Saturday, March 6, 2010

பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்
பாசம் பேருந்தில்
பகை ராக்கெட்டில்


ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் இது நடந்து. கிஷோர் அப்போது நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.

ஒரு வெய்யில் ஞாயிறு நண்பகல். நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.

தெருவில் குழந்தைகள் "கயிறு பஸ்" விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் "கயிறு பஸ்" என்றால் என்ன என்று விளக்கி விடுவதுதான் உத்தமம்.

கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.

சணல் அல்லது நூல் கயிறின் நுனிகளை முடிச்சிட்டு ஒன்றிணைத்து விட்டால் ஒரு கயிறு வளையம் கிடைக்கும். அந்த கயிறு வளையத்திற்குள் குழந்தைகள் ஒரு நீள் வரிசையில் நுழைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் ஓடத் துவங்குவார்கள். இடுதான் "கயிறு பஸ்" விளையாட்டு.

முதலில் ஓடுபவனது வயிறையும் இறுதியாய் ஓடுபவனது முதுகையும் கயிறு இறுக்கும். கயிறு வயிறை இறுக்கினால் அவன் ஓட்டுனர், முதுகை இறுக்கினால் அவன் நடத்துனர். இரண்டும் தப்பித்து விட்டால் அவன் பயணி.

அன்றைய விளையாட்டில் பக்கத்து வீட்டுக் குழந்தை பாத்திமாதான் ஓட்டுனர், கிஷோர் நடத்துனர் . வீட்டூ நூலகத்திலிருந்து ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வந்து டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். ஏதோ அவனால் முடிந்த இலக்கிய சேவை.

பயணிகள் ஏறியதும் பேருந்து கிளம்பியது. என்னருகில் வந்ததும் கையை நீட்டினேன். நகரப் பேருந்துகள் மாதிரி தள்லிப் போய் நிற்காமல் சரியாய் நின்றது பேருந்து.

" சீக்கிரமா ஏறுங்க மாமா. ஏற்கனவே வண்டி லேட்ல போகுது" பக்காவாய் சர்வீஸ் போட்ட ஓட்டுனராகவே பேசினாள் பாத்திமா. குழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

"அவரு இப்படித்தான் ஆட்டத்தக் கெடுப்பாரு. நீ ஏன் பாத்தி நிறுத்தின?. விளையாடாம வெலகுப்பா. இல்லாட்டி அம்மாட்ட சொல்லிடுவேன்," எகிறினான் பையன்.

பேருந்து கிளம்புவதற்க்குள் முந்திக் கொண்டேன். " பஸ் எங்கடா போகுது? "

"கராச்சிக்கு. நீயெல்லாம் வரமாட்ட. விடுப்பா , நேரமாகுது," பறந்தான்.

நெசத்துக்கும் கொஞ்சம் மிரண்டுதான் போனேன்.

"கார்கிலுக்கா? , ஏண்டா? "

சகலத்தையும் கட்டுமீறி கசிந்தது பதட்டம்.

" காஷ்மீர் அவுங்க வீட்டுன்னு பாகிஸ்தான் காரன் சொல்றானாம். அதான் முஷாரப்போட சண்ட போடப் போறோம் " கோரஸாக கத்தினார்கள் குழந்தைகள்.

அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மேம்போக்காய் மேய்பவர்கள் வேண்டுமானால் இதை தேச பக்தியாய் கொண்டு கூத்தாடி மகிழலாம். சராசரிக்கும் கொஞசம் சன்னமான அளவில் விசாலப் பட்ட பார்வைக்கே இதில் உள்ள விஷத்தின் வீரியம் புலப்படும்.

"காஷ்மீர்" இந்தியாவுடையதா? அல்லது பாக்கிஸ்தானுடையதா? இல்லை வேறு யாருடையதோவா? என்று அந்தக் குழந்தைகளுள் யாருக்கும் தெரியாது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் பெரியவர்களில் பெரும்பான்மையோருக்கும் இது தெரியாத விஷயம்தான்.

எங்கே புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அவர்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கப் படாத பாடு பாடுகிறார்கள் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.

எதன் விளைவு இது?

மும்பையில் குண்டு வெடித்தாலும், அல்லது மினி பஸ்ஸே இன்னும் எட்டிப் பார்க்காத குக்கிராமமான சுருமான் பட்டியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மழையில் இடிந்து விழுந்தாலும் அல்லது ஏதோ ஒரு முகத்தோடு இந்தியாவிற்குள் அழிவு வேலை நிகழ்ந்தாலும் அதற்கு காரணம் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற பொதுப் புத்தியை ஏற்படுத்திவிட பெரும்பான்மை இந்திய ஊடகங்களும் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பெரும்பாடு படுகிறார்கள் என்பதோடு அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவை நாசப் படுத்த ஒவ்வொரு முறை முயற்சி நடக்கிறபோதும் ஏற்படும் இந்தியக் கோபத்தை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மேல் மடை மாற்றம் செய்வதில் இவர்கள் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதுதான் அக்கறையுள்ளவர்களை கவலைப் பட வைக்கிறது.

இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்றும் கொள்ளக் கூடாது.

இதே நேரத்தில் பாக்கிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்தும் குழந்தைகள் கயிறு பஸ்ஸில் " காஷ்மீர் ஒங்க வீட்டுன்னு சொல்றீங்களாமே?" என்று மன்மோகன் அவர்களிடம் சண்டை போட டில்லி நோக்கி வந்து கொண்டிருக்கவும் கூடும்.

வெறுப்பையும் பகையையும் விதைப்பதில் அங்குள்ள ஊடகக் காரர்களும் அரசியல்வாதிகளும் நம்மவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல.

அவ்வப்போது இரு மருங்கிலும் இருந்து சில நல்லெண்ண முயற்சிகள் எடுக்கப் படுவதென்னவோ உண்மைதான். டில்லியும் கராச்சியும் பேருந்துகளால் இணைக்கப்பட்டதை வீச்சான நல்லெண்ண முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பாசத்தை பேருந்திலும் பகையை ராக்கெட்டிலும் அல்லவா பறிமாறிக் கொண்டோம்.

இப்போதெல்லாம் குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையின் முடிவை மாற்றி சொல்கிறார்கள். வடை காகத்திற்கா? நரிக்கா? என்று கேட்டால் நம்மைப் போல் அல்லாமல் "வடை பாட்டியோடது" என்று பளிச்சென சொல்கிறார்கள். இதை யாரேனும் காஷ்மீரோடு பொருத்திப் பார்த்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பல்ல.

பாட்டியின் உரிமை வடை என்பதை புரிந்து கொண்ட குழந்தைகள் வருங்காலத்தில் வடையை காஷ்மீரின் குறியீடாக மட்டுமல்ல யார் பாட்டி என்பதையும் தெளிவாகத் தீர்மானிப்பார்கள்.

சிதைவுகளையும் , ரணங்களையும் , வலிகளையும் மட்டுமே ஊடகங்களில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்தான் மத வெறியின் வேரினை அசைக்கும். அது மாதிறி நல்லவைகள் கிடைத்து விட்டால் அவைகளை முடிந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படிப் பட்ட ஒன்றோடு முடிக்கிறேன்ன்.

வெய்யில் வந்தால் மட்டுமே உருகி ஓடும் "லைடர்" நதிக் கரையில் இருக்கிறது அந்தக் கிராமம். அந்த ஊரின் பெயரை அநேகமாக " பகல்காம்" என்று உச்சரிக்கலாம். அங்கு ஒரு சிவன் கோவில்.சற்றேரக் குறைய தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜா ஜெய் சூர்யா அவர்களால் கட்டப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்துக்களால் அதிலுங் குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகளால் நம்பப் படுகிற ஆலயம். அமர்நாத் செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து வழிபடும் ஆலயம்.

உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளே போர்வை தேடும் ஒரு குளிர் காலை.அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சூட மணம் கமழ்கிறது. பூசாரி நீட்டும் ஆரத்தித் தட்டை தொட்டு மிகுந்த பக்த்தியோடு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.

இன் செய்த ஜீன்ஸ் பேண்ட்டோடும் நேர்த்தியாக நறுக்கி விடப்பட்ட தாடியோடும் இருக்கிறார் பூசாரி. அவர் பெயர் "குலாம் கஸன்". ஆம் அவர் ஒரு இஸ்லாமியர்.

1989 வாக்கில் பண்டிடுகள் அந்தப் பகுதியை விட்டு புலம் பெயர்ந்தபோது அப்போதைய பூசாரி திரு. ராத கிரிஷனால் தமக்கு கையளிக்கப் பட்ட பணியினை இன்று வரை மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்து வருகிறார்.

சொல்கிறார், " சிவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது பண்டிட்டுகளின் ஆலயம். அவர்கள் நிச்சயம் வருவார்கள்". அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.

இந்துக்களின் சகிப்புத் தன்மையும் அரவணைப்பும் எழுத எழுத மாளாது. இந்தத் தேசம் முழுமையும் அவர்களது பெருந்தன்மையால் நிரம்பிக் கசிகிறது. ஆளாளுக்கு அவைகளையும் அவசியம் பதிவோம்.

இத்தகையப் பதிவுகள்தான் வருங்காலப் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டும்.

நன்றி ; "தமிழ் ஓசை" மற்றும் "யுகமாயினி"

10 comments:

 1. //கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.//

  Arputhamana varigal...! miga arumaiyaga ulladhu thozhar

  ReplyDelete
 2. inraiya pillaikaukku thollaikkatchiyum, computerum than ulagamagi vittadhu....
  chinna pillaiyai irukkum pothu ippadi naangal vilaiyadinom enru sonnal aachchariyamai parkkiraarkal avarkal.....
  paavamai irukkirathu avarkalai paarththu...
  ungalai pola oru silar ezhththilavathu padhivu seiythu vaikkireerkal
  well done edwin....

  ReplyDelete
 3. மிகத் தாமதமாகத்தான் சொல்கிறேன் "நன்றி தோழர் சுரேகா "

  ReplyDelete
 4. அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் நன்றி ப்ரியா

  ReplyDelete
 5. arumaiyaana,intha nattirkku mikavum thevaiyaana pathivu. koodave siru vayathil vilayaadiya vilaiyattaiyum ninaivu koora vaiththamaikkum serththu,nantrikal.

  ReplyDelete
 6. கயறு பஸ்ஸில் ஏறுவோமா ?வேண்டாமா ?என்றசொன்ன இருமனத்தை அடக்கி நம்பிக்கையாய் பஸ்சுக்குள்ளும் வந்தேன் .காஷ்மீர் வரை கலவரமில்லாது கூட்டிச்சென்ன்றதோடு ,குலாம்
  கசனையும் அறிமுகப்படுதி,நமதுதவறுகளைநாசூக்காய் சொல்லும் போது,உங்கள் ஆதங்கம் அர்த்தமுள்ளதாக உணரவைத்தீர்கள் .நாம் ஒன்றாகாத்தான் இருந்தோம் ,ஓட்டுப்பொறுக்கிகளால்துண்டாடப்பட்டோம் .துண்டுகள் சேராவண்ணம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் .நல்லபதிவு .பயணித்ததில் மகிழ்வே.

  ReplyDelete
  Replies
  1. மிக ஆழமான பொறுப்பான கருத்துக்கள். மிக்க நன்றி தோழர்

   Delete
 7. சாதி மத பேத சூதுவாதுகள் தெரியாமல் வெள்ளந்தியாக ஒருமைப்பாட்டுணர்வோடு வளர்கின்ற குழந்தைகள் பதின்ம வயதினைக் கடக்கும்போதுதான் “பெரியவர்“களால் சூதேற்றப்படுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சூதேற்றப் படுகிறார்கள் அருமையான சொல்லாக்கம் . பேசுகிறேன் தோழர். மிக்க நன்றி

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...