Wednesday, March 9, 2011

குட்டியாய் ஒரு கவிதை ...



எதிர் வீட்டுப் பையன்
புத்தகம் கொடுத்தான் 
என்ன இருக்கிறதோ?



Monday, March 7, 2011

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...


"உன்னுடைய அழைப்பிற்கு
எவரும்
செவி சாய்க்கவில்லையெனில்
தனியாகவேனும் நட!
தனியாகவேனும் நட!!"

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு அடுத்து நடந்த பாகப் பிரிவினையில் பாகிஸ்தானின் பங்கு 75 கோடி ரூபாய் என்று கணக்கிடப் பட்டது. அதில் 20 ௦ கோடியை மட்டுமே கொடுத்த அன்றைய நேரு அரசு மீதமுள்ள 55 கோடியைத் தர இயலாது என்று அழிச்சாட்டியம் செய்தது. காஷ்மீர் பிரச்சினையில் தங்களோடு ஒத்துப் போகும் வரை அந்தப் பங்குத் தொகையை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லையென வல்லபாய் படேல் பிடிவாதமாய் கூறிவிட்டார். இந்த நிலையில் இது விஷயத்தில் நேருவிடமிருந்தும் நியாயம் கிடைத்துவிடாது. ஏன் எனில் துருப் பிடித்த இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலை மீறி நேருவால் எதையும் செய்துவிட முடியாது. மன்மோகன் அளவுக்கு சத்தியமாய் இல்லைதான் என்றாலும் நேருவுக்கும் நிறைய நெருக்கடிகள் இருக்கவே செய்தன. இதை உணர்ந்துகொண்ட காந்தி 1948 ஜனவரி 13 அன்று பிர்லா மாளிகையில்  உண்ணாவிரததை தொடங்கினார்.அப்பொழுது அங்கு திரண்டிருந்த ஜனங்களை மேலே காணும் தாகூரின் பாடலைத்தான் பாட சொன்னதாக அருணன் சொல்கிறார். (ஆக காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து முதன் முதலில் உண்ணாவிரதம் இருந்தது அநேகமாக காந்திதான் என்று படுகிறது)

அஸ்மா மக்பூல் மேற்காணும் தாகூரின் வரிகளை வாசித்திருக்க சத்தியமாய் வாய்ப்பில்லை. ஆனால் இதற்கு மிகவும் நெருக்கமாக ஒரு நான்கைந்து வரிகளை "பேஸ் புக்" கில் அவர் கொளுத்திப் போட எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி முபாரக் உசிருக்கு பயந்து தனது குடும்பத்தோடு  நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

 ஒட்டு மொத்த எகிப்து மக்களின் சகலத்தையும் சுரண்டிக் கொழுத்த சர்வாதிகாரி முபாரக்கிற்கு எதிராக மக்களின் கவனத்தைத் திருப்ப நான்கு எகிப்திய இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீயிட்டுக் கொளுத்திக் கொண்டு செத்துப் போகிறார்கள். எரிந்த அந்த இளைஞர்களின் ஜுவாலையிலிருந்து எகிப்து மக்கள் இருண்டு கிடந்த தங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கண்டார்கள். இதற்கு காரணமாக அமைந்தது இருபத்தி ஆறே வயதான அஸ்மா மக்பூலின் நான்கைந்து வரிகளும் செயலும்தான்.

" தீக் குளித்த நான்கு இளைஞர்களுக்கும் அஞ்சலி செலுத்த "தஹ்ரீக் சதுக்கத்திற்குப்" போகிறேன். என்னைப் போல் சிந்தனை உள்ள எவரும் வரலாம்" என்கிறமாதிரி ஒரு சன்னமான அழைப்பாகத்தான் அவரது முதல் "பேஸ் புக்" குறிப்பு இருந்தது. அவர் சதுக்கத்திற்குப் போன போது ஒரு மூன்று நான்கு இளைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர்.விவரம் தெரிந்து அங்கு  வந்த காவலர்கள் அதை அவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.  அவர்களை அழைத்துப் போய் எச்சரித்து அனுப்பி விட்டனர். அந்தக் காவலர்களுக்கு மட்டுமல்ல அந்த இளைஞர்களுக்கும் ஏன் அஸ்மா மக்பூலுக்கே அப்போது அவர் அடுத்ததாய் எழுதப் போகும் நான்கைந்து வரிகள் எகிப்தை மட்டுமல்ல உலகையே ஒரு புரட்டு புரட்டப் போகிறது என்பது.

"தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் , ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்க வேண்டும். யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீக் குளிப்பதற்காக அல்ல. என்னை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை, நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள். அல்லாவைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்" என்று அவர் "பேஸ் புக்" கில் எழுதி போட்ட போது லட்சக் கணக்கான மக்களை ஓரிடத்திலே ஒன்றிணைத்து இறுதி வெற்றி கிட்டும் வரை
அவ்விடம் விட்டு நகராமல் அவர்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறாக அது மாறும் என்பதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க நியாயமில்லை.இந்த வரிகளின் விளைவு ' நீங்கள் உங்களை ஆணாகக் கருதினால்' என்ற அவரது அடி மனசில் உறைந்து கிடக்கும் ஆணாதிக்க நம்பிக்கையை விமர்சிக்க விடாமல் நம்மை நகர்த்திப் போகிறது.

பலரது எழுத்துக்கும்  வாழ்க்கைக்கும் இடையே கார்களும் பங்களாக்களும் எஸ்டேட்டுகளும் நிறைந்து மென்மையாய் புன்னகைத்துக் கொண்டிருக்க அஸ்மா மக்பூலோ தான் செய்யப் போவதை எழுதினர். எழுதிய படியே செய்தும் காட்டினார்.

"நீங்கள் ஒன்றும் அனாதைகளல்ல, உங்களோடு நாங்களிருக்கிறோம்" என்று போர்ராடத் திரண்டிருந்த எகிப்திய மக்களிடம் உலக மக்கள் ஒவ்வொருவரும் சொன்னோம்.உலக மக்களின் உணர்வுப் பூர்வமான ஆதரவு அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்தது.எழுச்சியடைந்தார்கள். சலிர்க்கிற மாதிரியும் நெகிழ்கிற மாதிரியும் ஏராளம் சம்பவங்கள் அந்தப் போராட்டத்தில்.

"போராடும் மக்களை நோக்கி ஆயுதுங்களைத் திருப்புங்கள். ராணுவத்தையும் என் குடும்பத்தையும் தவிர அனைவரும் செத்துப் போனாலும் பரவாயில்லை. போராட்டத்தை நசுக்குங்கள்" என்ற அதிபர் முபாரக்கின் உத்திரவை ராணுவம் நிராகரித்தது. "எங்கள் மக்கள் மீது துப்பாக்கியைத் திருப்பவா நாங்கள் ராணுவத்தில் சேர்ந்தது?. எதிரிகளிடமிருந்து எங்கள் மக்களைப் பாதுக்காப்பதே அல்லாமல் சொந்த மக்களை அழித்து அதிபரைக் காக்கும் அரண்மனை அடியாட்கள் அல்ல. எங்கள் மக்களின் ஊழியர்கள் நாங்கள்" என்கிற அவர்களின் புரிதலும் தெளிவும் சிலிர்ப்பூட்டும் சம்பவம் எனில் அடுத்த சம்பவமோ நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.

ஒரு அம்மா ஒரு மகன் என்று மிக மிக அழகான குடும்பம். மகன் ராணுவ வீரன். அந்தத் தாய் போராட வருகிறாள் சதுக்கத்திற்கு. அந்தப் புள்ளியில் ராணுவம் என்ன செய்யப் போகிறது என்பதை அந்தத் தாய் உட்பட யாரும் அறிந்திருக்க வில்லை. அதே சதுக்கத்திற்கு அவரது மகனும் ராணுவப் பணிக்காக வருகிறார். அம்மாவும் பிள்ளையும் சதுக்கத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். காலையில் வீட்டிலிருந்து பணிக்குப் புறப்படும் போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த போதுகூட அம்மா தான் அங்கே வரப் போவதை சொல்ல வில்லையே என்ற ஆச்சரியம் மகனுக்கு. கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்கிறார்கள். மகன் ராணுவ வீரர்களை நோக்கிப் போகிறார். தாய் போராளிகளோடு போய் சங்கமிக்கிறார்.

தனது ராணுவம் என்று முபாரக் கருதியிருந்த ராணுவம் மக்கள் ராணுவமாக மாறுகிறது. மக்கள் புரட்சி வெற்றி பெறுகிறது. மிரண்டுபோன முபாரக் தன் குடும்பத்தோடு தனது நாட்டை விட்டு தப்பியோடி தனது உசிரக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தீ அண்டை நாடுகளில் பரவுகிறது. குறிப்பாக லிபியாவில் அயோக்கியத் தனத்தில், கொடூரத்தில், முபாரக்கிற்கு கொஞ்சமும் குறைவுபடாத கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டு எழுந்திருக்கிறார்கள். ராணுவம் இன்னும் மக்கள் ராணுவமாக மாறாமல் கடாபியின் இராணுவமாகவே உள்ளது. எனவே அவர்கள் மக்களை நோக்கித் தங்கள் ஆயுதங்களைத் திருப்பி மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் எந்த ஆயுதத்தாலும் இந்த நொடி வரை மக்களின் எழுச்சியை ஊனப் படுத்த முடியவில்லை.

ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் நமது உச்சரிப்புக்குள் சிக்க மறுக்கும் பல நாடுகளும் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவும் அறிக்கைகளை மட்டுமல்ல படைகளையும் அனுப்பத் தயாராகின்றன. அமெரிக்கா அனுப்பியே விட்டது. 

போராட்டம் வெடித்து சில நூறு மக்கள் செத்துப் போன உடனே லிபியா மீது பொருளாதாரத் தடையினை ஐ.நா வீசியது.

லிபியா மக்கள் மீது வானிலிருந்து லிபிய ராணுவம் குண்டுகளை வீசினால் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்துவோம். லிபியா மீது எந்த விமானம் பறப்பதையும் தடை செய்கிறோம் என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிரகடனம் செய்கின்றன. 

மக்களை கொல்வதற்கு ஆணையிட்ட கடாபி, அவரது மகன், மற்றும் அதிகாரிகள் மீது இன்டர்போல் எனப்படும் சர்வ தேச காவல் துறை பிடி வாரண்ட் போட்டிருக்கிறது.

மக்கள் நம்பிக்கையோடு தங்கள் போராட்டத்தை நகர்த்துகிறார்கள். இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ லிபிய மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் .  

 நாம் நமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் லிபியா மற்றும் போராடும் ஒவ்வொரு
மக்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

அதே நேரம் உலக மக்களிடம் சில ஐயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் , போராடும் மக்களிடம், "ஏமாந்து விடாதீர்கள்" என்று அன்போடும் அக்கறையோடும் எச்சரிக்கவும் கடமை
பட்டிருக்கிறோம்.

சில நூறு மக்களை அதன் ராணுவமே கொன்று குவித்த போது சற்றும் தாமதிக்காது கண்டனத்தையும் பொருளாதாரத் தடையையும் வெளியிட்ட ஐ. நா சபையும் ,கடாபி
மீது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச காவல் துறையும் , அமெரிக்காவும் , பிரிட்டனும் ஒரு கோடையில் ஓரே வார கால இடை வெளியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான 
எண்ணிக்கையில்  தமிழ் மக்கள் தங்களது சொந்த ராணுவத்தால் சுட்டுக் கொள்ளப் பட்டபோது கை கட்டி மௌனித்தமைக்கும், ரகசியமாக ஆயுதங்களையும் ராணுவத் தொழில் நுட்பத்தையும் போராடிய எங்கள் மக்களின் எதிரிகளுக்கு வழங்கிய கள்ளத் தனத்திற்கும் காரணம் என்ன?

எகிப்து லிபியா மற்றும் போராடும் என் இனிய மக்களே , நீங்கள் உங்களையும் உலக மக்களின் ஆதரவையும் மட்டுமே நம்புங்கள். முபாரக்குகளைவிடவும் கடாபிகளைவிடவும் கோடி மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அருள் கூர்ந்துஇவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

Wednesday, March 2, 2011

செய்யாமையானும்...

கட்டாயம் செய்தே இருக்க வேண்டிய ஒரு காரியம் அது. செய்யத் தவறி விட்டேன்.  அதற்காக வெட்கப் படுகிறேன். இப்படிப் பகிரங்கமாகப் பகிர்வதில் எந்தச் சங்கடமும் எனக்கில்லை.  வெட்கப் பட வேண்டிய விஷயத்திற்கு வெட்கப் படாமல் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பதற்கு நான் ஒன்றும் பாரதப் பிரதமர் மன்மோஹன்சிங் இல்லை.

உலகமே இதுவரை கண்டிராத , 'யாராலும் நினைத்தேப் பார்க்க முடியாத ஒரு பெரிய ஊழல் உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதே  என்று கேட்டால், "அட அதக் கேக்குறீங்களா?, அது தப்பு,அப்படியெல்லாம் செய்யக் கூடாது, என்று எவ்வளவோசொல்லிப் பார்த்தேன், தலையால தண்ணியே குடிச்சுப் பார்த்தேன். அந்த அமைச்சர் எதையும் கண்டுக்காம தப்பு செஞ்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?," என்கிற மாதிரி எதையாவது சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கோ அல்லது, "நீங்கதானே பிரதமர், நீங்கதானே அவரை அமைச்சரா நியமித்தது. அப்ப நீங்கதானே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,"  என்ற கேட்டால்," அட நீங்க ஒன்னு , அப்படியெல்லாம் எதையும் என்னால செய்ய முடியாது. வகுப்பாசிரியர் வரும் வரைக்கும் வகுப்பை சத்தம் போடாமல் பார்த்துக் கொள்ளும் வகுப்புத் தலைவன் வேலைதான் என்னுடையது. சத்தம  போடாதீங்கன்னு சொல்லலாம். மீறிச் சத்தம் போட்டால் 'ராமசாமி', 'கோவிந்தசாமி'  என்று பெயர் எழுதி வைக்கலாம். அதையும் கடந்து யாராச்சும் ரொம்பவும் குசும்பு செய்தா 'ராசா அ.வி' என்று எழுதிக் கொடுக்கலாம் என்கிற அளவுக்கும் சற்று குறைச்சலான அளவுக்கே அதிகாரங்களைக் கொண்ட , கைகள் கட்டப் பட்ட கூட்டணிப் பிரதமர் நான்'  என்கிற மாதிரி நழுவிப் போவதற்கோ நான் ஒன்றும் அவரளவுக்கு உசரமானவ்னில்லை. அப்படி நழுவுவதை ஈனத்தனமாக நினைக்கும், உப்பைக்  கொஞ்சம் அதிகமாய் உணவில் சேர்த்து சாப்பிடும் சாமானியன் நான்.

 "பத்து கிலோ ஞானம் " என்ற எனது இரண்டாவது நூலின் அறிமுகக் கூட்டத்தினை பெரம்பலூரில் தம்பி அம்மணி ஏற்பாடு செய்திருந்திருந்தார்.
பேராசிரியர்.இரா.சுப்பிரமணி அவர்களும் எழுத்தாளர் பாமரனும் மிகுந்த
பெருந்தன்மையோடு கலந்து கொண்டார்கள்.

 கூட்டத்திற்கு அடுத்த நாள் விஷ்ணுபுரம் சரவணன் பேசினார்.

"அண்ணா நேற்று இரவு பாமரன் பேசினார் "

"ஆஹா!, என்ன சொன்னார் சரவணன். நல்லபடியா ஊர் போய் சேர்ந்தாராமா?"

"வந்துட்டுப் போனதுல ரொம்ப மகிழ்ச்சி அவருக்கு.   "சண்முகம் எம் .பி.ஏ "
என்ற கட்டுரை குறித்து ரொம்பவே பேசினார். பத்தொன்பது கட்டுரைகளுமே
அருமையான பதிவுகள் என்று சொன்னார். ஒரே ஒரு வருத்தம்தான் அவருக்கு ...," என்று கொஞ்சம் தயங்கி நிறுத்தினார்.

" சும்மா சொல்லுங்க சரவணன். கவனித்துக் கொண்டதில் ஏதேனும்.." என்று
முடிக்கும் முன்னே என்னை இடை மறித்தார்.

"அசவுகரியங்களைப் பற்றியெல்லாம் அவர் எப்பவுமே பொருட்படுத்த
மாட்டாரேண்ணா. அதுமட்டும் இல்லாம அம்மணியின் உபசரிப்பிலும், அன்பிலும் அவர் ரொம்பவே நெகிழ்ந்து போயிருக்கார்."

"அப்புறம்?"

"இல்லண்ணே , ரெண்டு புத்தகங்களிலுமே "ஈழம்" பற்றி எதுவுமே இல்லாதது
அவரைக் கொஞ்சம் உறுத்தியிருக்கு. 'உசிரைப் பிசைகிற விஷயங்களை மட்டுமே எழுதுவேன் என்று எட்வின் சொல்றார். அப்படின்னா ஒரு லட்சம் தமிழர்கள் அழிக்கப் பட்ட கொடூரமான சோகம் நிச்சயம் அவரை உலுக்கி எடுத்திருக்குமே. அதை அவர் எழுதியிருக்க வேண்டாமா?. இதை  உரிமையோடு கேட்டதா எட்வின்ட்ட சொல்லுங்க' ன்னு சொன்னாருங்கண்ணே" என்று அவர் சொல்ல சொல்ல வெட்கத்தில் அப்படியே கூனிக் குறுகிப் போனேன்.       .

ஆமாம் நான் ஏன் எழுதவில்லை?

பாமரனோடோ, மற்றவர்களோடோ ஈழம் குறித்து ஏராளமான கருத்து முரண்பாடுகள் உண்டுதான்.ஆனாலும் எனது முரண்பாடுகள்கூட தேர்தலைப் புறக்கனித்ததன் மூலம் ராஜபக்சே அதிகாரத்திற்கு வர வாய்ப்பளித்தது, செல்லுபடியாகாத, இரண்டு பைசா நாணயத்தின் மதிப்புக்குக்கூட நம்பிக்கைக்குத் தகுதியில்லாத தமிழகத்து தலைவர்கள் சிலரை நம்பி அவர்களது ஆலோசனைகளை கேட்டது போன்ற அவர்களது அரசியல் நிலைபாடுகள் மீதுதானே தவிர அவர்களது தியாகத்தின் மீதோ, வீரத்தின் மீதோ அளப்பரிய மரியாதை எப்போதும் உண்டு.

இன்னும் சொல்லப் போனால் விமான நிலையத்தை வெற்றிகரமாக தாக்கி முடித்து, கொரில்லா போர்த் தொழில் நுட்பம் வானிலும் சாத்தியம் என புலிகள்
நிறுவியபோது இனிப்பு சாப்பிட்டுக்  கொண்டாடி இருக்கிறேன்.  'இதனை
ஜீரணிக்க இயலாத சக்திகள் எல்லாம் தானாகவே ஒன்று சேரும் . இதையும்
சேர்த்தே புலிகள் எதிர்கொள்ள வேண்டும். ஈழப் பிரிவினையை ஜீரணிக்க இயலாத அந்நிய சக்திகளுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அவர்களுக்கு ஒரு தெளிவும் உண்டு.

ஈழத்தின் உதயம் இலங்கையை கபளீகரம் செய்யும் அவர்களது வெறிகொண்ட பசியில் மண் அள்ளிப் போடும் என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருந்தார்கள். ஈழம் உதயமானால் இலங்கையையும் அந்நிய சக்திகளிடமிருந்து அது காப்பாற்றும் . அது தங்களது இலங்கைக் கனவை தகர்த்துப் போடும் என்ற அவர்களது தெளிவுதான் ஈழத்திற்கு எதிராக அவர்களைத் தள்ளியது.  இந்த வகையில் ஒருக்கால் ஈழம் அமையாமல் போகுமானால் அது இலங்கையின் அழிவிற்கான தொடக்கப் படியாகத்தான் அமையும்' என்றெல்லாம் பின்னிரவு முழுக்க விஷ்ணுபுரம் சரவணனோடும் வெற்றியோடும் , சுகனோடும் மற்ற நண்பர்களோடும் அக்கறையோடு பேசிய நான் ஏன் அதைப் பற்றி எழுதவில்லை?.

வைகறை அய்யா ஏற்பாட்டில் ஓவியர்.வீர சந்தானம் , மூத்தத் தோழர். ஏ.எம்.
கோபு,  திராவிட எழுத்தாளர்களில் நான் பெரிதும் மதிக்கிற க.திருநாவுக்கரசு
அய்யா ஆகியோரோடு சேர்ந்து பேசுகிற ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது .

லண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் பேச அழைத்திருந்ததின் பேரில் லண்டன் சென்றிருந்த ராஜபக்க்ஷேவை ' நீங்கள் பேச வேண்டாம். இலங்கைக்கு உடனே திரும்புங்கள்.' என இங்கிலாந்து திருப்பி அனுப்பியிருந்த நேரம் அது.

மைனசுக்கும் வெகுக் கீழே இருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது புலம்
பெயர்ந்த தமிழர்களின் வீரஞ்செறிந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக உயிர்
பிழைத்தால் போதும் என்று ராஜபக்சே இலங்கைக்குத் திரும்பியிருந்த நேரம்.

இந்த சம்பவத்தை என்றைக்கும்விட கொஞ்சம் தூக்கலான எள்ளலோடு ஒரு கால் மணி நேரம் என் பேச்சில் கொண்டாடியிருக்கிறேன்.  கூட்டம் முடிந்து மகிழுந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது வீரசந்தானம் அதுபற்றியே பேசிக் கொண்டு வந்தார்.

விடுதலைப் புலிகள் எந்தக் கட்டத்திலும் அப்பாவி சிங்கள மக்கள் மீது
ஆயுதங்களைத் திருப்பியதில்லை என்ற அவர்களது போர் அறத்தை , நேர்மையை அவர்களது கல்வி குறித்த பார்வையை சிலாகித்து பேசியிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் போராடி நீங்கள் சாதித்ததில் எதை முதன்மையாய்க்
கருதுகிறீர்கள் என ஒருமுறை கேட்கப் பட்ட போது 'என் மக்களின் மனதிலிருந்து மரணம் குறித்த பயத்தை சுத்தமாய் அப்புறப் படுத்தி இருக்கிறேன்.' என்று  பிரபாகரன் சொல்லியிருந்ததாய் எங்கோ படித்திருக்கிறேன்.

மரணம் குறித்து மக்களது பயத்தை போக்குவதே ஆன்மீகத்தின் அதி முக்கிய
பணியாகும். பெரும்பான்மை ஆன்மீகவாதிகள் தோற்றுப்போன இந்த விசயத்தில் பிரபாகரன் எவ்வளவு லாவகமாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை மேடைகளில் நண்பர்களிடத்தில் மணிக் கணக்காய் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

ஒரு வாரகால இடை வெளியில் ஒரு லட்சம் தமிழர்களுக்கும் அதிகமானவர்கள்  கொல்லப் பட்டபோது எல்லோரோடு நானும்தான் கொதித்தேன், அழுது தீர்த்தேன்.

சரி, இவ்வளவும் செய்த , பேசிய,  நான் அவற்றை எழுத்தில் ஏன் பதிவு
செய்யவில்லை?.  இதில் உள் நோக்கம் எதுவும் இல்லை, அப்படி இப்படி என
சொல்லி சமாளிக்க விருப்பம் இல்லை. அது நியாயமும் இல்லை.

"செயத் தக்க செய்யாமையானும் கெடும் " என்கிறானே . கட்டாயம் பதிந்திருக்க
வேண்டும். வெளியே சொல்லத் தயங்கியிருந்தாலும் இது குறித்த வருத்தம் கோவம் எல்லாம் என் நண்பர்களுக்கு இருந்திருக்கவே செய்யும். அது நியாயம் என்றும் படுகிறது.

இனி இது குறித்த எனது கருத்துகள்களை பேசுவதோடு நில்லாமல் எழுதவும் செய்வேன்.

செய்த பிழைக்காக வெட்கப் படுகிறேன். செய்த தவறுக்காக வெட்கப் படுவதில்
பெருமைப் படவும் செய்கிறேன், என்னை நேசிக்கிற நண்பர்களும் இதற்காகப்
பெருமைப் படலாம்.

சூரியன் செத்ததாய்


அன்பின் நண்பர்களே ,
வணக்கம்.

புத்தகங்களை அடுக்கும் போது சற்றும் எதிர் பாரா விதமாக தொன்னூறில் நான்
நடத்தி வந்த "தாகம்" இதழின் பிரதி ஒன்று கிடைத்தது இது வரை எங்கெங்கோ
தேடியும் கிடைக்காமல் , யாரிடம் கேட்டும் கிடைக்காமல் இருந்தது.

90 ஜனவரியில் அந்த இதழ் தயாரித்த நேரத்தில் பிரபாகரனை அவரது கூட்டாளி
மாத்தையாவே கொன்று போட்டு இயக்கத்தைக் கைப் பற்றிக் கொண்டதாய்
தமிழகத்து ஊடகங்கள் வாய் கிழிய கூப்பாடு போட்டுக்  கொண்டிருந்த நேரம்.
தினமலர் போன்ற இதழ்களில் நீண்ட வரிசையில் மாலைகளோடு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் காத்திருப்பதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டு தமிழ் விரோதிகள் தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொடுத்து கூத்தாடிய நேரம்.
வரதராஜப் பெருமாள் எல்லொரும் கேட்டுக் கொண்டால் அரசு மரியாதையோடு  பிரபாகரனை அடக்கம் செய்யத் தயாராய் இருப்பதாய் கோமாளித்னத்தின் உச்சிக்கே போய் கொக்கரித்த நேரம்.

அப்போது ( ஜனவரி 90 ) நான் எழுதிய கவிதை இது. ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை, போடவேண்டும் என்று தோன்றியது .  போட்டிருக்கிறேன்.


எங்கள்
சூரியன் செத்ததாய்
சில சிகரெட்டு நெருப்புகள்
அஞ்சலி செலுத்தின .

மாமன்னன்  ஒருவனுக்கு
வேண்டுமானால்
அரசு மரியாதைகளோடு
கல்லறை சமைப்பதாய்
மனமிரங்கினார்
ஒரு மேடை ராஜா

கல்லறைக்கு
தாங்கள்
மண்தள்ளி வந்ததாய் சொன்னார்கள்
தங்கள் கைமண்ணை தட்டியவாறே

விடிந்து எழுந்தால்
சுவர்கள் எல்லாம்
அவன் முகங்களாய்
பூத்தன.

திரும்பிய இடமெல்லாம்
சிங்கத்தை
அதன் கூட்டாளியே
கொன்று போட்டதாய்...

கரைந்து ஒழுகின
கண்ணீரில்
அவர்களது அரிதாரம்

பத்திரிக்கைகள் எல்லாம்
பக்கம் பக்கமாய்
அவன் வரலாறு எழுதின

வாசித்து முடித்ததும்
எங்கள் தலைவன் சொன்னான்

"வாங்க தோழா
ஒரு எட்டு போய்
பார்த்துவிட்டு வரலாம்"

"தண்டவாளத்தில் கிடக்கிறதாம்
என் உடல்"

Monday, January 10, 2011

தெளிவு



எதிர் பார்த்ததுதான்.

நான் பள்ளியில் நுழையும் போது ஏழெட்டுபேர் அலுவலக வாயிலில் நின்று
கொண்டிருந்தார்கள்.

வணங்கினார்கள்.

வணங்கினேன்.

"தலைமை ஆசிரியர் வரட்டும். பேசிக்கலாம் ," சொல்லிவிட்டு கையொப்பமிட்டு
விட்டு ஆசிரியர் அறைக்குப் போய் விட்டேன்.

நாங்கள்தான் வரச் சொல்லியிருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் மதியம் மூன்று மணிபோல பதினோராம் வகுப்பு
பெண் குழந்தைகள் அலறிக் கொண்டு ஓடி வந்தனர்.

"சார், சிலம்பு  தண்ணியப் போட்டுட்டு வந்து வாந்தி எடுத்துகிட்டு
கிடக்கிறான் , சார்." பயமும் அழுகையுமாய் நின்றார்கள்.

வகுப்புக்குப் போனோம். பெண் பிள்ளைகள் வகுப்பிலிருந்து வெளியேறி
மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள்.மாணவர்கள் வகுப்புக்குள்ளேயே
சுவரோரமாய் ஒதுங்கிக் கிடந்தார்கள்.

மூக்கைப் பிடித்துக் கொண்டோம். தாறு மாறாய் விழுந்து கிடந்தான்.

தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் செல்வத்தைப் பார்த்தார். பொருளறிந்த செல்வம்
ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்தார்.

ஆட்டோவில் தூக்கிப் போட்டு பையனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
பணியாட்களைக் கொண்டு வகுப்பைக் கழுவி சுத்தம் செய்தோம்.

மிரண்டுபோய் நின்ற பெண்பிள்ளைகளிடம் சென்ற தலைமை ஆசிரியர்
"பயப்படாதீங்கம்மா, நான் பார்த்துக்கிறேன்" என்றார்.

எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் சார் .  பான்பராக் போடுவது,
தண்ணியடித்துவிட்டு வருவது என்று ரகளை சார்," கொதித்துப் பதறினார்கள்.

" சரி, நான் பார்த்துக்கரேம்மா. நீங்க அப்பவே சொல்லியிருந்தா கண்டிச்சிருப்பேன்ல,"

"சொன்னாத் திட்டுவான்னு பயம் சார்"

சரி, சரி , நான் பார்த்துக்கறேன் " என்றவர்

" கொஞ்சம் கூட வா எட்வின்" என்றார்.

அதை அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை.

"என்ன செய்யலாம். ஒரு ஸ்டாப் மீட்டிங் போடலாமா?"

"போடாலாம்னே. நாளைக்குப் போடுவோம். நாமளும் பதறவேண்டாம்."

"ஆமாம் சார். அதுதான் சரி.," என்று நான் சொன்னதை ஆமோதித்தார் கனகராஜ் சார்.

"நாளைக்கு உணவு இடை வேளையில் ஸ்டாப் மீட்டிங். சர்குலர் ரெடி பண்ணுங்க."

" சரிங்கண்ணே" என்றேன்.

"அடுத்த நாள் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர்.
அவர்களது கொதிநிலை அதிகமாக இருந்தது. அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியாக பேசிக்கொண்டு வந்து எல்லோரும் ஒரே குரலெடுத்து சொன்னார்கள்,

"அவனுக்கு டி.சி யக் குடுங்க சார். இல்லேன்னா நாங்க எங்க புள்ளைங்க டி.சிய வாங்கிட்டு வேற பள்ளிக்கூடம் போய்விடுவோம்," எனப் பொரிந்தனர். மிகுந்த
பொறுமையோடும் அக்கறையோடும் அவர்களை அணுகிய தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்க. எனக்கும் இருபது வயசுல ஒரு பொண்ணு இருக்கா. உங்க வலி என்னன்னு எனக்கும் தெரியும். நான் பார்த்துக்கிறேன். நம்பிப் போங்க," என்றார்.

கட்டுப் பட்டார்கள், கலைந்து போனார்கள்.

மதியம் கூடிய ஆசிரியர் கூட்டத்திலும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்றே
ஏக மனதாய் முடிவெடுக்கப் பட்டது.
அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனது பெற்றோரை வரச்சொல்லியிருந்தோம்.

அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் வந்ததும் வணங்கியிருக்கிறார்கள்.

" கொஞ்சம் பொறுங்க, பிரேயர் முடிஞ்சதும் கூப்பிடறேன்."

"சரிங்க சார்"

வகுப்புகள் தொடங்கியதும் சில ஆசிரியர்களை அழைத்தார் தலைமை ஆசிரியர்.
அந்தப் பையனது பெற்றோர்களையும் வரச் சொன்னார்.

" ஓங்கப் பையன் என்ன காரியம் செஞ்சிருக்கான் தெரியுமா?,"

"கேள்விப் பட்டோங்க சார் இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கறோம் சார்.
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார். அவன் செஞ்ச தப்புக்கு நாங்க மன்னிப்பு
கேட்டுக்கறோம்."

"ஆயிரம் பொம்பளப் பசங்க படிக்கிற பள்ளிக்கூடம்  இது. ஓங்கப்
பொண்ணு இங்க படிச்சா  சும்மா விட்டுடுவீங்களா?"

" தப்புதாங்க, தயவு பண்ணி மன்னிச்சுக்கங்க சார்."

இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் நீண்டது.

எப்படியாவது மாற்றுச் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என்பதில் நாங்கள்
பிடிவாதமாய் இருந்தோம். இல்லாது போனால் வருங்காலத்தில் மாணவர்களிடம் பயம்
இருக்காது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அப்போதுதான் பெண் பிள்ளைகளின்
பெற்றோர்கள் சமாதானமடைவார்கள் என்பது எங்கள் எண்ணம்.

அவர்களொஅ என்ன செய்தேனும் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றி
சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள்.

இறுதியாக வேறு வழியேயின்றி உரத்தக் குரலெடுத்து தலைமை ஆசிரியர் சொன்னார்,
"வேற வழியே இல்ல, டி.சி ய வாங்கிட்டுப் போங்க."

அதுவரை கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணீரோடு சுவரோடு சுவராய் சாய்ந்து
நின்று கொண்டிருந்த அவனது அம்மா வெடித்தார்,

"கொடுங்க சார், ஏம்புள்ள எப்படியோ நாசமாப் போகட்டும். நீங்க ஒங்க
பள்ளிக்கூடத்தக் கட்டிக்கிட்டு நல்லா இருங்க"

"என்னம்மா பேசுற நீ"

கூட வந்தவர்களும் , "நீ செத்த சும்மா இரும்மா. நாங்க பார்த்துக்கறோம்,
கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நில்லு," என்றனர்.

இந்த அம்மாவின் பேச்சினால் காரியம் கேட்டுவிடக் கூடாது என்று பயந்தனர்.

"உடுங்கய்யா எல்லோரும். ஏம்புள்ள எப்படியோ  நாசமாப் போகட்டும்" மீண்டும்
வெடித்தார்.

ஓம் பய என்ன செஞ்சிருக்கான்., நீ ஏன்னா பேசுற" தலைமை ஆசிரியர் கேட்கவும்

"அவன் யோக்கியன்னா சார் சொல்றோம். அவன் குடிச்சுட்டு பள்ளிக் கூடத்துக்கு
மட்டுமா சார் வரான். தண்ணியப் போட்டுட்டுதான் பல நேரம் வீட்டுக்கும்
வரான்."

" அப்பா கண்டிச்சு வைக்க வேணாமா?"

"கண்டிச்சுதான் வைக்கிறேன் சார். ஆனா வீட்ட விட்டு வெளிய துரத்துல"

இதற்கு அடுத்து அந்த அம்மா பேசியதுதான் எங்களை அதிரச் செய்தது.

"வீட்டுக்கு குடிச்சுட்டு வரானேன்னு என்னைக்காச்சும் அவங்கிட்ட 'இப்படிக்
குடிச்சுப் புட்டு வீட்டுக்கு வாரயே யாரடா ஒன்னோட கிளாஸ் சார், அவர
கூட்டிட்டு வான்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா? சார்"

கிறுக்கு புடிச்சுருக்காமா ஒனக்கு?"

"கெட்டுப் போற புள்ளைங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு மத்தப் புள்ளைங்களுக்கு
பாடம் நடத்தறதுக்கா சார் ஸ்கூலு? கெட்டு சீரழியிற பசங்கள நல்ல
வழிப்படுத்தி திருத்தரதுக்குத்தான் சார் பள்ளிக்கூடம், சம்பளம் எல்லாம்"

அந்த அம்மாவை இழுத்துக் கொண்டு போனார்கள்.

பள்ளிகளில், கல்லூரிகளில் , ஆசிரியர் பயிற்சியில் விளங்காத ஏதா ஒன்றை
அந்த அம்மாவின் பேச்சு தெளிவு படுத்தியது

Saturday, January 8, 2011

மரணத்தைக் கொண்டாடுவோம்


'மரணம் குறித்த
பயம் போய்விடும்
ஒரே ஒரு முறை
செத்துப் பார் "
என்று எப்போதோ ஜென்னில் வாசித்ததாய் ஞாபகம். இதைத் தாண்டி மரணம் குறித்து என்னத்தை யோசித்து தொலைப்பது? உச்சத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி,  எவ்வளவுதான் உச்சத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூட வருமா? ஒருக்கால் ஓரிரு முறை செத்து மீண்டும் எழுந்து வந்து மரண பயமற்ற தனது அனுபவத்தை எழுதியிருப்பானா?

எனது பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் தொடர்ந்து வெற்றிலைப் பாக்கு போடுபவர். கூடவே பன்னீர் புகையிலையும் .அவர் உள்ளே  நுழைந்தால் வாசம் கமகமக்கும்.

ஒரு முறை கேட்டேன் ,

"புகையிலை ஒரு மாதிரி மயக்கத்தைத் தரும் என்கிறார்களே ,தொடர்ந்து புகையிலை போட்டாலும் தெளிவா இருக்கீங்களே . உண்மைய சொல்லுங்க  புகையிலை எப்படி இருக்கும்?"

கொஞ்சம் புகையிலையை உருட்டி என்னிடம் நீட்டினார். மிரண்டு போய் ஒதுங்கினேன்.

"எதையும் அனுபவிச்சுப் பார்த்து உணரனும்டா"

மூன்று நான்கு வரிகள் கொண்ட எனது கேள்விக்கு நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார்.

புகையிலைப் போட்டால் அது குறித்த பயம் தெளிந்து சுவைக்கும் என்கிறார் இவர். அவனோ  ஒருமுறை செத்துப் பார். மரணம் குறித்த பயம் நீங்கி சுவைக்கும் என்கிறான்.

எனில் புகையிலை போடுவது மாதிரி ஒரு சராசரி அனுபவம்தானா மரணம்?

வலியற்றதா?

" உறங்குவது போலும் சாக்காடு " என்கிறான் நம்மாளு.ஆஹா! மரணத்தை உறக்கம் மாதிரி ஒரு அனுபவம் என்கிறானே.

மரணம் அனுபவமா?

என்ன செய்வது ஜென் குறித்த பரிசீலனையின் நீட்சியில்தான் நமக்கு நமது மேன்மையே தட்டுப் படுகிறது. இதை என்ன என்பது? சுகன்தான்    சொல்வார் ," அது அப்படித் தாங்க அய்யா."

அது அப்படித்தான் போலும்.

ஆனால்  மனிதர்களுக்கு மரணம் வேப்பங்காயாய் கசக்கிறது என்று கூட சொல்ல முடியாது. மரண பயம் என்பது எந்தக் கசப்பினும் கொடூர கசப்பானது.

மனிதர்கள் மட்டுமல்ல, தேவகுமாரன் என்றும் ,  உலக மக்களின் ஒட்டு  மொத்தப் பாவத்தையும் தனது ரத்தத்தால் கழுவிப் போக்க இந்த பூமிக்கு வந்தவர் என்றும் உலகின் பெரும்பான்மை மக்களால் நம்பப் படுகிற ஏசுநாதருக்கே தனது மரணத் தருவாயில் மரணம் கலக்கத்தைத் தந்திருக்கிறது. அதனால்தான்  தனது மரணத்திற்கு சற்று முன்னால் " என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று   கலங்கியிருக்கிறார்.

விவேகானந்தரும்கூட தனது மரணத்தின் நெருக்கத்தில் கொஞ்சம்  கலங்கி  இருந்ததாகத்தான்   படுகிறது.

முரட்டு வீரத்தோடுதான் எதிர்கொண்டார் எனினும் அவரது மரண நொடிகளில் கலக்கத்தின் ரேகைகளை சதாம் உசேனின் முகத்தில் பார்க்க முடிந்தது.

நம்ம  கட்டபொம்முவிடமும்  சின்னியம் பாளையத்து    தோழர்களிடமும் தூக்கிலே தொங்கி உயிர் துறக்கும் வரைக்கும் வீரத்தையும், முறுக்கையும் அள்ள  அள்ளக் குறையாதத் திமிரையும் பார்க்க முடிந்தது.

பகத்தோ  இவை அனைத்தையும் கடந்து சாகும் வரைக்கும் ஒரு வசீகரமான புன்னகையை தன் உதடுகளில் உலரப் போட்டிருந்தான். அந்தப் புன்னகைக்கு நிகரான ஒரு ஆயுதம் இதுவரைக்கும் உலகின் எந்த உலையிலும் தயாராகவில்லை.

சரி, மரணம் என்றால்தான் என்ன?

"பாவத்தின் சம்பளம் மரணம் " என்கிறது விவிலியம். எனில் மரணம் என்பது பாவத்தின் விளைவு.  சரி ஒரு வாதத்திற்காக பாவமும் புண்ணியமும் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இந்த உலகில் பாவ புண்ணியக் கணக்கையே இன்னும் துவங்கியிராத ஒரு சொட்டுத் தாய்ப் பாலைக் கூடப் பருகியிராத பச்சிளங்குழந்தை செத்துத் தொலைக்கிறதே. அது யார் செய்த பாவத்தின் விளைவு?

"ஏற்றப் பழந்துணியை நீக்கி
எறிந்தொருவன்
மாற்றும்  புதிய உடை
வாய்ப்பது போல்
தோற்றுமுயிர்
பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல்
கொண்டு பிறக்குமென்று
கொள்"
என்று கீதை சொல்வதாகத் தெரிகிறது. வி.ஸ.காண்டேகரின்  "கிரௌஞ்சவதம்" நாவலில் தனது மனைவி இறந்து போன துயரிலிருந்து தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காக பேராசிரியர் அப்பன்னா என்ற கதாபாத்திரம் கீதையிலிருந்து மேற்சொன்ன பாடலைப் பாடுவதாகப் படித்தது. மற்றபடி அது கீதையில் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது.

இருக்கும்  என்றே  நம்புகிறேன். எனில் உயிரானது தான்  போட்டிருந்த உடல்  என்ற சட்டையை , அது  பழையது  ஆனதாலோ  அல்லது  வேறு  ஏதோ ஒரு  காரணத்தாலோ  மாற்றிக் கொள்வது மரணம் என்றாகிறது.

இதன் பொருள் மரணம் என்பது உயிர் உடலை மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.  உயிர் அழியாதது.  ராமசாமி  மரித்துப் போனான் எனில்  அவனது  உடலிலிருந்து  உயிர் புதிய உயிராகப்  பிறந்து   கந்தசாமி  அல்லது  வேறு  ஏதா  ஒரு  பெயர்  கொண்ட  ஒரு  மனிதனாவான்.

பாவத்தின்  சம்பளம்  மரணம்  என்பதோ,  உயிர்  அழியாதது  என்பதோ மனிதர்களுக்கு  இருக்கும்  மரணம்  குறித்த  பயத்தைப்  போக்குவதற்கு  என்றே  கொள்ள வேண்டும். 

மரணம்  குறித்து  ம்க்களுக்கு  பயம்  இருக்கிறது..  அதே  நேரத்தில்  தற்கொலை  செய்து  கொள்கிறானே.  எனில்  அவனுக்கு  மரணம்  குறித்த  பயம்  இல்லை  என்றுதானே  பொருள்? 

அல்ல,  சாதாரண மனிதனுக்கு  மரணம் கண்டு  பயம்.  தற்கொலை செய்து  கொள்பவனுக்கு  வாழ்க்கை குறித்து பயம்.

மரணம்  என்பது  பிறப்பது  மாதிரி ,  பெயர் பெற்றுக் கொள்வது  மாதிரி ,  பூப்பெய்துவது   மாதிரி ,  திருமணம்  செய்து  கொள்வது  மாதிரி  வாழ்வில்  ஒரு நிகழ்ச்சி.  அவ்வளவுதான்.  மற்றவற்றிற்காக  ஏங்கி,  எதிர்பார்த்து,  தவமாய்  தவம்  கிடக்கும்  நாம்  மரணத்தைப்  பொருத்தவரை  இவற்றிலிருந்து  மாறுபட்டு  ஒன்று அதைத  தவிர்க்கவோ  அல்லது  குறைந்த  பட்சம்  தள்ளிப்  போடவோ  முயற்சிக்கிறோம் .

இதற்கு   ஒரே  ஒரு  காரணம்தான்  இருக்க  முடியும்.  மற்றெல்லா  நிகழ்வுகளிலும்  அது  குறித்து  அசை  போட  அதற்கடுத்த  நாள்  நாம்  இருப்போம் .  ஆனால்  நேற்று  நடந்த  தனது  மரணத்தைப் பற்றி  அடுத்த  நாள் அசை போட மரணித்தித்தவனுக்கு  வாய்ப்பிருக்காது.

மரணத்தைக் கொண்டாட  நாம்  கற்றுக்  கொண்டால்  வாழ்க்கையின்  எந்த  ஒரு  இடர்  கண்டும்  நம்மால்  புன்னகைக்க  இயலும்.  மரணத்தைக்  கொண்டாட  வேண்டும்  என்று  நாம்  பரிந்துரைப்பதன்  பொருள்  இந்தப் புள்ளியிலேயே  ஒரு  புன்னகையோடு  மரணித்து  விட  வேண்டும்  என்பதுமல்ல.  மரணம்  வரைக்கும்  வாழ்க்கை  நிஜம்.  மரணம்  வரைக்கும்  வாழ்வதற்கான  போராட்டத்தை  நடத்திவிட வேண்டும்.

இத்தனை  மருத்துவமனைகள் ,  இத்தனை மருத்துவ  வசதிகள்,  அனைத்துமே  மரணத்தை முற்றாய் முழுசாய்  தவிர்ப்பதற்கு உதவாது.  மரணத்தை  முடிந்த  அளவு  தள்ளிப்  போடுவதற்காக  நமக்கு  வாய்த்த  வாய்ப்புகள் அவை.

மரணமே  இல்லாத  உலகத்தை  கற்பனை  செய்து  பாருங்கள்.  இளைஞர்களை  விடவும் ,  குழந்தைகளை  விடவும்  கிழவர்கள்  அதிகம்  வாழும்  ஒரு  உலகத்தை  ஒப்புக்கேனும்  சகித்துக்  கொள்ள  முடியுமா?

மரணம்  தவிர்க்க  இயலாதது.  சக  மனிதன்  குறித்த  புரிதலோடும் ,  அக்கறையோடும் ,  கவலையோடும்  அவனுக்கானதுமாக  நம்  வாழ்க்கை  செலவிடப்  பட்டிருக்குமானால்  நமது  மரணத்தையும்  தாண்டி  நீளும்  நமது  வாழ்க்கை.                      

Wednesday, December 29, 2010

பூக்களை விற்ற காசில்...

" நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில் 
கவிதை"
என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய  அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.

ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.

பார்த்தேன். கவிதையேதான்.

"பூக்களை 
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"  என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.

ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.

இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

சாலை ஓரத்தில் வெய்யில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணச்ங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும். 

சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப்  பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது.பல நேரங்களில் காசைப் பெருவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.

பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைபொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.

சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.

இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்
"பூகளை விற்ற காசில் 
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள் 
பூக்களை விட அழகாய்?
என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?

அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.

எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?

இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.

அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.

கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள  ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக  பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே  மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும்  மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது. 

" சொட்டுக் குழம்புக்கும் 
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு"  என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால்  நொந்தே போயிருப்பான்.

பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.

ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,

"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"

"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."

சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?

ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
அதற்கு தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு தாண்டி கொஞ்சம் சொரனையோடு கூடிய அக்கறை வேண்டு
ஆமாம் அது நமக்கு எப்போது வரும்?



Thursday, December 16, 2010

ஏற்க இயலவில்லை ...

ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு என்கிறார்கள். எனில் இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழலாய் மாறியிருக்க வாய்ப்புண்டு என கணக்கிட்டுப் பார்க்கிறார்கள். எனில் யார் யாருக்கு எவ்வளவு கை மாறியிருக்கும் என ஊருக்கே கேட்கும்படி ரகசியமாய் கிசுகிசுக்கிறார்கள்.  இது குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரனை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

அமைச்சர் மீது வழக்குப் போட அனுமதி கேட்டபோது எதுவுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக பிரதமர் அலுவலகத்தை உச்சநீதி மன்றம் கண்டனித்துள்ளது. இன்னின்ன காரணங்களால் அனுமதிக்க இயலாது என்றாவது சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் நீதியரசர்கள். அந்த மௌனத்தை உள்நோக்கம் கலந்த அலட்சியத்தின் உச்சம் என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.

தனது அறுபது ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் உச்சநீதி மன்றத்தின் அதிருப்தி இந்த அளவுக்கு முன்னெப்போதும் பிரதமர் அலுவலகத்தின் மீது விழுந்ததில்லை என்கிறார் அத்வானி. பிரதமர் ஒருவரிடம் உச்சநீதி மன்றம் கேள்வி கேட்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்கிறார்கள் யெச்சூரியும், பிருந்தா காரத்தும்.

இந்த விஷயத்தில் தான் சட்டத்திற்கு உட்பட்டும்,  பிரதமரின்  வழிகாட்டுதலின்  படியும்தான்  நடந்து  கொண்டுள்ளதாகவும், முடங்கிக் கிடக்கும் பாராளுமன்றம் சீராய் நடைபெற வேண்டும் என்பதற்காகவே தான் பதவி வில்கியுள்ளதாகவும், இதை செய்ததனால் தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டுகளைத் தான்  ஏற்பதாகக்  கொள்ளக் கூடாது என்றும் ராசா சொல்கிறார்.

ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சாக்கிலே கட்டினால் எத்தனை லாரிகளுக்கு தேறும் என்பது குத்து மதிப்பாகக் கூட நமக்குத் தெரியாது. திரும்பிய திசையெங்கும், கண்னில் படுகிற யாவரும் இது பற்றியே பேசுகிறார்கள். போக இதை விட முக்கியமான விஷயம் குறித்து தேவையான அளவிற்கு விவாதம் தொடங்கப் படவேயில்லை என்று படுவதால் அது குறித்து பேசலாம் என்று படுகிறது.

எந்த தொலைக் காட்சி என்று சரியாய் நினைவில்லை. சுப.வீரபாண்டியன் அய்யாதான் தலைமை. அந்த நிகழ்ச்சியில் உச்சத்துக்கே ஏறி நின்று பேசினார் ராசா. " நிரம்பி வழியும் இந்த அவையில் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது கிராமத்தில் எனது ஜாதிதான் எனது முகவரி" என்கிற மாதிரி உணர்ச்சிப் பிழம்பாய் ராசா அவர்கள் வெடித்தபோது அதில் உள்ள நியாயம் சுட்டது. சத்தியமாய் சொல்கிறேன், பனித்த கண்களோடுதான் கை தட்டினேன். கலைஞரும், கனிமொழியும், ரஜினியும் கூட அதே மனநிலையில் இருந்ததையே தொலைக் காட்சியில் பார்க்க முடிந்தது.

ஸ்பெக்ட்ராம் விஷயம் கசியத் தொடங்கிய நாள் முதலே "ராசா ஒரு தலித் என்பதால் எப்படி வேண்டுமானாலும்  அபாண்டமாக பேசலாமா?" என்கிற  தொனியில்  தொடர்ந்து  பேசி  வருகிறார்  கலைஞர். நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக நம்பப் படுகிறபெரும் இழப்பிற்கு பெருமளவு பொறுப்பு ராசாவுக்கு என்பது  குற்றச்சாட்டு. இது பொய்யென நிரூபிக்கப் படுமானால் அந்த நிமிடமே( அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் படுகிறது ) இப்போது உள்ள உசரத்தைவிட பல மடங்கு உசரத்திற்கு அவர் போய்விடுவார் என்பதும் மாறாக ருசுப்பிக்கப் படுமானால் அதன் விளைவுகள் என்ன என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

எதிர்வாதம் செய்வதற்கும்,  தன்னை நிரபராதி என மெய்ப்பித்துக் கொள்வதற்கும் சகல உரிமைகளையும்  சேர்த்தே  தந்துதான் இந்தக் குற்றச் சாட்டும் வைக்கப் படுகிறது.  " தலித் என்பதால் இத்தனை அபாண்டமா?" என்கிற மாதிரி வெதும்பும் கலைஞரின் மேலான பார்வைக்கு சில சந்தேகங்களை, தெளிவு பெறும் பொருட்டு வரிசைப் படுத்துகிறேன்.

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகே, இன்னும் புரியும்படிக்கு  சொல்வதெனில் கலைஞர் அவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் புரட்சித்த கல்லக்குடிக்கு மிக அருகே திண்ணியம் என்றொரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவராய் செயல் படும் தலைவியின் கணவரிடம்  (அவர் ஓய்வு பெற்ர தலைமை ஆசிரியர் என்பதுதான் கொடுமயிலுங் கொடுமை ) தனது தங்கைக்கு தொகுப்பு வீடு ஒதுக்கித் தருமாறு ஒரு தொகையினத் தருகிறார் ஒருவர். அவர் ஒரு தலித். அநேகமாக அவர் அந்த ஊரின் தலையாரியாக இருக்கக் கூடும். வீடு ஒதுக்கப் படாதததல் கொடுத்த்ப் பணத்தைத் திரும்பக் கேட்கிறார். கிடைக்காது போகவே தண்டோரா போட்டு விஷயத்தை மக்களிடம் கொண்டு போகிறார்.

கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காகத்தான் கலைஞர் அவர்களே திண்னியத்தில் ஒரு தலித் பீத் தண்ணீ குடிக்க நேர்ந்தது.

"தலித் என்பதால் ராசா மீது அபாண்டமாய் குற்றம் சுமத்துகிறீர்களே. நியாயமா?  என்று கொதிக்கும் கலைஞர் அவர்களே...

திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் ஆதிக்க சாதிகள் பீத் தண்ணியை ஊற்ரியபோது " தலித் என்பதால் பீத் தண்ணியை ஊற்றுவீர்களா பாவிகளே" என்று ஏன் கலைஞரே நீங்கள் குமுறவே இல்லை?

உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு நிழற்குடை அமைப்பதற்கு திரு. டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகை தருகிறார். ஆனால் அங்கே நிழற்குடை அமைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என சொல்லி அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்து விட்டார் என்ற சேதி எனக்கே தெரியும் போது உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல இயலாது.

தலித்துகளுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் என்ன மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்?. பச்சையாக சொல்வதெனில் அங்கே நிழற்குடை அமைத்தால் தலித்துகள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வார்கள். இது ஆதிக்க சாதிக் காரர்களை கொதிப் படையச் செய்யும். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெடும் என்பதுதானே மாவட்ட ஆட்சித் தலைவரின் தயக்கம்.

தலித்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அவர்கள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா?. வரட்டுமே.  அதை எதிர் கொள்ளத் துப்பில்லை  என்றால் எங்காவது ஓடி விடுங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து ஏன் கலைஞரே நீங்கள் கேட்க வில்லை?

உச்சமாக ஒன்றை சொல்லிவிட வேண்டும். எது எப்படியோ அதை விசாரனை தீர்மானிக்கட்டும். ஆனால் பெரம்பலூர் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே பெரம்பலூருக்கு  அதிகம் செய்தவர் ராசா அவர்கள்.
பெரம்பலூர் தனித் தொகுதியிலிருந்து மாறி பொதுத் தொகுதியானவுடன்  நீங்கள் என்ன செய்தீர்கள்?  பெரம்பலூர்க் காரரான ராசாவை நீலகிரிக்கு அனுப்பினீர்கள். 

பொதுத் தொகுதியாய் மாறினாலும் ராசாதான் பெரம்பலூர் வேட்ப்பாளர் என்று ஏன் கலைஞரே நீங்கள் அறிவிக்க வில்லை.

பொதுத் தொகுதியில் தலித் ஒருவருக்கு கட்சிக்காரர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்று அஞ்சினீர்களா? அல்லது பொதுத் தொகுதியில் தலித் நிற்க்கக் கூடாது என்பதுதான் உங்கள் முடிவுமா? எனக்கென்னவோ அப்படித்தான் என்று தோன்றுகிறது கலைஞர் அவர்களே.

எனில், சேரியில் பிறந்த தலித்  சேரியில்தான் வாழ வேண்டும்,  தனித் தொகுதியில்தான் நிற்க வேண்டுமா கலைஞர் அவர்களே?

இதை, உங்களுக்குத் தனித் தொகுதி இருப்பதால் பொது தொகுதி கிடையாது என்றும்  கொள்ள  முடியுமே  கலைஞர் அவர்களே? 

ஆமாம் எனில் உங்களுக்கு சேரி இருப்பதால் பொதுத் தெரு கிடையாது என்றும் ஆகாதா கலைஞர் அவர்களே.

"ஒரு தலித் என்பதால் ராசாவின்  மீது அபாண்டமாக குற்றம் சுமத்தலாமா? என்ற உங்கள் கூற்றை ஏற்க இயலவில்லை , மன்னியுங்கள் கலைஞர் அவர்களே.

Saturday, September 4, 2010

ஓவியத்தில் கசியும் அரசியல்

  எடுத்த எடுப்பிலேயே எனக்கு ஓவியம் குறித்து எதுவும் தெரியாது என்பதை சொல்லிவிடுவதுதான் சரி என்று படுகிறது. எதற்கு தேவை இல்லாமல் ஒரு எதிர்பார்ப்பை  உங்களுக்குள்  வளரவிடும்  குற்றத்தை  செய்துகொண்டு?  எதோ  நல்ல  ஓவியங்களை  கொஞ்சம்  ரசிக்கத்  தெரியும்  என்பதோடு  சரி.  நான்  ரசிப்பவை எல்லாம்  நல்லவைதானா  என்பதும்  கூட எனக்குத்  தெரியாது.  நான்  நின்று  நேரமெடுத்து  ரசிக்காதவை  நல்லவைகள்  அல்ல  என்றும்  சொல்ல  முடியாது. இப்படி ரசிப்பதற்கும் தள்ளிவிடுவதற்கும் எனக்குள் எந்த அளவு கோளும் இல்லை.  ஏதோ என்னளவில்  என்னை  ஈர்க்கும்  எதையும்  அவசியம்  ரசிக்கவே  செய்கிறேன்.  இந்த  அளவிற்கு  எனக்கு  ஒரு  மிக  சன்னமான அளவிற்கு  ஓவியத்தின்  மேல்  ஈர்ப்பும்  ரசனையும்  வருவதற்கு  கூட  அய்யா  வைகரை  அவர்களும்  யுகமாயினி  சித்தன்  அவர்களும்தான்  காரணம்  என்பதையும் அவசியம்  பதியா  விட்டால்  நான்  நன்றி  கொன்றவனாவேன்.

இவர்கள் இருவரின் அதிலுங்குறிப்பாக வைகரை அவர்களின் தொடர்பு கிடைக்கும் வரை எழுத்திலக்கியத்திற்கான ஒரு  துணைக் கருவி என்றும் எழுத்திலக்கியம் மட்டுமே தனித்து நிற்கும் அளவில் உசத்தியானது என்ற திமிர் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதை ஒட்டிய அளவில் அது போல ஏதோ ஒன்றோடும் இருந்தவன். ஏதோ ஒரு முறை ஏதோ ஒரு வேலையாக சென்னைக்கு வந்திருந்த போது  வைகரை அய்யா அவர்கள் என்னை மருதுவின் ஓவியக் கண்காட்சிக்கு அழைத்துப் போனார். அதுதான் நான் பார்த்த முதல் ஓவியக் கண்காட்சி. அதுதான் முதல் என்பதற்காக ஏதோ அதன் பிறகு  நிறைய ஓவியக் கண்காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றும் பொருள் அல்ல. மருதுவின் கண்காட்சிக்குப் பிறகு இதுதான் என்ற வகையில் இரண்டாவது கண்காட்சி இது. என்றாலும் இந்த இரண்டு கண்காட்சிகளுக்கு மிடையில் எனது ஓவியம் குறித்த பார்வை கொஞ்சம் மாறி இருந்தது என்னவோ உண்மைதான். ஓவியம் மற்ற படைப்பிலக்கியங்களப் போலவே தனித்து நின்று இயங்கி உணர்த்தும் என்ற அளவுக்கு இப்போது எனக்கு புரிதல் உண்டு.

இப்போதும் சென்னைக்குத்தான் வந்திருக்கிறேன். இந்த முறை "தமிழ் நாடு பாட நூல் கழகம்"  பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் முகாமின் ஒரு ஊழியனாக.
"தமிழ் நாடு பாட நூல் கழகம்" சமச்சீர் கல்விக்கு ஏற்ப நமது பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணியினைத் துவக்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப் பட்டு பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள முகாமில் அதிகாலை தொடங்கி பின்னிரவு வரை பணி நீள்வது உடலையும் மனதையும் சற்று பாதிக்கவே செய்கிறது என்ற போதிலும் நண்பர்கள் சரவணன், சிவா, ஏழுமலை, அண்ணன் முத்து, அண்ணன் ஸ்டீபன்ராஜ், தோழர் லட்சுமி, அண்ணன் சேலம் சுப்பிரமணி, அண்ணன் மோனோ காசி, நண்பன் சேகர், தம்பி தேவதாஸ், தம்பி அறச்செல்வன் ஆகியோரோடான பணி என்பது ஒரு சுகமான அனுபவமாகவே உள்ளது.

அதிலும் தம்பி தேவதாஸோடு என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்திருந்து வேலை பார்க்கலாம். எதை எது விரட்டுகிறது என்றே தெரியாமல் நேரமும் வேலையும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடும். அதிலும் அந்தத் தம்பியோடு எப்போதும் இணைந்திருக்கவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது. காரணம் இதுதான். தான் எப்போதும் சாலமோன் பாப்பையாவோடு இருப்பதையே விரும்புவதாக வைரமுத்து ஒரு முறை சொன்னாராம். ஏனென்று கேட்ட போது பாப்பையாவோடு இருந்தால்தான் தான் கொஞ்சம் சிவப்பாகத் தெரிவதாகவும் சொன்னாராம். எனக்கும் தம்பிக்குமான வண்ண இடைவெளி ரொம்ப சன்னம்தான் என்றாலும் அந்த சன்னமான வித்தியாச்திற்காகவே அவரோடு கூட இருக்கச் சொல்லி என் உள் மனது என்னை கட்டாயப் படுத்துகிறது.    

ஒரு புதன் மாலை "இன்று இத்தோடு எல்லோரும் வேலையை முடித்துக் கொண்டு ஒரு முக்கியமான இடத்துக்குப்  போகலாம்,கிளம்புங்க," என்று அவசரப் படுத்தினார்.

முகாமிற்குள்ளேயே அடைந்து கிடந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கும் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. காலார, மனதார வெளியே போய் வந்தால் பரவாயில்லை என்று படவே எங்கே என்று கூட கேட்கவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு கிளம்பினால் நாங்கள் வெளியே வருவதற்குள் இரண்டு ஆட்டோக்களை ஏற்பாடு செய்திருந்தார். ஆட்டோ நகரத் தொடங்கியதும் கேட்டேன்
                                                                     
"ஆமாம் தேவா எங்க போறோம்?"

"வாங்க சொல்லாமலா போய்டுவேன்?" என்று சமாளித்துக் கொண்டே வந்தவர் ஒரு வழியாய் இரக்கப்பட்டு சொன்னார் " நாம இப்ப ஆழ்வார்பேட்டைல நடக்கிற  ஒரு ஓவியக் கண்காட்சிக்கு போகிறோம். போதுமா?"

"ஆஹா!, யாரோடது?"

"நம்ம மேனகா மேடத்தோடது"

பொதுவாகவே ஓவியர்கள் குறித்து ஒன்றும் தெரியாதுதான் ஆனாலும் நமக்குத் தெரிந்த வட்டத்திற்குள் மேனகா அகப்படாமல் போகவே

"எந்த மேனகா?"

"நம்ம நரேஷ் சார் வொய்ஃப்."

புரிந்தது. கல்வித் துறை பெற்றிருந்த ஆகச் சிறந்த, ஆக யோக்கியமான,  இரண்டு கை விரல்களின் எண்ணிக்கைக்குள் அகப்படும் அதிகாரிகளுள் நரேஷும் ஒருவர். எங்கு போனாலும் மனிதர்களை தரம் பிரிக்கும் சல்லடைகளோடே போகும்எனது நல்ல நண்பர்க்ளில் பலர் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது,  நான் என் வாழ்நாளின் பெரும் பயனாக கருதக் கூடிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் சார் அவர்களோடு நான் பொருத்திப் பார்க்கிற தகுதி வாய்ந்த இளைஞர். என் ஊர்தான் இவருக்கும். நூலகத் துறைக்குப் போயிருக்கிறார். என்னை  விட குறைந்தது பத்து ஆண்டுகளாவது இளையவர். அந்த வகையில் நான் ஓய்வு பெற இருக்கும் இன்னுமொரு பதினோரு ஆண்டு கால இடைவெளிக்குள் மீண்டும் கல்வித் துறைக்குள் வந்து அவருக்கு கீழ் பணியாற்றும் வாய்ப்பினை எனக்குத் தருவார் என்பதேகூட இனிப்பான நம்பிக்கைதான்.

அவரது மனைவிதான் மேனகா எனில் இன்னும் இளைய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். எனில் முப்பதை நெருங்கிய அல்லது முப்பதை சற்றே தாண்டிய, ஓவியக் களத்தில் இன்னும் குறைந்த பட்சம் நாற்பது ஆண்டுகளையாவது சேமிப்பில் வைத்திருக்கிற ஒரு குட்டிப்  பெண்ணின்  ஓவியக்  கண்காட்சிக்குப்  போகிறோம்  என்ற உணர்வே  ஏற்கனவே  செலவு  செய்திருந்த  காலண்டர்களில் ஒரு  நான்கைந்தையாவது என்னிடம்  திருப்பிக்  கொண்டு  வந்து விட்டது.ஆட்டோவிலிருந்து இறங்குவதற்குள்  நான்  நான்கைந்து  ஆண்டுகள்  குறைந்து  போனேன்.  

உள்ளுக்குள் நுழைந்தோம். அப்போதுதான் நடிகர் சிவக்குமார் அங்கிருந்து கிளம்பிப் போனதாக சொன்னார்கள். நுனி நாக்கு ஆங்கிலமும் அடிக்கப் பட்ட திரவத்தின் நறு மணமும் கம கமக்க அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மேல் மட்டத்து சனங்களும்  திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே ஊடாடி, நான் பெரிதும் ரசித்து மதிக்கிற மொழியைப் பேசுகிற, எளிமையையும் ஈரத்தையும் மட்டுமே தங்களது முகவரியாயும் இதயமாகவும் கொண்டிருக்கிற என் சனங்களையும் பார்க்க முடிந்தது.

நூறுக்கு சற்று ஒட்டிய எண்ணிக்கையில், சிறிதாய், பெரிதாய், வண்ண வண்ணமாய் ஓவியங்கள் ஒரு அழகான, நேர்த்தியான வரிசையில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. மரபு சார்ந்த, நவீன ,இன்னும் என்னென்ன வகைகள் உண்டோ அத்தனை வகை ஓவியங்களையும் அங்கே பார்க்க முடிந்தது. ஒரு சின்ன இலையிலிருந்து ஒரு மிகப் பிருமாண்டமான மரம் வரைக்கும், ஒரு எளிய ஓலைக் குடிசையிலிருந்து அதி நவீன மாட மாளிகைகள் வரைக்கும், ஒரு சிரிய தோப்பிலிருந்து ஒரு பெரிய காட்சி வரைக்கும் என்று வாழ்வின் சகல நிலைகளிலும் உள்ள இரண்டு முனைகளையும் சரியாய் உள்வாங்கி சரியாய் வெளிப்படுத்தும் பாங்கு நிசத்துக்குமே அலாதியானதுதான் 

நவீன ஓவியங்களைப் பார்த்து வாயைப் பிளந்தவாறு நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. பொதுவாகவே நவீன ஓவியங்களின் மீது ஏகத்துக்கும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் வறட்டுத் தனமாக நவீன ஓவியங்களின் புரியாமயைக் காரணம் காட்டி அவற்றை நிராகரிப்பதை ஏற்க இயலாது.அதை அப்படித்தான் ஏற்க வேண்டுமெனில் பின் நவீனப் படைப்புகளையும், இருன்மை மற்றும் படிமம் சார்ந்து புனையப்படும் படைப்புகளையும் நாம் நிராகரித்து இழக்க வேண்டி வரும். நல்லது கெட்டது என்ற வகையில் வரும் விமர்சனங்களை மட்டுமே எதிர் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பதே சரியெனப் படுகிறது.                                                                                                                                                                      

நுண்கலை வகையை சார்ந்த ஓவியங்களையும் ரசிக்க ஒரு திரள் இருந்தது. இரண்டையும் ரசிக்கும் திரள்தான் அந்த அரங்கில் பெரும்பான்மை என்பதுதான் மிகுந்த ஆரோக்கியமான விஷயமே. நம்மைப் பொறுத்தவரை புனைவும் பின் நவீனத்துவமும் கைவரப் பெற்றவரால் மட்டுமே நவீன ஓவியங்களை படைக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.                            

ஆங்காங்கே கொத்துக் கொத்தாக நின்று சிலாகித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருந்தார்கள்.சிலரோ அங்கு வைக்கப் பட்டிருந்த குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டுக்குமே நமக்கு ஞானம் போதாது என்பதால் அதற்குள் நான் நுழைய வில்லை. நானும் கொஞ்சம் சொக்கித்தான் போயிருந்தேன். மருதுவின் கண்காட்சியின் போது நான் முற்றிலுமாக அதனோடு ஒட்ட இயலாமல் கொஞ்சம் அந்நியப்பட்டுக் கிடந்தேன். காரணம் அப்போது வந்திருந்தவர்களில் பெரும்பான்மையோர் ஒவியத்தில் அதிகம் புலமை பெற்றிருந்தவர்கள். அதில் அதிகமானோர் ஓவியம் குறித்து பல கருத்தரங்குகளில் மணிக் கணக்காக பேசிக் கொண்டிருப்பவர்கள். ரப்பர் பந்து கிரிக்கெட்டைக்கூட தூர இருந்தே ரசித்துப் பழக்கப் பட்டிருந்த எனக்கு தெண்டுல்கர் மற்றும் தோனியின் அருகிருந்து பாக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது ஏற்படும் படபடப்பும் அந்நியத் தன்மையுமே எனக்கன்று இருந்தது. அன்றிருந்த மிரட்சி இல்லை என்பதால் இந்த ஓவியங்களுக்கு நெருங்கிப் போவது ஒன்றும் கடினமாக இல்லை.

முடிந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆன நிலையிலும் அதிலிரண்டு படங்கள் வழக்கமாக எடுத்தக் காரியத்தில் குவிந்துவிடும் என் கவனத்தை சலனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன.

 அதிலொன்று, ஒரு ஓலைக் குடிசைக்கு முன்னால் சகல சக்திகளாலும் சக்கையாய் சுரண்டப் பட்டு எலும்பும், ஏதோ அரைக் கிலோ சதையும், கொஞ்சம் தோளும் என்று இருக்கும் நிலையிலும் நம்பிக்கையின் கங்கை இன்னமும் கண்களில் தேக்கி வைத்து குதிக் காலிட்டு குந்தியிருக்கும்  கிழவியின் படம். "காட்டம்மா" என்று கத்த இருந்தவன் படாத பாடு பட்டு அடக்கிக் கொண்டேன். யாருக்கும் தெரியாமல் கசிவை துடைத்துக் கொண்டேன். வெளிப்படையாய் அழுவதுகூட சகிக்கமுடியாத பெருங்குற்றம் என்பதைதான் இந்த பாழாய்ப் போன நாகரீகமும் படிப்பும் கற்றுத் தந்திருக்கிறதே.

களை வெட்டி, நாற்று நட்டு, சித்தாள் வேலை பார்த்து, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எருமை மேய்த்து என்பதாய் உழைத்து உழைத்தே தேய்ந்து போன நிலையிலும், எண்பதுகளின் மத்தியிலும் யார் தயவும் இன்றி மைல் கணக்காய் நடக்கும் என் அம்மாயி "காட்டம்மா " குதிக் காலிட்டு குந்தியிருப்பதாகவே பட்டது எனக்கு. அவ்வளவு தத்ரூபம். இருபது நிமிடங்களாவது அந்தப் படத்தின் முன் நின்றிருப்பேன். கொஞ்சம் கட்டுப் படுத்த முடியாதபோது கழிப்பறைக்குள் சென்று ஒரு ஏழெட்டு சொட்டு அழுதுவிட்டுத்தான் வந்தேன் மேனகா.

ஒன்று சொல்ல வேண்டும் மேனகா, அந்தக் கிழவியின் சோகத்தில், முற்றாய் முழுதாய் சுரண்டப்பட்ட எங்கள் கிழவியின் வாழ்க்கையில் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, அதுதான் உண்மை மேனகா. அது வர்ணமாய், வர்க்கமாய் விரிந்து பரந்து கிடக்கிறது . இந்த உண்மையும் அதற்குள் மிகக் கவனமாக தன்னை ஒளித்துக் கொண்டு தன்னைப் பாதுகாத்து வரும் அரசியலும் உங்களுக்குள் பிடிபட்டு உங்கள் விரல் வழி கசியும் போது மேனகாவின் படைப்புகள் இன்னுமும் மெருகு பெரும்.

அடுத்ததாய் ஒரு இரண்டு மைல் தொலைவை மிகத் தத்ரூபமாக வரைந்திருந்தார். மலைகளும், மரங்களும், கசியும் வெளிச்சமும் , மக்களும் , பறவைகளும் என்று மிகச் சரியான ஓவியம்.வெளிச்சத்தை சரியானபடி வித்தியாசப் படுத்தி காட்டி இருந்தது சொக்க வைத்தது. அதே போல கல்லை வெட்டி, சுமந்து, செதுக்கி சிலையாக்கியவனெல்லாம் இன்னமும் இரண்டு மூன்று மைல்களுக்கப்பால் நின்றுதான் தரிசனம் பெற முடியும் என்ற உண்மை தரும் கோவமும் மேனகா விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும். இது நடக்கும் என்றே நம்புகிறேன்.

 என் அம்மாயி பார்த்தால் இப்படித்தான் சொல்லும் "அச்சு அசலா என்ன மாதிரியே வரஞ்சிருக்காளே. என்ன எங்கடா பாத்தா இந்தக் குட்டி?" இதுதான் உங்கள் வெற்றி மேனகா.

Tuesday, August 24, 2010

தந்தி பேப்பர் காமன்

இருப்பே கொள்ளவில்லை காமனுக்கு. எப்படா ஊருக்கு கிளம்புவோம் என்றிருந்தது. அப்படி ஒன்றும் தலைபோகிற வேலையுமில்லை ஊரிலும் கொட்டுகிற மழையில் எந்த வேலையும் கிடைக்கப் போவதில்லை. மட்டுமல்ல, வெயிலுக்குத்தானே தவிர மழைக்கெல்லாம் வீடல்ல அவனுடையது. இதையெல்லாம் சேர்த்துப் பார்;த்துக் கணக்குப் போட்டுத்தான் ஒரு பத்து நாளாவது மகளின் வீட்டில் டேரா போட்டுவிட வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தான்.

“இப்படி உடாம கொட்டுதே. நாம அங்க போயிருக்க நேரம் பார்த்து இங்க மழையில் குடிச குந்திக்குச்சுன்னா என்னாய்யா பன்றது” என்று தயங்கிய சாலியையும் பெரும்பாடு பட்டு இழுத்துக் கொண்டு வந்திருந்தான்.

மகள் சொன்ன அந்த எச்சரிக்கை வார்த்தைகள் அவனை எரிச்சலின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது. இனி இங்கத் தங்கக் கூடாது. கிளம்பிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கும் அவனை உந்தித் தள்ளியது.

“நம்ப ஊர்ல குந்தற மாதிரி இங்க தின்னைல காலத் தொங்கப் போட்டு ஏதும் குந்திராதப்பா. குடியானத் தெரு ஆளுக வந்த மானியும் போன மானியுமா இருப்பாங்க. பாத்தாங்கன்னா ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடும்.

அவள் சொன்னதிலும் ஞாயம் இருக்கவே செய்தது. காமனுக்கு பீடி, சிகரெட்டு, வெற்றிலை, பாக்கு, புகையிலை, பட்டை, ஏன் தேநீர் குடிக்கிற பழக்கம்கூட கிடையாது. இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது எல்லாப் பழக்கங்களுமோ இல்லாத ஒரு பதினைந்து வயது பையனைக் கூட காலனியில் பார்க்க இயலாது.

“ஒரு பீடி இல்ல, தண்ணி இல்ல, பொம்பள ஷோக்கு இல்ல, ஏன் ஒரு டீத்தண்ணிக்கூட குடிக்கிறது இல்ல. இப்படி ஒன்னையும் அனுபவிக்காம என்னா மசுத்துக்குடா உசிரோட இருக்கிறது? போறப்ப ஒரு மசுரையும் கொண்டு போகப் போறது இல்ல. மனுஷன்னு பொறந்தா மிச்சம் மீதி வைக்காம அனுபவிச்சிட்டு சாகனுன்டா” என்று காமனை நக்கல் செய்யாத ஆட்களே காலனியில் இல்லை.

இப்படி எந்தப் பழக்கத்திற்குள்ளும் விழுந்துவிடாத காமனையும் கடந்த முப்பது வருடங்களாக உடும்பு மாதிரி இறுக்கிப் பிடித்திருக்கிறது ஒரு பழக்கம். காலையில் எழுந்ததும் நேராக ‘பிச்சை’ கடைக்கு போய் தினத்தந்தி பேப்பரை வாங்கி வந்து திண்ணையில் கால் மேல காலத் தொங்கப் போட்டு உட்கார்ந்து படித்தால்தான் ஆகும். விடாது மழை பெய்து கொண்டிருந்தாலும் ஒரு பழைய சாக்கை தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடுவான்.

இவனுக்காகவே ஒரு தினத்தந்தியை தனியாக மடித்து வைத்திருப்பான் பிச்சை. இவனைக் கண்டதும் அநிச்சையாகவே பேப்பரை எடுத்து நீட்டி விடுவான். இவனும் காசைக் கொடுத்து பேப்பரை வாங்கிக் கொண்டு அங்கு நிற்காமல் கிளம்பி விடுவான். பிச்சையும் வாங்கிய காசை எண்ணிக்கூடப் பார்க்காமல் அப்படியே டப்பாவில் போட்டு விடுவான். சரியாக இருக்கும்.

“பள்ளிக் கூடத்து பெரிய வாத்தியாரே பழநிமுத்து டீக்கடைல வந்து பேப்பர் பார்த்துட்டு போராரு. காசு அழுது வாங்கிட்டு வந்து படிச்சாதான் ஆகும் எங்க வீட்டு சீமைல மொளச்ச இந்த சில்லா கலெக்டருக்கு” எரிச்சலோடு சொல்வது மாதிரிதான் இருக்கும். காலனிக்குள்ள பேப்பர் படிக்கிற புத்திசாலி தன் புருஷன் என்பதில் ரகசியமாய் பொங்கவேதான் செய்கிறது சாலிக்கு.

பெரிய வாத்தியார் வேண்டுமானால் பழநிமுத்து கடையில் உட்கார்ந்து பேப்பர் வாசிக்க முடியும். காலனிக் காரர்களால் அது முடியாது என்பதும் சாலிக்கு நன்கு தெரியும்.

ஊருக்குள் காமன் என்றால் யாருக்கும் தெரியாது. “தந்தி பேப்பர்” என்றால் நேற்றுப் பிறந்த பிள்ளைக்கும் நன்கு தெரியும். உண்மையைச் சொன்னால் இது ஆதித்தனாருக்கே கிடைக்காத கௌரவம். உண்மையைச் சொல்வதெனில் வேலைக்குத் தேவைப்படும்போது” ஏலே செத்தப் போயி நாங் கூப்பிட்டேன்னு அந்த ‘தந்திப் பேப்பர’ இளுத்துட்டு வாங்கடா” என்றால் நேரே காமன் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.

காலனிக் காரர்களை அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. ஊருக்குள் மூன்று ராமசாமிகள். அடையாளம் தெரிய வேண்டி ஊர் மக்கள் அவர்களை வாத்தியார் ராமசாமி, அழைத்தனர். ஆனால் காலனியில் இருக்கும் ராமசாமியை “தொத்தக் காளை” என்றும் கந்தனை “தண்ணி வண்டி” என்றும் மாணிக்கத்தை ‘ப+ச்சி’ என்றும்தான் அழைக்கிறார்கள்.

இப்போது காலனி இளைஞர்களிடம் சின்ன சல சலப்பை இது உண்டு பண்ணியிருக்கிறது.

“நம்ம பசங்களும் படிச்சு அவங்கள மாதிரி டிரைவரா வாத்தியாரா, வந்தாத்தான் நம்மள பேர சொல்லிக் கூப்பிடுவாங்க போலடா” என்றான் சண்முகம். சண்முகம் ஊர் மக்களால் மம்புட்டி மகன் என்றே அழைக்கப்படுகிறான்.

“அப்பவும் கூப்பிட மாட்டங்கடா. அப்பவும் காலனி சண்முகம், காலனி கோவிந்தன் என்றுதான் கூப்பிடுவாங்க” என்று இடை வெட்டினான், வேலு. ஊருக்குள் வேலுவின் பெயர் கடப்பாரை பேரன்.

ஊர்க்காரர்கள் இப்படி அழைப்பதைப் பார்த்து காலனிக் காரர்களும் தங்களை ‘கடப்பாரை’ யென்றும், ‘மம்புட்டி’யென்றும் ‘தொத்தக்காளை’யென்றும் அழைத்துக் கொள்ள ஆரம்பித்து அப்படியே நிலைத்துவிட்டது.

இதில் காமனுக்கு ஏகத்துக்கும் வருத்தம்தான். ஆனாலும் ‘கடப்பாரை’ ‘மம்புட்டி’ ‘பூச்சி’, என்று மற்றவர்கள் அழைக்கப்படுகையில் தான் மட்டும் செய்தித்தாளின் பெயரால் அழைக்கப்படுவது தனக்கான அறிவு சார்ந்த அடையாளமாகவே காமனுக்குப் படும். வெளியே காட்டிக் கொள்வதில்லை என்றாலும் அதில் கொஞ்சம் திமிறேகூட உண்டு காமனுக்கு.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் கலை காமனிடம் அந்த எச்சரிக்கை வார்த்தைகளைப் போட்டு வைத்தாள். ஊர் நிலவரம் தெரியாமல் இவன்பாட்டுக்கு பேப்பரை போட்டுக் கொண்டு உட்கார்ந்து வாசிக்க அதை அந்த சனங்க பார்த்துவிட்டால் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தது. மற்றும் பேப்பர் வாசித்தது என்கிற வகையில்’ அது ரெட்டைக் குற்றமாகி விடுமே என்கிற பயமவளுக்கு.

அது மட்டுமல்லாமல் மருமகன் சங்கிலி மூலமாக கிடைத்த தகவல்களும் அவ்வளவு நல்ல விதமாக இல்லை. எனவே இருக்கப் பிடிக்கவில்லை காமனுக்கு. என்ன பாடுபட்டு சாலியை இங்கு கூட்டிவந்தானோ அதைவிட பெரும்பாடு பட்டு அவளை இங்கிருந்து கிளப்பினான்.

வேறு வழியில்லாமல் சாலியும் புலம்பிக்கொண்டே கிளம்பிவிட்டாள். கலைக்கும் சங்கிளிக்கும் காமனைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் வருத்தமோ கோபமோ கொள்ளவில்லை.

“பேருந்து நிலையம் ஒட்டி சாலையின் ஓரத்தில் கூடைத் தட்டுகளில் வைத்து வாழப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு கடையில்” ஆன வெல குதிர வெல சொல்றீயேம்மா” என்று முனகிக் கொண்டே ஒரு சீப்பு பூவம்பழம் வாங்கிக் கொண்டான். பையில் இடமில்லாததால் கையிலேயே பிடித்துக் கொண்டான்.

பேருந்து நிலையத்துள் நுழையும் போதே ஏழாம் எண் பேருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. கையை நீட்டிக் கொண்டே நடந்தவனைப் பார்த்து “விடுய்யா, போகட்டும். குந்த இடமில்லாம நிக்கிறாக. அடுத்த பஸ்ல போகலாம்” என்று தடுத்துப் பார்த்தாள் சாலி.” அட ஏறு புள்ள. எல்லா வண்டியிலும் கூட்டமாத்தான் இருக்கும்” என்று அவர்களுக்காக நின்ற பேருந்தில் சாலியை ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டான்.

பெண்கள் பகுதியின் முதல் இருக்கையில் சாய்ந்து நின்று கொண்டாள் சாலி. வாழைச் சீப்பை கண்ணாடிக்கும் இஞ்சினுக்கும் இடைப்பட்ட பகுதியில் போட்டு விட்டு இஞ்சினை ஒட்டினார்போல நின்று கொண்டான் காமன்.

முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அண்ணா சிலையில் இறங்கிக் கொள்ளவே சாலிக்கு உட்கார இடம் கிடைத்தது. உட்கார்ந்தவள் இடுப்பிலிருந்து சுருக்குப் பையை எடுத்து வெற்றிலை போடுவதற்கு ஆயத்தமானாள்;.

“நம்ம வீட்டுத் திண்ணைல காலத் தொங்கப்போட்டு குந்தக் கூடாதுங்குறது என்ன ஞாயம்” என்று விடாது உளைந்து கொண்டே வந்தான் காமன். நெஞ்சு வலியே வந்துவிடும்போல் இருந்தது அவனுக்கு. இது எது பற்றியும் சஞ்சலப்பட்டுக் கொள்ளாத சாலி எச்சில் துப்ப தோதாக இருக்குமென்பதால் சன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் இந்தப் பக்கமாக நகர்ந்து சன்னல் இருக்கையில் தர வேண்டுமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இன்னும் கொஞ்சம் பேசவிட்டால் புகையிலை எச்சில் தெளித்துவிடுமோ என்ற பயத்தில் சரி என்பதுபோல் தலையை ஆட்டி கொண்டே அந்தப் பெண் இடம்மாறி உட்கார்ந்தாள். ஆத்துப்பாலம் வந்ததும் ஏறத்தாழ பேருந்தே காலியானதாக இடது பக்க முதல் ஒற்றை இருக்கை காமனுக்கு கிடைத்தது. உட்கார்ந்தான். பேருந்து பால் பண்ணையைத் தாண்டியபோது தனது வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்ட நடத்துனர் முன்னே வந்து இஞ்சின் மீது சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டே ஓட்டுனரிடம் கை நீட்ட குறிப்பறிந்த ஓட்டுநர் பக்கத்தில் கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்.

காலி பாட்டிலை வாங்கிக் கொண்டே ஓட்டுநர் கேட்டார் “எறக்கம் எங்கப்பா?”

“மேட்டுத் தெருல ரெண்டு டிக்கட், காலனில ரெண்டு டிக்கட் அப்புறம் வேற எங்கையும் இல்ல. நேரா பஸ் ஸ்டான்ட்தான்”

“சொசைட்டில லோன் போட போகனும்னியே எறங்;கிப் போகலாமா?” எனக்கேட்ட ஓட்டுனரிடம்” ரவி வரானாப் பாப்போம் கோவிந்து. வந்தான்னா போலாம். அவுங்க அப்பாவ கூட்டிக்கொண்டு ஆஸ்பிடல் போகனும்னான். வராட்டி ஓவர் டைம் பாக்கனும்” என்றவாறு தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தார்கள்.

காலனி வந்ததும் சாலியும் காமனும் இறங்கிக் கொண்டார்கள். இறங்கிய கையோடு காமன் வாழைப்பழச் சீப்பை எடுக்க மறந்ததைக் கவனித்த சாலி “சத்தம் போட்டு வண்டிய நிறுத்துய்யா. வாழப்பழத்த மறந்துட்ட” என்று இறைந்த சாலியிடம்

“மறக்கல புள்ள. போகட்டும் விடு. ஒரு விஷயமாதான் வச்சுட்டு வந்தேன்”.

“ஏய்யா கிறுக்கு ஏதும் புடுச்சிறுக்கா ஒனக்கு. தெரிஞ்;சே வச்சிட்டு வந்தாராமுல்ல தொர. பதினஞ்சு ரூவா வெளங்குவியா நீ”

கத்திக் கொண்டிருந்த சாலியிடம் “விடு புள்ள. அந்தக் கண்டக்டரு மேட்டு தெருவுல ரெண்டு டிக்கட், காலனில ரெண்டு டிக்கெட்டு சொன்னாருல்ல”.

“அதுக்காவ?”

“ரெண்டு சனங்களையும் ஒரே பேரால கூப்பிடுற மனசு வேற யாருக்கு இருக்கு?”

“அதுக்காவ”

“அதான் அவரோட மனசுக்கு ஏதாவது செய்யனும்னு தோணிச்சு. அவருக்காகத்தான் அங்கேயே அத உட்டுப்புட்டு வந்தன்”

சாலியின் முறைத்தலை அலட்சியம் செய்தவாரே நடையைக் கட்டினான் காமன்.


நன்றி: "கல்கி"

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...