Wednesday, September 18, 2019

65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019


இந்த ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நாங்கள் இனி சாதி பார்க்க மாட்டோம். அப்படி யாரேனும் பார்த்தால் அவரை ஊர்விலக்கம் செய்துவிடுவோம்

இன்றைய தேதியில் ஒரே ஒரு ஊரைச் சார்ந்த மக்கள் இப்படி முடிவெடுத்து அமல்படுத்தினாலே நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவோம்

ஐந்து கிராம மக்கள் ஒன்றுகூடி இப்படி ஒரு முடிவெடுத்து அதை அவர்களது மன்னனிடம் கூறி அவனது ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள்

அதை கல்வெட்டாக்கியும் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்

அதுவும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருமங்கலம் என்ற சிற்றூரில் உள்ள தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இருக்கிறது அந்தக் கல்வெட்டு

வேலூர் கல்யாணராமன் என்பவர் அந்தக் கோவிலில் புதைந்து கிடந்த ஒரு கல்வெட்டைக் கண்டெடுக்கிறார். அதில் என்ன எழுதி இருக்கிறது என்பது  அவருக்குத் தெரியவில்லை. கல்வெட்டு என்கிற வகையில் இதன் வயது பல நூறு ஆண்டுகள் இருக்கும் என்பதும், அது ஒரு முக்கியமான அவணமாக இருக்கக் கூடும் என்பதும் அவருக்குப் புரிகிறது

ஊர் மக்களை அணுகுகிறார்

அவர்களுக்கும் ஏதும் புரியவில்லை. ஆனால் ஒரு பொக்கிஷம் என்பதும் அதை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் புரிகிறது

அதை எடுத்து சுத்தம் செய்து நட்டு வைக்கிறார்கள்

குடவாசல் பாலகிருஷ்ணனின் முயற்சியால் கல்வெட்டு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்தான் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன

சாதி தோன்றிய நாளன்றே சாதி மறுப்பும் தோன்றியிருக்கும். அது ஒரு முனகல் வடிவத்தில்கூட இருந்திருக்கலாம்.

அது அன்றேகூட நசுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்போதே நிச்சயமாக தோன்றியிருக்கும்.

பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பல பகுதிகளில் சாதிகள்இடங்கை சாதிகள்”, “வலங்கை சாதிகள்ஆகிய இரு பிரிவுகளுக்குள் உள்ளடங்கின என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது.

ஒருகட்டத்தில்இடங்கை பிரிவில்’ 98 சாதிகளும், ‘வடங்கை பிரிவில்’ 98 சாதிகளும் இருந்திருக்கின்றன. இது பையப் பைய இடங்கைப் பிரிவில் 6 சாதிகளும் வலங்கைப் பிரிவில் 30 சாதிகளுமாக ஒரு கட்டத்தில் சுறுங்கி இருக்கின்றன

இவர்களுக்கிடையே அவ்வப்போது கலவரங்கள் வெடித்திருக்கின்றன. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்

இந்த மக்கள்தான் சித்திரை மாதத்தில் ஒருநாள் ஒன்றுகூடி,

1)   குறுக்கை நாடு
2)   காளி நாடு
3)   விளத்தூர் நாடு
4)   மாந்துரை நாடு
5)   திருமங்கல நாடு

ஆகிய கிராமங்களைச் சார்ந்த குடிமக்களாகிய நாங்கள் இனி இந்த சந்திர சூரியன் உள்ளமட்டும் இடங்கை வலங்கை என்று வேறு எந்த விதமாகவோ எங்களுக்குள் பேதம் பார்க்க மாட்டோம் என்றும் அப்படி பார்ப்பவர்களை விலக்கம் செய்துவிடுவோம் என்றும் அந்தக் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்

800 ஆண்டுகளுக்கு முன்பே ஐந்து கிராம மக்கள் தாங்கள் இனி சாதி பார்க்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்தியிருப்பதை இன்றைய சாதிய இளந்தலைவர்கள் அருள்கூர்ந்து கவனிக்க வேண்டும்

கூடிய விரைவில் அந்த ஐந்து கிராமங்களுக்கும் சென்று அந்த மண்ணை வணங்கிவிட்டு வர வேண்டும்

********************************************************************************** 


மாணவர்களே இல்லாத பள்ளிகள் இழுத்து மூடப்படும். மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு அந்தப் பள்ளிகளையும் மூடிவிடுவோம்

மூடப்பட்ட பள்ளிகளை நூலகங்களாக மாற்றிவிடுவோம் என்று கூறிக் கொண்டே இருந்தது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

10.08.2019 அன்று 46 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடவும் செய்தது. அவ்வாறு மூடப்பட்ட பள்ளிகளை நூலகங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியது.

இதெல்லாம் வழமையான செய்திகள்தாம். ஆனால் அப்படி மூடப்பட்ட 46 பள்ளிகளில் ஒன்றை மூடிய மூன்றே நாளிலும் மற்றொரு பள்ளியை ஆறே நாளிலும் திறக்க வைத்திருக்கிறார்கள் மக்கள் என்பதுதான் நம்பிக்கையைத் தருவதும் அனைவருக்கும் கொண்டுபோகப்பட வேண்டியதுமான செய்திகள்.

மாணவர்களே இல்லாத காரணத்தால் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் இருந்த பள்ளி 09.08.2019 அன்று பூட்டப் படுகிறது. உடனடியாக ஊர் மக்கள் கூடுகிறார்கள். பக்கத்து ஊர்களில் படிக்கும் தம் வீட்டுக் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களைப் பெற்று சான்றிதழ்களோடும் குழந்தைகளோடும் பள்ளியின் முன் திரள்வது என்று முடிவெடுக்கிறார்கள்

துரித கதியில் செயல்படுகிறார்கள். 11 குழந்தைகளோடு பள்ளியின் வாசலில் திரள்கிறார்கள் ஊர்மக்கள்.

செய்தியாளர்கள் குவிகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர் திரு திராவிடச்செல்வம் அவர்கள் பள்ளிக்கு விரைகிறார்.

இதோ 11 குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் கூடுதலான மாணவர்களைக் கொண்டுவரவும் முயற்சி செய்கிறோம். பள்ளியைத் திறந்துவிடுங்கள்என்கிறார்கள்

மாவட்டக் கல்வி அலுவலர் உயரதிகாரிகளைக் கலக்கிறார். 09.08.2019 அன்று மூடப்பட்ட குளத்தூர் பள்ளி 13.08.2019 அன்றுமுதல் மீண்டும் செயல்படத் துவங்கிறது.

ஆவுடையார் கோவில் அருகே உள்ள சின்னப்பட்டமங்கலம் என்ற ஊரில் உள்ள பள்ளியும் இழுத்து மூடப்படுகிறது.

மூடப்பட்ட பள்ளியை நூலகமாக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்குகிறார்கள். பள்ளியின் பெயர்ப்பலகையை அகற்றிவிட்டு நூலகத்திற்கான பெயர்ப் பலகையை மாட்டுவதற்காக முயற்சியில் இறங்குகிறார்கள்.

குளத்தூர் தந்த வெளிச்சத்தில் தங்களது செயல்பாட்டினை நம்பிக்கையோடு தொடங்குகிறார்கள் சின்னப்பட்டமங்கலத்து மக்கள். பெரியப்பட்ட மங்கலம் உள்ளிட்ட பக்கத்து ஊர்களில் பயிலக்கூடிய தமது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களைப் பெறுகிறார்கள்.

15.08,2019 அன்று பள்ளியின் வாசலில் ஊரே திரள்கிறது. ஒரு கொடிக் கம்பத்தை நடுகிறார்கள். சீறுடையோடு வந்த குழந்தைகள் கம்பீரமாக அணிவகுத்து நிற்கிறார்கள். கொடியேற்றி விடுதலைநாளைக் கொண்டாடுகிறார்கள். வந்திருந்தவர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

செய்தியறிந்து ஆவுடையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் திருமதி லதாபேபி விரைகிறார்.

விளைவாக 16.08.2019 முதல் அந்தப் பள்ளியும் செயல்படத் தொடங்குகிறது.

பள்ளி மூடப்பட்டதும் ஏதோ அந்தக் கிராமமே ஊனப்பட்டுப் போனதாக அந்த மக்கள் துடிக்கிறார்கள். ஒரு வாரகால அவகாசத்திற்குள் ஒரு பள்ளி செயல்படுவதற்கான குறைந்த பட்ச மாணவர்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அந்தப் பள்ளியை கிராமத்தின் ஒரு உறுப்பாக, இதயமாக பாவிக்கும் அந்த மக்கள் தங்களது குழந்தைகளை ஏன் பக்கத்து ஊர் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள்?

இந்தக் கேள்வியைத்தான் அரசு அலசி ஆய வேண்டும்.

ஏன் என்பதற்கான காரணங்களுள் ஆசிரியரும் வருகிறார் என்பதைத்தான் சின்னப்பட்டமங்கலம் ஆசிரியர் திரு ஞானபாண்டியன் அவர்களது நடவடிக்கை கூறுகிறது.

பள்ளிக்கு ஒழுங்காக வராமை, மாணவர்கள்மீது அக்கறை கொள்ளாமை என்பதெல்லாம்போக பள்ளியில் இருந்த குழந்தைகளின் பெற்றோரையும் அழைத்து கட்டாயப்படுத்தி மாற்றுச் சான்றிதழ்களை வழங்கி அந்தப் பள்ளியை மூடுவதற்கான ஒரு காரணமாக இருந்திருக்கிறார்

அதுகுறித்து விசாரித்து, உண்மையெனில் அவர்மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும். அவர்மீது மட்டுமல்ல அதுபோன்ற ஆசிரியர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பள்ளியில் இருந்து குழந்தைகளை பக்கத்து ஊர் பள்ளிகளுக்கு கொண்டு போகிறார்கள் என்றால் அதற்குரிய காரணங்களைக் கண்டு அவற்றைக் களாஇய வேண்டும்.

1)   கட்டுமான வசதி இல்லாமல் இருக்கலாம்
2)   பக்கத்தில் சாராயக்கடை இருப்பதால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம்
3)   பள்ளியைச் சுற்றி புதர் மண்டிப்போய் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலவுகிற இடமாக இருக்கலாம்
4)   ஆசிரியர்கள் மோசமான செயல்பாடுகளாக இருக்கலாம்

இதுபோன்ற காரணங்களைக் கண்டறிந்து அவற்றை களைந்துவிட்டாலே பள்ளிகளைப் பூட்டவேண்டிய அவசியம் இருக்காது

அதிக மாணவர்கள் படிக்கும் பக்கத்துப் பள்ளி மாணவர்களில் இருந்து மூட இருக்கிற பள்ளிக்கு பிள்ளைகளைக் கொண்டு வருவதன் மூலமும் பள்ளிகள் மூடப்படுவதைத் தவிர்க்கலாம்

2018-2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட்த்தில் கல்விக்கென்று ஒதுக்கப்பட்ட 28,757 கோடியில் 1,627 கோடி ரூபாய் செலவளிக்கப் படவில்லை என்கிறது கணக்குத் தணிக்கை அறிக்கை. இந்தத் தொகையினை இந்தப் பள்ளிகளின் பக்கம் திருப்பியிருந்தாலே மூடவேண்டிய நிலை வந்திருக்காது

மீதமுள்ள 44 பள்ளிகளும் குளத்தூர் மற்றும் சின்னப்பட்டமங்கலம் ஆகிய கிராமங்களை முன்னெடுத்து தமது பள்ளிகளை மீட்டெடுக்க வேண்டும்   


     

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...