூடுதலாக்கிக் கொண்டுதான் சாவது என்று யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்தவர்கள் போல் வாசித்து தீர்த்திருக்கிறார்கள்.

புதிதாய் கற்க, அறிவை விரிவு செய்ய, இருக்கிற அறிவில் ,புரிதலில், ஞானத்தில், படிந்து கிடக்கிற அழுக்குப் படிமங்களை வெளுத்துத் துவைத்து சலவை செய்ய, மொத்தத்தில் மனிதப் படுத்த தற்போது நூல்களை விட்டால் வழி ஏது?

புத்தகத்திற்கும் மனிதனுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

இன்றைய தேதியில், மினி பேருந்தே செல்லாத ஊர்களிலும் அனைத்து சிம் கார்டுகளும் ரீச்சார்ஜ் கார்டுகளும் கிடைக்கும் இந்தக் காலத்திலும் எல்லா ஊர்களிலும் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?

உழவர் சந்தை, வாராந்திர சந்தை, ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, பலசரக்கு சந்தை போன்று பலத்தரப்பட்ட புத்தகங்களை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்யும் புத்தக சந்தைகள் போதுமான அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, திருப்பூர், என்று சில புத்தகக் கண்காட்சிகள் உண்டுதான். எனினும் சென்னை அளவிற்கு வேறு எதனையும் பொருத்திப் பார்க்க இயலாது.

“ சர்வ தேசிய அளவிலான இந்திய நிறுவனங்களின் எண்பது கடைகளை உள்ளடக்கி அறுநூறு கடைகள், கோடிக் கணக்கான புத்தகங்கள், எட்டு லட்சம் பார்வையாளர்கள், அறுபது லட்சம் புத்தகங்கள் விற்பனை என்று இந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சி கலைகட்டியது” என்கிற மாதிரி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. R.S சண்முகம் அவர்கள் கூறியுள்ளார்.

ஆனாலும் கொண்டாடத் தக்க அளவுக்கு இந்தப் புள்ளி விவரத்தில் போதுமான அளவுக்கு ஏதேனும் இருக்கிறதா?

போதாது, போதாது, போதவே போதாது.

“கடந்த ஆண்டு ஏழு லட்சம் பார்வையாளர்கள், ஐம்பது லட்சம் புத்தகங்கள் என்ற நிலையிலிருந்து இந்த ஆண்டு எட்டு லட்சம் பார்வையாளார்கள், அறுபது லட்சம் புத்தகங்கள் என்று முன்னேறியிருக்கிறோம்” என்று நகரும் சண்முகம் அவர்களின் கூற்றில் பொய் இல்லை என்றாலும் கொண்டாடுவதற்கும் எதுவும் இல்லை.

சென்றப் பொங்கலுக்கும் இந்தப் பொங்கலுக்கும் ஏறத்தாழ முப்பது கோடிரூபாய்க்கு அதிக விற்பனை என்ற டாஸ்மார்க் கணக்கைப் பார்க்கும் போது எட்டு லட்சம் பார்வையாளர்கள் அறுபது லட்சம் நூல்கள் என்பதிலோ அல்லது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சம் பார்வையாளர்களும் பத்து லட்சம் நூல்களும் அதிகம் என்பதிலோ சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

ஏறத்தாழ எட்டரை கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில், அதிலும் குறிப்பாக முப்பது லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையில் மக்கள் திரள் வாழ்கிற பெரு நகரத்தில் பதி மூன்று நாட்கள் நடந்த கண் காட்சி என்று பார்க்கும் போது மனது வலிக்கவேகூட செய்கிறது ஆனாலும் , சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்து விட வில்லை என்பதுகூட ஆ|றுதலான விஷயம்தான். இந்த அளவிற்கான முன்னேற்றத்திற்கேகூட நாம் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

இந்தமுறை பல புதிய விஷயங்களை அமைப்பினர் கொண்டு வந்திருந்தார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல ஒன்று உண்டு. ஒவ்வொரு நாளும் படைப்பாளிகளையும், வாசகர்களையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தார்கள்.

அன்று எழுத்தாளர் பாமா அவர்களோடு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கத்தில் போடப் பட்டிருந்த நாற்காலிகள் எல்லாம் நிரம்பி வழிய, ஒரு இருபது பேர் அரங்கின் உள்ளே தரையில் அமர்ந்திருந்தனர். இது போக அரங்கின் மூன்று பக்கங்களிலும் ஒரு எழுபது எண்பது பேர் நின்றிருந்தனர்.

 நமக்கும் வெளியே நிற்பதற்குத்தான் வாய்ப்பு கிடைத்தது.

“எழுத எழுத மனது இலகுவானது. அழிக்கப்பட்ட வாழ்க்கையின் எளிமையும், இனிமையும் எனக்குள் முளைவிட ஆரம்பித்தன. பழைய மண்வாசனையுடன் புதியதொரு வளர்ச்சியைக் காண முடிந்தது. வாழ வேண்டும் என்றதொரு தாகமும், வேகமுமெனக்குள் தலைதூக்கின” என்று தனது எழுத்து குறித்து சரியாய் சொன்ன பாமாவோடு நேர்கானல் என்பது வழக்கத்தைவிடவும் சற்று கூடுதலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாமா ஒரு பெண், அவர் ஒரு தலித், அவரை எப்படி மடக்கலாம் என்ற திட்டமிடலோடு சிலர் கங்கனங் கட்டிக் கொண்டு வந்திருந்தது தெரிந்தது.

அப்படி இப்படி சுற்றி வளைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மேட்டுக் குடியினரும் தலித்துகளும் ஒன்றுதானே என்ற ஆபத்தான கேள்வியை ,அது எப்படி சரியாகும்?

பொருளாதாரத்தில் ஒரு தலித்தைவிட ஒரு அய்யர் மிகவும் பின் தங்கியிருந்தாலும் அவர் ஒரு போதும் தலித்தை சமமாகப் பாவிக்க மாட்டார். அம்பேத்கரை விடவும் படிப்பிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கி இருந்த பிராமணர்கள் கூட அம்பேத்கரை ஒரு சக மனிதனாகவே மதிக்க மறுத்த போது இது எப்படி சாத்தியம்? என்ற பாமாவின் பதில் உன்மையை தோலுரித்துக் காட்டியது.

ஒருவர் வலிந்து கட்டிக் கொண்டு சங்கராசாரியாரைப் பற்றி ஏதேனும் சொல்லுங்களேன் என்ற போது இன்னும் கொஞ்சம் கடுமையாக இருந்திருக்கலாம் என்கிற அளவில்தான் பாமாவின் பதிலை எடுத்துக் கொள்ள முடிந்தது.

படைப்பாளி என்கிற வகையில் நீங்கள் பெண்ணா? தலித்தா? என்றகேள்வி நாம் பெரிதும் மதிக்கிற பெண் படைப்பாளியிடமிருந்தே வந்தது கொஞ்சம் கவலையைத் தந்தது. இரண்டும் தான் என்பதை தங்களது அனுபவத்திலேயே கற்று வைத்திருக்கும் அவர்கள் ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? என்பதுதான் புதிரே.

நேர்காணல் முடிந்து ஞாநியோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் ஞாநியிடம் வந்து நீங்கள் ஏன் பிராமண எதிப்பாகவே எழுதுகிறீர்கள்? என்று வினவிய போது ” நான் ஒரு ப்ரோ ஹ்யூமன், அது பிராமண எதிர்ப்பாகப் படுமானால் அதை இன்னும் வலுவாகவே செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஞாநி சொன்னதுதான் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னை மகிழ்வித்த ஒன்றாகப் பார்க்கிறேன்.

இப்படி புத்தகங்களைத் தாண்டியும் நிறைய இருந்தது கண்காட்சியில்.

மக்களை இழுக்கவும் , வாங்கச் செய்யவும் இன்னும் ஏராளம் செய்ய வேண்டும். இல்லையேல் புத்தகத் திருவிழாவில் பயனைக் கட்டிக் கொண்டு போவது ஹோட்டல்காரராகத்தான் இருக்கும்.




6 comments:

  1. புள்ளி விவரங்கள் தவிர்த்து, எனக்கென்னவோ தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு உட்பட்டுள்ள இக்காலத்தில் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டது போலவே தோன்றுகிறது.எழுத்துக்கள் அதற்காகவே படிக்கப் பட வேண்டும். யார் எழுதியது என்பது அவ்வளவு முக்கிய மல்ல என்பதே என் கருத்து. இன்னமும் சாதி ஒப்பீடலில் பிராமணர் மட்டுமே சாதித்துவம் பார்க்கிறார்கள் என்பதுபோல் எழுதப் படுவதும் எண்ணப் படுவதும் தவறு என்றே தோன்றுகிறது. சாதி வேற்றுமை காட்டுவதில் மற்ற உயர்சாதிகளெந்த விதத்திலும் குறைவிலை என்பதும் நிதர்சனம். எது எப்படி இருந்தாலும் சாதி ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

    ReplyDelete
  2. ஒரு தலைமுறை பணம் தான் குறிக்கோள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால் புத்தகங்கள் பக்கம் திரும்பவில்லை அவர்களின் வழித்தோன்றல்கள் புத்தகங்களை நோக்கி திரும்புவது கடினமான காரியம் தான்... இருப்பினும் நடக்க வேண்டிய விடயம்...

    ReplyDelete
  3. புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மட்டும் எல்லோருக்கும் வந்துவிட்டால் அப்புறம் என்ன பிரச்சினை? நினைக்கவே எத்தனை இன்பமாக இருக்கிறது உங்கள் பதிவு. காத்திருக்கலாம். புத்தகங்கள் வெல்லும்.

    ReplyDelete
  4. புதிதாய் கற்க, அறிவை விரிவு செய்ய, இருக்கிற அறிவில் ,புரிதலில், ஞானத்தில், படிந்து கிடக்கிற அழுக்குப் படிமங்களை வெளுத்துத் துவைத்து சலவை செய்ய, மொத்தத்தில் மனிதப் படுத்த தற்போது நூல்களை விட்டால் வழி ஏது?

    அற்புத‌ம் அற்புத‌ம்!

    க‌ண்காட்சி ப‌ற்றிய‌ செய்திக‌ள் ந‌றுக் சுறுக் வெடுக்.

    ReplyDelete
  5. அருமை..

    புத்தகம் என்பது அறிவுப்பெட்டகம். அடுத்த தலைமுறைக்கு நம்மையும் முன்னோர்களையும் சொல்லும் ஒரு காலதூதன்.

    ReplyDelete
  6. வாசிப்பின் மீதான ஈர்ப்பு மக்களிடம் வருவதற்கு இன்னும் நிறைய மெனக்கெடவேண்டும். தங்கள் முயற்சியும் அம்மெனக்கெடலில் ஒரு பங்கு என்று நினைக்கும்போது மகிழ்வாக உள்ளது.


    புத்தகத் திருவிழா பற்றிய விவரங்களும், பாமா அவர்களின் நேர்காணல் விவரங்களும் அறியத் தந்ததற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...