Monday, January 1, 2024

74

 கற்பிதமோ கடவுளோ தோன்றிய புள்ளிக்கு முந்திய புள்ளிவரை இன்னும் அழகாய்த்தான் இருந்திருக்கும் உலகம்

75

 எழுந்து ஓடிவந்த துணை நடிகன் “பேக் அப்” சொன்ன இயக்குநரிடம் கேட்டான் “ஒழுங்கா செத்தேனா சார்”


76

 

விற்றுக்கொண்டே இருக்கிறோமென்பது

எம் மீதான உங்கள் குற்றச்சாட்டு
கடலை காடுகளை நதிகளை நீரை
மணலை மலைகளை எண்ணெயை
ஆகாசத்தை விமானத்தை வங்கியை
இன்சூரன்சை
ஏ இந்தாப்பா கைவலிக்கிறது
சுருக்கமா சொல்கிறேன்
அனைத்தையும் விற்பதற்காகத்தானே
வாக்குகளை வாங்கினோம்
ஈன விலைக்கு விற்கிறோமென்பது
அடுத்தக் குற்றச்சாட்டு
எமக்கு வாக்களித்த மக்கள் ஆசையற்றவர்கள்
மலிவாகத்தான் கொடுத்தனர் தம் வாக்குகளை
நாங்களும் மலிவாகவே விற்கிறோம்
பாரம் குறைவதென்பது ஜென் சுகம் தெரியுமா
குறைத்திருக்கிறோம்
விற்பதற்கு இனி ஏதுமில்லை என்ற ஏளனம் ஆகாது
அனைத்தையும் அவர்களுக்கு விற்ற எங்களுக்கு
அவர்களை விற்கவும் தெரியும்

01.02.2021 அன்று நிதிநிலை அறிக்கை வாசித்து முடிக்கப்பட்டபோது

77

 

இளைப்பாறிவிடாதே மகளே
அதற்குள்
இருக்கின்றன கணக்குகள் நிறைய
அரசியல் செய்கிறோம் உன் மரணத்தை வைத்தென்றார்கள்
இதுதானா படிப்பதற்கு 
இல்லவே இல்லையா வேறெதுவும் 
என்றார்கள்
ஆயிரத்து நூற்றி எழுபத்தாறு எடுத்தவளால்
நீட் தேற முடியாதெனில் 
பாடத்தில் கோளாறென்றார்கள்
நீட்டைத் தேறியவனால் 
ஆயிரத்தி நூற்றி எழுபத்தியாறு எடுக்க முடியாதெனில்?
சாய்சில் விடுகிறார்கள் இதை 
எதையும் விடாது படித்து 
கரைகண்ட கனவான்கள்
தெரியுமா மகளே
நீட் எழுத உன் தம்பிகளும் தங்கைகளும்
தேசம் முழுக்க அலைந்த கதை?
கேள்விகள் தவறாம்
ஆனால் இழப்பீடு கிடையாதாம்
கண்டடைந்து விட்டார்கள் 
நம்மை ஒழிப்பதற்கான ஆயுதம் 
ஒன்றை
முளைக்கும் இனி
தவறான கேள்விகளுக்கான
பயிற்சி நிலையங்கள்
முடித்துவிடவில்லை எதையும் நாங்கள்
உன்னை இறுதியாய்க் குளிப்பாட்டியபிறகு
கருப்பும்
சிவப்பும்
நீலமும்
உன் பெயரால் களத்திலேனும் 
கரம் கோர்ப்போம்
அந்த அரசியலை 
நாங்கள்
செய்து முடிக்கும் வரை
மகளே
அருள்கூர்ந்து
இளைப்பாறி விடாதே

78

 

உறவினர் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
நண்பர்கள் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
உணவு விடுதிகளில் சாப்பிடுகிறீர்கள் தாமரை நண்பர்களே
நேற்றும் இன்றும் தலித் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இரண்டே இரண்டு வித்தியாசங்களோடு
அங்கங்கு சமைத்ததைத்தான் அங்கங்கு உண்டீர்கள்
தலித் வீடுகளைத் தவிர என்பது ஒன்று
கடைச் சாப்பாட்டை சாப்பிட
தலித் வீடுகளுக்கு போகும்போது மட்டும்தான்

79

 

துப்பிவிடு
தொண்டைக் குழிக்குள்
ஊசலாடும்
எனக்கான சொற்களில் 
ஒன்றையேனும்

80

 

எடுத்துத் தொலைத்திருக்கலாம்
மீட்ட மோதிரத்தோடு 
ஒரு புகைப்படம் 
மீண்டும் அடகு வைப்பதற்குமுன்

81

 

மிரட்டுவாய் பேசினால்
பேசுவேன்
கரியள்ளிப் பூசுவாய்
சாணத்தால் குளிப்பாட்டுவாய்
எழுதினால்
ஆனாலும் எழுதுவேன்
தாக்குவாய் தெரியும்
ஆனாலும் பேசவே பேசுவேன்
எழுதவே எழுதுவேன்
என் நெஞ்சிறங்கும்
உன் கோடாரி பார்த்தபடியேயும்
பேசுவேன்தான்
போடா
பிஞ்சுகள் எரிந்ததையே
பார்த்து விட்டோம்

82

 

ஈர யூனிபார்ம் 
சொட்டச் சொட்ட
புத்தகப்பை 
சொட்டச் சொட்ட
நனைந்த விரல்கள்
வெளிறி 
விறைத்து நிற்க
நடுக்கத்தோடு
தேர்வறை நுழையும் குழந்தைக்கு
உடனடித் தேவை
வினாத்தாள் அல்ல
ஒரு கோப்பை தேநீர்
குடிக்கிற சூடில்

83

 

புரிகிறது
விரல் பிடித்து
விலை பேசியிருக்கிறீர்கள்
தாமிரமோ, தங்கமோ
எதையோ எடுக்க
எவனுக்கோ
சத்தியம் செய்திருக்கிறீர்கள்
இந்தியிலோ
தமிழிலோ
ஆப்பிரிக்க மொழிகள் ஏதோ ஒன்றிலோ
வேறு ஏதோ ஒரு மொழியிலோ
வனத்தை
மலைகளை
யாருக்கோ தாரை வார்க்க
அப்புறப்படுத்த வேண்டும் எங்களை
நாக்கிலே தேன் தடவி
எதையெதையோ சொல்கிறீர்கள்
வேண்டாம் துரைமார்களே
உங்கள் ஊரும்
சாமியும், படிப்பும், பணமும்
தரிசித்துவிட முடியுமெங்கள் சாமிகளை
ஒரு கூரிய கல்லிலோ
கூடுகளடர்ந்த ஒரு மரத்திலோ எங்களால்
எங்களைவிட எளிமையானவர்கள்
எங்கள் சாமிகள்
போக
ஒரே மொழிதான்
எங்களுக்கும்
எங்கள் சாமிகளுக்கும்
ஊருக்குள் வந்தால்
என் பேரனும் என் மகனோட பேரனும்
வேறு மொழியில் பேச
தன் மொழி பேச ஆளற்று
செத்துப் போகும் எங்கள் சாமிகள்
எங்கள் வியர்வையின் ஈரம் ஒற்றி
தங்களை சுத்தம் செய்துகொள்ளும் மேகங்கள்
எங்களைத் தழுவ மறுக்கும்
இசை அறிவோ எழுத்தறிவோ இல்லாத எங்களுக்கு
எங்கள் அருவிகளின் பாடல் பிடிபடும்
உங்கள் உடையில்
உங்கள் மொழியில் நாங்கள் வந்தால்
மிரண்டு ஓடிவிடும் குருவிகளும் மைனாக்களும்
முயல்களும் மான்களும்
தங்கள் வாய்களை மூடிக்கொள்ளும்
அருவிகள் எங்களுக்கு
ஜீவித்திருக்க முடியாது
இவைகளற்ற ஒரு நரகத்தில்
எல்லாமறிந்த நீங்கள் அறியீர்கள்
எங்கள் நாய்களின் குருவிகளின் மொழி
வேண்டாமெங்களுக்கு
உங்களின் காரும் படிப்பும்
பணமும் பதவியும்
விட்டு விடுங்கள்
எங்களை அருவிகளோடும்
மரங்களோடும்
மான்கள் மயில்களோடும் எங்களை
உங்களுக்குத் தெரியும்
நகரமாட்டோம் நாங்களென்பது
உறுமுவீர்கள்
படைகளை ஏவுவீர்கள்
தெரியும்
பறவைகளல்ல
ஒரு வேட்டுச் சத்ததிற்கே
பறந்து போக
வேறல்ல
இந்தக் காடென்பதும்
நாங்களென்பதும்
Like
Comment

84

 

எந்தச் சுடுகாட்டின்                                                                                                                எத்தனையாவது                                                                                                                                        பிணம் நான்?

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...