Sunday, January 2, 2022

காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை

 அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.
நான் அத்தனை முறையும் உதயசூரியனுக்கே வாக்களித்த ஒரு இடதுசாரி
தேர்தலுக்கு முன்பிருந்த உங்கள் மீதிருந்த அன்பு தேர்தலுக்குபின் பேரன்பானது
உங்கள் மீதான மரியாதையும் பலமடங்கு கூடியுள்ளது
உங்கள் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்கள் உடல்நலன் மீதான கவலையைத் தருகிறது
ஆனாலும்,
உங்களது உழைப்பு விழலுக்கு இழைத்த நீராகிப் போகுமோ என்கிற அச்சத்தில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்
பத்திரிக்கையாளர் திரு S.P. லட்சுமணன் அவர்கள் திமுக சார்பாளர் எல்லாம் அல்ல
இன்னும் சரியாக சொல்வதெனில் வக்காளத்து எல்லாம் வாங்குகிற நபரெல்லாம் இல்லை என்றாலும்
அதிமுகவை எப்போதும் ஈர நெஞ்சோடு பார்ப்பவர்
அது செய்கிற தவறுகளையெல்லாம் சொன்னாலும் அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்
அவர் உங்களைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது
70 வயதை நெருங்கும் ஒருவர் ஆறுமாத காலமாக இப்படி அலைவதைக் கண்டு வியப்பாக இருப்பதாகவும்
அத்தனை பயணங்களையும் பயனுள்ளவையாக நீங்கள் மாற்றி வருவதையும் பெருமையோடு குறிப்பிடுகிறார்
அத்தனையும் உண்மை
29.12.2021 அன்று தஞ்சை வருகிறீர்கள்
இலக்கான ஒரு லட்சத்தி ஆறாயிரம் ஏக்கரைத் தாண்டி ஒரு லட்சத்தி அறுபத்தி ஆறாயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை சொல்கிறீர்கள்
நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள சுமை தூக்குபவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்டு நிறைய செய்கிறீர்கள்
வணங்குகிறேன்
30.12.2021 அன்று முன்னிரவு வரை திருச்சியில் இருக்கிறீர்கள்
சென்னையில் பேய்மழை
விடிந்து எழுந்தால்
அதிகாலை 5 மணிக்கே சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்கிறீர்கள்
ஆச்சரியமாயிருக்கிறது
அறிவிப்புகளை அரசானைகளாக மாற்றும் வேகத்தை லட்சுமணன் அப்படி மெச்சுகிறார்
வாசகனை ரசிகனாக்கும் வித்தை உங்களுக்கு இயல்பாகவே இருக்கிறது
இரண்டு சம்பவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டுவர ஆசைப்படுகிறேன்
17.12.2021 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தோழர் சுபவீ அவர்கள் உரையாற்றுகிறார்
அதை எதிர்த்து பல்கலைக்கழக வாசலில் மேடைபோட்டு திரு H,ராஜா ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்
அதற்கு காவல்துறை அனுமதி வழங்குகிறது
கோவையில் உள்ள ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சி தருகிறது
அதை எதிர்த்து தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கைது செய்யப்படுகிறார்
இதை எதிர்த்து அய்யா வீரமணி அவர்கள்கூட 01.01.2022 அன்றைய “விடுதலை” யில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்
நீங்கள் சனாதனத்திற்கு எதிராகக் களமாடுபவர் என்பதில் ஆசிரியருக்கும் அய்யம் இல்லை
எனக்கும் அய்யம் இல்லை
ஆனால்
இது மாதிரி சம்பவங்கள் நீங்கள் எவ்வளவுதான் அவர்களுக்கு எதிராக களமாடினாலும்
சனாதனத்தை வளர்க்கவே உதவும்
கோவை உங்களது கவனத்தில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்
ஆனாலும்
காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை நீங்கள் கண்டு சரி செய்ய வேண்டும்
இது,
வாக்களிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை உதயசூரியனுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பினைப் பெற்ற ஒரு இடதுசாரியின்
கையேந்திய விண்ணப்பம்
அருள்கூர்ந்து கவனியுங்கள்
அருள்கூர்ந்து உடல்நலத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்
நன்றி
அன்புடன்,
இரா,எட்வின்
#சாமங்கவிய 07 நிமிடங்கள்
01.01.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...