Sunday, January 29, 2012

திருவிழாவில் தொலையாத வாசகன்

சாக்ரட்டீஸ் கையில் விஷக் குப்பி வந்து விட்டது.  அருந்திப் பறந்துவிட வேண்டும், அவ்வளாவுதான். அந்த நேரம் பார்த்து ஒரு காவலாளி ஒரு பாடலைப் பாடுகிறான். அந்த ராகம் பிடித்துப் போகவே அந்த ராகத்தைக் கற்றுத் தருமாறு கேட்கிறான் சாக்ரட்டீஸ்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஒலிக்கப்போகும் ஆலய மணியோசையைக் கேட்க அநேகமாக இவன் இருக்கப் போவதில்லை. அவ்வளவு ஏன், இந்த ராகத்தை முழுவதுமாகக் கற்பதற்கு போதுமான அவகாசம் இவனுக்கு இருக்கப் போவதில்லை. இவன் ஏன் இப்படி அலைகிறான்? என்பது மாதிரி அந்தக் காவலாளி பார்க்கவே, புரிந்துகொண்ட சாக்ரட்டீஸ் சொன்னானாம்,

" i want to learn one more thing before i die"

கூடுதலான ஒரு விஷய ஞானத்தோடு சாக விரும்பியதாக சொல்லியிருக்கிறான்.

மரணத்தை மகிழ்ச்சியோடு சாப்பிட்ட பகத் கொட்டடிக்கு அழைத்துப் போக ஆள் வரும் வரைக்கும் படித்துக் கொண்டிருந்தான் என்பது வரலாறு. மரணத்திற்கும் அவனுக்கும் ஒரு நூறு அல்லது நூற்றி ஐம்பது தப்படிகளே மீதம் இருக்கும் தருவாயிலும் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறான். அவனது விடுதலை வேட்கை, தியாகம் எல்லாம் எவ்வளவு உசத்தியானதோ அதற்கு கொஞ்சமும் குறைச்சலானதல்ல அவனது ஞானத்திற்கான தேடல்.

 அறுவை சிகிச்சைக்கு முன்னர் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த அண்ணா, “ எதற்கும் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நூலை வாசித்து முடித்ததும் அறுவையை வைத்துக் கொள்ளலாமே” என்று கேட்டதாக எங்கோ வாசித்திருக்கிறேன். ஒருக்கால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனால் தொடங்கிய புத்தகத்தை முடிக்காமலே,  இருபத்தி ஐந்து கிராம் குறைவான அறிவோடு செத்து விடுவோமோ என்று பயந்து தொலைத்திருக்கிறார்.

நூறு விழுக்காடு அவர்தானா என்று தெரியவில்லை. பேரதிக அளவிற்கு அநேகமாக மார்க்ஸ்தான், உங்களுக்கு அதிகம் பிடித்த மூன்று விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்று கேட்ட போது இப்படி பட்டியலிட்டாராம்,

புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்.

தங்களுக்கு கல்லறைக் குழி வெட்டுவதற்கு ஆட்கள் மயானம் போயிருக்கிறார்கள் என்பதை அறிந்த பிறகும் கிடைக்கிற அவகாசத்தில் ஏதேனும் புதிதாய் கற்றுக் கொண்டு சாக ஆசைப் பட்டிருக்கிறார்கள் .

படித்து கிடைக்கும் ஞானத்தை பயன்படுத்த நிச்சயமாய் இருக்கப் போவதில்லை என்பது தெரிந்த பின்னரும் இருக்கிற ஞானத்தோடு ஒரு புளியங்கொட்டை அளவுக்கேனும் கூடுதலாக்கிக் கொண்டுதான் சாவது என்று யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்தவர்கள் போல் வாசித்து தீர்த்திருக்கிறார்கள்.

புதிதாய் கற்க, அறிவை விரிவு செய்ய, இருக்கிற அறிவில் ,புரிதலில், ஞானத்தில், படிந்து கிடக்கிற அழுக்குப் படிமங்களை வெளுத்துத் துவைத்து சலவை செய்ய, மொத்தத்தில் மனிதப் படுத்த தற்போது நூல்களை விட்டால் வழி ஏது?

புத்தகத்திற்கும் மனிதனுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

இன்றைய தேதியில், மினி பேருந்தே செல்லாத ஊர்களிலும் அனைத்து சிம் கார்டுகளும் ரீச்சார்ஜ் கார்டுகளும் கிடைக்கும் இந்தக் காலத்திலும் எல்லா ஊர்களிலும் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?

உழவர் சந்தை, வாராந்திர சந்தை, ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, பலசரக்கு சந்தை போன்று பலத்தரப்பட்ட புத்தகங்களை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்யும் புத்தக சந்தைகள் போதுமான அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, திருப்பூர், என்று சில புத்தகக் கண்காட்சிகள் உண்டுதான். எனினும் சென்னை அளவிற்கு வேறு எதனையும் பொருத்திப் பார்க்க இயலாது.

“ சர்வ தேசிய அளவிலான இந்திய நிறுவனங்களின் எண்பது கடைகளை உள்ளடக்கி அறுநூறு கடைகள், கோடிக் கணக்கான புத்தகங்கள், எட்டு லட்சம் பார்வையாளர்கள், அறுபது லட்சம் புத்தகங்கள் விற்பனை என்று இந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சி கலைகட்டியது” என்கிற மாதிரி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. R.S சண்முகம் அவர்கள் கூறியுள்ளார்.

ஆனாலும் கொண்டாடத் தக்க அளவுக்கு இந்தப் புள்ளி விவரத்தில் போதுமான அளவுக்கு ஏதேனும் இருக்கிறதா?

போதாது, போதாது, போதவே போதாது.

“கடந்த ஆண்டு ஏழு லட்சம் பார்வையாளர்கள், ஐம்பது லட்சம் புத்தகங்கள் என்ற நிலையிலிருந்து இந்த ஆண்டு எட்டு லட்சம் பார்வையாளார்கள், அறுபது லட்சம் புத்தகங்கள் என்று முன்னேறியிருக்கிறோம்” என்று நகரும் சண்முகம் அவர்களின் கூற்றில் பொய் இல்லை என்றாலும் கொண்டாடுவதற்கும் எதுவும் இல்லை.

சென்றப் பொங்கலுக்கும் இந்தப் பொங்கலுக்கும் ஏறத்தாழ முப்பது கோடிரூபாய்க்கு அதிக விற்பனை என்ற டாஸ்மார்க் கணக்கைப் பார்க்கும் போது எட்டு லட்சம் பார்வையாளர்கள் அறுபது லட்சம் நூல்கள் என்பதிலோ அல்லது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சம் பார்வையாளர்களும் பத்து லட்சம் நூல்களும் அதிகம் என்பதிலோ சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

ஏறத்தாழ எட்டரை கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில், அதிலும் குறிப்பாக முப்பது லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையில் மக்கள் திரள் வாழ்கிற பெரு நகரத்தில் பதி மூன்று நாட்கள் நடந்த கண் காட்சி என்று பார்க்கும் போது மனது வலிக்கவேகூட செய்கிறது ஆனாலும் , சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்து விட வில்லை என்பதுகூட ஆ|றுதலான விஷயம்தான். இந்த அளவிற்கான முன்னேற்றத்திற்கேகூட நாம் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

இந்தமுறை பல புதிய விஷயங்களை அமைப்பினர் கொண்டு வந்திருந்தார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல ஒன்று உண்டு. ஒவ்வொரு நாளும் படைப்பாளிகளையும், வாசகர்களையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தார்கள்.

அன்று எழுத்தாளர் பாமா அவர்களோடு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கத்தில் போடப் பட்டிருந்த நாற்காலிகள் எல்லாம் நிரம்பி வழிய, ஒரு இருபது பேர் அரங்கின் உள்ளே தரையில் அமர்ந்திருந்தனர். இது போக அரங்கின் மூன்று பக்கங்களிலும் ஒரு எழுபது எண்பது பேர் நின்றிருந்தனர்.

 நமக்கும் வெளியே நிற்பதற்குத்தான் வாய்ப்பு கிடைத்தது.

“எழுத எழுத மனது இலகுவானது. அழிக்கப்பட்ட வாழ்க்கையின் எளிமையும், இனிமையும் எனக்குள் முளைவிட ஆரம்பித்தன. பழைய மண்வாசனையுடன் புதியதொரு வளர்ச்சியைக் காண முடிந்தது. வாழ வேண்டும் என்றதொரு தாகமும், வேகமுமெனக்குள் தலைதூக்கின” என்று தனது எழுத்து குறித்து சரியாய் சொன்ன பாமாவோடு நேர்கானல் என்பது வழக்கத்தைவிடவும் சற்று கூடுதலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாமா ஒரு பெண், அவர் ஒரு தலித், அவரை எப்படி மடக்கலாம் என்ற திட்டமிடலோடு சிலர் கங்கனங் கட்டிக் கொண்டு வந்திருந்தது தெரிந்தது.

அப்படி இப்படி சுற்றி வளைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மேட்டுக் குடியினரும் தலித்துகளும் ஒன்றுதானே என்ற ஆபத்தான கேள்வியை ,அது எப்படி சரியாகும்?

பொருளாதாரத்தில் ஒரு தலித்தைவிட ஒரு அய்யர் மிகவும் பின் தங்கியிருந்தாலும் அவர் ஒரு போதும் தலித்தை சமமாகப் பாவிக்க மாட்டார். அம்பேத்கரை விடவும் படிப்பிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கி இருந்த பிராமணர்கள் கூட அம்பேத்கரை ஒரு சக மனிதனாகவே மதிக்க மறுத்த போது இது எப்படி சாத்தியம்? என்ற பாமாவின் பதில் உன்மையை தோலுரித்துக் காட்டியது.

ஒருவர் வலிந்து கட்டிக் கொண்டு சங்கராசாரியாரைப் பற்றி ஏதேனும் சொல்லுங்களேன் என்ற போது இன்னும் கொஞ்சம் கடுமையாக இருந்திருக்கலாம் என்கிற அளவில்தான் பாமாவின் பதிலை எடுத்துக் கொள்ள முடிந்தது.

படைப்பாளி என்கிற வகையில் நீங்கள் பெண்ணா? தலித்தா? என்றகேள்வி நாம் பெரிதும் மதிக்கிற பெண் படைப்பாளியிடமிருந்தே வந்தது கொஞ்சம் கவலையைத் தந்தது. இரண்டும் தான் என்பதை தங்களது அனுபவத்திலேயே கற்று வைத்திருக்கும் அவர்கள் ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? என்பதுதான் புதிரே.

நேர்காணல் முடிந்து ஞாநியோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் ஞாநியிடம் வந்து நீங்கள் ஏன் பிராமண எதிப்பாகவே எழுதுகிறீர்கள்? என்று வினவிய போது ” நான் ஒரு ப்ரோ ஹ்யூமன், அது பிராமண எதிர்ப்பாகப் படுமானால் அதை இன்னும் வலுவாகவே செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஞாநி சொன்னதுதான் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னை மகிழ்வித்த ஒன்றாகப் பார்க்கிறேன்.

இப்படி புத்தகங்களைத் தாண்டியும் நிறைய இருந்தது கண்காட்சியில்.

மக்களை இழுக்கவும் , வாங்கச் செய்யவும் இன்னும் ஏராளம் செய்ய வேண்டும். இல்லையேல் புத்தகத் திருவிழாவில் பயனைக் கட்டிக் கொண்டு போவது ஹோட்டல்காரராகத்தான் இருக்கும்.




Tuesday, January 24, 2012

செயத்தக்க...

சூரியனே கம்பளி கேட்கும் அளவு பனியும் குளிரும் அமெரிக்காவில், ஆனாலும் சூரியனை விடவும் சூடாய்தான் இருக்கிறது அமெரிக்க தேர்தல் களம்.


“ராணுவம் எவ்வளவு முக்கியமானது? அமெரிக்காவின் அடையாளமும் ஆளுமையுமே ராணுவம்தானே. ராணுவத்திற்கான செலவைக் குறைத்ததன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் மேன்மையைக் குலைத்துப் போட்ட ஒபாமாவுக்கா உங்கள் வாக்கு?” என்று தன்னால் முடிந்த அளவு தேர்தல் களத்தை சூடேற்றி தேர்தலை வசப் படுத்த முயல்கிறது இன்றைய எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி.


குடியரசுக் கட்சியின் இந்த யுக்தி ஜனநாயக் கட்சியை வெகுவாக அசைத்துப் போடவே கட்சி ஒபாமாவைப் பார்க்கிறது.

பதறித்தான் போகிறார் ஒபாமா.

“அய்யோ, அய்யயோ... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்களைப் போலவே நானும் ராணுவத்தை நம்பித் தானே தேர்தலை சந்திக்க வேண்டும். வேறெந்த நல்லதை செய்திருக்கிறேன். சொல்லி வாக்கு கேட்க. இது கூடவா தெரியாது எனக்கு.

முன்பு எப்போதையும் விட  ராணுவத்திற்கு இப்போது அதிகம் நிதி ஒதுக்கப் படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ராணுவத்திற்கு செலவு செய்யும் பத்து நாடுகளின் மொத்த செலவை விடவும் அதிகமாய் செலவு செய்கிறோம்.

எனவே குடியரசுக் கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.”

இன்னொரு பக்கம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் ஏறத்தாழ இதே வாரத்தில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நம் நாட்டில் உள் நாட்டு உற்பத்தியில் 0.9 சதத்திற்கும் குறைவாகவே அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்கிறோம் என்று பேசியிருக்கிறார்.

அவர் செய்யக் கூடாத செலவை பேரதிகம் செய்கிறார். இவரோ செய்ய வேண்டிய செலவைத் தவிர்க்கிறார். இவர்கள் இருவருக்காகவும்தான் வள்ளுவன் இப்படி எழுதினானோ என்னவோ

”செயத்தக்க அல்ல

செயக் கெடும்
செயத்தக்க
செய்யாமையானும் கெடும்”

“செயத்தக்க அல்ல
செயக் கெடும்
செயத் தக்க
செய்யாமையானும் கெடும்”

Saturday, January 21, 2012

இந்தாப் பிடி செங்கொடி



இருபது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். தோழர் என்.ராமக்கிருஷ்ணன் எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிரிய நூலினை கையில் திணித்து இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்ரி எழுது என்றார் நந்தலாலா.


கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் அந்தப் புள்ளியில் என்னிடமில்லை.

உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர். உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.

அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.

திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.

எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.

அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார்.
தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள்.  தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.

அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.

எந்தக் காவலர் நெருங்குவார்.

அப்போது ஒரு ரயில் வருகிறது.

மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,

“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”

“ என்ன செய்யலாம்?”

“ரயிலை நிறுத்துங்கள்”

“எப்படி?”

“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”

தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.

காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.

சிரிக்கிறார் பழநிச்சாமி.

எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே  செங்கொடிகள்.

அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.


Thursday, January 12, 2012

வாழும் மண்ணை மறந்த ஆங்கில ஊடக மலையாளப் பத்திரிக்கையாளர்கள்

”காக்கைச் சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டத்தில் வைகறை அய்யா, ராதிகா கிரி அவர்களின் இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைக் கொடுத்து தமிழில் பெயர்த்து தரச் சொன்னார். முடிந்த அளவு முயன்றிருக்கிறேன்

முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பல்வேறு ஆங்கில செய்தித் தாள்களில் வெளிவரும் செய்திகளைக் கூர்ந்து கவனிக்கும் போது கேரள பத்திரிக்கையாளர்களின் தொழில் நேர்மை குறித்து ஆழமான அய்யங்கள் என்னுள் எழுகின்றன.

தங்களது அரசாங்கத்தின் நிலைப் பாடுகளையும், தங்கள் மக்களது உணர்வுகளையும், அதிலிருக்கும் உண்மைகளைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாது, அப்படியே மலையாளப் பத்திரிக்கைகளில் எழுதிவிடும் பத்திரிக்கையாளர்கள் ஒருபுறம். அதைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடலாம். ஆனால், ஆங்கில ஊடகங்களில் , அதுவும், சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்களில் பணிபுரியும் மலையாளப் பத்திரிக்கையாளர்களும் அதையே செய்வதுதான் நாம் அதுகுறித்து கவனம் குவிக்கவும், கவலையோடு அக்கறை கொள்ளவும் காரணமாயிருக்கிறது.

“முல்லைப் பெரியாறா? முல்லப் பெரியாறா?|”

இந்தக் கேள்விக்கான உங்களது பதிலே நீங்கள் தமிழகத்து ஆதரவாளரா? இல்லை கேரள ஆதரவாளரா என்பதைச் சொல்லிவிடும்.

“ ஒருக்கால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டாலோ அல்லது அணையே முற்றாக உடைந்தாலோ அணையிலிருந்து வெளியாகும் நீர் முழுவதும் இடுக்கி மற்றும் அதன் கீழுள்ள அணைகளில் சேதாரமில்லாமல் சேகரிக்கப் பட்டு விடும்” என்று நீதிமன்றத்தில் சொன்னமைக்காக கேரள அட்வகேட் ஜெனரல் திரு. K.Pதண்டபாணி அவர்கள் பதவி இறக்கம் செய்யப் பட்ட செய்தியை வெளியிடுவதில் இவர்கள் நடந்து கொண்ட விதமே வழுக்கிக் கொண்டே சறுக்கும் இவர்களது பத்திரிக்கை தர்மத்திற்கான சமீபத்திய சான்றாகும்.

அவர் பதவி இறக்கம் செய்யப் பட்ட நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ அந்தச் செய்தியைச் சென்னை ஆங்கிலப் பத்திரிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. மிகவும் விபரீதமான,  முட்டாள்த் தனமான கருத்தினை சொல்லியிருக்கிறார் என்று தண்டபாணிக்கு எதிராக கேரள மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்த பின்னரே வேறு வழியே இல்லாமல் அவை அந்தச் செய்தியை வெளியிட்டன. அதுவும் கூட அதற்காக தண்டபாணி பெற்ற தண்டனையைச் சொல்லாமல் அல்லது சொல்ல வேண்டிய அளவுக்குச் சொல்லாமல், அவரது கருத்து ஏற்படுத்திய முரண்பாடுகளை மட்டுமே மிகுந்த எச்சரிக்கையோடு வெளியிட்டன.

 தண்டபாணியின் கருத்தினை அவர்கள் ஏற்கிறார்களா? இல்லையா என்பது வேறு. இதில் நான் கவனப் படுத்த விரும்புவது என்னவெனில் கேரள அட்வகேட் ஜெனரலின் கருத்தினை பிரசுரிப்பதற்கு தகுதி வாய்ந்ததாகவே அவர்கள் எவரும் கருதவில்லை என்பதைத்தான்.

முதலில் தங்களை மலையாளிகளாகவும், பிறகே தேவைப் படும் பட்சத்தில் தங்களைப் பத்திரிக்கையாளர்களாகவும் மலையாளப் பத்திரிக்கையாளர்கள் கருதுகிறார்கள் என்றும் இதைக் கொள்ளலாம்.

" தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிக்கையின் சென்னைப் பதிப்பில் நவம்பர் 24 அன்று வெளியான ‘டைம்ஸ் வியூ’ தான் கடந்த இரண்டு வாரங்களாக என்ன நடக்கிறது என்று என்னைக் கூர்ந்து கவனிக்கப் பணித்தது.

“டேம் 999” திரைப் படத்தை இருட்டடிப்பு செய்ய வலியுறுத்தும் போராட்டங்களுக்கு வளைந்து பணிந்த தமிழகத் திரையரங்குகள்” என்ற தலைப்பின் கீழ் வெளியாகி உள்ள கருத்துச் சிதறலின் முதலிரண்டு வரிகளும் எந்த வித வில்லங்கச் சாயமும் பூசிக் கொள்ளாமல் கருத்துக்களைக் கூறும் தங்களது சுதந்தரத்திற்கான உரிமையை மட்டுமே கோருகின்றன. மூன்றாவது வரிதான் வில்லங்கப் பெருவெடியாய் வந்து விழுகிறது.  அது இவ்வாறு சொல்கிறது, “ உணர்ச்சிக் கொந்தளிப்பான முல்லப் பெரியாறு அணை விஷயத்தினை தெற்கு மாவட்டங்களில் வாழும் மக்களின் ஆதங்கத்தையும் ஆதரவையும் பெற வேண்டி அரசியல் கட்சிகள் தவறாகவும் திரிக்கவுமே செய்கின்றன.

"முல்லப் பெரியாறு” என்று மலையாளத்தில் எழுதவும் உச்சரிக்கவும் படுகிற, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வும் அவ்வாறே எழுதத் தேர்ந்தெடுத்து எழுதுகிற ‘முல்லைப் பெரியாறு’ கேரளாவில்தான் உணர்ச்சிக் கொந்தளிப்பான ஒரு விஷயமே தவிர தமிழகத்தில் அல்ல. ஆனால் கேரள அரசாங்கமும், பத்திரிக்கையாளர்களும், மக்களும் கூட்டாய் ஒன்றிணைந்து திட்டமிட்டுத் தவறான செய்திகளை இங்கே பரப்புவதன் மூலம் உணர்ச்சிக் கொந்தளிப்பான கலவர பூமியாக தமிழகத்தை மாற்றி விடுவார்களோ என்ற அச்சமும் கவலையும் நமக்குண்டு.

சென்னை மண்ணிலேயே வாழும் பத்திரிக்கையாளராயினும் ‘டைம்ஸின் கருத்து’ என்பது ஒரு மலையாளியின் கருத்தே என்பதில் சன்னமாகவேனும் யாரும் கவலை கொள்ளத் தேவை இல்லை.

சென்னையிலுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தின் ஊழியர் கட்டமைப்பு பற்றி ஊடகத் துறையில் ஓரளவுக்கும் கொஞ்சம் குறைவான அளவு ஞானம் உள்ளவர்களுக்கும் நன்கு புரியும். ஒரு நாயரோ, மேனனோ அல்லது ஏதாவது ஒரு மலையாள இனத்தவரோதான் அதன் முக்கியப் பொருப்புகளில் உள்ளனர். அதன் உள்ளூர், அரசியல், மற்றும் பெருநகர ஆசிரியர்களாகவும் மலையாளிகளே உள்ளனர்.

”டைம்ஸ் அஃப் இந்தியா” நாளிதழின் சென்னை அலுவலகம் ஒரு ஆங்கில ஊடகத்தின் அலுவலகமாயினும் ஒருவருக்கொருவர் மலையாளத்தில் மட்டுமே பேசிக்கொள்ளும் ஊழியர்களாலும், மலையாள கலாச்சார மணத்தாலுமே நிரம்பிக் கசிகிறதென்று அதன் முன்னால் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

"டைம்ஸ் ஆஃப் இந்தியா” வில் சொற்ப சிறுபான்மையினராகவே தமிழர்கள் இப்போது உள்ளனர் என்றும் தான் அங்கு பணியாற்றிய போது தானும் தனது சக ஊழியர் ஒருவரும் தமிழகத்தைப் பாதிக்கும், அல்லது தமிழகம் சார்ந்த செய்திகள் நிராகரிக்கப் படுவது அல்லது இரண்டாம் பட்சமாக்கப் படுவது குறித்து அவ்வப்போதுவிவாதிப்போம் என்றும் அதன் இன்னொரு முன்னாள் ஊழியர் சொல்கிறார்.

ஓணம் பண்டிகையின் போது அலுவலகத்தை அலங்கரித்துக் கொண்டாட அனுமதிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிர்வாகம் அதே அனுமதியைத் தமிழ்ப் புத்தாண்டின் போது வழங்க மறுப்பது அங்குள்ள தமிழர்களை எரிச்சல்பட வைத்ததென்றும் அவரும் சிலர்ம் இது குறித்து நியாயம் கேட்டதாகவும் ஆனால் எதுவும் விளைந்துவிட வில்லை என்றும் அவர் கூறுகிறார்.

படித்த மேல் தட்டு மக்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆங்கில ஊடகங்கள் அடித்தட்டு மற்றும் உழைக்கும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தினை உதாசீனப் படுத்தி நிராகரிப்பதன் விளைவாக ஆங்கில மற்றும் தமிழ்ச் செய்தித் தாள்கள் ஒரே செய்தியை ஒன்றுக்கொன்று முற்றாய் முரண்பட்டுச் சொல்கின்றன என்று டைம்ஸ் இந்தியாவினை வாசிப்பதைத் தவிர அதனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஒரு மூத்தப் பத்திரிக்கையாளர் சொல்கிறார்.

மிகச் சாதாரன பின்புலத்திலிருப்பவர்களும் ஆங்கிலச் செய்தியறைகளில் இடம் பிடிக்க முடிந்த போதிலும் அடித் தட்டு மக்களின் குரல் தொடர்ந்து உதாசீனப் படுத்தப் பட்டே வருகிறது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வை என்பது மேட்டுக்குடிகளின் பார்வையாகவே உள்ளதால் அதிகப் படியான தவறான எண்ணங்களும் கற்பிதங்களும் உருவாகி உள்ளன.

ஒரு உதாரணத்தோடு சொன்னால் இது இன்னும் விளங்கும்.டெல்லி, கொல்கொத்தா மற்றும் மும்பை மக்களை இட்லி தோசை மற்றும் சாம்பார் ஆகியவையே தமிழ் சமையலறைகளின் விளை பொருட்களாக நம்ப வைத்துள்ளன ஆங்கில ஊடகங்கள். பெரும்பான்மை தமிழ் மக்கள் அசைவர்களாக இருக்கும் உண்மையை மறைத்து இட்லி தோசை சாம்பாரே தமிழ் மண்ணின் பாரம்பரிய உணவு என்பதானதொரு பிம்பத்தை ஆங்கில ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ளன.

வெறும் பத்து சத தமிழ் மக்கள் மட்டுமே புரிந்து ரசிக்கும் பரத நாட்டியம், மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றை ஏதோ ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகளாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக் காப்பாற்றி வருகின்றன. எனில், பெரும்பான்மையான தொண்ணூறு சத தமிழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகள் என்னவாயின?

வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், குறிப்பாக ஆசிரியர் குழுவின் உச்ச நிலைகளில் உள்ளவர்கள் கற்றறிந்த மேட்டுக் குடியினரோடு மட்டுமே தங்களை அடையாளப் படுத்திப் பொருத்திக் கொள்வதால் பெரும்பான்மைத் தமிழர்களான அடித் தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் இசையும் கலைகளும் ஆங்கில ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெற இயலாமலே போயின.

இடுக்கி அணைக்கான நீரே கேரள அரசின் பிரதான நோக்கம். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அல்லது உடைக்கப் பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று கருதுவதால் கேரள அரசுதான் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்கிற பிரச்சாரத்தை மலையாளப் பத்திரிக்கைகளின் மூலமாகத் தொடங்கியது.

காலப் போக்கில் கேரள அரசின் கருத்தினை ஊதி ஊதிப் பெரிய வண்ண பலூனாக யார் மாற்றுவது என்று மலையாளப் பத்திரிக்கைகள் தங்களுக்குள் ஒரு பந்தயத்தைத் தொடங்கிய புள்ளியில்தான் இந்தப் பிரச்சினையில் உணர்ச்சிக் கொந்தளிப்பும் வெப்பமும் பெருமளவு கூடிப் போயின. எந்தவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாத போதும் முல்லைப் பெரியாறு அணை என்பது ஒரு நீர்க் குண்டு என்பதாகவும் அது எந்த நொடியும் இடிந்து விடுமென்றும் ஒவ்வொரு மலையாளியும் சில பத்து ஆண்டுகளாக நம்ப வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் இதே உணர்வலை வரிசையில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆங்கில ஊடகங்கள் பெரும்பாலும் மலையாள பத்திரிக்கையாளர்களாலேயே நிரம்பி வழிவதால் வேறு வழியே இன்றி அவை கேரளத்தின் கருத்துக்களையே வெளியிடுகின்றன.

தமிழகத்தின் முதல்வராக பிறப்பால் மலையாளியாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களும் தலைமைச் செயலாளராக ஒரு மலையாளியும் இருந்த காலத்தில் ஒரு நாளில்தான் 152 அடியிலிருந்து 136 அடியாக அணையின் கொள்ளளாவு குறைக்கப் பட்டது.

மலையாளத்து அலைவரிசையோடு தன்னை முற்றாய்ப் பொருத்திக் கொண்டுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மட்டுமல்ல ‘இந்து’ பத்திரிக்கையின் சென்னை பதிப்பும் ‘முல்லப் பெரியாறு’ என்றுதான் எழுதுகிறது.

மக்களைக் கொந்தளிக்கச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கேரள அரசின் நோக்கத்தையே எதிரொலிக்கும் ஊதுகுழல்களாகவே மலையாளப் பத்திரிக்கையாளர்கள் செயல்படத் தொடங்கும் போதுதான் பத்திரிக்கைத் துறையின் சாராத் தன்மையும் நம்பகத் தன்மையும் காயம் படுகின்றன.

அணை உடைந்துவிடும் என்று ஊதிப்பெருக்கப் பட்ட பொய்யின் வரலாறும் கொஞ்சம் நீண்டதுதான்.

அன்று மலையாளப் பத்திரிக்கை உலகின் உச்சானிக் கொம்பில் இருந்தவரும், அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் வழங்குமளவிற்கு அவர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தவருமான, திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘மலையாள மனோரமா’ வின் அன்றையத் தலைவர் திரு. பட்ரோஸ் சும்மாரிடமிருந்து தொடங்குவதாக, 1978 இல் தொடங்கிய இந்த விவகாரத்தின் அந்தரங்கங்களை அறிந்த மூத்த சென்னைப் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகிறார்.

1976 முதல் நான்கு பருவங்களாக இடுக்கி அணைக்கு போதுமான நீர் வரத்து இல்லாமல் போனது ஏன் என்றும் அதற்கு என்ன செய்யலாம் என்றும் இன்றைய கேரள அரசின் ஆலோசகரும் அன்றைய கேரள மின்சாரத் துறையின் தலைமைப் பொறியாளருமான M.K.பரமேஷ்வரன் நாயரும் அன்றைய காங்கிரசின் தலைவர் கருணாகரனும் கவலையோடு கலந்தாலோசித்ததின் விளைவாக 1978 இல் ‘ முல்லப் பெரியாறு அணை’ உடையப் போகிறது என்று மலையாள மனோரமா எழுதி இந்தப் பொய்ப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறது.

அணையின் கொள்ளளவைக் குறைத்துக் கொள்ள தமிழக முதல்வரும் தங்களது ரத்த சகோதரருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களிடம் பேசுமாறு கருணாகரன் அவர்களிடம் வேடிக்கையாகப் பேச்சைத் துவக்கிய பரமேஷ்வரன் நாயர் தனது தொனியை மாற்றிக் கொண்டு அதற்குமுன் மக்களிடம் அணை குறித்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு கோரிக்கையை வைக்க வேண்டுமென்றாராம்.

மலையாள மனோரமா துவக்கி வைத்த அச்சம் கொள்ள வைக்கும் கயமையைப் புனித வேள்வி போல் ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் தொடர்ந்து தோளேற்றிச் செயல் படுகிறார்கள். இவர்களது இந்த நீண்ட பொய்ப் பிரச்சார யாத்திரையை உச்ச நீதிமன்றம்
‘ அணை பலவீனமாக இல்லை. எனவே தமிழக அரசு கொள்ளளவைக் கூட்டிக் கொள்ளலாம்’ என்று 2006 பிப்ருவரியில் ஒரு தீர்ப்பு சொல்லி முடித்து வைத்தது.

இன்று ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் பட்ரோஸ் சும்மராக செயல் படுவது பத்திரிக்கை உலகை மட்டுமல்ல, நீதியை, உண்மையை முடமாக்கிப் போடும் துயரை உற்பத்துக்கும் செயலாகும். இதை உணர்ந்துகொள்ளாத பசத்தில் அவர்களது குறுகிய இனப் பற்று இந்த தேசத்தின் மேன்மையான பன்முகத் தன்மையை உடைத்துப் போடும்.

கொஞ்சம் தண்ணீருக்காகவும் திருவாங்கூர் மகாராஜாவிடமிருந்து சட்டப்படி பிரிட்டிஷ் இந்திய அரசு கையகப் படுத்திய ஒரு சின்னத் துண்டு நிலத்திற்காகவும் தங்களது பத்திரிக்கை தர்மத்தை கேரள பத்திரிக்கையாளர்கள் காவு கொடுக்கலாமா?


 நன்றி: “காக்கைச் சிறகினிலே”

Sunday, January 8, 2012

நமக்கில்லை கடவுள் கவலை

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் மறு ஒலிபரப்பினை பார்த்துக் கொண்டிருந்தான் கிஷோர். ஒருவர் பின் ஒருவராக இந்திய மட்டை வீரர்கள் வீரர்களின் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவனருகில் இருந்த ரிமோட்டை எப்படியோ லாவகமாகக் கைப்பற்றிய கீர்த்தி அவள் அம்மாவை அழைத்தாள். இருவரும் பாயில் அமர்ந்து கொண்டனர். படீரென வேறு ஒரு சேனலுக்குத் தாவினாள் கீர்த்தி. அவ்வளவுதான், கிஷோருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“நான்தான் பார்த்துக் கிட்டிருக்கேன்ல, அப்புறம் எதுக்குடி வெள்ளச்சி மாத்துற?”

”அதுதான் நேத்தே தோத்துட்டான்களே. அப்புறம் அதையே ஏன் திரும்பிப் பார்க்குற? நீ திரும்பிப் பார்க்குறதால மட்டும் ஜெயிச்சுறப் போறான்களாக்கும்?”

" நீ மட்டும் என்னாடீ, தெனைக்கும் ஏசு அழைக்கிறார் ஏசு அழைக்கிறார்னு சொல்றியே தவிர எங்கேயும் போகாம இங்கேயே தானடி உக்காந்திருக்க வெள்ளப் பன்னி”

“ஏய், வேண்டாம், அப்புறம் ..” என்பதற்குள் பையன் வெளியே போய்விட்டான்.

தொலைக் காட்சியில் ஒருவர் கையில் வேதப் புத்தகத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தார். எதை எப்படி விமர்சித்தாலும் அவரது மன்றாடலில் கசிந்த உருக்கமும் அழுகையும் உண்மைக்கு மிகவும் கிட்டத்தில் இருந்ததை ஏற்கத்தான் வேண்டும். அதில் எந்த விதமான பூச்சையோ போலித் தனத்தையோ பார்க்க இயலவில்லை.

எதிரே கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் கண்களை மூடியவாறும் கைகளைத் தூக்கியவாறும் அவரது மன்றாடலோடு ஒன்றிணைந்து உருகினர்.

“ஆலயம்
கண்களை
மூடச் சொல்லும்
பள்ளிக் கூடம்
கண்களைத் திறந்து வைக்கும்”

என்ற வைரச் சந்திரனது கவிதை எவ்வளவு சரியானது என்பதை உளப் பூர்வமாக உணர முடிந்தது.

“புத்தகம் கூட
கைத் தடிதான்
தூங்குபவனைத்
தட்டி எழுப்பும்
விழுந்தவனை
தூக்கி நிறுத்தும்”

என்பான் தம்பி ஆங்கரை.பைரவி.

திரண்டிருந்த ஆயிரக் கணக்கானோரில் பெரும்பான்மையோர் கைகளில் வேதப் புத்தகம்.  “புத்தகம் தூங்குபவனைத் தட்டி எழுப்பும்” என்கிறானே பைரவி, இங்கு வேதப் புத்தகத்தோடு கண்களை மூடிய படி இருக்கிறார்களே, எனில் வேதப் புத்தகம் புத்தகம் இல்லையா?

யார் என்று சரியாய்த் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள், சொன்னான்

“வெள்ளையர்கள்
வந்தபோது
அவர்கள் கையில்
பைபிள் இருந்தது
நம்மிடம்
நாடு இருந்தது

உருக்கத்தோடு
ஜெபித்தார்கள்
நாமும்
கண்களை மூடி
ஜெபத்தில் கலந்தோம்

ஆமேன் என்றார்கள்
விழித்துப் பார்த்தோம்

பைபிள்
நம் கைகளில் இருந்தது
நாடு
அவர்கள் கைகளில் இருந்தது”

கவிதையை சரியாய் எழுதியிருக்கிறேனா என்பதும் தெரியவில்லை. ஆனால் இது மாதிரித்தான் போகும்.

நமது பூமி அடிமைப் பட்டுப் போனதற்கு இது மட்டுமே காரணம் அல்ல என்பதும் , அதற்கு நீண்ட நெடிய சமூக ,பொருளாதார, அரசியல்,  நம்மிடம் புரையோடிப் போய்க் கிடந்த சாதீய ஒடுக்குமுறை போன்ற ஏராளமான அழுத்தமான விஷயங்களே காரணங்கள் என்பதும் நாமறிந்ததே.

நமது கவலையும் கவனமுமெல்லாம் தட்டி எழுப்பக் கூடிய நூல்களும், கண்களைத் திறக்கச் சொல்லும் பள்ளிகளும் ஏராளம் வேண்டுமென்பதே.

இதற்கிடையே கிஷோர் மீண்டும் வந்து விட்டான். விக்டோரியாவும் கீர்த்தியும் முக்காடிட்டு அந்த பிரசங்கியாரின் இறை மன்றாடலில் இரண்டற இணைந்திருந்தார்கள்.

கிஷோர் சும்மாவும் இருக்க மாட்டான். முக்காடு அவனை என்ன செய்ததோ தெரியவில்லை.

“ஏம்மா, ஏம்மா இப்படி?”

”அப்பாவோட சேர்ந்து நீயும் அழிஞ்சு போகாத. நல்ல பிள்ளையா இப்படி வந்து கண்ண மூடி ஜெபத்துல உட்காரு”

“வொய் மம்மி வொய்?”

வழக்கமாக அவனது இது போன்ற நக்கல்களில் லயித்து சிரித்துவிடும் விக்டோரியா வழக்கத்திற்கு மாறாக எரிச்சலடைந்து ,

“கட்டையில போறவனே, இப்படி கடவுளக் கிண்டல் செய்து அவரோட ஆக்கினைக்கு ஆளாகாதே. ஏற்கனவே ஒன்னு இப்படி செய்றதாலதான் எவ்வளவு வந்தாலும் ஒன்னும் விளங்காம இருக்கு. நீயும் இப்படி செஞ்சேன்னு வச்சுக்க அப்புறம் அவரோட ஆக்கினைல அப்படியே கருகிப் போயிடுவீங்க”

கல கலவென சிரித்தான். அது விக்டோரியாவை இன்னும் எரிச்சல் பத்தியது. கண்களில் லேசாக ஈரத்தைப் பார்க்க முடிந்தது.

”உனக்குப் பிடிக்கலைனா உட்டுடுடா. வம்புக்கிழுக்காத”

”ஏம்மா கடவுள நீ பார்த்திருக்கியாம்மா நீ”

ரொம்பப் பழசுதான் கேள்வி. ஆனா அதைவிட அதலப் பழசா பதில் வந்தது.

“ நம்புடா, நம்பாட்டி உருப்படமாட்ட. நாசமாப் போயிடுவ.”

“எத நம்பனும்?”

”கடவுள”

”அப்புறம்?”

“அவரோட அதிசயங்கள”

”அதிசயங்களா? புரியலம்மா. கொஞ்சம் விளங்குறமாதிரி சொல்லும்மா”

“எத்தனைக் குருடங்க பார்க்கிறாங்க. எத்தனை ஊமைகள் பேசறாங்க. எத்தனை முடவர்கள் பார்க்கிறார்கள்.”

பேச விடாமல் இடை மறித்து சிரித்தான்.

“ஏண்டா சிரிக்கிற எடுபட்ட பயலே”

“பார்த்தியாக்கும்”

“கண்டு விசுவாசிக்கிறவனைவிட காணாமல் விசுவாசிக்கிறவனே பாக்கியவான்”

 “கொறச்சலே இல்ல. சோமலியால சின்ன சின்ன புள்ளைங்க சோறில்லாம சாகுது. அவங்களுக்கு சோறு போடமாட்டாராக்கும்”

“டேய் வேணாம்...”

 “ கடவுள் இருக்கார்னு நம்பச் சொல்றத வேண்டும்னா அறியாமன்னு ஒதுக்கிடலாம். ஆனா அத செஞ்சார் இத செஞ்சார். சோதிக்காம ஒத்துக்கன்னா, சாரிம்மா நோ சான்ஸ்”

சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

“ நான் கட்டிக்கிட்டதும் சரியில்ல, பெத்துக்கிட்டதும் சரியில்ல, என்றவாறே மூக்கைத் துடைத்தபடியும், முக்காட்டை சரிசெய்தவாறும் மீண்டும் விக்ட்டோரியா ஜெபத்தில் மூழ்க, நடந்த எதிலும் அக்கறை காட்டாமல் ஜெபத்திலேயே இருந்தாள் கீர்த்தி.

சபாஷ்டா கிஷோர்.




Saturday, December 31, 2011

இரண்டாயிரத்தி பன்னிரெண்டு

நேற்றுதான் ஒரு ”ஐ பேட்” வாங்கினேன். கடைக் காரப் பிள்ளையிடம் சொல்லி பழையப் பாடல்களாகப் பதிவு செய்து கொண்டேன். 

”எத்தனைப் பாட்டு தேறும்?” 

” 360 இருக்குங்க அப்பா. மிச்சம் இருக்கும் இடத்துல அடுத்த வாரம் ரெகார்ட் செய்து தரேங்கப்பா”

“இதுவே போதுண்டா சாமி. இதக் கேட்டு முடிக்கிறதுக்கு ஆயுசு இருக்குமோ என்னமோ?” சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்.

ஒரு வழியாய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் அதை இயக்கக் கற்றுக் கொண்டு இயக்கினேன்.

“உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் கலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ?”

என்ற ”படகோட்டி” படப் பாடல்தான் முதல் பாடல். திரும்பத் திரும்ப பத்துப் பதினைந்துமுறை பைத்தியக் காரனைப் போல் அதையே கேட்டேன். 2011 இல் நான் கேட்ட கடைசிப் பாடல் அதுதான்.

பிசைந்து எடுத்துவிட்டது. வாலியா, டி.எம். எஸ் ஆ யாரைச் சொல்வது. போட்டிப் போட்டுக் கொண்டு மீனவர் துயரத்தை பிழிந்து தந்திருக்கிறார்கள்.

“வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு”

என்ற இடத்தில் டி.எம்.எஸ் அழ வைத்துவிட்டார். நிலா விளக்கை நம்பியே பெரும்பகுதி இரவுகளை நகர்த்தும் தெற்குப் பகுதி மீனவனின் வாழ்வழித்து மின்விளக்கு எரிய வேண்டுமா?

“தனியாய் வந்தோர்
துணிவைத் தவிர
துணையாய் வருவோர் யாரோ?”

என்ற பகுதியும் அழவைக்கும். கூடங்குளம் அணு உலை எதிர்த்து துணிவோடுதான். போராடுகிறான்.

அவன் தனி ஆள் இல்லை என்பதை நிறுவ வேண்டாமா?

அணுவே இல்லாத பூமி நமது இலக்காகட்டும்.

இந்த ஆண்டில் நமது செயல் திட்டத்தில் இதுவே பிரதானமாகட்டும்.

எழுத முடிந்தோர் எழுதுவோம். பேச முடிந்தோர் பேசுவோம். வசப்படும் எல்லா வடிவக் கலைகளிலும் அணுவை எதிர்ப்போம், இந்த ஆண்டின் அசிங்கங்களில் ஒன்றான பரமக்குடி துப்பாக்கிச்சூட்டோடு நிறுத்து, இனியொரு முறை சேரியின் திசை நோக்கி துப்பாக்கியை நீட்டுபவன் எவனாயினும் சும்மா விடமாட்டோம் என்று சூழுரைப்போம்.

வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.

உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.

வாழ்த்துக்கள்.

Thursday, December 29, 2011

கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி...

“எங்கள் கணவர் மார்களில் பெரும்பான்மையோர் குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார்கள். மீதமுள்ள சிலரும் குடிப்பதில் பெரும்பகுதி நிறுத்திக் கொண்டார்கள்.. கூடிய விரைவில் அவர்களும் முற்றாய் நிறுத்திவிடுவார்கள். எங்களை அடித்து துன்புறுத்துவதை நிறுத்திக் கொண்டதோடு வீட்டு வேளைகளில்கூட எங்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,” என்பதாக நீளும் மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்து கொப்பளிக்கும் பெண்களின் பேட்டியோடு நகர்கிறது இன்றைய (.28.12.2011) “நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்” இன் செய்தி ஒன்று.

யுகம் யுகமாக எது பெண்களை விடாது அழவைத்ததோ அதை முற்றாக அழித்துப் போட்டு அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை மலரச் செய்த தலைவன் யார்? அல்லது கடவுள்தான் யார்?

எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது. ஒரு மக்கள் போராட்டம் மட்டுமே இத்தகையதொரு மாற்றத்திற்கு காரணமாக அமைய முடியும் என்பது மீண்டுமொருமுறை நிறுவப் பட்டிருக்கிறது.

இடிந்தகரையில் நடைபெறும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் 134 வது நாள் நிகழ்வுகளை சேகரிப்பதற்காக சென்ற அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளர்களிடம் போராடிக்கொண்டிருக்கும் அந்த மண்னின் பெண்கள் கூறியது இது.

எந்தவொரு மகத்தான மக்கள் போராட்டமும் இது போன்ற உப விளைவுகளையும் சேர்த்தே கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான் நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

உப விளைவே இவர்களது வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தினையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வல்லது எனில் போரட்டத்தின் இறுதி விளைவு சத்தியமாய் இதைவிட கோடி கோடி மடங்கு மாற்றத்தையும் உறுதியாய் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்மால் உணர முடிகிறது.

”எங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை போராட்ட நிதியாக வழங்கிவிடுகிரோம்” என்று நீளும் அவர்களது நேர்காணலோடு நீள்கிறது அந்த செய்தி. உண்மையை சொல்வதெனில் தினமும் தினமும் செத்து செத்துப் பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகளான, அதிலும் அறைகுறை வருமானத்திற்கான உழைப்பின் பெரும்பகுதி நேரத்தையும் போராட்டத்திற்காகத் தியாகித்து விட்ட பனையேறிகளும் மீனவர்களும் கிடைக்கும் தங்கள் சொற்ப வருமானத்திலும் பத்தில் ஒரு பங்கை போராட்டத்திற்களித்து போராடுகிரார்கள் எனில் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்?

“ஏம்பா கூடங்குளத்து கரண்டு ஃபேக்டரி வரக்கூடாதுன்னு இப்படி வம்படிக்குறீங்களே. நல்லா இருப்பீங்களா நீங்க .?” என்று விஷ்ணுபுரம் சரவணனின் நண்பரிடம் அவரது நண்பர் ஒருவர் கூறினாராம். ஆக, அவரைப் பொறுத்தவரை கூடங்குளம் அணு உலை என்பது சோப்பு ஃபேக்டரி மாதிரி, கார் ஃபேக்டரி மாதிரி மின்சாரம் தயார் செய்யும் ஒரு ஃபேக்டரி. அது உற்பத்தியைத் துவங்கி விட்டால் மின் தடை வராது, ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு பிழைப்பு கிடைக்கும். ஒரு பத்து பதினைந்து பேர் கடை வைத்துப் பிழைக்கலாம், சுத்துப் புறம் வளர்ந்து விரிவடையும். இன்னும் சொல்லப்போனால் மின்சாரத்தின் விலைகூடக் குறையும். அதை ஏன் பாழாய்ப் போன இவர்கள் இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம். ஆமாம் கூடங்குளத்தில் கரண்டு ஃபேக்டரி ஏன் வரக்கூடாது?

மேலே சொன்ன எதுவும் உண்மை அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டு தொடர்வதே சரியாக இருக்கும்.

”உலைக் கட்டுமானங்கள் மிகப் பாதுகாப்பன முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளன. மேகூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில்1988 இல் கோபர்ச்சேவ் மற்றும் ராஜீவ் இருவரும் கையொப்பமிடுகின்றனர் “அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்” ஒப்புதல் பெறவில்லை. எனெவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் குரெலெடுத்தது அமெரிக்கா. ஏறத்தாழ இந்த நிலையிலேயே இப்பகுதி மக்களும் உலைக்கு எதிரான தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள். போராடுபவர்களைப் பார்த்து அரசும் இதன் ஆதரவாளர்களும் சொன்னார்கள் “அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் கொண்டு கூத்தடிக்கும் அமெரிக்க கைக்கூலிகள்” . இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள். மக்களின் எதிர்ப்பிற்கும் அமெரிக்காவின் எதிர்ப்பிற்கும் ஒரே காரணம்தான் என்பதை ஒத்துக் கொள்வதற்கு நாம் ஒன்றும் அவர்கள் அளவிற்கு புத்திசாளிகள் இல்லை. ரஷ்யாவோடு ஒப்பந்தம் என்பதைத் தவிர அமெரிக்கா இதை எதிர்ப்பதற்கு வேறு காரணம் எதுவுமில்லை என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நன்றாகவே, மிக நன்றாகவேப் புரிகிறது.

லும் ரிக்டர் அளவில் ஆறு எண் வரைக்கும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே அச்சமே கொள்ளத் தேவையில்லை என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அவரைவிட நீங்கள் என்ன பெரிய அறிவாளியா ?” என்றும் ஒரு புன்னகையோடு ஏளனிக்கிறார்கள் சிலர்.

சத்தியமாக அய்யா கலாம் அளவிற்கு நாம் படித்தவர்களோ அறிவாளிகளோ அல்லதான். ஆனாலும் அவர் சொல்லியிருக்கிற எல்லை அளவைக் கடந்து 6.5 ரிக்டர் அளவில் அந்தப் பகுதியில் எதிர் காலத்தில் ஒரு பூகம்பம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அதைவிட அதிக அளவில்கூட நிலனடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றே சொல்கிறார்கள்) அதன் விளைவுகள் புக்சிமா, செர்னோபில் மற்றும் அமெரிக்காவின் மூன்று மைல் அணு உலை விபத்துக்களைவிடக் கொடுமையானதாகத்தானே இருக்கும். ஒருக்கால் அப்படி ஒரு பேரிடரே வராது. நாங்கள் இறைவனிடம் ஐ.எஸ்.டி போட்டு பேசிவிட்டோம் என்று கூட இவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்கும் ‘செர்னோபில் மற்றும் மூன்று மைல் அணு உலை விபத்துக்கள் பேரிடர் விபத்துகளால் ஏற்படவில்லை. மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்’ என்பதே நமது பாமரத்தனமான பதில்.

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது நமக்கு இருந்தாலும் கலாம் அய்யா மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த ஆக நவீன அளவுகோளையும் தாண்டி நீளும் தன்மை கொண்டவை. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் “செர்னோபில் விபத்தில் வெறும் 55 பேர் மட்டுமே இறந்து போனார்கள்.அதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள்” என்பது மாதிரி சொல்லி நம்மை சங்கடப் பட வைத்திருக்கிறார்.

அய்யோ அய்யா, 55 பேர் செத்தது பெரிது இல்லையா? இதைச் செய்தால் ஒரே ஒருவன் செத்துப் போவான் என்று தெரிந்த பின்னும் அதை ஒருவன் செய்தால் அவன் மனிதன்தானா அய்யா? விழித்துக் கொண்டே கனவு காணும் பித்துக்குளி கூட இப்படி உளற மாட்டானே. எப்படி இப்படி மாறினீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். இதுதான் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் எப்படி வந்தது? எதற்கு சுற்றி வளைத்து பேசிக் கொண்டு, நேரடியாய் சொன்னால் மட்டும் என்ன செய்துவிடுவார்கள் என்கிற, ஆமாண்டா அப்படித்தான் சொன்னேன் என்ன செஞ்சுடுவ? என்று கேட்கிற திமிர் கலந்த தொனி இருக்கிறது பாருங்கள் அதுதான் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காதது. அது சரி, எத்தனை பேர் செத்தால்தான் அதை நீங்கள் ஒரு பொருட்டாய் கொள்வீர்கள்? யூனியன் கார்பைடு மாதிரி குவியல் குவியலாய் செத்துத் தொலைத்தால்தான் உங்களுக்கு அதை ஒரு பொருட்டென ஏற்க மனமிரங்குமா?

அது சரி, செர்னோபில் கூட ஒரு விபத்து. செர்னோபில் விபத்தில் கூட 55 பேர்தானே செத்தார்கள் என்பதன் மூலம் எதை எங்களுக்கு உணர்த்த வருகிறீர்கள் அய்யா?. பயப்படாதீர்கள், அப்படியே விபத்து ஏதேனும் நிகழ்ந்தாலும் சொற்ப அளவில்தான் சாவு இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இடது கால் சுண்டு விரலிலிருந்து உதிர்ந்து விழும் மண்ணளவிற்கும் பொருட்டில்லாத நான் கேட்கிறேன், எதிர்பார்க்கமல் ஏற்படும் உயிரிழப்பை விபத்து என்று கொள்ளலாம். ஆனால் சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?. உங்களைப் போன்ற சான்றோர்களையும் மேதைகளையும் எதிர்கால சந்ததியினர் கொலையாளிகளாகப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்குத்தான் இப்படிப் போராடித் தொலைக்கிறார்கள் .



2004 நவம்பர் மாதத்து “current science" இதழில் கேரளப் பல்கலைகழகத்தின் நில இயல் துறையை சேர்ந்த முனைவர் பிஜி அவர்களூம் சென்னை ஐ.ஐ.டி ராம்குமார் அவர்களும் கூடங்குலம் பகுதி எரிமலைக் குழம்புகளால் ஆனது என்று எழுதியிருப்பதை தனது பேட்டி ஒன்றில் மாலதி மைத்ரி மேற்கோள் காட்டியிருப்பதை இப்போது நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

"மக்கள் அதிகமாய் நடமாடாத பகுதியில்தானே அணு உலை அமைக்கப் படுகிறது. பிறகு ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள்?” என்பது மாதிரியான ஒரு கேள்விக்கு, மக்கள் நடமாட்டமே இல்லாதப் பகுதியில்தான் இவை அமைக்கப் படவேண்டும் என்ற 29.04.1991 அன்று வெளியிடப் பட்ட எண் 828 (தமிழ்நாடு பொதுப் பணித்துறை) என்ற அரசாணையை பொருத்தமாக சுட்டிக் காட்டி இது அந்த அரசாணைக்கு புறம்பானது என்று சொல்வதையும், சுற்றுலாத் தளங்கள் மற்றும் புகழ் பெற்ற இடங்களுக்கு 20 கிலோமீட்டர் தொலைவு வரை அணு உலைகளை நிறுவக் கூடாது என்கிற AERA விதிகளையும் இது மீறுவதாக அவர் மிகச் சரியாக கூறுவதையும் நம்மால் உதாசீனப் படுத்திவிட முடியாது.

கல்பாக்கத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு பாதிப்பும் நிகழ்ந்து விடவில்லையே. அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம் என்று கூட சொல்கிறார்கள். விபத்து திடீரென்றுதான் வரும் என்று நாம் அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களுக்கு இது மிக நன்றாகவே தெரியும். கல்பாக்கத்தில் பெரிய அளவில் விபத்துக்கள் நிகழவில்லையே தவிர அதன் பாதிப்புகளான கேன்ஸர் , ஆறு விரல் குழந்தைகள், மற்றும் பல்வேறு விதமான எலும்பு சம்பந்தமான வியாதிகள் இருக்கவே செய்கின்றன. கூடவே அவற்றை எதிர்த்து போராட்டங்களும் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன சோகம் எனில் அணு உலைக்கு எதிராகப் பேசுபவனை குண்டர் சட்டத்திலே போடு என்று பேசினால் பக்கம் பக்கமாகப் போடும் பத்திரிக்கைகள் அவற்றுக்கெதிரான போராட்டங்களை கண்டு கொள்வதே இல்லை.

மின்சாரம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தவிர வேறு மாற்றே இல்லையே என்கிறார்கள். ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் எந்தப் பத்திரிக்கை என்று சரியாய் நினைவில்லை தினத் தந்தி அல்லது தினகரன் இலவச மலரில் வந்திருந்த ஒரு செய்தி மாற்று சாத்தியமே என்று சொல்கிறது.

ஏழாம்வகுப்பு அளவில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளைப் பற்றியது அது. ஒருவன் வீட்டிலிருக்கும் மின் விசிரியை தொடர்ந்து உற்று நோகியதன் விளைவாக ஒரு ஆய்வுக்கு நகர்கிறான். சக்கரம் சுற்றினால் மின்சாரம் எடுக்கலாம். மின்விசிரிதான் சுழல்கிறதே அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாமே என சிந்திக்கிறான். விளைவு அதற்கேற்றார்போல் ஒரு டைனமோ தயார் செய்கிறான். மின்விசிறி இயங்கும் போது ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்ட

அதன் அருகில் பொருத்தப் பட்டுள்ள டைனமோவின் சக்கரமும் சுழற்றப் பட்டு மின்சாரம் தயாராகிறது. ஒரு அரை மணி நேரமானதும் மின் இணைப்பை துண்டித்து விடலாம். அரை மணி நேரம் அந்த டைனமோ உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த மின்சாரத்தைக் கொண்டு அடுத்த அரை மணி நேரம் மின்விசிறி ஓடும். இந்த அரை மணி நேரத்தில் மின் விசிரி இயங்கும் போது மீண்டும் டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும்.

இன்னொரு மாணவன் சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும் என்று நிறுவி இருக்கிறான்.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரம் கூட மின்வெட்டே இல்லை என்ற செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடனில் பார்த்தேன். அவர்கள் காற்றாலை , சூரிய ஒளி போன்றவற்றால் மின்சாரம் தயாரிப்பதாகவும், தங்கள் தேவைக்கு மிஞ்சிய மின்சாரத்தை அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தருவதாகவும் படித்தேன்.

இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது எனில் அணு உலையை அமைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்கும் இந்த மேதைக்ளால் முடியாதா?

வெய்யில் எவ்வளவு மகத்துவமானது என்பதை எஸ்.ரா விடம்தான் கேட்க வேண்டும். வெய்யிலின் தீராக் காதலர் அவர். மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பது இந்த அணு உலையின் காதலர்களுக்கு ஏன் இன்னும் புரியாமல் இருக்கிறது?.அல்லது ஏன் இன்னும் புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.அல்லது என்ன செய்தால் இவர்களுக்குப் புரியும். அல்லது புரிந்தேதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் இவ்வளவு மின் தேவையும் இருளும் இருக்கிறபோது என் பாட்டனையும் அப்பனையும் தம்பி தங்கைகளையும் கூண்டோடு கொலை செய்த ராஜபக்‌ஷேவை திருப்தி செய்வதற்காய் கடலிலே குழாய் அமைத்து வழங்க இருக்கும் மின்சாரத்தை நிறுத்தினால் போதாதா?

“செர்னோபில்லில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது.மாறாக இது மொத்த உலகத்தையேபாதித்துள்ள விஷயமாகக் கொள்ள வேண்டும்” என்று கோபர்ச்சேவ் சொன்னதையும் இங்கு பதிவது சரியாக இருக்கும்.

ஏற்கனவே 14000 கோடிகளுக்கு மேல் கொட்டியாகிவிட்டது . இவ்வளவு செலவு செய்த பிறகு விட்டுவிட முடியுமா?. வீணாக்க முடியுமா? என்றும் அடிக்கடி கேட்கிறீர்கள் சான்றோர்களே?.

1,76,000 கோடியிலிருந்து வேண்டுமானால் இந்த 14000 கோடியை கழித்துக் கொண்டு அருள்கூர்ந்து எங்களை விட்டு விடுங்களேன். 14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது என்று போராடுவதற்காக எங்களை மன்னித்து விடுங்கள் பெரியோர்களே.

நன்றி: “காக்கைச் சிறகினிலே” “ அலை செய்திகள்” இணைய இதழ்

Tuesday, December 13, 2011

சிரிக்கும் துறவிகள்

"காக்கை சிறகினிலே” இந்த மாத இதழில் ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. இதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். அதனூடே “சிரிக்கும் துறவிகள்” என்ற கதை ஒன்றினை சொல்கிறார். அதை எனது மொழியில் இங்கே தருவதை எனது இன்றைய கடமையாகவே கருதுகிறேன்.

மூன்று துறவிகள் சீனாவில் இருந்தார்கள். மூவரும் சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்களை மக்கள் “சிரிக்கும் துறவிகள்” என்றே அழைத்தார்கள். எதற்காக சிரிக்கிறோம் என்பது அவர்களுக்கே விளங்காத நிலையில் பையப் பைய மக்களும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு நாள் அந்த மூவரில் ஒரு துறவி இறந்து போனார். ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆனால் மற்ற இரண்டு துறவிகளும் நண்பனின் பிணத்தருகே நின்று சிரித்துக் கொண்டே இருந்தனர். எரிச்சலடைந்த மக்கள் அவர்களிடம் சென்றனர்.

“ நண்பனின் பிணமருகே நின்று சிரிக்கிறீர்களே. இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?”

“இல்லை”

“பாவிகளா. உருப்படுவீங்களா”

“ பந்தயத்தில் எங்களை அவன் ஜெயித்து விட்டான். அதுதான் சிரிக்கிறோம்”

“பந்தயமா?”

“ஆமாம், எங்களில் யார் முதலில் சாவது என்பது பந்தயம். அவன் ஜெயித்து விட்டான். அதை நினைத்துதான் சிரிக்கிறோம்”

வாயடைத்துப் போனார்கள்.

செத்த துறவி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

“ நான் சதா சிரித்துக் கொண்டே இருந்ததால் அழுக்கென்னை அண்டவே இல்லை. எனவே நான் செத்துப் போனதும் என்னைக் குளிப்பாட்டாமல் அப்படியே எரித்து விடுங்கள்.”

அப்படியே செய்தார்கள்.

அப்போது அவர் தனது உடைகளுக்குள் ஒழித்து வைத்திருந்த வெடிகள் வெடித்தன. வானத்தில் சில ஜொளித்து வேடிக்கை காட்டின. எரியூட்ட வந்திருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

என்ன ஒரு பந்தயம்? வென்றவன் தனது வெற்றியைக் கொண்டாடவே இயலாது என்று தெரிந்திருந்தும் தோற்றவர்கள் தங்களது தோல்விக்காக துவளாமல் வென்று இல்லாமல் போனவனது, அல்லது இல்லாமல் போய் வென்றவனது வெற்ரியை கொண்டாடுவது என்பது இருக்கிறதே... அப்பப்பா... ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமே கதை சொல்லி இருக்கிறார்கள். 

அநேகமாக தனது மரணத்திலும் மக்கள் சிரித்து மகிழ எதையோ வைத்து விட்டுப் போன மகத்தான மனிதன் இவனாகத்தானிருக்கும். 

Monday, December 12, 2011

அச்சம் தவிர்

”காக்கை சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டத்தில் இருந்த பொழுது வைகறை அய்யா “ஸ்டேட்ஸ் மேன்” பத்திரிக்கையின் சிறப்பு நிரூபர் ராதிகா கிரி அவர்களது கட்டுரை ஒன்றைக் கொடுத்து, இதை உடனே தமிழ்ப் படுத்தித் தாருங்கள் என்றார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள பத்திரிக்கையாளர்கள் எப்படி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே திட்டத்தில், ஒரே குரலில், முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு அச்சத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்பதை தொட்டு நீள்கிறது அவரது கட்டுரை.

மலையாளிகள் எங்கு இருக்கும் போதும் மலையாளிகளாகவே செயலாற்றுவதில் திட்டமிட்டு வெற்றி பெற்றுவிடுகிறாகள் என்பதையும் அவரது கட்டுரை சொல்கிறது. இதில் கோவம் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும், கற்றுக் கொள்ளவே நமக்கு இதில் இருக்கிறது என்றுமே உணர்ந்தேன்.

மலையாளப் பத்திக்கையாளர்கள் மலையாளப் பத்திரிக்கை உலகில் மண், மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய அடிப்படையில் தன் இனம் சார்ந்த உணர்வோடு செயல்படுவதில் பிழை இல்லை. ஆனால் சென்னையில் இருக்கும் ஆங்கில அச்சு ஊடகத்தில், பணி புரியும் மலையாளப் பத்திரிக்கையாளர்களும் அதே உணர்வோடு பணியாற்றுவது என்பது ஆபத்தாந்தல்லவா? என்று ஆதங்கப் படுகிறார்.

ஆமாம், மலையாள மண் சார்ந்து மலையாள ஊடகத்தில் கொண்டு போவது ஏற்படுத்தும் விளைவுகள் அந்தப் பிராந்தியத்தில் மட்டுமே அதிர்வுகளை ஏற்படுத்தி அவர்களை உசுப்பும். ஆனால் அதுவே ஆங்கில ஊடகத்தில் எனில் அது தேசம் முழுமையும் ஊடுறுவி அவர்களது செயலில் நியாயம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது ஆபத்தானது என்கிற வகையில் நாம் இது குறித்து கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

அவர்கள் தொடர்ந்து ஆங்கில இதழ்களிலும் “முல்லப் பெரியாறு” என்றே எழுதுவதையும் அவர் குறிப்பிடுகிறார்.

அதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் சென்னை இந்து கூட “முல்லப் பெரியாறு” என்றுதானே எழுதுகிறது என்று அவர் கேட்பதில் இருக்கிற நியாயத்தை உணரத் தவறினால் இன்னும் விழவே விழுவோம்.

சரி ஆங்கில ஊடகத்தில் பணியற்றும் தமிழ் எழுத்தாளர்களே இல்லையா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விக்கும் இவர்கள் எதுவும் சுயமாய் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்.

தற்போது கேரள அரசுக்கு ஆலோசகராக இருக்கும் பரமேஸ்வரன் நாயர் எழுபதுகளில் கேரள மிசாரத்துறையின் தலைமை பொறியாளராக இருந்த பொழுது ஒரு முறை அப்போது கேரள காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. கருணாகரனிடம் சொன்னாராம், “அணையின் நீர் வரத்தை குறைக்க தமிழக முதல்வரிடம் பேசுங்கள். அதை விட முக்கியமாய் அதற்கு முன்னர் அணை குறித்த ஒரு அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்திவிட வேண்டும்”

மலையாள மனரோமா உள்ளிட்ட பத்திரிக்கைகள் அந்த வேலையை கச்சிதமாக செய்து தர அன்றைய தமிழக முதல்வரை அதன் பிறகு அணுகினார்கள் என்றும், அதன் விளைவே 152 அடி 136 அடியானது என்றும் அவரது கட்டுரையில் இருந்து அறிய முடிகிறது.

தெரிதவர்கள் அருள் கூர்ந்து பேசுங்கள் இது குறித்து தனியாய் எழுத உதவும்

Saturday, November 26, 2011

கோடொன்று பெரிதாய் ...

வழக்கமாக மொட்டை மாடியை நான்கைந்து சுற்றுகள் முடிக்கும் முன்னரே மறந்து போன விஷயம் ஞாபகத்துக்கு வந்து விடும். ஆனால் இன்று கால் வலிக்குமளவுக்கு மொட்டை மாடியில் நடந்து பார்த்தும் நினைவுக்கு வரவில்லை.

இதுவும் ஒன்றும் புதிதல்லதான். மொட்டை மாடியில் கிடைக்காமல் போனால் காலார கடைவீதி நடந்து போய் கலியன் கடையில் ஒரு கோப்பை தேனீர் குடித்து விட்டு திரும்புவது வழக்கம். வீட்டிலிருந்து கலியன் கடைக்கும், கலியன் கடையிலிருந்து வீட்டிற்குமான நடை வெளியில் மறந்து போன விஷயம் ஞாபகத்தில் தட்டுப் பட்டு விடும்.

நான்குமுறை கலியன் கடைக்கு நடந்தும் பலன் கிடைக்க வில்லை. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை என்பதில் கூட ஆபத்து எதுவும் இல்லை. நமக்குக் கொடுத்தவனே மறந்து போயிருந்த கடன் பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வரவே கலியன் கடைக்கான ஐந்தாவது பயணத்தை மிகுந்த புத்திசாலித் தனத்தோடு தவிர்த்தேன்.

அந்த மன்னனின் பெயரும், அந்த சம்பவம் நடந்த இடமும், அதை நான் எங்கு வாசித்தேன் என்பதும்தான் நான் மறந்துபோன சமாச்சாரங்கள்.

வெகுநேர யோசனைக்குப் பின் அவை எல்லாம் நினைவுக்கு வர மறுத்தாலும் அதை எழுதியே விடுவது என்று முடிவெடுத்தேன். இல்லாது போனால் இவ்வளவு பெரிய அபத்தத்திற்கான அடிக்கல் நாட்டப் படுவதைப் பார்த்தும் அசையாது வேடிக்கை பார்த்த குற்றத்திற்கு என்னை ஆளாக்கி, வருங்காலத் தலைமுறையினர் என் கல்லறையின் முகவரியை கஷ்டப்பட்டேனும் கண்டுபித்து வந்து காறி உமிழ்ந்துவிடுவார்கள்.

மேற்சொன்ன விவரங்கள் இல்லாது எழுதுவதால் சிலர் இதை புனைவாகக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒன்றும் பெரிய பாதிப்பில்லை.

அந்த மன்னனின் பெயர் அநேகமாக தைமூர்.அந்த சம்பவம் நிகழ்ந்த இடம் அநேகமாக பாக்தாத். இவை பிழை எனும் பட்சத்தில் யாரும் என் மீது கோபப் படாமல் இதை ஒரு புனைவாகவே கொள்ளுமாறும் வேண்டுகிறேன். இது புனைவாகவே இருந்தாலும் சரியாகவே இங்கு பொருந்தும் என்பதை மட்டும் உறுதியாய் சொல்கிறேன்.

மிகுந்த கனவுகளோடும் , அதைவிட அதிக சிரமத்தோடும் பாக்தாத்தை வெற்றி கொள்கிறான் தைமூர்.

பொதுவாகாவே இத்தகைய வெற்றிகள் நிகழும் நேரங்களில் எல்லாம் அந்த மண்ணின் அழகான யுவதிகளை,  நன்கு உழைப்பதற்கான கட்டுலடோடு உள்ள இளைஞர்களை, பொன்னை, பொருளை, யானைகளை ,குதிரைகளை, மற்றும் பயன்படக் கூடிய கால்நடைகளை அள்ளிச் செல்வதோடு அந்த மண்ணில் இருக்கும் கலைப் பொக்கிஷங்களை, மற்ற மதத்து வழிபாட்டு புனிதத் தளங்களை, இன்ன பிற மேன்மைகளை மிச்சம் வைக்காது அழித்தும் போவார்கள்.

வெற்றிக்குப் பிறகு மன்னனைச் சந்திக்கிறான் தளபதி.

“இந்த நிமிடம் முதல் இந்த மண்ணும் மக்களும் உமது அடிமைகள் மன்னா”

“அப்படியா. மகிழ்ச்சி”

” இந்த அடிமை மண்ணில் எதை முதலில் அழிக்க வேண்டும் என உத்தரவு மன்னா?”

மன்னன் மௌனமாய் இருக்கவே

“இங்குள்ள கோட்டையை தகர்த்துவிடவா மன்னா?”

“ வேண்டாம் அது இருப்பதால் நமக்கென்ன பாதிப்பு?”

” அரண்மனை?”

“வேண்டாம் வேண்டாம் இருந்துவிட்டுப் போகட்டும்”

“புராதனக் கட்டிடங்களை?”

“ வேண்டாம் முட்டாளே”

“அணைகளை...?”

“ நாசமாப் போறவனே. உருவாக்கத்தான் தெரியவில்லை. எதை அழிப்பது என்று கூடவா உனக்குத் தெரியாது?”

மிரண்டு போன தளபதி “ வேறு எதைத் தான் மன்னா அழிப்பது?”

“ இந்த மண்ணில் இருக்கும் அத்துனை நூலகங்களையும் அழித்துப் போடு. ஒரு துண்டுத் தாள், எழுது பொருள் , புத்தகம், சிலேட்டு, செப்பேடு, கல்வெட்டு, ஓலைச் சுவடி என்று எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது. எது இருந்தாலும் அழித்துப் போடு.”

இதைக் கேட்டதும் தளபதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் தன் கழுத்தில் தலை இருக்க வேண்டுமே என்ற பயத்தில் மிகவும் சிரமப் பட்டு சிரிப்பை அடக்கினான். ஆனாலும் அடக்கவே முடியாத ஆர்வத்தில் கேட்டே விட்டான்.

“இவற்றை அழிப்பதால் என்ன மன்னா லாபம்?”

பலம் கொண்டமட்டும் மன்னன் சிரித்து வைத்தான். “மண்டு மண்டு. இவை எல்லாம் இருந்தால் நமது அடிமைகள் வாசிக்க மாட்டார்களா?”

“ வாசிப்பார்கள்தான் மன்னா. ஆனால் அதனால் நமக்கென்ன பாதிப்பு?”

” வாசித்தால் அவனுக்கு அறிவு வராதா?”

“ வரும்தான் மன்னா. அவனுக்கு அறிவு வருவதால் நமக்கென்ன மன்னா?”

“ மடையா!, அறிவு தெளிவைத் தரும். அது,  தான் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்தும். விடுதலை வேட்கையை அவனுக்குத் தரும். அது நமக்கு ஆபத்தாக முடியும். ஒருவன் அடிமையாகவே இருக்க வேண்டுமெனில் அவனை வாசிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாசிக்க ஆரம்பித்துவிட்டால் அவன் விடுதலையைத் தேடத் தொடங்கிவிடுவான்.”

( தாள்கள் அறிவைத் தரும். அறிவு விடுதலைக்கான வேட்கையைத் தரும் என்பது உண்மை எனும் பட்சத்தில் “ தாள்களே இல்லாத உலகமே எனது கனவு” என்று உரக்கக் கூவி உலகம் பூராவும் கிளைகள் பரப்பி செயல் படும் பில் கேட்ஸிடமும் மிகுந்த எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும் போல.)

“ஆஹா! ஆஹா!, மன்னர்னா மன்னர்தான்”

( எந்த மன்னனிடம் ஒரு தளபதி இவ்வளவு பொறுமையாகப் பேசியிருக்க முடியும் என்று யாரும் கிண்டலிக்க வேண்டாம். புனைவு கலந்தது என்று அருள் கூர்ந்து கொள்ளுங்கள்.)

இதை ஞாபகத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்த அறிவிப்புதான் நம் நினைவிற்கு இந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

இரண்டிற்கும் பெரியதாய் ஏதும் வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு செய்த ஒரே நல்ல காரியமாக இதைமட்டும்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. இதை இவ்வளவு செய் நேர்த்தியுடன் இவ்வளவு அக்கறையோடு எப்படி செய்தார்கள் என்பதுதான் நம்மால் இன்னும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

இதை மாற்றுவதற்கு நீங்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் ஏற்கத் தக்கதாய் இல்லையே முதல்வர் அவர்களே.

அது முழுக்க முழுக்க நூலக ஆணைக் குழுவின் நிதியிலிருந்து கட்டப் பட்டது எனவே அதை வேறு காரியங்களுக்கு பயன் படுத்த இயலாது என்று த.மு.எ.க.ச போட்டிருக்கும் வழக்கில் நூறு விழுக்காடும் நியாயம் இருப்பதாகவே படுகிறது.

மேலும் நூலக ஆணைக் குழு அதை தங்களால் நிர்வாகிக்க இயலாது என்றும் சொல்லாத நிலையில் அதை நீங்கள் மாற்றப் போவதாய் அறிவித்திருப்பது நியாயமாயில்லையே என்ற அவர்களது குரலிலும் நியாயம் தானே நிரம்பி வழிகிறது முதல்வர் அவர்களே.

குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று நீங்கள் சொல்வதையும் , “ எவ்வளவோ இடம் இருக்கே. அம்மா நினைத்தால் ஒரே வருடத்தில் இதை விட பெரிய , அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் ஏற்படுத்த முடியும்,” என்று மூன்றாம் வகுப்பு குழந்தையே நியாயமாய் நிராகரிக்கிறானே.

அந்த சின்னக் குழந்தைக்கே புரிவது உங்களுக்கு புரியாமலா இருக்கும். பிறகு ஏன் தாயே?

அதுவும் அந்தச் சின்னக் குழந்தைக்கே புரியக் கூடிய விஷயம்தான்.

அது கலைஞரால் அமைக்கப் பெற்றது. அது இருக்கும் வரைக்கும் கலைஞரின் பெயர் இருக்கும். அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பதுதானே.

இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் முதல்வர் அவர்களே. பிறகு தைமூர் பாக்தாத் மக்கள் அடிமைகளாகவே இருக்க நினைத்ததைப் போல் நீங்கள் எங்களை அடிமைகளாகவே வைத்திருக்க முடிவெடுத்துவிட்டீர்கள் என்று ஆகிவிடும்.

தமிழர்கள் அறிவற்று அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படுவதாகத் தெரியவில்லை. எனில், கலைஞருக்கு பெயர் போகிறதே என்ற ஆதங்கமாகத்தான் இருக்கும்.

இது எட்டு ஏக்கர் நிலப் பரப்பில், எட்டுத் தளங்களில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பெரிய நூலகம், அவ்வளவுதான்.

நீங்கள் நினைத்தால் பத்து ஏக்கர் நிலப் பரப்பில், பன்னிரண்டு தளங்களைக் கொண்டு, இதைவிட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உலகின் ஆகப் பெரிய நூலகத்தை உங்களால் உருவாக்க இயலும்.

கலைஞர் ஒரு கோடு போட்டிருக்கிறார். அது பெரியதாய் உங்கள் கண்களை உறுத்தினால் அந்தக் கோட்டினைக் கை வைக்காமலே அதை சின்னதாக்கி விட முடியாதா?

மிகவும் எளிமையாய் அதை செய்து விட முடியும் உங்களால்.

அதை விட பெரியதாய் கோடொன்றினைப் போடுங்கள். கலைஞரின் கோடு சின்னதாய்ப் போகும்.

இல்லை என்றால்,

போன வாரம் எந்த அமைப்பையும் சாராத விஷ்ணுபிரம் சரவணன், கவின் மலர், நறுமுகை தேவி போன்ற இளைய பிள்ளைகள் ஒரு எண்பது பேர் சென்னையில் ஒன்று திரண்டு தோழர் இன்குலாப் அவர்களே வியந்து போற்றுமளவுக்கு உரத்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இதை அருள் கூர்ந்து உதாசினம் செய்து விட வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறேன்.

அஸ்மா மக்பூல் என்ற இளைய பெண்ணொருத்தி முக நூலில் இரண்டு வரி எழுதிப் போட்டதுதான் எகிப்தையே புரட்டிப் போட்டது என்பதை இந்தத் தருணத்தில் தங்களுக்கு நினைவு படுத்துவதை எனது கடமையாகவே கருதுகிறேன்.



Friday, November 11, 2011

குற்றம் குற்றமே

” மதச் சார்பற்ற தன்மையுடைய விஞ்ஞானத்தின் பெயரால் நல்லிணக்கத்திற்கெதிரான இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது என அறிவிக்கிறோம்”

இது ஏதோ ஒரு மத வெறியைத் தூண்டக் கூடிய மத வெறியர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கான அறிவிப்பு எனில் கவனம் குவிக்காமல் விட்டு விடலாம்.

உலகத்தில் வாழும் மக்களில் பெரும் திரளான ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் திகழும் போப்பாண்டவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது என்பதும், அதுவும் அவரது ஆளுகைக்கு உட்பட்ட பல்காலைக் கழகமே மேற்சொன்ன பிரகடனத்தோடு அதை செய்துள்ளது என்பதை அறிந்ததும் இயல்பாகவே ஏன்? என்ற ஆவல் பிடித்துக் கொள்ள உள்ளுக்குள் நுழைந்தோம்.


“ எல்லா சாலைகளும் ரோமை நோக்கி “ என்று சொல்வார்கள். உலகில் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் என்ற பெரும்பான்மையின் செருக்கு மிகுந்த வெளிப்பாடாக இதைக் கொள்பவர்களும் உண்டு. அதில் நியாயமும் உண்டு. மேன்மைமிக்க வெளிப்பாடாக இதைக் கொண்டவர்களும் உண்டு. போப்பாண்டவரின் ஆளுமையும் செல்வாக்கும் உலகை கோளோச்சும் அந்த நிலை இன்னும் அப்படியேத்தான் உள்ளது. பிறகெப்படி இது சாத்தியப் பட்டது? ஏன் தேவைபட்டது?

லா ஸாட்னீஸா என்று ஒரு பல்கலைக் கழகம் ரோமில் உள்ளது.17.01.2008 அன்று போப்பாண்டவர் அவர்களின் அருளாசியுடன் அது தனது அந்த ஆண்டிற்கான பணியினைத் துவங்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிவிப்புதான் பின்னர் திரும்பப் பெறப் பட்டது.

சரி, அப்படி என்ன அந்தப் போப்பாண்டவர் தவறு செய்து விட்டார்?

1633- ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு விசாரனை நடத்தப் பட்டது. திருச்சபையின் முன் கலிலேயோ நிறுத்தப் பட்டார்.

எதற்கந்த விசாரனை?

1633-ல் கலிலேயோ சூரியனை மையமாக வைத்து பூமி சுற்றுகிறது என்று அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையோ பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்று நம்பியது. சூரியன்தான் பூமியை சுற்றுகிறது என்றும் நம்பியது. நம்பவும் சொன்னது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் கலிலேயோ சற்று உரத்து குரலெடுத்து ”பூமி நிலையானது அல்ல. சூரியனைச் சுற்றி இயங்குகிறது” என்று சொன்னார்.இவருக்கு முன்னரே கோபர் நிக்கஸ் இதைக் கண்டுபிடித்திருந்தார். காயம் படாமல், கழுமரம் ஏறாமல், அவஸ்தைக் கால ஜெபத்தோடு செத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கிருந்ததால் உயிருக்கு பயந்தவராக அதை வெளியே சொல்லாமலே செத்துப் போனார்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாத கலிலேயோ இதை சொன்னார். நன்கு சத்தம் போட்டே சொன்னார். இது திருச்சபையின் நம்பிக்கையை, விசுவாசத்தைக் கேள்வி கேட்டது. இந்தக் கேள்வி திருச்சபையின்பால் நம்பிக்கை கொண்டுள்ள கத்தோலிக்கர்களிந்தேவ விசுவாசத்தை, கத்தோலிக்க கட்டமைப்பை உடைத்துவிடுமோ என்று திருச்சபை அச்சப் பட்டது. திருச்சபையே விசுவாசத்தின் மேல் கட்டப்பட்டதுதான். “ நம்பி விசுவாசிப்பவனை விட நம்பாமல் விசுவாசிப்பவனே பாக்கியவான்” என்றும் சொல்லப் பட்டது. ஆகவே இதனை அப்படியே விடுவது என்பது திருச்சபையை முடிவுக்கு கொண்டு வருகிற ஒரு தொடர் செயலுக்குக் கால் கோலும் என்று திருச்சபை கருதியது. எனவே அன்றைய போப்பாண்டவர் தலைமையில் விசாரனை துவங்கியது. விசாரனை என்பதைவிட கட்டப்பஞ்சாயத்து என்பதே பொருந்தும். அதே போல போ[ப்பாண்டவரைக் கூட நாட்டாமை என்றும் அந்த விசயத்தில் கொள்ளலாம்.

அந்தக் கட்டப் பஞ்சாயத்து கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. வேடிக்கைப் பார்க்கத் திரண்ட ஜனத்திரளின் முன் கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். இதற்காக சிறை பட்டார். இறுதியாய் பைத்தியம் பிடித்து செத்தும் போனார்.

ஏறத்தாழ 360 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990 வாக்கில் எந்த மேல் முறையீடுமின்றியே இந்த விசயம் மீண்டும் விசாரனைக்கு வந்தது. இப்போது திருச்சபை தனது முடிவை மாற்ரிக் கொண்டது. பூமிதான் சூரியனச் சுற்றுகிறது என்ற கலிலேயோவின் கருத்தை ஏற்றது. சுருங்கச் சொன்னால் மதத்தை விஞ்ஞானம் வென்றது.

அப்போது அந்தக் குழுவில் இருந்த பெனடிக் 16- ஆம் கார்டினல் ரட்சசிங்கர் மட்டும் கலிலேயோ கருத்து ஏற்கத்தக்கதல்ல. 1633-ல் திருச்சபை எடுத்த முடிவே சரியானது. எனவே கலிலேயோவின் கருத்தை திருச்சபை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார். மட்டுமல்ல அவர் தனது கருத்தில் விடாப் பிடியாகவும் இருந்தார். நல்ல வேளையாக அன்றைய பெரும்பான்மை இவரது கருத்திற்கு எதிராகப் போகவே திருச்சபை த்னது 360 வயது பழைய கருத்தை மாற்றிக் கொண்டு கலிலேயோவை குற்றத்திலிருந்து விடுவித்தது.

விஞான யுகத்தில் விஞானத்தின் சகல கனிகளையும் ருசித்துக் கொண்டே தனி ஒரு மனிதனாய் அந்தக் கூட்டத்தில் கலிலேயோவை ஏற்கக் கூடாது என்று சொன்ன பெனடிக் 16-ஆம் கார்டினல் ரட்சசிங்கர்தான் அன்றைய நிகழ்ச்சியை அருளாசி செய்து வைக்கவேண்டிய போப்பாண்டவர். அதைத்தான் அந்தப் பல்கலைகழகத்தின் கல்வியாளர்கள் எதிர்த்தனர்.

அவர்களும் விசுவாசிகளே. ஆனால் அற்ப விசுவாசிகள் அல்ல. விஞானத்தை ஏற்கும் ஆன்மீகவாதிகள்.

இறுதியாக பல்கலைக் கழகம் தவறு செய்தவர் தெய்வமென தாங்கள் போற்றி வழிபடும் போப்பாண்டவரே ஆயினும் அது தவறுதான் என்று முடிவெடுத்தது.போப்பாண்டவரின் நிகழ்ச்சியை ரத்து செய்து , நாம் ஆரம்பத்தில் பார்த்த அறிவிப்பை செய்தது.

முதலில் மதப் பழமை வாதிக்கும், மதப் பழமைவாதத்திற்கும் எதிராகத் திரண்டு கொதிதெழுந்த அந்த 67 கல்வியாளர்களையும்சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.

இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும், மத வாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறிகொண்டு எதிர்க்க வேண்டுமென்றும் ஆசைப் படுகிறோம்.அன்றைக்கே ஒருவன் தமிழில் சொன்னான்.

“ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் இருந்து

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...