Saturday, October 10, 2015

2 சாதி அசிங்கம்

“In a suspected case of honour killing, a 20 – year old girl was hacked to death by her grand father over her love affair with a youth from a different caste.

The accused, identified as veerasamy (66) of andipalayam near virudhachalam, surrendered before cholatharam police”

என்ற செய்தியைத் தருகிறது 23.09.2015 அன்று வெளி வந்த THE HINDU.

அந்தச் செய்தியை தமிழ்ப் படுத்தினால் வேற்று சாதிக்காரனை காதலித்த ரமணி தேவி என்கிற இருபது வயதேயான தனது பேத்தியை அருவாளால் வெட்டிக் கொன்ற வீராசாமி என்கிற அறுபத்தியாறு வயது கிழவன் விருதாச்சலம் அருகிலுள்ள சோலத்தரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்று வரும்.

இந்தக் கொலையோடு ஒரு தற்கொலையும் நம் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.

மிகுந்த கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.  எங்காவது போய் ஓவென்று  குரலெடுத்து    கதறித் தீர்த்து விடலாமா என்கிற கையறு நிலைக்கு அடிக்கடி சென்று மீளவேண்டி இருக்கிறது.

என்னதான் நடக்கிறது என் மண்ணில்? திரும்பிய திசையெல்லாம் கொலை, தற்கொலை என்றே செய்திகள் வருகின்றனவே. இது கண்டு துடிக்கக்கூட வேண்டாம் சற்றே நெளியுமளவிற்கேனும் துளியும் ஈரமற்று சுத்தமாய் உலர்ந்து போனதா தமிழ் பூமி?

விட்டிருந்தால் கல்புர்கியின் கொலையைக் கூட காதல் தோல்வியினால் நிகழ்ந்த தற்கொலை என்று புனைந்திருப்பார்களே?

இந்தக் கொலைகளைவிடவும் தற்கொலைகளைவிடவும் அவற்றை நியாயப் படுத்தி சிலர் அடிக்கும் அலப்பறை கொலைகளைவிடவும் தற்கொலைகளைவிடவும் கோரமானதாக இருக்கிறதே. இதுகண்டும் மௌனித்திருக்குமளவிற்கு மரத்தே போனோமா நாம்? இந்த மௌனம்தான் இரண்டு மூன்று தலைமுறையில் நாம் பெற்ற கல்வியின் கொடையா?

யோசித்துப் பாருங்கள், ரமணியைக் கொன்றது வேறு சாதிக்காரனா? சொந்த சாதி என்பதெல்லாம் கடந்து சொந்த தாத்தா கொன்றிருக்கிறார். ஏன் கொல்கிறார். கொல்லவில்லை, யார் கொன்றது என்று தெரியவில்லை என்றெல்லாம் சொல்லவில்லை. கொன்றது தானென்று வலிய சென்று சரணடைகிறார். சொந்தப் பேத்தியை கொன்றதற்கான காரணத்தை பகிரங்கமாக சொல்கிறார்.

ஒரு கொலை நடந்திருக்கிறது. கொன்றவரை பிடிக்க வேண்டிய தேவையே இல்லாமல் தானாகவே வந்து சரணடைந்திருக்கிறார். கொலைக்கான காரணத்தை (MOTIVE) அவரே சொல்கிறார். பிறகு இந்த வழக்கில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. ஏன் இப்படி மூச்சிறைக்க இதற்கெதிராய் போராடுகிறீர்கள் என்று போராடும் நம்மைப் பார்த்து சிலர் முனுமுனுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் இதை சத்தம் போட்டும் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

ஏன் எட்வின், ஒரு கொலை நடந்திருக்கு. கொலையாளி சரண்டராயிட்டான். இந்த இடத்துலேயே பிரச்சினை முடிந்து போச்சே. இனி கோர்ட்டாச்சு தீர்ப்பாச்சு. இதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு போடுகிறீர்கள்என்று கேட்கிறார் எனது ஆசிரியத் தோழர் ஒருவர்.

இரண்டு பேர் பழகியது பெரியவர்களுக்குப் பிடிக்கவில்லை. அடுத்தவண்ட்ட போயி எங்க புள்ளைகூட பழகாதன்னுகூட சொல்ல்ல. ரொம்ப டீசண்டா அவங்க புள்ளைட்ட சொல்லிப் பார்த்தாங்க. சொன்ன பேச்ச கேட்கல. போட்டுட்டார். அவரு பேத்திய அவரு கொல்றாரு. அதக் கேட்க நீங்க யாரு. கோர்ட்ல பார்த்துக் கொள்கிறோம் என்ற அவர்களது குறைந்த அளவிலான சத்தம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் பெருங்கூச்சலாய் விரைந்து உருவெடுக்கும்.

விரும்பிய ஒரு பெண்ணும் பையனும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள், அல்லது சேர்ந்து வாழ்கிறார்கள். பெண்ணின் பெற்றோர் புகார் கொடுக்கிறார்கள். இருவரையும் அழைத்து வந்த காவல்துறையினர் பெண்ணின் பெற்றோரோடு பெண்ணை அனுப்பி வைக்கிறார்கள். அங்கிருந்த படியே ரமணி தனது காதலனோடு பேசுகிறாள். தடுத்துப் பார்த்த தாத்தா முடியாத நிலையில் கொலை செய்திருக்கிறார்.

இது நியாயம் என்று உரக்கப் பேசத் துவங்கியிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் கொலையைவிடவும் அபாயமானதாய் நான் பார்க்கிறேன்.
நீதி சுத்ததிற்காக சோழ மன்னன் தன் சொந்த மகனையே தேர்க் காலில் இட்டு கொன்றதற்கு கொஞ்சமும் குறைச்சலானதல்ல இந்தக் கிழவன் செய்த கொலை என்று இவர்கள் பேச ஆரம்பிப்பதற்குள் இந்த இளைய சமூகத்தை நாம் விழித்திருக்குமாறு உசுப்பிவிட வேண்டும்.

அவர்களிடம் சரியானத் திட்டம் இருக்கிறது. இதை அவர்கள் ஒருபோதும் கொலை என்று சொல்வதில்லை. கௌரவக் கொலை என்கிறார்கள். கொலையில் என்ன கௌரவக் கொலை கிடக்கிறது? இந்து போன்ற பத்திரிக்கைகளும் இதை கௌரவக் கொலை என்றே எழுதுவதில் உள்ளர்த்தம் இல்லை என்றெல்லாம் போகிற போக்கில் போய்விட முடியாது.

கேட்டால் சாதிதான் அவர்களது கௌரவம் என்கிறார்கள். சாதித் தூய்மை மிக முக்கியம் என்கிறார்கள். சாதிக் கலப்பு தங்களது சாதியின் தூய்மையை புனுத்த்தைக் கெடுத்துப் போடும் என்கிறார்கள். இதைத் தான் PURITANISM செய்த்து ஏறத்தாழ.

அந்தக் கிழவனை சாதித் தூய்மைக்காக சொந்தப் பேத்தி என்றும் பார்க்காமல் கொலை செய்த தியாகி என்று தொடங்கி இதை ஒரு அறமென கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். அந்தக் கிழவனுக்கு கோவில் கட்டி குல த்ய்வமாய் வழிபட ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இதை அறமென பள்ளிகளில் சொல்லித் தரக் கூறுவார்கள்.

கட்டாயத் தற்கொலையும் கொலைதான் என்பார் வைரமுத்து. அந்த வகையில் விஷ்ணுப்ரியாவின் தற்கொலையும் கொலைதான். அதற்கு எடுத்த எடுப்பிலேயே CBI விசாரனை தேவை இல்லை என்கிறார் மாண்பமை முதல்வர்.

சில விஷயங்களை நாம் செய்யலாமா என்பதை அக்கறையுள்ளவர்கள் பார்வைக்காக வைக்க ஆசைப் படுகிறேன்.

1)   ஒடுக்கப் பட்ட சாதிகள் தங்களுக்குக்குள் ஏற்றத் தாழ்வை கடைபிடிப்பதை கைவிடச் செய்ய வேண்டும். (ஒடுக்கப் பட்ட சாதியிலும் கௌரவக் கொஅலை நடந்திருக்கிறது.)
2)   ஒடுக்கப் பட்ட சாதிகளின் தலவர்கள் தங்களுக்குள் உள்ள பிணக்குகளை எல்லாம் மறந்து ஒன்றிணைய வேண்டும். குறைந்த பட்சம் ஒரு கூட்டமைப்பை நோக்கியாவது நகர்தல் வேண்டும்.
3)   இடது சாரிகள், பெரியாரிஸ்டுகள்அம்பேத்காரிஸ்டுகள்,, தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து களமேக வேண்டும்.
4)   சாதி தூய்மைனது என்ற கருத்தியல் அசிங்கமானது என்பதை இளைஞர்கள் உணரும் வகையில் அவர்களிடம் கொண்டு போக வேண்டும்
5)   கிராமம் கிராமமாக இளைஞர்களுக்கு வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் என்ற சகல வடிவங்களையும் கையெடுக்க வேண்டும்.
6)   பாடப் புத்தகங்களின் அட்டையில் தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று எழுதினால் போதாது, சாதி அசிங்கமானது என்ற அறத்தை பாடப் புத்தகங்களில் கேட்டு போராட வேண்டும்.

7)   அறவழிப் போராட்டங்களின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும்.   

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...