Tuesday, April 29, 2025

தயவு செய்து படிக்க வேண்டியதைப் படிங்க

சட்டவிரோதமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றம் சொன்ன ஒருவர் 

இவரது பணிகளில் நேர்மையில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்ன ஒருவர்

தனது வேலையை சரிவர செய்யாதவரென்று உச்சநீதிமன்றத்தால் இடித்துரைக்கப்பட்ட ஒருவர் அழைத்தார் என்பதற்காக 

 எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களரசிற்கு குடைச்சல் தருவதற்கு வந்திருந்தாலும் 

 குடைச்சலைத் தருவது யாரென்ற போதும் எதிர்கொள்வோம் என்றபோதும்

 நீங்கள் இன்றையத் தேதியில் எங்கள் ஒன்றியத்தின் இரண்டாவது மகன்

அம்மா இரண்டாவது மகள் புத்தகம் தந்து வரவேற்கிறோம் 
 
தயவு செய்து படிக்க வேண்டியதைப் படிங்க

Tuesday, April 22, 2025

அவர் வேந்தரா இல்லையா

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தான் உச்சநீதிமன்றம் அரசிற்கு வழங்கியுள்ளதாகவும்
ஆனாலும் தான் தான் வேந்தரென்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும் ஆளுநர் கூறுவதாகத் தெரிகிறது
ஆக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தன்னைக் கட்டுப்படுத்தும் என்பதை உணர்ந்தவராகவே அவர் இருப்பது புரிகிறது
அவர் வேந்தரா இல்லையா என்பதை தீர்ப்பை முழுதாக படித்தவர்கள் அவருக்கும் நமக்கும் தெளிவுபடுத்த வேண்டும்
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசிற்குத்தான் என்பதை உணர முடிந்த ஆளுநருக்கு
நியமிக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு என்பதும் புரிந்திருக்க வேண்டும்
அல்லது
புரியவைக்க வேண்டும்

Saturday, April 19, 2025

நீங்கள் செய்வதாக சொன்னதன்றி

தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி உண்டு. தபால் மூலம் வாக்களிப்பதில் நிறைய

சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ளவும் நேர்ந்தது. பலரால் வாக்களிக்க முடியாத சிக்கலும்கூட ஏற்பட்டது.

 இதைக் களையும் முகத்தான் தேர்தலுக்கு முன்பாக அவர்களுக்கென்று தாலுக்கா அளவில் வாக்கு மையங்களை அமைத்து வாக்குச் சீட்டுகள்மூலம் அவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது அப்படியானதொரு வாக்குச்சாவடியில் சான்றொப்பமிடும் ஊழியர்களில் ஒருவனாக (எதற்கு அதிகாரி வேஷமெல்லாம்) பணியாற்றினேன்.

 சான்றொப்பம் பெற்றுக்கொண்ட பலர் எங்கள் மேசையிலேயே பேலட் பேப்பரை வைத்து உதயசூரியனுக்கு வாக்களித்தனர். ரகசியமாக வாக்களியுங்கள் என்று விரட்டினாலும் இதிலென்ன சார் ரகசியம் வேண்டிக் கிடக்கிறது என்று சொல்லிக்கொண்டே உதயசூரியனுக்கு வாக்களித்தவர்களும் உண்டு.

 விரட்டி விரட்டி அப்போது திமுகவிற்கு வாக்களித்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான் இன்று, ”திமுக தனது கடைசி பட்ஜெட் கூட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும்  தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாக்குகளை சேர்த்தால் நாற்பது லட்சம் வாக்குகளுக்குமேல் தேறும் என்றும் அவற்றில் ஒன்றுகூட திமுகவிற்கு விழாமல் பார்த்துக்கொள்வோம் என்று சமூக வலைதளங்களில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

 இந்த அளவிற்கு கொதி நிலையில் இருக்கும் அவர்கள் திமுக அரசாங்கம் மோசமான அரசாங்கம் என்றோ, மக்கள் விரோத அரசாங்கம் என்றோ, சமூகநீதிக்கு எதிரான அரசாங்கம் என்றோ எந்த இடத்திலும் ஒருபோதும் குற்றம் சாட்டுவதில்லை.

 இந்த அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளையும், ஒன்றிய அரசு கொடுக்கக்கூடாத குடைச்சல்களையெல்லாம் இந்த அரசிற்கு கொடுத்துக்கொண்டே இருப்பதையும், கொடுக்கவேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதையும் திமுக தோழர்களைவிட பேரதிகமாக மக்களிடம் கொண்டுசென்றபடியும்தான் இருக்கிறார்கள். 

 தமிழ்நாடு அரசின் பல திட்டங்களின் மேன்மையை பயனாளிகளை விடவும் இவர்கள் உணர்ந்தவர்களாகவும் அதற்காக மகிழ்ந்து அரசினைப் பாராட்டுபவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

 காலை உணவுத் திட்டம்குறித்துத் தன்னிடம் கேட்கப்பட்டபோது இந்தத் திட்டத்தை நினைக்கும்போதே தனக்கு மெய் சிலிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறினார்.  கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

 தாயும் தந்தையுமில்லாத குழந்தைகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் என்ற திட்டம் ஒன்று போதும் முதல்வரின் படத்தை பார்க்கும் இடங்களில் எல்லாம் அவரை வணங்கிச் செல்லலாம் என்றே சொல்கிறார்கள்.

 இத்தனை நெருக்கடிகளைக் கடந்தும் பள்ளிக்கல்விக்கு ஐம்பதாயிரம் கோடிக்கு நெருக்கமாக நீங்கள் ஒதுக்கீடு செய்துள்ளதை அரசு ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ புரிந்துகொள்ள முடியாதவர்களாகவோ அல்லது பாராட்ட  முடியாத அளவிற்கு கஞ்சத்தனம் கொண்டவர்களாகவோ இல்லை.

 பல்லாண்டுகளாக நிலுவையில் இருக்கிற தங்களது கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லையே என்கிற கோபமே அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

 தமிழ்நாட்டு மக்கள்  தொடர்ந்து தங்களை நிராகரிக்கிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிப்பது போலவே, எப்படியும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் அதிமுக இவர்களை கண்டுகொள்ளாமல் போனதும் உண்டு. அதை இவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

 ஆனால்அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திமுகவின் வலது கண்ணும் இடது கண்ணும்போல என்று பொதுவாக சொல்லப்படும் நிலையில் திமுக அரசு இவர்களை முற்றாக புறக்கணிப்பதாகவே இவர்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அதிலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆதரித்த, 2021 தேர்தலின்போது தங்களது வாக்குறுதிகளில் இணைத்துக் கொடுத்திருந்தவற்றையே இவர்கள் நிறைவேற்றித்தர மறுக்கிறார்கள் என்று கருதுகிறார்கள். நான்கு விஷயங்கள் இவர்களை இந்தக் கொதிநிலைக்கு தள்ளியிருப்பதாகக் கொள்ளலாம்,

 1) தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இணைத்திருந்தவற்றையே நிறைவேற்ற மறுப்பது

2) செலவற்ற கோரிக்கைகளைக்கூட காதுகொடுத்து கேட்க மறுப்பது

3) அதற்கான போராட்டங்களை கிஞ்சிற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துவது 

4) தேவையே இல்லாமல் புதிய சிக்கல்களை உருவாக்கியது

 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் (CPS) கொண்டுவரப்படுகிறது. இது ஓய்வு பெற்றவர்களுக்கான சாபம். எனவே இதை இது கொண்டுவரப்பட்ட நாள்முதலாகவே ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்கள்.

 வயதான காலத்தில்தான் உடல்நலம் உள்ளிட்டு செலவுகள் அதிகரிக்கும். வயதான காலத்தில் குழந்தைகளின் அரவணைப்பு இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு. அப்படி நிகழ்ந்தால் CPS அவர்களைத் தெருவிற்கு கொண்டு வந்துவிடும்.

 இவைமட்டும் இல்லாமல் இதில் தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படி நடந்தால் அது ஓய்வு பெறுபவர்களை வெறுங்கையோடு வீட்டிற்கு அனுப்பும். இதை போக்குவரத்துக் கழகங்களில் கண்கூடாகக் கண்டோம். எனவே இந்த ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று அப்போதிருந்தே போராடத் தொடங்கினார்கள்.  

 இதன் நியாயத்தை ஏற்றுக்கொண்ட திமுக தான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று உறுதியளித்தது. இந்த ஒற்றை வாக்குறுதிதான் 2021 இல் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் திருவிழாவிற்கு செல்லும் மனநிலையோடு வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு வந்தது.

 காலிப்பணியிடங்களை நிரப்புவோம். பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப் படுத்துவோம் என்பதையும் திமுக ஏற்றுக்கொண்டது. ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைப்போம் என்பது திமுக தொடர்ந்து சொல்லி வந்ததுதான். ஆனால், ஏறத்தாழ முப்பத்தைந்து விழுக்காடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன.

ஜோசப் மார்த்தி “Instead, the school should go to the student”  என்று சொல்வார். பள்ளிகளை குழந்தைகளை நோக்கியும் மருத்துவத்தை வீடுகளை நோக்கியும் இந்த அரசாங்கம் நகர்த்தத் தொடங்கி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடே இந்தக் கூடுதல் சுமையை இவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் தங்களது வாழ்க்கை தெருவிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தெருவிற்கு வந்து போராடும் ஊழியர்களை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை.

35 விழுக்காடு காலிப்பணியிடங்கள் என்றால் 35 விழுக்காடு சம்பளப் பணம் மிச்சம் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இப்படிக் குவியும் பணத்தில் இருந்து அங்கன்வாடிப் பணியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க இயலாதா என்ற இவர்களின் கேள்வியின் நியாயம் சிறுபிள்ளைகளுக்கே புரியுமே, முதல்வருக்குப் புரியாதா?

 இவை எல்லாம் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள். இவை போதாதென்று இவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய அரசானை 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது.

 இதுவரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்பு என்பது ஒன்றிய அளவில் இருந்தது. அவர்களது பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் என்பவை ஒன்றிய அளவிலான அவர்களது பணிமூப்பின் அடிப்படையிலேயே நடந்து வந்தன. இந்த நடைமுறை இயல்பானதாகவும் இவர்களுக்கு உவப்பானதாகவும் இருந்தது.

 அரசாணைண் 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்பை மாநில அளவிற்கு கொண்டு செல்கிறது. இதன்மூலம் இவர்களது பதவி உயர்வும், பணியிட மாறுதலும் மாநில பணிமூப்பு அடிப்படைக்கு நகர்கிறது. இது இவர்களுக்கு அந்நியமான ஒன்றாகத் தோன்றுகிறது.

 இந்த 243 ஐ நீக்குவதால் எவ்வளவு கோடி இழப்பு வரும் என்று இந்த அரசு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறது என்று தெரியவில்லை.  

 அநேகமாக இந்தக் கட்டுரை அச்சேறிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு போராட்டத்தை ஜேக்டோ-ஜியோ நடத்தி இருப்பார்கள். 23.03.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

 நீங்கள் செய்வதாக உறுதியளித்ததைத் தவிர வேறொன்றையும் இவர்கள் கோரவில்லை. எனவே, இயலும் கோரிக்கைகளை நிறைவேற்றியும் மற்றவை குறித்து சங்கங்களோடு இணக்கமாக உரையாடவும் அரசு முன்வர வேண்டும்

 -- புதிய ஆசிரியன், ஏப்ரல் 2025   

Thursday, April 17, 2025

திருநெல்வேலியில் ஒரு பள்ளியில்

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அரிவாளால் வெட்டியிருக்கிறான்

பதறுகிறது
ஒன்றும் ஆகவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது
அரசைக் குற்றம் சொல்கிறார்கள்
பள்ளிக் கட்டமைப்பைக் குற்றம் சொல்கிறார்கள்
ஆசிரியர்கள் சரியில்லை என்கிறார்கள்
குழந்தைகள் சரியில்லை என்கிறார்கள்
எந்த ப்ரிஜுடிசும் இல்லாமல் நெருக்கமான காரணத்தை
திரைப் படங்கள் ஒரு காரணம் என முன்வைக்கிறார் Bhuvana Gopalan
மேற்சொன்ன எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறதுதான்
ஆனால் அதே திருநெல்வேலியில் இருந்து ஒரு தலைவர்
வைரமுத்த கொல்ல வேணாமா என்று கொலைவெறியை மேடை போட்டுத் தூண்டுகிறார்
ஆன்மீகப் பெரியவர்கள் அந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்
இதைத் தவறென்று அவர்கள் கண்டிக்கவில்லை
பிரதமர் கண்டிக்கவில்லை
சகோதரிகள் வானதி தமிழிசை என்று யாரும் அவரைக் கடிந்து கொள்ளவோ நெறிப்படுத்தவோ இல்லை
ஒரு தலைவர் இப்படிப் பேசினால் குழந்தைகள் இப்படித்தான் மாறுவார்கள் என்று யாரும் அவர் நோக்கி சுட்டுவிரலை நீட்டவில்லை
கொலைவெறியைத் தூண்டுகிற அந்தத் தலைவரை ஒன்றியத்தை ஆள்கின்ற கட்சி
தனது மாநிலத் தலைவராக அங்கீகரித்து ஆசிர்வதிக்கிறது
துயரம் என்னவெனில் அந்தக் கட்சியும் அந்தத் தலைவரும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காகக் கொந்தளிப்பதுதான்

17.04.2025

Wednesday, April 16, 2025

65/66, காக்கைச் சிறகினிலே, ஏப்ரல் 2025

19.03.2025 அன்று அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி இருக்கிறார். முதலில் அவருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். அவரது திரும்புகை திட்டமிட்டபடி சரியான நேரத்தில் இயல்பாக நடந்து முடிந்திருக்கிறது.

ஆனால் அவர் ஏதோ விண்ணில் சிக்கித் தவித்ததாகவும் எலான் மஸ்க் விண்வெளி வீரர்களை அனுப்பி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுனிதாவை மீட்டுக்கொண்டு வந்தது போலவும் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
இதன் உச்சமாகவும் நகைச்சுவையாகவும் சங்கிகள் ஒன்றைப் பரப்புகிறார்கள். விண்ணில் தவித்துக்கொண்டிருந்த சுனிதாவை எப்படி மீட்பது என்று ஆலோசனை கேட்பதற்காகத்தான் ட்ரம்ப் நமது பிரதமரை அமெரிக்காவிற்கு அழைத்ததாராம். இவர் சென்று வழங்கிய ஆலோசனையின்படி செயல்பட்டுதான் ட்ரம்ப் சுனிதாவை மீட்டதாகவும்கூட பலர் நம்பவும் செய்கிறார்கள்.
ஏதோ சுனிதா மட்டும் யாருமே இல்லாத ஒரு மோன வெளியில் சிக்கிக்கொண்டு போராடிக்கொண்டு இருப்பதுபோன்ற ஒரு கதையை உலகம் முழுக்கக் கட்டமைத்தார்கள்.
ஆனால் அவர் தனது சகாக்களுடன் தொடர்ந்து சுறுசுறுப்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. அவர் விண்வெளியில் தீபாவளியைக் கொண்டாடியதாகவும் செய்திகள் வந்தன.. கேக் வெட்டி அங்குள்ளோர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காணொலிகளையும் நம்மால் பார்க்க முடிந்தது.
அமெரிக்க தேர்தல் நேரத்தில் ட்ரம்ப் இதை பிரச்சாரம் செய்தார். சுனிதாவை பாதுகாப்பற்ற முறையில் விண்ணிற்கு பைடன் அனுப்பிவைத்ததாக அவர் கூறினார். அவரது உயிருக்கு ஆபத்து உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். தான் அதிபரானதும் தனது நண்பர் எலான் மஸ்க் உதவியோடு சுனிதாவை மீட்க இருப்பதாகக் கூறினார். இப்படியாக இது சூடான அரசியலாக மாறியது.
ஏற்கனவே சுனிதாவின் குடும்பம் இந்திய அரசியலில் ஒரு பலியைக் கொடுத்திருக்கிறது. இதுபோலவே அமெரிக்க அரசியலுக்காக அவரே பலியாகிவிடுவாரோ என்ற பரபரப்பை சில அரசியல் நோக்கர்கள் முன்வைத்தனர்.
செப்டம்பர் 2024 இல் ஒன்பதுநாள் ஒப்பந்தத்தில் விண்வெளிக்கு சென்ற இருவரில் சுனிதாவும் ஒருவர். இது அவருக்கு மூன்றாவது விண்வெளிப் பயணம். இதையும் சேர்த்து மூன்று முறையும் இவர் பணிநீட்டிப்பு பெற்று அடுத்தடுத்த அணியினரோடும் பணியாற்றிவிட்டு அவர்களோடுதான் திரும்பி இருக்கிறார். எப்போதும் போலவே இந்த முறையும் கிளம்பும் வரைக்கும் சுறுசுறுப்போடும் மகிழ்வோடும் தனது ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.
வழக்கமாக ஆறுமாத கால ஆய்விற்காகத்தானே வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். அது என்ன ஒன்பதுநாள் ஒப்பந்தம் என்பதுகுறித்து அலசினால் இப்போது வாசிக்கிற சூடில் பரப்பப்பட்ட இந்தக் கதைகளின் வேரைப் பிடிக்க முடியும்.
விண்வெளி ஆராய்ச்சி மையம் எப்போதும் விண்வெளி வீரர்களால் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கக்கூடிய இடம். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏழுபேர் பணியாற்றுவார்கள். ஒரு அணியினரின் பணிக்காலம் முடியும்போது அடுத்த அணியினர் வருவார்கள். புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஏற்கனவே இருப்பவர்கள் திரும்புவார்கள். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கக்கூடிய வழமை.
2006 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு தனது 14 வது அணியை நாசா அனுப்பியது. அந்த அணியில் இருந்த ஏழுபேரில் ஒருவர்தான் சுனிதா. அந்த அணியில் சென்றவர்களில் சுனிதாவின் சுறுசுறுப்பும் கூர்மையும் அர்ப்பணிப்பும் நாசாவை ஈர்க்கவே அங்கேயே தங்கி இன்னுமொரு ஆறுமாதம் அடுத்த அணியினரோடு பணிபுரிய முடியுமா என்று சுனிதாவை கேட்கிறது. சுனிதா சம்மதிக்கிறார். 14வது அணியில் சென்ற மீதமுள்ள ஆறுபேரை அழைத்துக்கொண்டு 15 வது அணியில் ஆறுபேரை மட்டும் விண்ணிற்கு நாசா அனுப்புகிறது. ஆக, நாசாவின் 14வது அணியினரோடு விண்வெளிக்கு முதல்முறையாக ஆறுமாத ஒப்பந்தத்தில் சென்ற சுனிதா 15 வது அணியினரோடும் பணியாற்றிவிட்டு ஓராண்டு கழித்தே பூமிக்குத் திரும்புகிறார்.
2012 இல் நாசா அனுப்பிய 32 வது குழுவில் இரண்டாவது முறையாக விண்ணிற்கு சென்ற சுனிதா இந்த முறையும் பணி நீட்டிப்பு பெற்று 33 வது குழுவினரோடும் பணியாற்றிவிட்டு ஓராண்டு கழித்தே பூமிக்குத் திரும்பினார்.
மூன்றாவது முறையும் இதேதான் நிகழ்ந்தது. ஆனால் இந்தமுறை அவர் சென்றது ஆராய்ச்சிக்காக அல்ல.
01.02.2003 அன்று கல்பனா சாவ்லா விண்வெளி ஓடம் வெடித்து இறந்ததற்குப் பிறகு அமெரிக்கா ரஷ்யாவின் ஓடங்களிலேயே தனது வீரர்களை அனுப்பி வந்தது. இந்த நேரத்தில் முதல்முறையாக ட்ரம்ப் பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்காவே விண்வெளி ஓடங்களை சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். எலான் மஸ்கின் SPACE X, மற்றும் போயிங் ஸ்டார் லைனர் ஆகிய இரு நிறுவனங்களிடமும் ஒப்பந்தம் போடப்படுகிறது. முதலில் எலான் மஸ்க் செய்து தருகிறார்.
இந்த நிலையில் போயிங் ஏர்லைனரும் ஒரு ஓடத்தை தயாரிக்கிறது. அதன் வெள்ளோட்டத்திற்காகத்தான் ஒன்பது நாட்கள் பயணமாக 2024 செப்டம்பரில் சுனிதா விண்வெளி போகிறார். போகும்போதே ஓடத்தில் பழுது ஏற்படுகிறது. எப்படியோ ஒருவழியாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்துவிடுகிறது. பழுதுநீக்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிய விண்கலம் திரும்பப் பெறப்படுகிறது.
சென்ற இருவரிடமும் திரும்புகிறீர்களா அல்லது அங்கு ஒரு பணிக்காலத்தை நிறைவு செய்கிறீர்களா என்று நாசா கேட்கிறது. இருவரும் பணிநீட்டிப்பை ஏற்கிறார்கள். இப்படியாகத்தான் செப்டம்பர் 2024 இல் விண்வெளிக்குச் சென்ற சுனிதா 18.03.2025 வரை விண்வெளியில் பணியாற்றிவிட்டு 18.03.2025 இல் புறப்பட்டு 19.03.2025 அதிகாலை பூமிக்குத் திரும்புகிறார்.
சுனிதா புறப்பட்டபோது பைடன்தான் அமெரிக்க அதிபர். அவர் புறப்பட்ட காலத்தை ஒட்டி அமெரிக்க தேர்தல் வருகிறது. ஒன்பது நாள் ஒப்பந்தத்தில் சென்ற சுனிதா பணிநீட்டிப்பு பெறுகிறார். இங்குதான் லாவகமாக இதை தனது தேர்தலுக்காகத் திருப்புகிறார் ட்ரம்ப். மோடியின் நண்பரென்றால் சும்மாவா.
இந்தப் பணி நீட்டிப்பையோ, சுனிதா விரும்பி இருந்தால் அடுத்த ஓடத்தை அனுப்பி அவரை அழைத்துக்கொள்ள நாசா தயாராக இருந்ததையோ மறைக்கிறார். ஓடம் பழுதானதால் ஏதோ தன்னந்தனியாக விண்வெளியில் சுனிதா சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் தனது நண்பர் எலான் மஸ்கின் துணையோடு அவரை மீட்பேன் என்றும் கூறி மக்களிடம் வாக்கு கேட்கிறார்.
இப்போதும் சுனிதா பூமிக்கு திரும்பியுள்ள நிலையில் அது எலான் மஸ்கினால் நிகழ்ந்ததாகவே அவரை வாழ்த்தி கட்டமைக்க முயல்கிறார் ட்ரம்ப். எலான் மஸ்கும் சுனிதாவை மீட்டு அழைத்து வந்த தனது சகாக்களுக்கு நன்றி என்று கூறி சுனிதா தன்னால் மீட்கப்பட்டதாகவே கட்டமைக்க முயல்கிறார்.
இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் வாயைத் திறப்பதன் மூலம் சுனிதா தவிடுபொடியாக்கிவிட முடியும். ஆனால் சுனிதா வாயைத் திறக்க மாட்டார் என்றே தெரிகிறது. காரணம் ட்ரம்ப் யார் என்பது அவருக்குத் தெரியும்.
குஜராத்தில் பாஜக அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா 2003 இல் கொல்லப்பட்டார். அந்த வழக்கோடு இன்றைய ஒன்றிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவே வழக்கு இருந்தது. அது ஒரு மர்ம மரணம் என்று முடித்து வைக்கப்பட்டது. இப்போதுகூட சுனிதா பூமிக்கு திரும்பியபிறகான ஒரு விஷயமாக காங்கிரஸ் இந்த வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருகிறது.
ஹரேன்பாண்டியா சுனிதாவிற்கு மாமா அல்லது சித்தப்பா பெரியப்பா முறை உறவு. அரசியல் என்ன செய்யும் என்பதை சுனிதா நன்கு உணர்ந்தவராகவே இருப்பார். எனவே யாரும் அவர் வாயைக் கிளறவேண்டாம் என்று கேட்டு வைப்போம்.
ஒன்று இருக்கிறது சொல்ல,
இன்னொருமுறை பணி நீட்டிப்பு வேண்டுமா என்று கேட்டிருந்தால் சுனிதா அதை மகிழ்வோடு ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது.

காக்கை- ஏப்ரல்,2025

Tuesday, April 15, 2025

ரிவர்னா தண்ணி இருக்கனுமாம்

கிரிஷ் சார் இன்று கல்லைணக்குப் போயிருக்கிறார்

தண்ணீர் இல்லை

ரிவர்னா தண்ணி இருக்கனுமாம்

டேம்னா நெறைய தண்ணி இருக்கனுமாம்

தனக்கு ரிவர் பூரா தண்ணி வேணும்னு

அழுது அடம் பண்ணியிருக்கிறார்

நல்வாய்ப்பாக,

குல்பி ஐஸ்காரர் வந்து சாரிடமிருந்து எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறார்

14.042025

Monday, April 14, 2025

கொஞ்சம் பொறுங்கள் மார்க்ஸ்

 அன்பின் மார்க்ஸ்,

வணக்கம்
அந்த இந்தியச் சீமான் ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தார்
அவ்வளவுதான் என்றார்கள்
எல்லோரும் வரிசையாக வந்து பாதம் பணிவார்கள் என்றார்கள்
பூச்சாண்டியாக மட்டும் பார்க்கக்கூடாது
அவர்களை ஆராயவும் வேண்டும் என்றீர்களே
அவர் சாதாரண பூச்சாண்டியல்ல பிள்ளைப் பிடிக்க வந்த பூச்சாண்டி என்று தெரிந்திருந்தது எல்லோருக்கும்
சாத்திய வீட்டிற்குள்ளிருந்து ஜன்னலைக் கூட திறந்து பார்க்கவில்லை சித்தப்பாவே என்றால் பாருங்கள் மார்க்ஸ்
அந்த சீமான் வந்ததே சித்தப்பாவிற்காகத்தான்
வேறொன்றுமில்லை மார்க்ஸ்,
சித்தப்பாவிற்கு பின்னால் ஒரு இருபது சதம் வாக்கிருக்கிறது
வருகிறாயா இல்லையா என்று மிரட்டினார்கள்
வரவில்லை
சித்தப்பாவிடம் இருக்கும் 20 சதம் வாக்கு சீமானின் முகத்தில் வழிந்த அவமானத்தைத் துடைத்தது
வீர சாணக்கியன் சித்தப்பா வீட்டுக் கதவைத் தட்டினார்
அந்த நேரம் பார்த்து சித்தப்பாவின் சம்பந்தி அலைபேசியில் அழைத்தார்
சித்தப்பா கண்முன் கம்பிகள்
கதவைத் திறந்து காபி கொடுத்தார்
சம்பந்தம் கலந்ததாக சாணக்கியன் சொன்னார்
சித்தப்பாவிற்கும் ஈயாடவில்லை
20,000 புத்தக அலமாரிக்கும் ஈயாடவில்லை
நாலு கோடி ரூபாய் டிராலியும் சாணக்கியத் துருவும் சிரித்தன
அற்பவாதம்தானே மார்க்ஸ்
அற்பவாதத்தின் மீதான தாக்குதலை கூராக ஒருங்கிணைக்காத நீயும் அற்பவாதி என்றுதானே சொல்ல வருகிறீர்கள்
கொஞ்சம் பொறுங்கள் மார்க்ஸ்
செவிட்டு மிசினை கழட்டி விட்டு வருகிறேன்

Friday, April 11, 2025

மொழி உயிரனையது

 17.07.1903

ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் பிரஸ்சல்சில் தொடங்குகிறது

கிட்டத்தட்ட 13 அமர்வுகள் அங்கு நடந்த நிலையில்

காவல்துறை அடாவடி செய்யவே

அடுத்த அமர்வுகள் லண்டனுக்கு மாற்றப்படுகிறது

கிட்டத்தட்ட அனைத்து அமர்வுகளுமே போல்ஷிவிக்குகளுக்கும் மென்சிவிக்குகளுக்கும் இடையிலான போராட்டங்களால் நிறைந்து கசிகிறது

மென்சிவிக்குகளின் தலைவராகவே காங்கிரஸ் முழுவதும் செயல்படுகிறார்

மொழிகளின் சமத்துவம் குறித்து பிரச்சினையிலும் குடிமக்களின் சம உரிமையே போதுமானது என்கிறார் மாரித்தவ்

இதை மிகச் சரியாக இதை எதிர்கொள்கிறார் லெனின்

தேசிய இனங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன

சில தேசிய இன மக்கள் தங்களது தாய்மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள்

எனவே மொழிகளின் சமத்துவம் என்பது முக்கியமானது என்கிறார்

மொழி உயிரனையது

Thursday, April 10, 2025

அவர்களுக்கு பிரச்சினை என்றால்

 இன்று இருவர் கூறிய இரண்டு விஷயங்களை ஸ்டாலின் சார் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது

முதல் விஷயத்தை சொல்லியிருப்பவர் மருத்துவர் அய்யா

இன்றே துணை வேந்தர்களை நியமித்து விடுங்கள். பிரச்சினை இருந்தால் அவர்கள் கோர்ட்டுக்கு போகட்டும் என்கிறார்

இன்னொருவர் தோழர் தராசு ஷ்யாம்

ஆளுனருக்கு ஒரு மசோதா வருகிறது

ஒப்புதல் கொடுக்க வேண்டும்

அல்லது நிராகரிக்க வேண்டும்

தேவைப்படும் பட்சத்தில் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்

ஆளுநர் திருப்பி அனுப்பியபிறகு அதை  மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றி அவருக்கு  அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழி இல்லை

இரண்டாவது முறையாக வரும் மசோதாவை திருப்பி அனுப்பவோ குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ அவருக்கு அதிகாரம் இல்லை

சரி, இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரேகூட நிராகரிக்க முடியாது என்கிறது தீர்ப்பு

எனவே நீட் விலக்கு குறித்த கோரிக்கையை குடியரசுத்தலைவருக்கு ஆளுனர் அனுப்பியதும் தவறு

நீட் விலக்கை குடியரசுத் தலைவர் நிராகரித்ததும் தவறு

எனவே இன்றுமுதல் தமிழ்நாட்டில் நீட் இல்லை என்று அறிவியுங்கள் என்றும்

அவர்களுக்கு பிரச்சினை என்றால் அவர்கள் கோர்ட்டிற்கு போகட்டும் என்று ஷ்யாம் சொல்கிறார் 

இவை இரண்டையும் ஸ்டாலின் சார் பரிசீலிக்க வேண்டுகிறோம்

10.04.2025

அவர் பெயிலென்றே கொள்வோம்

 இந்த கட்டிங்கை வைத்து தோழர் M S Rajagopal கொதித்திருந்தார்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய முதல் பேச் மாணவன் நான்

1978 இல் எழுதினேன்

+2 விலும் முதல் பேச்  நான்

இது 1980

என்னைவிட குறைந்தபட்சம் 10 வயதேனும் மூத்தவர் ஸ்டாலின் சார்

எனவே அவர் 10 ஆம் வகுப்பு படித்தபோது பொதுத்தேர்வு என்பது 11 ஆம் வகுப்பில்தான்

11 + 1 +3 என்பது அன்றைய வடிவம்

அவரது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அவரே நினைத்தாலும் வாங்குவது கடினம்

தமிழ் - 22ஆ

ஆங்கிலம் 18

கணக்கு 33

அறிவியல் வரலாறு 39

என்று ஒரு மதிப்பெண் பட்டியலை வைத்திருக்கிறார்கள்

ஏதோவொரு பத்திரிக்கை கட்டிங்தான் அது

அது என்ன அறிவியல் வரலாறு 39 என்று தெரியவில்லை

சரி

அறிவியலில் 39

வரலாறு 39 என்று கொள்வோம்

அந்தக் காலத்தில்

வரலாறு பூகோளம்தான் வரலாறு இல்லை

அப்போது elective என்று ஒரு விருப்பப் பாடம் இருக்கும்

அது எங்கு போனது என்று தெரியவில்லை

அது சரி

ஆமாம், அவர் பெயிலென்றே கொள்வோம்

அதற்கென்ன?

அவர் செய்த மாபெரும் பிழைகளுள் ஒன்று சாம்சங் விசயம்

அவரை விமர்சிப்பது என்றால் சாம்சங் பிரச்சினையில் ஸ்டாலின் நிலை குறித்து விமர்சித்திருக்கவேண்டும்

12 மணிநேர வேலைத் திட்டத்தை அவர் கொண்டுவர முனைந்தபோது அதை விமர்சித்திருக்க வேண்டும்

நேற்று கூட நடுக்காவிரி காவல் நிலையம் முன்பு இரண்டு பெண்கள் நஞ்சருந்தி அதில் ஒருவர் இறந்திருக்கிறார்

காவல்துறையின் அவலம் குறித்து விமர்சிக்கலாம்

போங்கப்பா 

ஏதாவது குட்டிச்சுவர் கிடைத்தால்

முதுகை சொரிந்து கொள்ளுங்கள்

10.04 2025

Wednesday, April 9, 2025

அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்

 இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ந்யூஸ் டைம், இந்தியா டுடே போன்ற சேனல்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்துள்ள நேர்காணல்களைப் பார்த்த பிறகு திமுக தலைமைக்கானஎன் கோரிக்கை

அருள்கூர்ந்து பழனிவேல்ராஜனை நாடு பூராவும் கருத்தரங்கங்களில் உரையாட ஏற்பாடு செய்யுங்கள்
அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்
யாராவது தமிழில் மொழி பெயர்க்கட்டும்

#சாமங்கவிய இரண்டு மணி ஒரு நிமிடம்
09.04.2025

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...