Thursday, September 1, 2016

கவிதை 059

சேர்பவர்களைச் சேர்ந்தால்
எழுத்து
சேர்ந்ததா?
சேர்ந்தது
சேர்ந்ததால்?

Wednesday, August 31, 2016

027

”பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களை நேசிப்பவர்களுக்காகவாவது
உடம்பை”

இன்னும் கொஞ்சம் இறங்கி
வெளி வந்து
சொல்லியிருக்கலாம் நீ

“எனக்காகவாவது”

கவிதை 058

வாடகைப் புரவியேறி 
வந்து கொண்டிருக்கும்
நீ கேட்ட ஓவியனால்
வரைந்துவிட முடியாது
உன்னை
உன்னை மாதிரி

Tuesday, August 30, 2016

028

கேட்டிருக்கும்
இடங்களிலிருந்து
ஏதேனும் கிடைக்கும்வரை
எப்படியேனும்
தாக்குப் பிடித்துவிடு தாயே
சாகாமல்

பள்ளத்தில் கிடக்கும் வானம்

இந்த இரண்டு கவிதைகளும் வேறு வேறு நாட்களில் வேறு வேறு நபர்களால் எழுதப் பட்டவை. ஆனால் இரண்டிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாகவே படுகிறது
"பள்ளத்தில் கிடக்கும்
வானத்தின் மீது
எச்சில் உமிழ்கிறார்கள்"
என்று திரைப்பட பாடலாசிரியர் தோழன் குகை மா.புகழேந்திஎழுதுகிறார்.
சாலையில் பள்ளம், தேங்கிய மழைநீர், மழைநீரில் தெரியும் வானம். சாலையை செப்பனிட வக்கற்ற வர்க்கத்தை துப்பாமல் பள்ளத்தில் கிடக்கும் வானத்தைப் துப்பும் கயவாளித்தனம்
பள்ளத்தில் கிடந்தால் வாகனமும் துப்பப்படும்
இவை கடந்து அழகியலாக பார்த்தால் ஜென்த்தனம்
அடுத்த கவிதையை கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தோழர்பெரியநாயகி சந்திரசேகர் எழுதியிருந்தார்
" மூன்றாம் பிறைக்கு
பாப்பா வைத்த பெயர்
கொஞ்சூண்டு நிலா"
அய்யோ அய்யோ "கொஞ்சூண்டு நிலா" எத்தனை அழகு
பாப்பா, கொஞ்சூண்டு நிலா அற்புதம்.
மகள் வைத்த பெயரென்று போட்டிருந்தாலும் அழகு கெட்டிருக்கும்
புகழுக்கும் பெரியநாயகிக்கும் என் கடனில் பாதியை எழுதி வைத்துவிடலாமென்றிருக்கிறேன்
வாழ்த்துக்கள் புகழ்
வாழ்த்துக்கள் பெரியநாயகி

Monday, August 29, 2016

029

பாதங்கள்
நிராகரித்த
ஒத்தையடிப் பாதையில்
பச்சைப் புல்

தோழர் திருவுடையான்



தோழர் திருவுடையான் நேற்றிரவு  சேலத்தில் நிகழ்ச்சியை முடிந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது  அவரது மகிழுந்து விபத்துக்குள்ளானதில் மரணமடைந்திருக்கிறார். இது மாதிரியான தோழர்களின் இழப்பு சொல்லொன்னாத் துயரினைத் தருகிறது.

25 லிருந்து 30 மேடைகளில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.

விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனாலும் பின்னிரவுப் பயணங்களை நிச்சயமாக தவிர்த்துவிட வேண்டும். அதற்கேற்றார் போல் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் உரையாளர்கள் இரவு தங்கி காலை எழுந்து உணவருந்தி திரும்புகிறமாதிரி  ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மட்டுமல்ல, மேடை ஊழியர்களை நிச்சயமாகக் தங்கிச் செல்லுமாறு செய்ய வேண்டும்.

திருவுடையானுக்கான தோழர் Su Po Agathiyalingam அவர்களின் இரங்கல் என்னை விசும்ப வைத்து விட்டது. “இதுமாதிரி  வேண்டியவர்களின் மரணத்துக்கூட செல்ல முடிவதில்லை. தூரம் என்பதோடு வருவாயோ சேமிப்போ இல்லாத நிலையில் என்ன செய்வது” என்று எழுதியிருந்தார். படிக்க படிக்க வெடித்துவிட்டேன்

போய் வா தோழா

Sunday, August 28, 2016

நடைப்பயிற்சி முடியும் தறுவாயில்

இன்று மாலை நடைப்பயிற்சி முடியும் தறுவாயில் சிகப்பூரிலிருந்து யாழிசை மணிவண்ணன் அலைபேசியில் அழைத்தார்.
இன்று அங்கு நடைபெற்ற ”அடம்செய விரும்பு” நூலின் வெளியீட்டு விழாவின்போது ஏற்புரையாற்றவந்த தோழர்கோபால் கண்ணன் என்னைக் குறித்து பேசியதாகவும் அதை உடனே எனக்கு கடத்திவிடவேண்டும் என்று அழைத்ததாகவும் கூறினார்.
கேட்பதற்கு மகிழ்ச்சியாயிருந்தது. இத்தனைக்கும் கோபால் என்னோடு பேசியதுகூட இல்லை.
அவரது உரையினூடே எனது
“குழந்தைகள்
உயரத்திற்கு
குனிந்து பார்த்தால்தான்
அவர்களின் பிரமாண்டம் புரியும்”
என்பதுமாதிரி நான் எழுதியிருந்த நிலைத்தகவலை கூறினார் என்றும் கூறினார்.
இதை மீளாகத்தான் போட்டிருந்தேன்.
இரண்டு விஷயங்கள்
1. அவ்வப்போது பிடித்தமான நிலைத் தகவல்களை மீண்டும் வைக்கலாம்.
2. காசை சேர்த்துக் கொண்டு ஒருமுறை சிங்கப்பூர் சென்று அங்கிருக்கும் தமிழ் மக்களைப் பார்த்து வர வேண்டும்

பேய்மாதிரி பார்த்தும்

ஒருமுறை பார்த்துவிட்டு கவிஞர் தம்பிக்கு அனுப்பிவிடுங்கள். அவரும் பார்த்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம் என்ற குறிப்போடு எனது "எது கல்வி?" நூலின் சிராக்ஸ் பிரதி நற்றிணையிலிருந்து வந்திருந்தது.
பேய்மாதிரி பார்த்தும் 176 பக்கங்களிலிருந்தும் ஒரு பிழையினையும் பார்க்க முடியவில்லை.
தம்பியிடம் பேசியபோது சிவன் சார் பார்த்தது பிழையெல்லாம் இருக்காது என்றார்
நன்றி நற்றிணை
நன்றி தம்பி Kavingnar Thambi
நன்றி சிவன் சார்
அநேகமாக மதுரை கண்காட்சிக்கு வந்துவிடும்.

Saturday, August 27, 2016

30

யாரது
ஆடி பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது

31

ஊறும் கால்களோ
வருடும் விரல்களோ
நடுநிசியின் நிசப்தத்தில்
என்னவோ செய்தது ஏதோ ஒன்று
தனித்து கிடந்த என்னை
அழுக்கும் பிசுக்குமான படுக்கையானதால்
ஊர்ந்திருக்கக் கூடும் ஜந்தெதுவும்
விரல்கள் போலவே உணர்ந்ததால்
வருடலாயுமிருக்கலாம்
கால்களா விரல்களா
ஏதெனக் கண்டடையுமுன்
வந்து தொலைத்தது
தூக்கம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...