இது நடந்து 25 ஆண்டுகள் இருக்கும். ஈரோட்டில் கலை இரவு. உரையாற்ற வேண்டிய யாரோ கல்ந்துகொள்ள இயலாத காரணத்தால் மாற்று உரையாளனாய் கலந்து கொள்கிறேன்.
தோழர் முத்து சுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு இறங்கியதும் கை கொடுக்கிறார். வெடவெடன்னு கை காலெல்லாம் உதறுகிறது. காரணம் RMS என்ற அந்தப் பேராளுமையின் ஆட்டோகிராப் வாங்கிவிட மாட்டோமா என்று மனது அலைந்து கொண்டிருந்த நேரம். பக்கத்தில் நிற்பதையே பிறவிப் பெரும் பயனாய் நினைத்தால் என் ஹீரோ என் கையைப் பிடித்தப் பிடி நழுவாமல் என் உரையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
அன்றையத் தேதியில் மேடை உலகின் உச்சத்தில் இருந்த ஒரு உரையாளுமை மேடையில் நடை பழகிக் கொண்டிருந்த ஒரு துரும்பொத்த என்னிடம் அவ்வளவு இயல்பாக பெசியது என்னை பிசைந்து போட்டது. ‘கன்வின்ஸ் பன்ன முயற்சிக்கிறீங்க தோழர். குரல் நெகிழ்ந்து அதற்கு ஒத்துழைக்கிறது. உடையமல் குரலை உச்சத்திற்கு கொண்டு போகிறீர்கள். பெரிசா வருவீங்க’ என்பது மாதிரி சொல்கிறார்.
யாருக்கு வரும் இப்படியொரு மனசு. எல்லோரும் கேட்கிறார்கள் , ‘எப்படி எட்வின் நாலு வார்த்த நல்லா பேசினாலே இப்படி இளைஞர்களைக் தோளில் தூக்கிக் கொண்டாடுகிறீர்களே’ என்று.
அது உண்மையெனில் அந்த ஒரு சொட்டு ஈரத்தை அந்த இரவில் அந்தப் பெருஞ்சுனையில் இருந்துதான் எடுத்து வந்திருக்க வேண்டும். செலவழிக்க செலவழிக்க தீர்ந்துபோகாமல் என்னிடம் ஈரம் சுரப்பதற்கு ஒரே காரணம் அது முத்து சுந்தரம் என்னும் சுனையின் துளி.
அப்போது எங்களது சங்கத்தின் மாநில அலுவலகத்தின் கீழ்ப் பகுதியில்தான் குடியிருந்தார். அடிக்கடி என்பதைவிட மாதம் மூன்று முறையேனும் சென்னை செல்லும் வழக்கத்தில் இருந்த நேரம் அது. ஒருமுறை அப்படித்தான் நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்குகிறேன்.
இயற்கை உபாதை ஆரம்பமாகிறது. ஆட்டோ பிடித்து அலுவலகம் போனால் பூட்டிக் கிடக்கிறது. அலுவலக செயலாளர் ரவி எங்கோ போய்விட்டார். பொதுக் கழிவறையும் அந்தப் பகுதியில் கிடையாது.
அப்போது வீட்டில் இருந்து எட்டிப்பார்த்த தோழரின் இணையர் ’என்ன எட்வின் ரவி இல்லையா? வாங்க உள்ள’ என அழைத்து உட்கார வைத்து தேநீர் தருகிறர். எனக்கோ கலக்குகிறது. கேட்கவும் கூச்சம்.
எனது அவஸ்தையைப் புரிந்துகொண்ட தோழர் ‘என்ன தோழர் ரெஃப்ரெஷ் பண்ணனுமா. போங்க’ என்று வழிகாட்டுகிறார். நான் வெளியே வருவதற்குள் தோழர் RMS வந்துவிட்டார். தோழர் நடந்ததை சொன்னதும் கடகடவென சிரித்தவாறே “டாய்லெட் போகனும்னு சொல்ல வேண்டியதுதானே எட்வின்’ என்கிறார்.
.நீங்க இல்லையா அதனாலதான் என்று முடிப்பதற்குள் கன்னத்தில் அறை விழுகிறது எனக்கு.
தோழமைக்குள் இதுமாதிரி விஷயங்களில் கூச்சம் கூடாது என்று கத்துக் கொடுத்தது அந்தச் செல்ல அறை.
ஒருமுறை DPI செல்கிறேன். இப்போதைய தொடக்கக் கல்வி இயக்குனரான கார்மேகம் சார் அப்போது JD HS ஆக இருந்தார். அவரது அறைக்குள் நுழைகிறேன். உள்ளே அப்போது ஈரோட்டில் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த அருள்முருகன் சார் வரவேற்கிறார். இப்போது அவர் இணை இயக்குனராக இருக்கிறார்.
எப்படிப் போகிறது DEO பணி என்று கேட்கிறேன். பணி எல்லாம் சிறப்பாகத்தான் போகிறது என்றும் ஊதியம் பெறுவதில்தான் இழுபறி நிகழ்வதாகவும் சொன்னார். அவரது நேர்முக உதவியாளர் பயங்கர ஸ்ட்ரிக்ட் என்றும் எல்லா ஆவணங்களையும் கொடுத்தால்தான் ஊதிய ஃபைல் அவரிடம் இருந்து நகருமென்றும் பெருமையோடு சொன்னார்.
ஆக அவரது அதிகாரிக்கான ஊதிய ஃபைலையே சரியாக இருந்தால்தான் நகர்த்தக் கூடியவர். அவ்வளது கறார்.
எத்தனைப் பெற்றோம்?
எத்தனை கற்றோம்?
எத்தனை கற்றோம்?
அவரது சங்கப் பணிகளும் தியாகமும் பற்றிப் பேசுவதற்குரிய தகுதி பெறவே எனக்கு இன்னும் கொஞ்சகாலம் ஆகும்.
போய் வாருங்கள் RMS. வந்து சந்திக்கிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்