Sunday, January 15, 2017

பெருசா வாடா மானுஷா

நான் வீட்டிற்குள் நுழைந்தபோது Zதமிழ் தொலைக்காட்சியில் "சரிகமப" நடந்து கொண்டிருந்தது. மானுஷா என்ற குழந்தை 'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாடல் கேட்குதா' பாடிக்கொண்டிருந்தாள். இறுதிச் சரணத்தின் இடைப்பகுதியில் இருந்தாள் அப்போது. வெகு அழகாகப் பாடினாள் என்பதைத் தவிர ஏதும் சொல்லும் இசை ஞானமற்றவன் நான். ஆனால் பாடகர் விஜய்பிரகாஷ் கூறிய ஒரு நுட்பத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு சரணத்தின் ஒரு பகுதியில் மானஷாவின் குரலும் புல்லாங்குழலும் பிரிக்கமுடியாதபடி ஒன்றிணைந்து போனதை சுட்டிக் காட்டினார்.
'இலையோடு
பூவும்
தலையாட்டும் பாரு
இலையோடு
பூவுங்காயும்
தலையாட்டும்
பாரு பாரு'
என்ற பகுதியை அவளை மீண்டும் பாட வைத்தார்.
கூர்ந்து கவனித்தபோது புல்லாங்குழலும் மானுஷாவும் பிரிக்கமுடியாதபடி இரண்டறக் கலந்திருந்ததை உணர முடிந்தது
பெருசா வாடா மானுஷா
நன்றி விஜய்

என் பிள்ளைகள்

இறுதி வகுப்பு முடிந்து ஆசிரியர் அறைக்கு சென்று கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு அரி, கார்த்தி, மணி மற்றும் ஜெனித் நால்வரும் என்னை வழிமறிக்கிறார்கள்.
‘என்னாங்கடா?”
”உங்கமேல செமையா கோவமா இருக்கோம்” அரி சொல்கிறான்.
“ஏண்டா?” என்று கேட்டதும் அரிதான் பேசினான்,
“காலாண்டு லீவ்ல சயின்ஸ் குரூப்புக்குதானே க்ளாஸ் வச்சீங்க?”
“ஆமாம் அதுகென்ன?
“அதுக்கென்னவா. அங்கதான் பிரச்சினையே?”
கொஞ்சம் மிரண்டு போனேன். ஆனாலும் சமாளித்துக் கொண்டவனாய் கேட்டேன்,
“என்னங்க சார் பிரச்சினை?”
”பாருடா மணி, என்ன பிரச்சினைனு சாருக்குத் தெரியாதாம். சொல்லுங்க அன்னைக்கு என்ன செஞ்சீங்க அங்க?” என்று அரி முடிப்பதற்குள், “கமான் டெல் மீ, என்ன செஞ்சீங்க அன்னைக்கு” என்கிறான் மணி.
இது சகஜம்தான். நாமலா வாயக் கொடுத்து வம்புல மாட்டிக்கக்கூடாது என்று முடிவெடுத்தவனாக,
“பாடம் நடத்தினேன், வேற என்ன?”
“சார், நீங்க பாடம் நடத்துங்க, பாட்டு நடத்துங்க, கிராமர் நடத்துங்க, அதெல்லாம் வீ நோ கேர்”
“பாருடா தொர இங்லீசெல்லாம் பேசறாரு”
“பேச்ச மாத்தாதீங்க. அவய்ங்களுக்கு சம்சா வாங்கிக் கொடுத்தீங்களா இல்லையா?”
இப்போது முற்றும் புரிந்துவிட்டது. காலாண்டு விடுமுறையில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சிறப்புச் வகுப்பெடுத்தேன். அப்போது எல்லாக் குழந்தைகளுக்கும் இரண்டு சம்சா வாங்கிக் கொடுத்திருந்தேன். இந்த அறையாண்டு விடுமுறைக்கு கலை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும். பேச்சு வாக்கில் அறிவியல் பிரிவிலிருந்து ஏதோ ஒரு லூசு போட்டுக் கொடுத்திருக்கான். சும்மாவே சாமியாடுவாய்ங்க ஆர்ட்ஸ் க்ரூப், இப்ப எவிடென்சோடு மாட்டியிருக்கிறேன். ஆனாலும் திமிரோடு,
“ஆமாம், அதுக்கென்ன?”
“ அதுக்கென்னவா, டேய் சார பாருடா, எங்களுக்கும் சம்சா வேணும். இல்லாட்டி ரணகளம் ஆமா”
“சரி, அது சரி அவன் படிக்கிறானே, நீங்க ஏன் அத பத்தி மட்டும் பேச மாட்டேங்கற. நாலு நாயும் இன்னும் ஒரு சம்மரிகூட படிக்கல”
”நாளைக்கு எழுதிக் காட்டறோம்.”
“முடியாது”
“சேலஞ்ச். எழுதிட்டா ஆளுக்கொரு பிரியாணி ஓக்கேவா?”
“சரிடா”
அப்ப 240 ரூவா கொடுங்க”
“எதுக்கு?”
“கொடுங்க போய் நாலுபேரும் பிரியாணி சாப்ட்டுட்டு படிக்கிறோம்”
“நோ, இந்தக் கைல எழுதிக் கொடு. அந்தக் கைல காசு தரேன்”
””ரெண்டும் ஒன்னுதான் சார்”
“எப்படி?”
“சில கடைல மொதல்ல காசு கொடுத்துட்டு டோக்கன் வாங்கிட்டு போய் காபி குடிக்கனும்”
“அப்புற?”
“சில கடைல காபி குடிச்சதும் பில் வாங்கிட்டு வந்து காசு தரனும். ஆனா ரெண்டும் ஒன்னுதான். ரொம்ப யோசிக்காதீங்க, “
250 ரூபாய் வாங்கிட்டுதான் விட்டய்ங்க.
என் பிள்ளைகள்.
09.01.2017 அன்று தீக்கதிர் வண்ணக்கதிரில் வந்தது

கடிதம் 20

அன்பின் நண்பர்களே,
வணக்கம். நலம்தானே?

"எது கல்வி' நூலினை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் திரு.யுவன். நூல் நன்றாகப் போகிறது என்று மகிழ்வோடு கூறினார்.
இந்த நூல் உருவாக இருவர் காரணமாக இருந்திருக்கிறார்கள்
2015 ஆமாண்டு எனது பிறந்த தினத்தன்று என் முகநூல் பக்கம் வந்து வாழ்த்திய தோழி உமா தினமணி டாட் காமிற்காக ஒரு தொடர் கேட்டார். மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு "முடியும்வரை கல்" என்ற அந்தப் பத்தியைத் தொடங்கினேன்.
2016 ஆமாண்டு எனது பிறந்த நாளன்று அலைபேசியில் என்னை வாழ்த்திய கவிஞர் தம்பி இந்தப் பத்தியை "நற்றிணை" யில் பதிப்பிக்கத் தரவேண்டுமென்றார். இப்போது "எது கல்வி?" வந்திருக்கிறது.
இந்த நூல் இவ்வளவு சிறப்பாக வந்தமைக்கு உமா, தம்பி, திரு யுவன், மற்றும் நற்றிணை தோழர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
யுவன், தம்பி இருவரையும் சந்தித்த பிறகு உமாவைப் பார்க்க அவரது அலுவலகம் போனால் அவரன்று விடுப்பிலிருந்தார்.
அவரைப் பார்த்து நன்றி சொல்வதற்கென்றே ஒருமுறை சென்னை வரவேண்டும் .
தினமணி டாட் காமின் அசோசியேட் எடிட்டர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். கொஞ்ச நேர உரையாடலுக்குப்பின்னர் இந்த மாதமே மீண்டும் ஒரு பத்தியை தட்டாமல் தொடங்கிய வேண்டுமென்றார்.
எது குறித்து எழுதலாம்?

வணக்கம் திரு பர்னாலா




திரு ராஜீவ் அவர்களால் முடுக்கி விடப்பட்ட அன்றைய மத்திய அரசு அன்றைய திமுக அரசினை கலைப்பதற்கேதுவாக ஒரு அறிக்கையை அன்றைய ஆளுநர் மாண்பமை பர்னாலாவிடம் கேட்டபோது மறுத்தவர்.

ஆழ்ந்த இரங்கல்


Tuesday, January 3, 2017

‘ஒரு காரணமாவது சொல்லுங்கள்




31.12.2016 அன்று சென்னை டிஸ்கவரி புக்பேலசில் நடந்த நாச்சியாள் சுகந்தியின் ‘ஒரு காரணமாவது சொல்லுங்கள்’ நூல் வெளியீடு

பர்வதாவின் குரலில் இருந்த கம்பீரமும் உயிர்ப்பும்

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள 51 மாதர் சங்க மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர்சங்க தோழர்களில் தானும் ஒருத்தி என்பதாக காலை பர்வதா (Varthini Parvatha) சொன்னபோது வழமைபோல ஏதேனும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்து மாலை அனுப்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன்.
இப்போது கருணாவின் ( கருப்பு கருணா) பக்கத்தை பார்த்தபோதுதான் சுரீரென்றது.
உடனே பர்வதாவைத் தொடர்பு கொண்டேன். திடீரென்று மண்டபத்தின் அனைத்துக் கதவுகளையும் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த ஆண் காவலர்கள் வட்டம் கட்டி அமர்ந்திருந்ததோழர்களை ரவுண்டு கட்டிக் கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் சார்லஸ் மற்றும் தமிழை தூக்கிக் கொண்டு அவர்கள் இருவரையும் மட்டும் ரிமாண்ட் செய்வதாகவும் மற்றவர்கள் கலையலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஒன்று அனைவரையும் ரிமாண்ட் செய்யுமாறும் அல்லது அனைவரையும் விடுவிக்குமாறும் கோரவே கொடுரமானதும் மிக அசிங்கமானதுமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அந்த இரண்டு தோழர்களும் இருக்குமிடத்தை சொல்ல மறுக்கிறார்களாம்.
தாக்குதலில் தோழர் ஈஸ்வரி மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்திருப்பதாகவும், உரிய மருத்துவ சிகிச்சைக்கூட தரப்படவில்லை என்றும் சொல்கிறார் பர்வதா.
பர்வதா காலில் அடி பட்டிருக்கிறது.
பர்வதாவின் குரலில் இருந்த கம்பீரமும் உயிர்ப்பும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் என்னை ஏளனம் செய்கிறது.

Monday, January 2, 2017

அழைப்பு 31



இயன்றவர்கள் வருக

அருள்கூர்ந்து கவனியுங்கள்

நேற்று துர்கா பிரிண்டர்ஸ் தோழர்கள் திரு சரவணன் மற்றும்Kanagasabhapathy Vivekanandan ஆகியிருந்த பார்க்க கீழ்க்கட்டளை நோக்கி சென்று கொண்டிருந்தோம். வேள்வி சிக்னலைக் கடப்பதற்குள் இரண்டுமுறை சிக்னலில் சிக்கினோம்.
அந்தக் கொடிய வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகனங்களில் இருப்பவர்களிம் பொம்மை, பட்ஸ், கார் துடைப்பான் போன்ற பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அத்தகைய சாலை நெரிசலில் அவ்வளவு பாதுகாப்பானது இல்லை அது. ஆபத்தானதென்றே சொல்லலாம்.
வலிக்க வலிக்க நகர்ந்தோம்.
மீண்டும் மாலை வடபழனி சிக்னலிலும் இத்தகைய குழந்தைகளைப் பார்க்க முடிந்தது. மறைவிருந்து ஒரு வடமாநிலப் பெண்மணி சில குழந்தைகளை இயக்குவதைப் பார்க்க முடிந்தது.
இந்தக் குழந்தைகள் சென்னைக் குழந்தைகள்போலத் தெரியவில்லை.
பெற்றோரிடமிருந்து திருடப்பட்ட குழந்தைகளைக் கொண்டு இந்த வியாபாரத்தை யாரோ செய்வதாகத் தோன்றுகிறது.
அங்குள்ளத் தோழர்கள் அருள்கூர்ந்து கவனியுங்களேன்.
நான் சந்தேகப் படுவது சரி எனும் பட்சத்தில் அவர்களை மீட்டு பள்ளிக்கனுப்ப முயற்சிக்கலாம்

Friday, December 30, 2016

மாற்றத்திற்கு நாம் ஏதும்

எல்லோரது கோவத்தையும் அதிலிருக்கும் நியாயம் உணர்ந்தவன் என்பதால் மதிக்கிறேன். என்னையும் உங்களோடு சேர்த்தே இந்த மூன்று கேள்விகளை வைக்கிறேன்.
1. இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
2. இப்படிக் கோவத்தை இறைப்பதால் மாற்ரம் வந்துவிடுமா?
3. மாற்றத்திற்கு நாம் ஏதும் செய்யவே இயலாதா?

“ போல “ க்களின் காலம்தானே

" காட்டு யானைகளின் அட்டகாசம்” என்பது மாதிரிதான் தொடர்ந்து பத்திரிக்கை செய்திகளில் பார்க்கிறோம். மக்களின் வசிப்பிடங்களில் யானைகள் அத்து மீறுகின்றனவா? அல்லது நாம் அவைகளின் வாழிடத்தை ஆக்கிரமித்திருக்கிறோமா என்பது பற்றி விரிவாய் பிரிதொரு சமயம் பேச வேண்டும். பேசலாம். இந்த புள்ளியில் பேச வேறொன்று இருக்கிறது.
காட்டில் வாழும் யானைகள்தான் யானைகள். நாமோ யானைகளை காட்டு யானைகள் என்கிறோம். ஊருக்குள் பிச்சையெடுக்கும் வரை பழக்கப் படுத்தி வைத்திருக்கிற யானை போன்ற ஒன்றை யானை என்கிறோம்.
அது சரி, “ போல “ க்களின் காலம்தானே இது.

எது கல்வி?





அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
 எனது ஒன்பதாவது நூலான “எது கல்வி? வருகிறது.

நூல்களை மிகுந்த சிரத்தையோடு தருகிற ‘நற்றினை பதிப்பகம்’ வெளியிடுகிறார்கள்.

இரா.எட்வின்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...