Sunday, April 14, 2024

இளைஞர்கள் இல்லாப் பாலக்கட்டைகளை …

மக்கு உரிய, நியாயமான, உரிமையான நிதிப் பங்கீட்டைக்கூட ஒன்றிய அரசு பிடிவாதமாக வழங்க மறுக்கிற சூழலில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு அறிக்கையை திமுக அரசு மாமன்றத்தில் வைத்திருக்கிறது.

இந்த வரவு செலவு அறிக்கை குறித்து உரையாடுகிற அளவிற்கு நமக்கு பொருளாதார அறிவு இல்லை எனவே. அதை நாம் செய்யப் போவது இல்லை.
1) சமூக நீதி
2) கடைக்கோடித் தமிழர் நலன்
3) உலகை வெல்லும் இளைய தமிழகம்
4) அறிவுசார் பொருளாதாரம்
5) மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை
6) பசுமைவழிப் பயணம்
7) தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்
ஆகிய ஏழு நோக்கங்களை மையப்படுத்துகிறது இந்த நிதிநிலை அறிக்கை.
2023-2024 ஆம் நிதியாண்டைவிட இந்த ஆண்டின் நிதி வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு 37 ஆயிரத்து 640 கோடி என்ற அளவில் இருந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு 44,907 கோடி என்ற அளவிற்கு நகர்ந்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி என்ற தகவல்களை 20.02.2024 நாளிட்ட ‘தீக்கதிர்’ தருகிறது.
இவை ஏன் இப்படி ஆயின? இவற்றை அரசு எப்படி எதிர் கொள்ளப் போகிறது? என்பதெல்லாம் வல்லுனர்கள் பாடு, அரசின் பாடு.
ஆனாலும், 3.5 விழுக்காடாக இருக்க வேண்டிய நிதிப்பற்றாக்குறை 3.44 என்கிற அளவிற்குள் கட்டுப்படும் என்று நிதித்துறை செயலர் திரு உதயச்சந்திரன் கூறுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பொருளாதார அறிவு என்பது ஏறத்தாழ இல்லை என்பதே உண்மை என்றாலும்,
1) ஒன்றிய அரசின் வஞ்சகமான அணுகுமுறை கடந்து இரண்டு மிகப் பெரிய பேரிடர்களை எதிர்கொண்டது
2) 10 வது நிதிக் குழுவில் 6.64 விழுக்காடாக இருந்த நிதிப் பகிர்வு 15 வது நிதிக் குழுவில் 4.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது
என்ற நிலையில் தமது கைகள் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதாரச் சூழலில்தான் அரசு இந்த வரவு செலவு அறிக்கையை முன்வைக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
அதனால்தான், தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தரப் படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளோடு “சவால்கள் நிறைந்த சூழலிலும் மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கை இது” என்று கூறுகிறார் CPM மாநிலச் செயலாளர் தோழர் K.பாலகிருஷ்ணன்
வறுமை ஒழிப்புத் திட்டம், 5000 நீர்நிலைகளைப் புனரமைப்பது, 500 மின் பேருந்துகள், இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை போன்ற திட்டங்கள் குறித்து ஓரளவு நம்மால் பேச முடியும் என்றாலும் இன்னும் தெளிந்தவர்கள் அவற்றைப் பேசுவதற்கு வழிவிட்டு நகர்வோம்.
1) அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும் காலைச் சிற்றுண்டி
2) அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரைப் படித்த மாணவர்களுக்கும் உயர் கல்விக்காக மாதம் 1,000 ரூபாய்
3) மூன்றாம் பாலினத்தவருக்கான கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்பது
ஆகியத் திட்டங்கள் குறித்து இரண்டு நியாயமான கோரிக்கைகளோடு கொஞ்சம் உரையாட இருக்கிறது
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டித் திட்டம் என்பது இந்தத் திட்டம் அரசு மற்றும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட நாள்முதல் உள்ள கோரிக்கை.
காலைச் சிற்றுண்டியின் அவசியம் குறித்து வெகு காலமாக கோரி வருகிறோம்.
மதிய உணவுத் திட்டமாகத் தொடங்கி இன்று சத்துணவுத் திட்டமாக விரிந்துள்ள இந்தத் திட்டம் வருவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது
ஒருமுறை ஒரு பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அன்றைய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு கலந்து கொள்கிறார்
அப்போது சில குழந்தைகள் மயக்கம் போட்டு விழுகிறார்கள். அது குறித்து ஆசிரியர்களிடம் அவர் விசாரிக்கிறார். காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் வரும் குழந்தைகள் இப்படி ஒவ்வொரு நாளும் மயக்கம் போட்டு விழுவது வாடிக்கைதான் என்று அறிகிறார்.
1) வீட்டில் வசதி இல்லாமை
2) வெள்ளனமே பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால் சமைக்க இயலாமை
ஆகிய காரணங்களால் குழந்தைகள் காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் பள்ளிக்கு வருவதை அவர் புரிந்து கொள்கிறார்.
அன்றைய முதல்வரான காமராஜரோடு இது குறித்து உரையாடுகிறார். இருவரும் மற்ற அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக்கிறார்கள். இறுதியாக “மதிய உணவுத் திட்டம்” வருகிறது. பிறகு M.G.R அவர்கள் காலத்தில் ”சத்துணவுத் திட்டம்” என்று அது வளர்கிறது.
இந்தத் திட்டங்கள் தமிழ்நாடுப் பள்ளிக் கல்வியில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. இன்றைக்கு மற்ற பல மாநிலங்களைப் போல இல்லாமல் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இந்த இரண்டு திட்டங்களின் பங்களிப்பு என்பது மிக அதிகம்.
ஆனால், காலை உணவு எடுக்காததால் குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்ததற்காக மதிய உணவு எப்படி வந்ததது என்பதுதான் நமக்கு விளங்கவே இல்லை. ஆனால் அது மிக நல்ல விளைவுகளைத் தருகிறது என்பதோடு அது அவசியமானது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
.காலை உணவும் அவசியம்தான். மதிய உணவும் அவசியம்தான். ஆனால் காலை உணவின் அவசியம் என்பது மதிய உணவின் அவசியத்தைவிடக் கொஞ்சம் கூடுதலானது. இதை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
தொடர்ந்து இதைக் கேட்டுக் கொண்டே இருந்தோம். முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த இரண்டு குறித்தும் கவலைகள் இருந்திருக்க வேண்டும்
1) காலை உணவு இன்றி பள்ளிக்கு வரும் குழந்தைகளின் உடல் நலன்
2) காலை உணவு இல்லாததால் காலை பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள்
இவை அவருக்களித்த வலியின் விளைவாக ”காலை சிற்றுண்டித் திட்டம்” வருகிறது.
1) திங்கள் - - - - - ரவை உப்புமா
2) செவ்வாய் - - - சேமியாக் கிச்சடி
3) புதன் - - - - - - அரிசிப் பொங்கல்
4) வியாழன் - - - அரிசி உப்புமா
5) வெள்ளி - - - - கோதுமை ரவா கிச்சடி அல்லது உப்புமா
இருபது குழந்தைகளுக்கு ஒரு கிலோ என்ற ரேஷன் அளவில் மிக நல்ல முறையில் செயல்படுகிறது.
பல மாவட்டக் கல்வி அலுவலர்களும் முதன்மைக் கல்வி அலுவலர்களும் சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், தரமான சிற்றுண்டி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் தீவிரமாகக் கண்காணிப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இது மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தியதோடு அவர்களது உடல் நலனையும் இந்தத் திட்டம் உறுதிப்படுத்தியது.
காலை உணவு இல்லாமல் வீடு தங்கும் மாணவர்கள் குண்டு விளையாடுவதில் ஆரம்பித்து சமூகச் சீரழிவுச் செயல்களை நோக்கி நகர்வதில் இருந்து அவர்களைப் பாதுகாத்தது.
இப்போது அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது அரசு. இது மிக நல்ல விளைவுகளைத் தரும்.
ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களது உயர் கல்விக்காக மாதம் ஆயிரம் ரூபாயை அரசு வழங்கி வருகிறது.
இதனால் கல்லூரியில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
இதன் பிரமாண்டமான விளைவு இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் முழுமையாகத் தெரிய வரும்.
இப்போது இந்தத் திட்டத்தை ஆண் குழந்தைகளுக்கும் விரிவு செய்திருக்கிறது அரசு.
1) கட்டணமில்லாத பள்ளிக் கல்வி
2) விலை இல்லாத புத்தகங்கள், நோட்டுகள் மற்ற பொருட்கள்
3) விலை இல்லா மிதி வண்டி, கணினி
என்று பள்ளிக் கல்வியை அவனது உரிமை ஆக்கிய அரசு
அவனது கல்லூரிப் படிப்புக்காக
1) கட்டணம் இல்லாப் பேருந்து
2) ஸ்காலர்ஷிப்
இவற்றோடு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையையும் அறிவித்திருக்கிறது. இது இளைஞர்கள் இல்லாப் பாலக்கட்டைகளை உருவாக்கும்.
இன்றைய சமூகச் சீர்கேடுகளுக்கு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் உள்புறங்களில் உள்ள பாலக்கட்டைகளின் பங்களிப்பு என்பது கனமானது.
பாலக்கட்டைகளில் இருந்து இளைஞர்களை அப்புறப்படுத்தி விட்டால் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.
எல்லா இளைஞர்களும் பாலக்கட்டைகளுக்கு வருகிறார்களா என்றால் இல்லை. பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்கள் மற்றும் பள்ளியோடு கல்வியை நிறுத்திக் கொண்டவர்களிடம் இருந்துதான் பாலக்கட்டைகள் தமக்கான உறுப்பினர்களைக் கண்டெடுக்கின்றன.
இப்படியாக படிப்போடு ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு உறவை முறித்துக் கொண்டு, வேலைக்கும் போகாதவர்களிடம் இருந்துதான் தமக்கான சொந்தங்களை பாலக்கட்டைகள் சுவீகரிக்கின்றன.
இப்படியாக எந்த நோக்கமும் இல்லாமல் பாலக்கட்டைகளில், மரத்தடிகளில் கூடுகிற குழந்தைகள் பலர் மிக எளிதாக போதைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள்.
போதைக்காகவும், தாம் என்ன செய்கிறோம், அதன் பின்விளைவுகள் என்ன என்பது தெரியாமலும் இந்தக் குழந்தைகளில் பலர் தீய சக்திகளோடு கரம்கோர்த்தும் விடுகின்றனர்.
அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டம் பிள்ளைகளைக் கல்லூரிகளில் குவிக்க உதவும். பாலக் கட்டைகள் காலியாகும். அதன் விளைவாக குற்ற எண்ணிக்கைகள் குறையும்
மூன்றாம் பாலினத்தவர் குறித்த இந்த அரசின் அக்கறை மெச்சத் தக்கது.
எல்லாக் குழந்தைகளும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோதான் பிறக்கிறார்கள். வாலிபத்தில் அல்லது வாலிபத்தை நெருங்கும்போதுதான் திருநங்கைகளும் திருநம்பிகளும் அடையாளப் படுகிறார்கள்
ஒவ்வொருவரிடத்திலும் ஆண்தன்மையும் இருக்கும், பெண்தன்மையும் இருக்கும்.
ஆண் உடலும் ஆண்தன்மை பேரதிகமாகவும் இருந்தால் ஆண். பெண் உடலும் பெண்தன்மை அதிகமாகவும் இருந்தால் பெண். ஆண் உடலில் பெண் தன்மை அதிகம் இருந்தால் திருநங்கை. பெண் உடலில் ஆண் தன்மை இருந்தால் திருநம்பி என்று பொதுவாகக் கொள்ளலாம்.
பெண் சிசுக் கொலை என்பது கிட்டத்தட்ட முற்றாக நின்று போயிருக்கிறது. ஆனால் அனைத்து திருநங்கைகளும் தங்களது குடும்பத்தால் ஒதுக்குதலுக்கு ஆளாகிறார்கள். தன் பிள்ளை திருநம்பி என்று தெரிதால் ஒன்று கொன்று விடுவார்கள் அல்லது ஒதுக்கி விடுவார்கள்.
இத்தகைய சூழலில் மூன்றாம் பாலினத்தவருக்கான கல்வி உரிமை குறித்த அரசின் திட்டம் வணங்கி வரவேற்பதுக்குரிய ஒன்று
எனக்கொரு மகன், ஒரு திருநங்கை என்று இயல்பாக பெற்றோர் சொல்லும் சூழலை இது உருவாக உதவும்
இவ்வளவும் சொன்னாலும் அரசிடம் நமக்கான இரண்டு கோரிக்கைகள் உள்ளன
1) காலைச் சிற்றுண்டியை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவு செய்ததுபோல், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஆண் குழந்தைகளுக்கும் மாதம் 1000 ரூபாய்த் திட்டத்தை விரிவு செய்ய வேண்டும்
2) இத்தகையத் திட்டங்களால் கல்லூரிகளில் ஏற்படும் நெரிசலைத் தடுக்க அரசுக் கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும்
- காக்கைச் சிறகினிலே மார்ச் 2024
All reactions:
Varthini Parvatha, அம்பிகா குமரன் and 12 others

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...