Wednesday, January 31, 2024

36

 
காடென்பது
கலைந்து கிடக்கும்
ஒழுங்கு

Tuesday, January 30, 2024

இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது

”இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது என்ற வெறி என் நெஞ்சில் எழுந்தது” என்று

தனது வாக்குமூலத்தில் கோட்சே கூறியதாக தனது “கோட்சேயின் குருமார்கள் நூலின் 38 வது பக்கத்தில் தோழர் அருணன் கூறுகிறார்




ஏன் அந்தக் கிழவன் மீது இவ்வளவு வன்மம் அவனுக்கு?

அதற்கான காரணத்தையும் அவன் தனது வாக்குமூலத்தில் கூறுகிறான்

அதையும் தோழர் அருணன் அதே நூலின் 37 வது பக்கத்தில் வைத்திருக்கிறார்

இந்த தேசத்திற்கு காந்தி துரோகம் செய்துவிட்டதாகப் பொதுவான குற்றச்சாட்டை வைக்கும் அவன் அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகளை வைக்கிறான்

1 இந்தியை தேசிய மொழியாக முன்மொழிந்துவந்த காந்தி இஸ்லாமியர்களை திருப்த்திப்படுத்துவதற்காக இந்துஸ்தானியை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்

2 வந்தேமாதரம் பாடலை அவர் விரும்பவில்லை

3 பசு பாதுகாப்பிற்காக வாய்கிழிய பேசும் காந்தி உருப்படியாக எதுவும் செய்யவில்லை

4 அவரது உண்ணாவிரதங்கள் இந்துக்களை மிரட்டவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவுமே இருக்கின்றன

ஆக, காந்தியின் கொலையில் மொழியும் உண்டு என்பது தெளிவாகிறது

இது குறித்தான ஒரு கட்டுரையை எனது “காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” நூலில் வைத்திருக்கிறேன்

மற்றக் குற்றச்சாட்டுகளே RSS அமைப்பின் இன்றைய கொள்கை நீட்சியாக உள்ளன

14.01.1948 அன்று காந்தியாரின் உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்

அன்று அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களில் படேலும் ஒருவர்

வந்தவர்கள் யாரும் காந்தியின் கோரிக்கையை (55 கோடி) ஏற்கவில்லை

காந்தியிடம் படேல் அவர்கள் கொஞ்சம் கோவப்பட்டதாகவே தோழர் அருணன்வழி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது

நம்பிக்கை இழந்த கிழவன் 

“நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல” என்று கூறுகிறார்




30.01.1948 அன்று பிற்பகல் காந்தியை கடைசியாக சந்திக்க வந்தவர் படேல்

“இப்போது நீங்கள் என்னைப் போகவிட வேண்டும்” என்று படேலிடம் விடைபெற்றுக்கொண்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் புறப்படுகிறார்

சற்று நேரத்தில் அனைவரிடம் இருந்தும் அவரை விடைபெறச் செய்தான் கோட்சே

”நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல”

காந்தியின் இந்த சொற்கள் படேலின் இறுதி மூச்சுவரை அவரது காதில் ஒலித்துக் கொண்டேதான் இருந்திருக்கும்

இது RSS செயல் என்று நேரு சொன்னதைக்கூட விட்டுவிடலாம்

முள்ளாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரபிரசாத் அவர்கள் 13.10.1948 அன்று அன்றைய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்

அந்தக் கடிதத்தில் காந்தியைக் கொன்றவர்கள் வைக்கிற வாதங்கள் தம்மை காயப்படுத்துவதாகவும், கொலையாளியை ஒரு வீரநாயகனாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறுகிறார்

மே 14 அன்றும் அவர் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்

அதில்,

RSS கலகத்தை இஸ்லாமிய உடை அணிந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தன்னிடம் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்

இதை கூறியவர் ராஜேந்திரப்பிரசாத்

இவை எல்லாம் நடக்கத் தொடங்கி இருக்கின்றன

இந்து ஆலயங்களி இறைச்சித் துண்டை வீசிவிட்டு இஸ்லாமியர்கள் வீசியதாகவும்

தங்கள் வீடுகளுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பழியை இஸ்லாமியர்கள்மீது போடுவதையும் செய்வதுகூட 

ராஜேந்திரபிரசாத் அவர்கள் சொன்னதன் நீட்சிதான்

நல்வாய்ப்பாக இவர்கள் அவர்களாகவே அம்பலப்பட்டுப் போவதுதான்

வாக்குமூலத்தில்

சுதந்திரத்திற்கு காந்தி காரணமல்ல என்று கோட்சே கூறுகிறான்

அவனது பட்டியலில் படேலின் சகோதரர் விதல்பாய் படேலின் பெயரும் இருந்தது

அவன் அப்படிக் கூறுகிறான்

ரவியும் காந்தி காரணமல்ல என்கிறார். இப்பைப் பச்சையாக சொல்லமுடியாது என்பதால் காந்தி மட்டுமல்ல போசும்தான் என்கிறார்

03.02.1948 இல் இரண்டு காரணங்களுக்காக படேல் ராஜினாமா செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்

1 ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ஒரு வாசகர் காந்தியைக் காக்கத் தவறிய படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது

2  இதுகுறித்த தோழர் சுந்தரய்யாவின் பேச்சு

ஆக, கோட்சே என்ற RSS காரனால் காந்தி கொலைசெய்யப்பாட்டார் என்பது தெளிவு

அவன் விரும்பிய மதவெறிகொண்ட ஆட்சிக்கான பாசிச சக்திகள் இப்போது முயற்சி செய்து வருகிறார்கள்

அன்போடும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டியும் எதிர்கொள்வோம்

 


Monday, January 29, 2024

“மாப்ள பேச்சைக் கேட்க வந்தீங்களா சார்”

 


தோழர் முத்துமாறன் ஒரு பேராசிரியர். ஆர்வத்தோடு இயங்கக்கூடியவர். எந்த நேரமும் புன்னகைத்தபடியே இருப்பவர்

27.01.2024 அன்று நடந்த புத்தகத் அறிமுகக் கூட்டத்தில் அவரும் உரையாற்றினார்

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் ”இவர் என் மாமனார்” என்று அவரை அறிமுகப் படுத்துகிறார்

வணங்கிவிட்டு, “மாப்ள பேச்சைக் கேட்க வந்தீங்களா சார்” என்று கிண்டலாக கேட்கிறேன்

“தான் எங்குப் பேசப் போனாலும் கேட்கத் தனது மாமனார் வந்துவிடுவார் என்ற செய்தியை அப்படி ஒரு மலர்ச்சியோடு முத்துமாறன் சொல்ல

அவர் பேசறது கேட்கப் பிடிக்கும் என்று சொல்லும்போது தோழர் முத்துமாறன் மாமனார் முகத்திலும் மலர்ச்சி

இது அபூர்வமாக வாய்ப்பது

இப்படியே மகிழ்ந்திருங்க

37

 
அந்திக் கருக்கையில்
வெளிச்சத்தை
அள்ளிக்கொள்ள வேண்டுமென்ற
ஆதி நிபந்தனையோடு
என் சாட்சியாக
தாங்கள்
நிழல் உலர்த்தும் இடம்போக
மீதித் தோப்பை
தன் வெளிச்சத்தை உலர்த்திக் கொள்வதற்கான
சூரியனோடான ஒத்தியை
நீட்டித்துக் கொண்டது
மூத்த மரம்

Sunday, January 28, 2024

வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்த நூல் சாட்சி

 
கீழவெண்மணிக்கு சென்று அந்தப் போராட்டக் களத்தின் எஞ்சிய சாட்சியாக இருக்கும் தோழர் கோ.பழனிவேல் அவர்களை ஆளுநர் சந்திக்க இருப்பதாக செய்திகள் கசிவதையும்

தோழர் பழனிவேல் ஆளுனரைச் சந்திக்க தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள செய்தியையும் 28.01.2024 அன்று காலை நான் வாசித்ததும்



”மரிச்ஜாப்பி” நூலை எழுதிய தோழர் ஹரிலால் நாத் அவர்களின் முன்னுரையையும்

அதன் தமிழ் பெயர்ப்பாளர் தோழர் ஞா.சதீஸ்வரன் அவர்களின் முன்னுரையும்





இன்று இரவு வாசித்ததும் மிகவும் தற்செயலாகத்தான்

இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதையும், 

இன்றைய தீக்கதிரில் வந்த செய்தியை மிக எச்சரிக்கையோடு இடதுசாரிகள் அணுக வேண்டும் என்று இந்த இரண்டு முன்னுரைகளும் நமக்கு தருவதையும் என்னால் உணர முடிகிறது

‘மரிச்ஜாப்பி’ தமிழில் வருவதற்கு திருவாரூரில் நடந்த ஒரு படிப்பு வட்டத்தில் நடந்த ஒரு உரையாடலில் ஒரு குழந்தைக் கேட்ட ஒரு கேள்விதான் காரணமென்பது சில கோரிக்கைகளை நம்மிடம் வைக்கிறது

திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு படிப்பு வட்டத்தை நமது பிள்ளைகள் நடத்தி வருகிறார்கள்

ஒரு நாள் “கீழவெண்மணி” குறித்து உரையாடல் நடக்கிறது

அப்போது ஒரு குழந்தை “மரிச்ஜாப்பி”யில் லட்சக்கணக்கான அகதிகளை அன்றைய இடதுசாரி அரசாங்கம் கொன்று அழித்ததாமே என்ற ஒரு கேள்வியை வைக்கிறார்

அதுவரை,

அங்கிருந்தவர்களில் பலருக்கு மரிச்ஜாப்பி என்றால் என்னவென்றே தெரியாது

ஆக அந்தக் கேள்விதான் தோழர் சத்தீஸ்வரனை இதுநோக்கி உந்துகிறது

அந்தக் கேள்விதான் இந்த நூல் தமிழில் வருவதற்கு காரணமாக அமைகிறது

மாநிலத்தில் மம்தா அரசங்கமும்,

ஒன்றியத்தில் பாஜக அரசாங்கமும் வந்த பிறகு

மேற்கு வங்கத்தில் மரிச்ஜாப்பியில் அகதிகளை கொன்று அழித்ததாக குவியல் குவியலாக புனைந்து எழுதப்பட்ட வதந்திகள்தான் தோழர் ஹரிலால் நாத் அவர்களை இந்த நூலை எழுதத் தூண்டியது

ஆக வதந்திகள் இந்த மூல நூலையும்

வதந்திகளைக் குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்வி நூலின் தமிழாக்கத்தையும் கொண்டு வந்திருக்கிறது

வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது?

என்பதற்கு இந்த நூல் சாட்சி

உரையாடல்களை, கேள்விகளை ஊக்கப்படுத்துவோம்

ரவி கீழவெண்மணிக்குப் போக நினைப்பது என்பதே நாம் எச்சரிக்கையோடு அதன் வரலாற்றினை இன்னும் பேரதிகமாக உரத்து பேச வேண்டும் என்பதையும்  நமக்கு உணர்த்துகிறது 

“ஒங்கமேல கோவங்கோவமா வருது அங்கிள்”

 
இப்போதெல்லாம் லேஷந்த் சார் மீண்டும் 
அடிக்கடி வீட்டிற்கு வருகிறார்

வீடே வெளிச்சமாகிறது

“ஒங்கமேல கோவங்கோவமா வருது அங்கிள்”

ஏன் சாமி?

”பின்ன, ஒங்களுக்கு மட்டும் சண்டே, மண்டே, 
ட்யூஸ்டே, எல்லா டேசும் லீவு தராங்க” 

கோவங்கோவமா = பொறாம பொறாமையா

சுந்தர சோழன்

 
சுந்தர சோழன்
12/44 முதல் தளம்
தென் மேற்கு போக் சாலை
தி நகர்
சென்னை 600017
9840035470


38

 

வெளிச்சமாக இருக்கிறது எங்கும்

சர்ப்பம் தோலுரித்து
புதுத்தோல் எடுப்பதுபோல்

உன் பாசுர சுவர்
உரசியுரசி
என்னை உரித்து
புது நானான எனக்கு

வெளிச்சமும் வெப்பமும்
கூச்சத்தையும் எரிச்சலையும் தருகிறது

கொஞ்சம் இருட்டாக வா

Friday, January 26, 2024

அது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான்

 

பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் “சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்” என்ற நூலின் தோழர் த.நீதிராஜன் அவர்கள் மொழிபெயர்க்க சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டிருக்கிறது
தனது மொழிபெயர்ப்பிற்கான தனது முன்னுரையில் தோழர் நீதிமணி சொல்பவற்றில் இரண்டு முக்கியமானவை
ஹிட்லர் இரண்டாம்தர மக்கள் என்று வகைப்படுத்திக் கொன்ற மக்களில் யூதர்களோடு ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உண்டு என்பது ஒன்று
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சாதிய சமூகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஓடிப்போன இந்திய மக்களில் ஜெர்மனுக்கு போனவர்கள் அவர்கள்
இரண்டாவதாக அவர் கூறுவது மிக முக்கியமானது
இந்திய சனாதனத்தின் ஜூனியர்தான் நாஜிசம்
சாதியாய் வகைப்படுத்தி இரண்டாந்தர மக்களாக சேரிக்குள் மக்களை அடைத்து வைக்கும் இந்தியக் கருத்தியல்தான் சனாதனம்
இப்படித்தான் ஹிட்லரும் யூதர்களை செய்தான்
இந்திய சனாதனத்தால் இந்தக் கருத்தியலை நிரந்தரப்படுத்த முடிந்தது
அது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான்
மிக நல்ல நூல்
இப்போது எந்தப் பதிப்பகத்தின் வழி கிடைக்கிறது என்று தெரியவில்லை

எத்தனை முறை யெச்சூரி திருச்சி வந்திருப்பார்

 

காலையில் இருந்து அன்ன ஆகாரம் ஏதும் இல்லை
எழுந்தால்தானே
முடியவில்லை
அதிகாலை விக்டோரியாவை பேர்ந்து ஏற்றிவிட்டு வந்து படுத்தால்
ஜிகு ஜிகுவென்று ஜுரம்
சளியால் தொண்டையில் சன்னமாக சிக்கல்
திருச்சி மாவட்ட CPM செயலாளர் ஜெயசீலன் அழைத்து
இன்று நடைபெறும் விசிக மாநாட்டில் தோழர் யெச்சூரி உரையை மொழிபெயர்க்க வந்துடுமாறு அழைக்கிறார்
நிலைமையை சொல்கிறேன்
எத்தனை முறை யெச்சூரி திருச்சி வந்திருப்பார்
உடம்பும் தொண்டையும் சரியில்லாதபோதுதான் அழைப்பு வர வேண்டுமா?
இப்படி ஒரு வாய்ப்பு வரும்போதுதான் உடம்பு பழுதாக வேண்டுமா?
என்னமோ போங்க

40

 
யாரோ ஒருவன்
கொஞ்சம் கடல் அள்ளி
கொண்டைக் கடலையாக்க

யாரோ ஒருவன்
கொண்டைக் கடலையான
அந்தக் கொஞ்சம் கடலை சுண்டலாக்க

யாரோ ஒருவன்
சுண்டலான
அந்தக் கொஞ்சம் கடலை
ஒரு
வாளியில் அடைக்க

கடல் பார்க்கப்போன நான்

பத்து ரூபாய்க்கு வாங்கிய
ஒரு பொட்டல்ம்
சுண்டலெனும் கொஞ்சம் கடலை

தின்னுவதா
பருகுவதா
குழப்பத்தில் நிற்கிறேன்

Thursday, January 25, 2024

மயில்போல பொண்ணு ஒன்னு

 
மயில்போல
பொண்ணு ஒன்னு

ஏந்தாயி
ஏந்தாயி இப்படி



ஆனாலும் கிழவனை அழகாத்தான் கொடுத்திருக்க

 

May be an image of 1 person


போ சாமி,
போய் உன் வேரைத் தேடு
இப்படி ஒரு படம் செய்வதற்கான தொழில் நுட்ப அறிவு உனக்கு வருவதற்கான காரணங்களில் ஒருவன் இந்தக் கிழவன் என்பதும்
உனக்கு அறிவே வந்துவிடக் கூடாது என்று போராடியவர்களும்
நீ அறிவைப் பெற்றதும்
உன் அறிவு கொண்டே
உனக்கு அறிவு வரக் காரணமான இந்தக் கிழவனை இப்படிக் கேவலப் படுத்தத் தூண்டியவர்களும் அவர்கள் என்பதும் தெரிய வரும்
போ சாமி,
போய் உன் வேரைத் தேடி விழிப்படைய வழி தேடு
ஆனாலும் கிழவனை அழகாத்தான் கொடுத்திருக்க

சாண்டக் குடிக்கி




“அவள்
வாய்வரை வந்து
விழுங்கிய
சொற்களின்
எச்சங்கள்
கண்ணீராய்க்
கரைகிறது” 

என்று தனது “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” தொகுப்பில் எழுதி இருப்பாள் இளமதி

ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிராக,

ஆதிக்கத்திற்கு எதிராக தொண்டைவரை வரும் சினச் சொற்கள் அதற்குமேல் கண்ணீராக மாறிவிடும் என்று இதைக் கொள்ளலாம்

ஒரு பெண்ணின் சினம் கண்ணீராக மாறிவிடும் என்பதை

இயலாமையாகவும் கொள்ளலாம்

அல்லது,

அவளது கண்ணீரை ஆணாதிக்கத்திற்கு எதிரான வாள் என்றும் கொள்ளலாம்

“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்பார்கள்

ஆனால்

தொண்டை வரை அல்ல

கடுஞ்சொற்களாகவே ஆணாதிக்கத்தின் மீதும் உழைக்கும் பெண்கள் பேசி இருக்கிறார்கள் 

ஆணாதிக்கத்தின் மீதான சம்மட்டியாகத்தான்  “சாண்டக்குடிக்கி” என்ற கெட்ட வார்த்தையே வந்தது என்று அந்த வார்த்தை வந்த வரலாற்றினை

20.01.2024 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற  அரசியல் வகுப்பில் வகுப்பெடுத்த திருச்சி புறநகர் மாவட்டத்தின் செயலாளர் தோழர் ஜெயசீலன் கூறினார்

எங்க அம்மாயி “சாண்டக் குடுக்கி” என்ற கெட்ட வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தும்

கிழவிக்கு இந்த ஆங்கிலம் மிக நன்றாக வரும்

சாண்டு என்றால் மூத்திரம்

ஆகவே ‘சாண்டக் குடிக்கி’ என்பதை மூத்திரக் குடிக்கி என்றும் கொள்ளலாம்

ஆனால் கிழவி ஒரு போதும் இந்த வார்த்தையை பெண்கள் மீது பிரயோகப் படுத்தியதே இல்லை

சரி, கிழவிக்கு ஆண்கள்மீது உள்ள கோவம் அப்படிப் போல என்று நினைத்துக் கொள்வேன்

தோழர் ஜெயசீலன் சொன்ன வரலாறு சிலிர்க்க வைத்தது

தஞ்சையில் ஆண்டைகளுக்கு தமது பண்ணையாள் மீது கோவம் வந்தால்
விளாசுவார்களாம்

அப்போது அந்தப் பண்ணையாளின் மனைவியை அழைத்து அவளது கணவன் அடிபடுவதை வேடிக்கைப் பார்க்கச் செய்வார்களாம்

ஒருக் கட்டத்தில் ஒரு கலையத்தைக் கொடுத்து அவனது மனைவியை அதில் அவளது மூத்திரத்தைப் பிடித்துவரச் செய்வார்களாம்

அந்த மூத்திரத்தை அவனைக் குடிக்கச் செய்வார்களாம்

ஒருநாள் இரவு பண்ணையாள் ஒருவன் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடிக்க ஆரம்பித்திருக்கிறான்

அவன் அன்று காலை தனது பண்ணையாரிடம் அடிபட்டு தன் மனைவியின் மூத்திரத்தையும் குடித்திருக்கிறான்

அடி தாங்காத அந்தப் பெண் ஒரு கட்டத்தில்

காலையில அந்த மிதி வாங்குன என் சாண்டக் குடிச்சவனே. ஆம்பளன்னா உன் வீரத்தை அங்க போய்க் காட்டு என்றாளாம்

ஆக, சாண்டக் குடிக்கி என்பது பெண்ணெழுச்சியின் ஒரு கூறு  

41

 
அகப்படவில்லையா
படிக்கிறமாதிரியெதுவும்

முடித்துவிட்டானா ஏற்கனவே
இருக்கிறதனைத்தையும்

அல்லது இதுதானா
அவனது குணமே

எதுவானால் என்ன

நிம்மதியை 
வைத்துவிட்டுப் போயிருக்கிறான்

புரட்டிக் கொண்டிருந்த
புத்தகங்களில் எதையும்
சுட்டெடுத்துப் போகாத புத்தன்

Wednesday, January 24, 2024

சுபாசுக்கு வைக்காமல் பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி

 

சுதந்திரத்திற்கு காரணம் காந்தியல்ல சுபாஷ்தான் என்பதை ஏற்பதில் சங்கடமில்லை
யார் கூட
யார் குறைச்சல் என்பதல்ல எமக்கு பிரச்சினை
அது உண்மையெனில்
சுபாசுக்கு வைக்காமல் பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி

42

 
மேற்கிருந்து கிழக்காக நானும்
கிழக்கிருந்து மேற்காக
ஒருவரை ஒருவர் கடக்கிறோம்
என்ன
சென்றுகொண்டிருந்த நானும்
வந்துகொண்டிருந்த அவரும்
இப்போது
சென்றுகொண்டிருக்கிறோம்

அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

21.01.2024 அன்று நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம்

காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம்
கண்ணில் படுபவர்கள் எல்லாம் புன்னகைக்கிறார்கள்
தலையை அசைத்து “வாங்க” சொல்கிறார்கள்
இன்னும் சிலர் கையெடுத்து வணங்கி வரவேற்கிறார்கள்
யாரென்றே தெரியாது
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது “சாப்டீங்களா” கேட்கிறார்கள்
நண்பரின் நெருங்கிய தோழர்கள் 75 பேர் யூனிஃபார்மில் சுழல்கிறார்கள்
கொஞ்ச நேரத்தில் எங்களை அறியாமலே நாங்களும்
“வாங்க” சொல்கிறோம்
“சாப்டீங்களா” கேட்கிறோம்
Kalai Mani நான்கைந்து பேரை ”வாங்க சாப்பிடலாம்” என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போகிறாள்
யாரென்று அவளுக்கும் தெரியாது
அவள் யாரென்று அவர்களுக்கும் தெரியாது
பாப்பாவின் அம்மாவைப் பார்த்து
“ஏம்மா, கல்யாணம் அவளுக்கா? உனக்கும் உங்க வீட்டுக்காரருக்குமா. சும்மா மெதக்கறீங்க” என்று கேட்கிறேன்
வெட்கப் படுகிறார்
அது ஒரு எளிய திருமணம்
சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமல்ல
கலந்து கொண்ட எல்லோரது கண்களிலும் “அன்பு” தென்பட்டது
எல்லோரிடத்தும் மகிழ்ச்சி
பேரனந்தம்
அப்படி ஒரு நிறைவை எல்லோரிடத்தும் காணமுடிந்தது
இவை அத்தனையும் எங்களையும் அப்பிக் கொண்டது
அப்பிக்கொண்ட அந்த அந்த அன்பும் சமாதானமும் இந்த வார்த்தையை தட்டச்சு செய்கிறவரை இருக்கிறது
இன்னும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும்
காரோட்டிய பிள்ளைக்கு அழைப்பு
மகிழ்ந்து பேசுகிறான். அப்படி கவனிச்சாங்கப்பா, சந்தோசம்னா சந்தோசம், வந்து சொல்கிறேன் என்கிறான்
ஒரு எளிய திருமணம்
போதாமை இருக்கும்
கடன் இருக்கும்
எல்லாம் கடந்து
அந்த அன்பு, புன்னகை, மகிழ்ச்சி
நிறைவு
அன்பிற்குரிய என் நண்பர்களே
அவ்வளவு பெரிய ஆலயத் திறப்பு
எவ்வளவு அதிகமான அன்பைத் தந்திருக்க வேண்டும்
எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்
எவ்வளவு ஆழமான சமாதானத்தைத் தந்திருக்க வேண்டும்
ஆண்டவன் வீடு என்கிறீர்களே
எனில்,
அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

ஏன் இவை எல்லாம் விளையவில்லை?

ஏன் மண்ணெங்கும் வெறுப்பு?
இப்போதும் சொல்கிறோம்
ஆண்டவன் இல்லை
ஆனால் உண்டு என்று நம்பும் உங்கள் நம்பிக்கையை ஏற்கிறோம்
உங்கள் தவறைச் சுட்டினால் ராமனை குற்றம் சொல்கிறோம் என்று தயவு செய்து திசை திருப்பாதீர்கள்
அந்த ஆலயத்தின் மீது எங்களுக்கு புகார் இல்லை
கட்டப்பட்ட இடம் மீதுதான்
இப்போதாவது யோசியுங்கள்
தவறு புரியும்
எல்லோரையும் அரவணைத்து எதிர்காலத்தை அணுகுங்கள்
”யாரொடும் பகை கொள்ளலன்” என்பது நீங்கள் கொண்டாடும் கம்பன் சொன்னது
அன்பு
அன்பு மட்டுமே இந்தியாவைக் கட்டும்

Tuesday, January 23, 2024

அன்போடு எதிர்கொள்வோம்

 

அப்பாவின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது
மேலே பைபிள் வைத்திருக்கிறார்கள்
என்னைவிட வயது மூத்த, அப்பாவிடம் படித்த ஒரு அண்ணன் எட்டாம் வகுப்பு புத்தகங்களை எடுத்து வந்து பைபிளை ஒட்டி அடுக்குகிறார்
என் தோளைப் பிடித்தபடி “எட்டாங்கிளாஸ் சார்”
ததும்புகிறார்
தெருக்காரர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று அழைப்பதாக கீர்த்தி சொல்கிறாள்
போகிறேன்
தம்பி
சொல்லுங்க அண்ணே
அது வந்து, அப்பா எங்களோடதான் ஒன்னு மண்ணா இருந்தாங்க
தெரியுங்ககண்ணே
அப்பாவ உரிய மரியாதையோட நாங்களே ஈமக்காரியம் செய்ய அனுமதிக்க வேண்டும்
அப்பா இந்தத் தெருவோட சொத்து
தெருவே செலவு உள்ளிட்டு எல்லாத்தையும் செய்ய நீங்க அனுமதிக்க வேண்டும்
சரிங்கண்ணே
கொஞ்ச நேரத்தில் தேங்காய் உடைக்கிறார்கள்
பொதுவாகவே எங்கள் குடும்பத்தை சாதி கெட்ட குடும்பம், மதங்கெட்ட குடும்பம் என்று சொன்னவர்கள் உண்டு
சாதி கெட்டு, மதம் கெட்டு இருப்பதில் திமிர் உண்டு
இந்து முறைப்படி இறுதிச் சடங்கு என்றதும் உறவினர்கள் சிலர் கோவத்தோடு கிளம்புகிறார்கள்
ஒன்றே ஒன்றுதான்
அவர்கள் தழு தழுத்து என்னிடம் கேட்டது அன்பின் உச்சம்
உடனே நான் அதை ஏற்றதும் அன்புதான்
எது வேண்டுமானாலும் நடக்கட்டும்
அன்போடு எதிர்கொள்வோம்

கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது

 



பெரம்பலூரில் ”தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” திறக்கிறார்கள்.

அதற்கென்ன?

வீடு வீடாக வந்து அழைப்பிதழைத் தந்து போனார்கள்

அதற்குமென்ன?

இருக்கிறது

கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது

தேவராயன் நகைக் கடை சென்னை சில்க்சின் பகுதி

அவர்களுக்குத்தான் ”ஸ்ரீகுமரன் தங்க மாளிகை” என்று இருக்கிறதே. பிறகு ஏன் “தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” என்று பெயர் வைக்க வேண்டும்

வேறொன்றும் இல்லை,

இவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நகைக் கடைகளை திறக்க இருக்கிறார்கள். அந்த மக்கள் தமிழ்க் கடவுளை ஏற்கத் தயங்குவார்கள் என்பதாலும்

தங்க மாளிகை என்பதை அவர்கள் உச்சரிக்க ஏதுவாக இல்லாததாலும்

தேவராயன் என்று பெயரை மாற்றி இருக்கிறார்கள்

 




43

 

பெய்துகொண்டிருந்த மழை
நிற்கத் துவங்குவதாகவும்

நின்று கொண்டிருந்ததால்
தனக்கு கால் வலிப்பதாகவும்
பாட்டி நாற்காலியில் அமர
நின்றால்
மழைக்கும் கால் வலிக்குமே என்று
நாற்காலி வரைகிறாள் பேத்தி

Monday, January 22, 2024

மாறாக வெறுப்பல்லவா இருக்கிறது

 

இதே மாதிரி ஜனவரி மாதத்தில் ஒருநாள்
தங்கை தீபாவின் பையனுக்கு மேஜர் அறுவை
பிறந்து மூன்றாவது நாள்
தீபா மணப்பாறையில் ஒரு மருத்துவமனையில்
குழந்தை திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில்
மால் ரொட்டேஷன்
பள்ளிக்கு வந்து
இருக்கிற சன்ன சன்னமான வேலைகளை அழுதுகொண்டே முடித்துவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்கையில்
ராஜா வந்து விடுப்பு கேட்கிறான்
எங்க சாரோட பாப்பாக் குழந்தைக்கு ஆபரேஷன் சார்கூட இருக்கனும்
பொத்துக் கொள்கிறது
அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேன்
நாற்பது அறுபது என்பதுதான் வாய்ப்பு என்பதை நானும் தோழர் கணேசும் மட்டுமே அறிவோம்
அப்போது ஒரு அம்மா வருகிறார்
தெரிந்தவர்தான்
ரெண்டு நாளா அழுதுட்டே இருக்கியாமே சாமி, கொஞ்சம் குனி என்கிறார்
நெற்றியில் துன்னூறை கோடாக கிழிக்கிறார்
நீ நம்ப மாட்ட, ஆனா கிழக்கமா திரும்பி இருக்கிற ஏந்தாயி கைவிடமாட்டா
அவளாச்சு நானாச்சு என்கிறார்
கை எடுத்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டு
சுந்தரபாண்டியனை அழைத்து அநேகமாக கல்விச் சான்றிதழ்தான் கேட்பார், கேட்டால் செலவத்திடம் கையொப்பம் பெற்று அந்த அம்மாவிடம் கொடுக்குமாறு கூறுகிறேன்
ராஜா வண்டியை எடுக்கிறான்
அந்த அம்மா அறியாதவாறு துன்னூறை அழித்துக் கொண்டு கிளம்புகிறேன்
போகும் போதும் விசும்பி இருக்கிறேன்
”ஒன்னும் ஆகாது சார், நான் கிறிஸ்டியன்தான் ஆனா அந்த அம்மா வேண்டுதலே போதும் சார். பவரான ஆத்தா சார்” என்கிறான் ராஜா
இது பக்தி
இது சக மனிதன்மீதான அன்பு
இது சக மனிதனின் துயர் நீங்குவதற்கான வேண்டுதல், பிரார்த்தனை
”ஆத்தா” என்ற அந்தத் தாயின் கத்தல் நம்பிக்கை
உங்களது ஜெய்ஸ்ரீராம் கோஷத்தில் இவை ஏதும் இல்லை நண்பர்களே
மாறாக வெறுப்பல்லவா இருக்கிறது
இதுவும் ஒரு டிசம்பர் ஆறுதான்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...