Thursday, August 4, 2011

கதவை சாத்தியது யார்?

அதை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை. மிகச் சரியாக இருபத்தி ஒன்பது நொடிகளே ஓடக் கூடிய ஒரு குட்டியோ குட்டியூண்டுக் குட்டிக் குறும் படம்.
தோழி ப்யூலாவின் முக நூலில் கிடைத்தது. அப்படியே சுட்டு கொஞ்சமும் சேதப் படாமல் எடுத்து வந்து நமது முக நூலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியவில்லை. நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களில் எப்படி சுடுவது என்பதும் ஒன்று.

கிஷோரின் கையில் காலில் விழுந்து எப்படியோ ஒரு வழியாய் அதை செய்தும் முடித்தேன். மீண்டும் ஒரு முறை பார்த்தேன். சுருக்கம் என்றால் சுருக்கம் அப்படி ஒரு சுருக்கம்.

ஒரு எல்.கே.ஜி பையனிடம் எழுதச் சொல்லி அவன் பெரிசு பெரிசாய் எழுதினாலும் கதை ஒரு A4 அளவு தாளைத் தாண்டாது.

அவ்வளவு சின்னது.

சட்டை போடாத சிறுவன் ஒருவன் ஒரு தட்டு நிறைய முட்டைகளை எடுத்துக் கொண்டு மாடிப் படி ஏறி வருகிறான். அவன் போக வேண்டிய அறையின் கதவு சாத்தி இருக்கிறது. கதவை ஒரு கையால் மென்மையாக தள்ளுகிறான். கதவு திறக்க வில்லை. மீண்டும் கொஞ்சம் விசை கொடுத்து அழுத்தித் தள்ளுகிறான். அப்போதும் திறக்கவில்லை. முட்டைத் தட்டை கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளாலும் தள்ளிப் பார்க்கிறான். முடியவில்லை. தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி தன் உடலால் ஆன மட்டும் பலம் கொண்டு மோதிப் பார்க்கிறான். ஒன்றும் பயனில்லை.

அவனால் முடிந்த அத்தனையும் செய்து பார்த்துவிட்டான். எதுவும் பலிக்கவில்லை. அவன் மீது ஏகத்துக்கும் அனுதாபம் பிறக்கிறது. நம்மாலும் உதவ இயலாத சூழல். அய்யோ பாவம் என்ன நேர்ந்தது இந்தக் கதவுச் சனியனுக்கு, என்று கதவை சபிக்கிறோம்.

அடுத்து என்ன செய்வான்? பேசாமல் திரும்பி விடுவானா? அல்லது நம்ம ஊர் கதாநாயகன் மாதிரி பின்னே ஓடி நின்று பின் முன் நோக்கி ஓடி வந்து கதவைத்  தள்ளித் திறப்பானா?

அதைப் பற்றி யோசிப்பதற்கோ யூகிப்பதற்கோ இடம் கொடுக்காமல் இன்னொரு சிறுவன் அங்கு வருகிறான். நேர்த்தியான உடை, மிடுக்கான நடை, கழுத்தில் டை, காலில் விலை உயர்ந்த ஷூ, கையில் புத்தகங்கள் என்று மேட்டுக் குடியின் அக்மார்க் பிரதி.  கொஞ்சமும் புன்னகை மாறாமல் ஏற்கனவே கதவைத் திறக்க முடியாமல் நொந்து போயிருந்த சிறுவனின் தோள் மீது கை வைத்து அவனைக் கொஞ்சம் நகரச் சொல்கிறான்.

இவன் சற்றே நகர இரண்டாவதாக வந்த பையன் அதாவது படித்த பையன் கதவின் ஒரு புள்ளி நோக்கி கையை நீட்டுகிறான். முட்டை தூக்கி வந்த பையன் முதல் நம் அனைவரது பார்வையும் அவன் கை நீட்டும் புள்ளி நோக்கி குவிகிறது.

அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கதவில் “இழு” என்று எழுதப் பட்டிருக்கிறது. மீண்டும் அந்தப் பையன் சட்டைப் போடாத இந்தப் பையனைப் பார்க்கிறான். சன்னமான புன்னகையோடு கதவை இழுக்கிறான். கதவு திறக்கிறது. முட்டையோடு வந்த பையன் தலையில் கை வைத்தவாறு நிற்கிறான்.

”படிப்பு கதவுகளைத் திறக்கும்”  என்ற  ஒரு வாசகத்தோடு அந்தப் படம்  முடிகிறது.

இவ்வளவுதான் படம். அரை நிமிடத்திற்கும் ஒரு நொடி குறைவாகவே ஓடக் கூடிய இதனை, குறும் படத்திற்கு தேவையான மிகக் குறைந்த் அளவுக்கும் (அப்படி ஒரு அளவுகோள் இல்லை என்பது வேறு விசயம்.) மிகவும் குறைச்சலான அளவு நேரமே ஓடக் கூடிய ஒன்றினை, குறுகத் தறித்ததாகக் கொள்ளப்படும் குறளைப் பொருளோடு சொல்வதற்கு ஒரு சிறுவன் எடுத்துக் கொள்ளும் கால அளவில் பாதி அளவு நேரமே ஓடக் கூடிய ஒன்றினை வேறு ஏதேனும் புதுப் பெயெர் கொண்டுதான் அழைக்க வேண்டும். எந்த ஒன்றிற்கும் பொருத்தமான பெயர் வைப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கும் எங்கள் தமிழ்ப் பிள்ளை கூடிய விரைவில் இதற்கும் ஒரு பொருத்தமான புதுமையான பெயரை வைப்பான்.

கல்வி கதவுகளைத் திறக்குமா?
எனில் கல்வி எந்தக் கதவுகளைத் திறக்கும்?
எனில் எந்தக் கல்வி கதவுகளைத் திறக்கும்?
எனில் எந்தெந்தக் கல்வி எந்தெந்தக் கதவுகளைத் திறக்கும்?

கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. உண்மையிலுமே இந்தச் சின்னப் படம் கொளுத்திதான் போட்டது. நாம்தான் குழம்பிப் போனோம். மற்றவர்களை இது இந்த அளவுக்கேனும் கிச்சு கிச்சு மூட்டுகிறதா பார்ப்போம் என்று  விக்டோரியாவிடம், கீர்த்தியிடம், கிஷோரிடம், பள்ளியில் நண்பர்களிடம் என்று கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இதனைக் காட்டி கருத்தினைக் கேட்டேன்.

ஏனென்றே தெரியாமல் ஒட்டு மொத்த தமிழகமும் ஓட்டுப் போட்டதைப் போல ஒருவர் பாக்கி இல்லாமல் ஒன்றையே சொன்னார்கள்.

“சின்னப் புள்ளைல அம்மா அப்பா பேச்சக் கேட்டுப் படிச்சிருந்தா இப்படி வருமா? கல்வி இல்லைனா அவமானப் படனும்னு ஆரோகியம் சிஸ்டர் அடிக்கடி சொல்வாங்க. இப்ப பாத்தீங்களா எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பையன் எப்படி அவமானப் படறான்னு. படிச்சா எவ்வளவு மரியாதையா ஸ்டைலா வாழலாம்,” என்று தன்னளவிலான விமர்சனத்தை வைத்தாள் கீர்த்தி.

பள்ளியில் அன்று தலைமை ஆசிரியர் வராத காரணத்தால் நான் தான் கூட்டு வழிபாட்டினை நடத்த வேண்டி வந்தது. அப்போதும் இந்தக் கதையினை பிள்ளைகளிடம் சொன்னேன். முடிந்ததும் ஏழாம் வகுப்பு ரூபன் ஓடி வந்து என் கையை பிடித்துக் கொண்டு கதை நல்லா இருக்கு.  இனிமே நீங்களே கதை கிளாசுக்கும் வாங்க சார் என்கிறான். ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் கதை நல்லா இருந்ததாக சொன்னார்கள். அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் பிள்ளைகளிடம் இது குறித்து விவாதிக முடியவில்லை.

வகுப்புகளைப் பார்வையிட சென்றபோது ஒன்றிரண்டு ஆசிரியைகள் அந்தக் கதை குறித்து பேசினார்கள். கல்வியின் அவசியத்தை உணர வைக்க இதைவிட வேறு என்ன வேண்டும்? என்கிற மாதிரி சொன்னார்கள்.

அலை பேசியில் இருந்த படத்தைப் பார்த்துவிட்டு நண்பர்களும் இதையே சொன்னார்கள். சேவியர் ஒரு படி மேலே போய் இதை ஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்றார்.கண்ணனும் நிவாசும் பள்ளி தொலைக் காட்சிப் பெட்டி மூலமாகவா அல்லது மேசைக் கணினி மூலமாகவா என்பது குறித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கப் போன போது அவர்களிடம் அது குறித்து கருத்து கேட்டேன். அச்சுப் பிசகாமல் அவர்களும் இதையே சொன்னார்கள்.

ஆக இந்தப் படம் குறித்த எல்லோரது கருத்தும் ஒன்றாகவே இருக்கிறது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிள்ளையிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு பாடமெடுக்கும் ஆசிரியர் வரைக்கும். படிக்கிற வயசில் படிக்காமல் சுத்தினால்  இப்படித்தான் என்பதே அது.

அது மொத்தமும் சரி இல்லை என்றாலும் தவறில்லை என்கிற வகையில் சரியான கருத்தாகவே படுகிறது.

ஆனால் கீர்த்தனா பேசிக் கொண்டிருந்தபோது இடை மறித்து “ அவன் படிக்க மாட்டேன்னு யார்ட்டயாவது சொன்னத கேட்டியாடி வெள்ளச்சி” என்று கேட்டது நிரம்பவே யோசிக்க வைக்கிறது.

ஆமாம், இவன் படிக்காமல் போனதற்கு இவனா காரணம்? அல்லது இவன் மட்டுமா காரணம்?

ஆம் எனில் புத்தகத்தோடும், மிடுக்கான உடையோடும், அவன்தான் அல்லது அவனேதான் காரணம் என்றாகிவிடும். சத்தியமாய் அதுவல்ல காரணம்.  அவனது மிடுக்கிற்க்கும் , படிப்பிற்கும் , மேதமைக்கும் அவனல்ல அவனது சமூக சூழலே காரணம்.

அதேபோல்தான் இவன் முட்டை தட்டை தூக்குவதற்கும், இவனைப் போல் வேறு சிலர் தேநீர்க் குவளைகளைக் கழுவுவதற்கும் இவர்களது குடும்ப மற்றும் சமூக பின் புலமே காரணம்.

எனெக்கென்னவோ இவர்களது கல்வியைக் களவாண்ட புன்னியவான்களில் சிலரே இந்தப் படத்தைப் பார்த்து உப்பில்லை உரப்பில்லை என்று வியாக்கியானம் செய்துகொண்டிருக்கவும் கூடும் என்று படுகிறது

கல்வி இல்லாதவனுக்கு கதவுகள் திறக்காது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதே வேளை கல்விக் கூடங்களில் இவர்கள் நுழைய விடாமல் கதவைச் சாத்திய களவாணிகளை நாங்கள் சும்மா விடுவதாயில்லை.

எது எப்படியோ இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்த தோழன் அல்லது தோழி வாழ்க.


 





18 comments:

  1. kashyapan1936@gmail.comAugust 5, 2011 at 6:34 AM

    எட்வின் அவர்களே! கதவைச்சாத்தியது, நீங்களும் நானும். அவனும் அவர்களும்.கதவை நாம் எல்லோருமாகத் திறந்து விட வேண்டும்.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

    ReplyDelete
  2. கட்டாய கல்வி இருந்தும் இந்நிலை .:(

    ReplyDelete
  3. அருமையான ஒரு அலசல் சரியான சிந்தனை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இப்படித்தான் பல நேரம் ஆணி வேரின் அவலம் அறியாமல் இலைகளுக்கு மருந்தடிப்பதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம். சரியான புள்ளியில் முடிகிற இந்த கட்டுரை ஒரு ஆரம்பமாக இருக்கட்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. கல்வி இல்லாதவனுக்கு கதவுகள் திறக்காது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதே வேளை கல்விக் கூடங்களில் இவர்கள் நுழைய விடாமல் கதவைச் சாத்திய களவாணிகளை நாங்கள் சும்மா விடுவதாயில்லை. இது உண்மைதான் .. தோழரே...

    ReplyDelete
  6. கதவை தட்டியது யார் ?
    மிகச்சிறந்த குறும்படம்
    உங்கள் விமர்சனம்
    மனதை கவர்கிறது

    மீனாட்சிசுந்தரம்

    ReplyDelete
  7. வணக்கம் தோழர் காஸ்யபன். உங்களது வருகை எனக்குன் பெருமைக்குரிய ஒன்று. மிக்க மகிழ்ச்சி தோழர்.

    ReplyDelete
  8. @எண்ணங்கள் 13189034291840215795
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  9. @Christopher

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  10. @மிருணா
    வணக்கம் தோழர். ரொம்ப நாளாச்சு மிருணாவின் படைப்புகளைப் பார்த்து. அடுத்த வாரம் முதல் பழையபடி பார்க்கத் தொடங்கி விடுவேன். மிம்ம நன்றி தோழர்

    ReplyDelete
  11. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. மிக்க நன்றி தோழர். எப்படி இருக்கீங்க?

    ReplyDelete
  13. மிக அருமையான கருத்தை சொல்லியிருக்கும் குறும்படம் படிப்பு என்பது நம் நாட்டை பொறுத்தவரையில் மனனம் செய்து அதை அப்படியே வாந்தி எடுப்பது போன்ற நிலையை விட்டு தாண்டவில்லை வங்கிகளுக்கு வரும் பதின்ம வயது சிறுவர்கள் பலர் நன்றாக ஆங்கிலம் தெரிந்தும் படிவங்களை நிரப்ப பரிதவிக்கின்றனர் இதனையும் கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  14. வணக்கம் தோழர். எட்வின் அவர்களே, ஒரு குறும்படத்தை பார்த்த திருப்தி உங்கள் எழுத்தில் கிடைத்தது. கதை சொல்லும் ஆசிரியர்களை நிச்சயம் மாணவர்களுக்குப் பிடிக்கும். அந்தக் கதைகள் அவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. குறும் படத்தால் பெரும் தாக்கம் . முத்தாய்பாக முடித்து விட்டீர்கள் . கதவை திற கல்வி வரட்டும் (நல்லா படிங்கபா ... கலவி அல்ல கல்வி )

    ReplyDelete
  16. நல்ல பதிவு.
    அருமையான விழிப்புணர்ச்சியூட்டும் குறும் படம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. எல்லாம் சரிதான் படிக்க வேண்டிய வயதில் வேலைக்கு அனுப்புகின்ற நிலைமையை உருவாக்கிய சமுதாயக் கயவர்களை சபித்தது போதும் ஒரு தீக்குச்சியை கிழித்துப் போடுங்கள் . அச்சிறுவனின் அறிவுக்கண் திறக்கப்படும் என் இனிய தோழனே.

    ReplyDelete
  18. பதினோரு பெண் குழந்தைகள் சுவரேறி குதித்து வேலை செய்த்துபோதும் படிக்கப்போகலாம் என்று வந்துவிட்டோம், எங்களைப்போல் இன்னும் எத்தனையோ சிறுவர்கள் மில்களில் அடைபட்டுகிடக்கிறார்கள், அவர்களையும் காப்பற்றுங்கள் என்று அழுது புலம்பிய அவலங்கள் நாளும் அரங்கேறிகொன்றுதான் இருக்கிறது. எத்தனைமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோமே தவிர நாம் என்ன செய்திருக்கிறோம்
    அடுத்த சம்பவம் நடக்கும்வரை நாம் வேற வேலைய பர்க்கபோயவிடுகிறோம். இதற்கு முடிவுகட்ட சிந்தனையை செலவிடுவோம். எட்வின் போன்றவர்கள் அன்னஹசரே போன்று துணிந்து இறங்கட்டும் தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே குழந்தை தொழிலாளர் நிலை மாறும் . எல்லபள்ளிகளும் அரசுபள்ளிகள் என்ற நிலை வரும். காசு கொடுத்து கற்கின்ற நிலைபோய் எதிர்காலம் பிள்ளைகளுக்கு விடியும் காலம் தொலைவில் இல்லை. பொறுத்தது போதும் பொங்கிஎழு தோழா கைகொடுக்க நங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...