Friday, November 11, 2011

குற்றம் குற்றமே

” மதச் சார்பற்ற தன்மையுடைய விஞ்ஞானத்தின் பெயரால் நல்லிணக்கத்திற்கெதிரான இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது என அறிவிக்கிறோம்”

இது ஏதோ ஒரு மத வெறியைத் தூண்டக் கூடிய மத வெறியர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கான அறிவிப்பு எனில் கவனம் குவிக்காமல் விட்டு விடலாம்.

உலகத்தில் வாழும் மக்களில் பெரும் திரளான ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் திகழும் போப்பாண்டவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது என்பதும், அதுவும் அவரது ஆளுகைக்கு உட்பட்ட பல்காலைக் கழகமே மேற்சொன்ன பிரகடனத்தோடு அதை செய்துள்ளது என்பதை அறிந்ததும் இயல்பாகவே ஏன்? என்ற ஆவல் பிடித்துக் கொள்ள உள்ளுக்குள் நுழைந்தோம்.


“ எல்லா சாலைகளும் ரோமை நோக்கி “ என்று சொல்வார்கள். உலகில் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் என்ற பெரும்பான்மையின் செருக்கு மிகுந்த வெளிப்பாடாக இதைக் கொள்பவர்களும் உண்டு. அதில் நியாயமும் உண்டு. மேன்மைமிக்க வெளிப்பாடாக இதைக் கொண்டவர்களும் உண்டு. போப்பாண்டவரின் ஆளுமையும் செல்வாக்கும் உலகை கோளோச்சும் அந்த நிலை இன்னும் அப்படியேத்தான் உள்ளது. பிறகெப்படி இது சாத்தியப் பட்டது? ஏன் தேவைபட்டது?

லா ஸாட்னீஸா என்று ஒரு பல்கலைக் கழகம் ரோமில் உள்ளது.17.01.2008 அன்று போப்பாண்டவர் அவர்களின் அருளாசியுடன் அது தனது அந்த ஆண்டிற்கான பணியினைத் துவங்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிவிப்புதான் பின்னர் திரும்பப் பெறப் பட்டது.

சரி, அப்படி என்ன அந்தப் போப்பாண்டவர் தவறு செய்து விட்டார்?

1633- ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு விசாரனை நடத்தப் பட்டது. திருச்சபையின் முன் கலிலேயோ நிறுத்தப் பட்டார்.

எதற்கந்த விசாரனை?

1633-ல் கலிலேயோ சூரியனை மையமாக வைத்து பூமி சுற்றுகிறது என்று அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையோ பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்று நம்பியது. சூரியன்தான் பூமியை சுற்றுகிறது என்றும் நம்பியது. நம்பவும் சொன்னது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் கலிலேயோ சற்று உரத்து குரலெடுத்து ”பூமி நிலையானது அல்ல. சூரியனைச் சுற்றி இயங்குகிறது” என்று சொன்னார்.இவருக்கு முன்னரே கோபர் நிக்கஸ் இதைக் கண்டுபிடித்திருந்தார். காயம் படாமல், கழுமரம் ஏறாமல், அவஸ்தைக் கால ஜெபத்தோடு செத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கிருந்ததால் உயிருக்கு பயந்தவராக அதை வெளியே சொல்லாமலே செத்துப் போனார்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாத கலிலேயோ இதை சொன்னார். நன்கு சத்தம் போட்டே சொன்னார். இது திருச்சபையின் நம்பிக்கையை, விசுவாசத்தைக் கேள்வி கேட்டது. இந்தக் கேள்வி திருச்சபையின்பால் நம்பிக்கை கொண்டுள்ள கத்தோலிக்கர்களிந்தேவ விசுவாசத்தை, கத்தோலிக்க கட்டமைப்பை உடைத்துவிடுமோ என்று திருச்சபை அச்சப் பட்டது. திருச்சபையே விசுவாசத்தின் மேல் கட்டப்பட்டதுதான். “ நம்பி விசுவாசிப்பவனை விட நம்பாமல் விசுவாசிப்பவனே பாக்கியவான்” என்றும் சொல்லப் பட்டது. ஆகவே இதனை அப்படியே விடுவது என்பது திருச்சபையை முடிவுக்கு கொண்டு வருகிற ஒரு தொடர் செயலுக்குக் கால் கோலும் என்று திருச்சபை கருதியது. எனவே அன்றைய போப்பாண்டவர் தலைமையில் விசாரனை துவங்கியது. விசாரனை என்பதைவிட கட்டப்பஞ்சாயத்து என்பதே பொருந்தும். அதே போல போ[ப்பாண்டவரைக் கூட நாட்டாமை என்றும் அந்த விசயத்தில் கொள்ளலாம்.

அந்தக் கட்டப் பஞ்சாயத்து கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. வேடிக்கைப் பார்க்கத் திரண்ட ஜனத்திரளின் முன் கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். இதற்காக சிறை பட்டார். இறுதியாய் பைத்தியம் பிடித்து செத்தும் போனார்.

ஏறத்தாழ 360 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990 வாக்கில் எந்த மேல் முறையீடுமின்றியே இந்த விசயம் மீண்டும் விசாரனைக்கு வந்தது. இப்போது திருச்சபை தனது முடிவை மாற்ரிக் கொண்டது. பூமிதான் சூரியனச் சுற்றுகிறது என்ற கலிலேயோவின் கருத்தை ஏற்றது. சுருங்கச் சொன்னால் மதத்தை விஞ்ஞானம் வென்றது.

அப்போது அந்தக் குழுவில் இருந்த பெனடிக் 16- ஆம் கார்டினல் ரட்சசிங்கர் மட்டும் கலிலேயோ கருத்து ஏற்கத்தக்கதல்ல. 1633-ல் திருச்சபை எடுத்த முடிவே சரியானது. எனவே கலிலேயோவின் கருத்தை திருச்சபை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார். மட்டுமல்ல அவர் தனது கருத்தில் விடாப் பிடியாகவும் இருந்தார். நல்ல வேளையாக அன்றைய பெரும்பான்மை இவரது கருத்திற்கு எதிராகப் போகவே திருச்சபை த்னது 360 வயது பழைய கருத்தை மாற்றிக் கொண்டு கலிலேயோவை குற்றத்திலிருந்து விடுவித்தது.

விஞான யுகத்தில் விஞானத்தின் சகல கனிகளையும் ருசித்துக் கொண்டே தனி ஒரு மனிதனாய் அந்தக் கூட்டத்தில் கலிலேயோவை ஏற்கக் கூடாது என்று சொன்ன பெனடிக் 16-ஆம் கார்டினல் ரட்சசிங்கர்தான் அன்றைய நிகழ்ச்சியை அருளாசி செய்து வைக்கவேண்டிய போப்பாண்டவர். அதைத்தான் அந்தப் பல்கலைகழகத்தின் கல்வியாளர்கள் எதிர்த்தனர்.

அவர்களும் விசுவாசிகளே. ஆனால் அற்ப விசுவாசிகள் அல்ல. விஞானத்தை ஏற்கும் ஆன்மீகவாதிகள்.

இறுதியாக பல்கலைக் கழகம் தவறு செய்தவர் தெய்வமென தாங்கள் போற்றி வழிபடும் போப்பாண்டவரே ஆயினும் அது தவறுதான் என்று முடிவெடுத்தது.போப்பாண்டவரின் நிகழ்ச்சியை ரத்து செய்து , நாம் ஆரம்பத்தில் பார்த்த அறிவிப்பை செய்தது.

முதலில் மதப் பழமை வாதிக்கும், மதப் பழமைவாதத்திற்கும் எதிராகத் திரண்டு கொதிதெழுந்த அந்த 67 கல்வியாளர்களையும்சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.

இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும், மத வாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறிகொண்டு எதிர்க்க வேண்டுமென்றும் ஆசைப் படுகிறோம்.அன்றைக்கே ஒருவன் தமிழில் சொன்னான்.

“ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் இருந்து

12 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. உண்மையை உரக்க சொல்லும் பதிவு ....... அருமை ....

    ReplyDelete
  3. எட்வின் அவர்களே! முப்பது ஆண்டுகளுக்குமுன்பு நவம்பர் 7ம் தெதி யை விஞனிகள் தினமாக இந்திய அறிவியல் அமைப்பு (science forum ) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட ஆரம்பித்தது. ஜெர்மன் நாடக ஆசிரியர் பெட்றொல் பிரஸ்ட் அவர்கள் எழுதிய கலீலியோ என்ற நாடகத்தை போட்டார்கள் .போப் ஆண்டவர் முன்னால் விசாரணை" ஆண்டவரே !சூரியந்தான் பூமியச்சுற்றி வருகிறது .என்னை மன்னியும்.ஆனாலும் பூமி சூரியனைச்சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது" என்று மெலிதாகக் கூறி கிழே விழுந்து கலீலியோ இறப்பார். இந்த நாடகத்தில் கலீலியொவாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.உங்கள் பதிவினை பத்திரிகை களுக்கு அனுப்பி பரவலாக்க வெண்டும் ---காஸ்யபன்

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. போப்பாண்டவர் செயலுக்கு சிவனுக்கும் ஒரு பஞ்ச் வைத்து முடிக்கிறீர்...
    உங்களின் சமத்துவ பார்வையை இதை ஏற்கிறேன்...:)
    பதிவிற்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  6. நல்ல பதிவு நன்றி

    ReplyDelete
  7. ந‌ல்ல‌ க‌ட்டுரை. 'Da vincie code' ,'holly grail' போன்ற‌வ‌ற்றில் இது போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. அறிவிய‌லின் முன் எதுவும் பெரிதில்லை என்ப‌தை விள‌ங்க‌வைத்தீர்க‌ள் அருமை

    ReplyDelete
  8. நல்ல பதிவு.... ஏற்கனவே அறிந்த செய்தி ///மத வாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறிகொண்டு எதிர்க்க வேண்டுமென்றும் ஆசைப் படுகிறோம்//// மிகவும் சரியே .

    ReplyDelete
  9. சரியா சொன்னிர்கள்

    ReplyDelete
  10. மத வெறித்தனத்தை துணிச்சலுடன் கூறி அதனை வெறிகொண்டு எதிர்க்கச் சொன்னது முற்றிலும் வித்தியாசமான அனுகுமுறையாகும்
    நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மிக்க நன்றி யாசிர்

    ReplyDelete
  12. எக்காலமும், எந்த இன, மொழி, கலாச்சாரத்துக்கும் பொருந்தும் கருத்து...!

    /// அடிமை வாசிக்க ஆரம்பித்துவிட்டால், விடுதலையைத் தேடத் தொடங்கிவிடுவான் ///

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...