'மரணம் குறித்த
பயம் போய்விடும்
ஒரே ஒரு முறை
செத்துப் பார் "
என்று எப்போதோ ஜென்னில் வாசித்ததாய் ஞாபகம். இதைத் தாண்டி மரணம் குறித்து என்னத்தை யோசித்து தொலைப்பது? உச்சத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி, எவ்வளவுதான் உச்சத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூட வருமா? ஒருக்கால் ஓரிரு முறை செத்து மீண்டும் எழுந்து வந்து மரண பயமற்ற தனது அனுபவத்தை எழுதியிருப்பானா?
எனது பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் தொடர்ந்து வெற்றிலைப் பாக்கு போடுபவர். கூடவே பன்னீர் புகையிலையும் .அவர் உள்ளே நுழைந்தால் வாசம் கமகமக்கும்.
ஒரு முறை கேட்டேன் ,
"புகையிலை ஒரு மாதிரி மயக்கத்தைத் தரும் என்கிறார்களே ,தொடர்ந்து புகையிலை போட்டாலும் தெளிவா இருக்கீங்களே . உண்மைய சொல்லுங்க புகையிலை எப்படி இருக்கும்?"
கொஞ்சம் புகையிலையை உருட்டி என்னிடம் நீட்டினார். மிரண்டு போய் ஒதுங்கினேன்.
"எதையும் அனுபவிச்சுப் பார்த்து உணரனும்டா"
மூன்று நான்கு வரிகள் கொண்ட எனது கேள்விக்கு நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார்.
புகையிலைப் போட்டால் அது குறித்த பயம் தெளிந்து சுவைக்கும் என்கிறார் இவர். அவனோ ஒருமுறை செத்துப் பார். மரணம் குறித்த பயம் நீங்கி சுவைக்கும் என்கிறான்.
எனில் புகையிலை போடுவது மாதிரி ஒரு சராசரி அனுபவம்தானா மரணம்?
வலியற்றதா?
" உறங்குவது போலும் சாக்காடு " என்கிறான் நம்மாளு.ஆஹா! மரணத்தை உறக்கம் மாதிரி ஒரு அனுபவம் என்கிறானே.
மரணம் அனுபவமா?
என்ன செய்வது ஜென் குறித்த பரிசீலனையின் நீட்சியில்தான் நமக்கு நமது மேன்மையே தட்டுப் படுகிறது. இதை என்ன என்பது? சுகன்தான் சொல்வார் ," அது அப்படித் தாங்க அய்யா."
அது அப்படித்தான் போலும்.
ஆனால் மனிதர்களுக்கு மரணம் வேப்பங்காயாய் கசக்கிறது என்று கூட சொல்ல முடியாது. மரண பயம் என்பது எந்தக் கசப்பினும் கொடூர கசப்பானது.
மனிதர்கள் மட்டுமல்ல, தேவகுமாரன் என்றும் , உலக மக்களின் ஒட்டு மொத்தப் பாவத்தையும் தனது ரத்தத்தால் கழுவிப் போக்க இந்த பூமிக்கு வந்தவர் என்றும் உலகின் பெரும்பான்மை மக்களால் நம்பப் படுகிற ஏசுநாதருக்கே தனது மரணத் தருவாயில் மரணம் கலக்கத்தைத் தந்திருக்கிறது. அதனால்தான் தனது மரணத்திற்கு சற்று முன்னால் " என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கலங்கியிருக்கிறார்.
விவேகானந்தரும்கூட தனது மரணத்தின் நெருக்கத்தில் கொஞ்சம் கலங்கி இருந்ததாகத்தான் படுகிறது.
முரட்டு வீரத்தோடுதான் எதிர்கொண்டார் எனினும் அவரது மரண நொடிகளில் கலக்கத்தின் ரேகைகளை சதாம் உசேனின் முகத்தில் பார்க்க முடிந்தது.
நம்ம கட்டபொம்முவிடமும் சின்னியம் பாளையத்து தோழர்களிடமும் தூக்கிலே தொங்கி உயிர் துறக்கும் வரைக்கும் வீரத்தையும், முறுக்கையும் அள்ள அள்ளக் குறையாதத் திமிரையும் பார்க்க முடிந்தது.
பகத்தோ இவை அனைத்தையும் கடந்து சாகும் வரைக்கும் ஒரு வசீகரமான புன்னகையை தன் உதடுகளில் உலரப் போட்டிருந்தான். அந்தப் புன்னகைக்கு நிகரான ஒரு ஆயுதம் இதுவரைக்கும் உலகின் எந்த உலையிலும் தயாராகவில்லை.
சரி, மரணம் என்றால்தான் என்ன?
"பாவத்தின் சம்பளம் மரணம் " என்கிறது விவிலியம். எனில் மரணம் என்பது பாவத்தின் விளைவு. சரி ஒரு வாதத்திற்காக பாவமும் புண்ணியமும் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இந்த உலகில் பாவ புண்ணியக் கணக்கையே இன்னும் துவங்கியிராத ஒரு சொட்டுத் தாய்ப் பாலைக் கூடப் பருகியிராத பச்சிளங்குழந்தை செத்துத் தொலைக்கிறதே. அது யார் செய்த பாவத்தின் விளைவு?
"ஏற்றப் பழந்துணியை நீக்கி
எறிந்தொருவன்
மாற்றும் புதிய உடை
வாய்ப்பது போல்
தோற்றுமுயிர்
பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல்
கொண்டு பிறக்குமென்று
கொள்"
என்று கீதை சொல்வதாகத் தெரிகிறது. வி.ஸ.காண்டேகரின் "கிரௌஞ்சவதம்" நாவலில் தனது மனைவி இறந்து போன துயரிலிருந்து தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காக பேராசிரியர் அப்பன்னா என்ற கதாபாத்திரம் கீதையிலிருந்து மேற்சொன்ன பாடலைப் பாடுவதாகப் படித்தது. மற்றபடி அது கீதையில் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது.
இருக்கும் என்றே நம்புகிறேன். எனில் உயிரானது தான் போட்டிருந்த உடல் என்ற சட்டையை , அது பழையது ஆனதாலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தாலோ மாற்றிக் கொள்வது மரணம் என்றாகிறது.
இதன் பொருள் மரணம் என்பது உயிர் உடலை மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. உயிர் அழியாதது. ராமசாமி மரித்துப் போனான் எனில் அவனது உடலிலிருந்து உயிர் புதிய உயிராகப் பிறந்து கந்தசாமி அல்லது வேறு ஏதா ஒரு பெயர் கொண்ட ஒரு மனிதனாவான்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பதோ, உயிர் அழியாதது என்பதோ மனிதர்களுக்கு இருக்கும் மரணம் குறித்த பயத்தைப் போக்குவதற்கு என்றே கொள்ள வேண்டும்.
மரணம் குறித்து ம்க்களுக்கு பயம் இருக்கிறது.. அதே நேரத்தில் தற்கொலை செய்து கொள்கிறானே. எனில் அவனுக்கு மரணம் குறித்த பயம் இல்லை என்றுதானே பொருள்?
அல்ல, சாதாரண மனிதனுக்கு மரணம் கண்டு பயம். தற்கொலை செய்து கொள்பவனுக்கு வாழ்க்கை குறித்து பயம்.
மரணம் என்பது பிறப்பது மாதிரி , பெயர் பெற்றுக் கொள்வது மாதிரி , பூப்பெய்துவது மாதிரி , திருமணம் செய்து கொள்வது மாதிரி வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அவ்வளவுதான். மற்றவற்றிற்காக ஏங்கி, எதிர்பார்த்து, தவமாய் தவம் கிடக்கும் நாம் மரணத்தைப் பொருத்தவரை இவற்றிலிருந்து மாறுபட்டு ஒன்று அதைத தவிர்க்கவோ அல்லது குறைந்த பட்சம் தள்ளிப் போடவோ முயற்சிக்கிறோம் .
இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். மற்றெல்லா நிகழ்வுகளிலும் அது குறித்து அசை போட அதற்கடுத்த நாள் நாம் இருப்போம் . ஆனால் நேற்று நடந்த தனது மரணத்தைப் பற்றி அடுத்த நாள் அசை போட மரணித்தித்தவனுக்கு வாய்ப்பிருக்காது.
மரணத்தைக் கொண்டாட நாம் கற்றுக் கொண்டால் வாழ்க்கையின் எந்த ஒரு இடர் கண்டும் நம்மால் புன்னகைக்க இயலும். மரணத்தைக் கொண்டாட வேண்டும் என்று நாம் பரிந்துரைப்பதன் பொருள் இந்தப் புள்ளியிலேயே ஒரு புன்னகையோடு மரணித்து விட வேண்டும் என்பதுமல்ல. மரணம் வரைக்கும் வாழ்க்கை நிஜம். மரணம் வரைக்கும் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்திவிட வேண்டும்.
இத்தனை மருத்துவமனைகள் , இத்தனை மருத்துவ வசதிகள், அனைத்துமே மரணத்தை முற்றாய் முழுசாய் தவிர்ப்பதற்கு உதவாது. மரணத்தை முடிந்த அளவு தள்ளிப் போடுவதற்காக நமக்கு வாய்த்த வாய்ப்புகள் அவை.
மரணமே இல்லாத உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இளைஞர்களை விடவும் , குழந்தைகளை விடவும் கிழவர்கள் அதிகம் வாழும் ஒரு உலகத்தை ஒப்புக்கேனும் சகித்துக் கொள்ள முடியுமா?
மரணம் தவிர்க்க இயலாதது. சக மனிதன் குறித்த புரிதலோடும் , அக்கறையோடும் , கவலையோடும் அவனுக்கானதுமாக நம் வாழ்க்கை செலவிடப் பட்டிருக்குமானால் நமது மரணத்தையும் தாண்டி நீளும் நமது வாழ்க்கை.