Wednesday, May 30, 2012

முக நூல் ஒன்று

ஒரு முக நூல் பதிவு ஒரு நாள் தூக்கத்தைக் களவாண்டு விடுமா?

களவாண்டது.

ஒரு நாள் தூக்கத்தை மட்டுமல்ல இரண்டு வேளை சாப்பிட விடாமல் என்னை சோகத்திலும் கோபத்திலும் முடக்கிப் போட்டது.

ஒரு முன்னிரவுப் பொழுதில் முக நூலினை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு பக்கத்தில் வைக்கப் பட்டிருந்த நைந்து கிழிந்த அழுக்கு பனியன் ஒன்று என் கவனத்தை ஈர்க்கவே அந்தப் பதிவை முழுமையாக்கி வாசிக்கத் தொடங்கினேன்.

ஒரு தேர்ந்த எழுத்தாளரால் எழுதப் பட்ட பதிவுகூட அல்ல அது. புது தில்லியில் புகழ் பெற்ற AIMS மருத்துவ மனையின் இளைய மருத்துவர் ஒருவரால் எழுதப் பட்டப் பதிவு அது.

மொழி நடை, செறிவு, வடிவ நேர்த்தி போன்ற எழுத்தாளுமைத் துகள்களில் எதுவுமே இல்லை. உடைந்த, ஒழுங்கற்ற, இன்னும் சொல்லப்போனால் பிழைகளே போகிற போக்கில் தென்படுகிற எழுத்துதான்.

எத்தனைப் பெரிய எழுத்தாளர்களின், ஜாம்பவான்களின் எழுத்துக்களையெல்லாம்கூட சில பக்க குறிப்புகளோடு கடந்து போக முடிந்ததே. அவ்வளவாய் எழுதத் தெரியாத ஒரு மருத்துவரின் எழுத்துக்கு இவ்வளவு வலிமை எப்படி?

அந்த இளைய மருத்துவனின் எழுத்துக்களில் இருந்த சத்தியமும், அதை வீசியதில் அவனிடமிருந்து வெளிப்பட்ட ஆவேசமும்தான் இதற்கான காரணம்.

பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத ஒருவனால்தான் இப்படி எழுத முடியும்.

காலையில் சொந்த கிளினிக் போய் சக்கையாய் களைத்துப் போகும்வரை கடமையாற்றிவிட்டு, நோயாளிகளை விடவும் சோர்ந்துபோனவர்களாய் அரசு மருத்துவ மனைகளில் தங்கள் இருக்கைகளில் விழுந்து மீண்டும் மாலை சொந்த கிளினிக்கில் களைத்து எவ்வளவு சம்பாரிக்கிறோம் என்பதே தெரியாமல் வாழ்க்கையை நகர்த்தும் மருத்துவர்களே பெருன்பான்மை நம் கண்களில் படும் வேலையில் ஏழைகளைப் பற்றியும், இந்த சமூகம் குறித்தும் கொந்தளித்துக் குமுறும் இளைஞனாகவே அவன் படுகிறான்.

மகப்பேறுவிற்காக அவரிடம் ஒரு பெண் வருகிறாள். அவளது கணவரிடம் பிறந்த புத்தம் புதுக் குழந்தையை போர்த்தி வாங்க ஒரு புதுத் துணியைக் கேட்கிறார். அப்போடும் ஒரு புதுக் குழந்தைக்கு தகப்பனான அந்த மனிதன் கொடுத்த கிழிந்த பனியன் துணியைத்தான் படம் பிடித்துப் போட்டிருந்தார்.

அதற்குமேல் எவ்வளவோ முயன்றும் உடனடியாகத் தொடர முடியவில்லை. கண்கள் உடைக்க சாரை சாரையாய் கன்னங்களில் கண்ணீர்.

என்னடா பூமி இது?

அந்தக் குழந்தை நாளை ஒரு பகத்தாக, பாரதியாக, பாரதிதாசனாக, ஒரு சேகுவாராவாகக் கூடவரக்கூடும்.

பிறந்த தனது குழந்தையை கிழிந்த பனியன் துணியால்தான் போர்த்திப் பெற முடியும் என்றால் இந்த மண்ணில் என்ன இழவுக்கு உயிரோடு இருக்கிறோம்?

ராஜ முருகு பாண்டிய முப்பது வருடங்களுக்கு முன்னால் எழுதினான்,

“முதலாளியம்மாவின்
கிழிந்த சேலை
என் அக்காவின்
புதுத் தாவணி

என் அக்காவின்
கிழிந்த தாவணி
என் தங்கையின்
புதுப் பாவாடை

என் தங்கையின்
கிழிந்த தாவணி
என் தம்பியின்
புதுக் கோவணம்”

என்று. அதை விட எதார்த்தம் மோசமாக இருப்பது அப்படியே பிசைந்தது மனதை.

இந்த நொடி பிறந்த குழந்தைக்கு புதுத் துணி இல்லாத ஒரு மண்ணில் பொக்ரான் என்ன பலனைத் தரும் என்ற அவரது கேள்வியும், பொக்ரான் பெருமை பேசும் சான்றோர்களில் எத்தனைபேர் அரசு பொது மருத்துவ மனைகளில் மருத்துவம் பார்த்திருக்கிறீர்கள் என்ற கேள்வியும், அணு, பொக்ரான் ஏவுகணை இவை யாவற்றையும் விட ஏழைகளுக்கான மருந்துகளின் அவசியம் முக்கியமானது என்கிறார்.

5000 கிலோமீட்டர் வரை சென்று எதிரிகளைத் தாக்கும் ஏவுகணையால் எத்தனை உயிர்களைக் காக்க முடியும் என்ற அவரது கேள்வியும், 2010 இல் மட்டும் ஏறத்தாழ 1,30,000 இந்தியக் குழந்தைகள் ஏதேதோ காரணங்களால் மாண்டு போயிருக்கிறார்கள் என்பதை அழுதுகொண்டே பதியும் அவரது மனிதமுமே எந்தப் பெரிய ஜாம்பவானின் எழுத்துக்கும் வணங்கிப் பழகாத நம்மை அவரது எழுத்தின் முன் கை கட்ட வைக்கிறது.

நிறைய நோய்களை வருமுன் தடுப்பது எப்படி? நோய்களுக்கான எழிய மருத்துவ முறைகள்  போன்றவற்றிற்கான பயனுள்ள இணைப்புகளை அவரது பக்கத்தில் ஏராளமாய் வைத்திருக்கிறார்.

“ சிகரெட்டுத் துண்டுகளை
கீழே போடாதீர்கள்
கரப்பான் பூச்சிகளுக்கு
புற்று வந்து விடும்”

என்று ஒரு பக்கம் வைத்திருக்கிறார். ஒரு சமூகம் சார்ந்த கோசத்தை எவ்வளவு லாவகமாக இலக்கியப் படுத்தியிருக்கிறார்.

இனம் சார்ந்தும் நிறைய யோசிக்கிறார். தெளிவாகவும் யோசிக்கிறார்.

18 மைல் தூரத்திலிருந்து வந்தால் அவனுக்கு அகதி முகாம் 4000 மைல் தொலைவான இத்தாலியில் இருந்து வந்தால்...? என்று அவர் கேட்கும் போது புன்னகைத்துக் கொண்டே கொந்தளிக்கும் வித்தையை இந்த இளைஞன் எங்கிருந்து கற்றான் என்று கேட்கத் தோன்றுகிறது.

கணவனை இழந்த கண்ணகிக்கு சிலை வைக்கும் இந்தச் சமூகம் நல்ல நிகழ்ச்சிகளில் விதவைகளை கேவலப் படுத்துவதை சாடும் பதிவுகள் இவரிடம் உள்ளன.

அகதிகளுக்கு வாக்குரிமை வந்துவிட்டால் இந்த அரசியல் வாதிகள் ஈழ மக்களை என்னமாய் கவனிப்பார்கள் என்கிற இவரது கூற்றினை  நக்கல் என்று யாராலும் ஒதுக்கிவிட முடியாது.

காலையில் good morning என்று முகநூலில் போட்ட பெண்ணுக்கு மாலையில் கூட like போடுபவர்களையும், இன்று புதன் கிழமை என்று ஒரு பெண் போட்ட பதிவிற்கு நூற்ருக் கணக்கான like குகள் விழுவதையும் இவர் சாடும் எள்ளல் இருக்கிறதே... அப்பப்பா.

மம்தாவிற்கு இடது பிடிக்காது என்பதால்தான் ஷாருக்கான் கங்குலியை கழற்றி விட்டார் என்று துணிச்சலோடு சொல்லும் தைரியம் இவருக்கு இருக்கிறது. வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் கேவலமான அரசியலைக் கூட புரிந்து கொள்வதிலும் வெளிப் படுத்துவதிலும் வல்லவராயிருக்கிறார்.

மன்மோகனுக்கு ஏறத்தாழ பத்து டாக்டர் பட்டங்கள் ஏன் என்று நியாயமாய்க் கேட்கிறார்.

இளைஞனுக்கே உரிய தெறிப்புகளும் இருக்கவே செய்கின்றன.

மிக நல்ல முக நூல் பக்கம்.

அவசியம் போய்ப் பாருங்கள். பிடிக்கும். பிடித்தால் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

அவரது முக நூல் இணைப்பு,

 http://www.facebook.com/KarthikBalajeeLaksham




Monday, May 28, 2012

ஒரு வழக்கும் ஒரு சாட்சியும்

அவர் தீவிரமான பக்தர்தான். ஆனால் வெறித்தனமான பக்தி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. என்ன, ஒரு விதத்தில் நமக்கு நேரெதிரானவர். அவருக்கு எம்மதமும் சம்மதம். நமக்கோ எந்த மதத்தோடும் சம்மதம் இல்லை.

எதையும் விட முக்கியமானது அவரது அர்ப்பனிப்போடு கூடிய தொழில் பக்தி. அர்ப்பனிப்பு என்றால் அப்படியொரு அர்ப்பனிப்பு.

“ ஓன்னு அழுதாச்சும் எங்களப் படிக்க வச்சிடுவாருங்க சார்”

பிள்ளைகள் இப்படிச் சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

பணியில் சேர்ந்த ஆண்டிலிருந்து ஒரு ஆண்டு கூட விடாமல் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக தனது பாடத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி விழுக்காட்டினைத் தருபவர்.

அன்று மிகுந்த விரக்த்தியோடு ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தார்.

“ ஏன் அண்ணே ஒரு மாதிரியா உக்காந்து இருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா?”

“அதெல்லாம் ஒன்றும் இல்ல எட்வின்.”

“பசங்க எதுவும் எழுதிக் காட்டலையா அண்ணே?”

பள்ளியில் பிள்ளைகள் ஏதேனும் தவறிழைத்தாலோ அல்லது அவர் சொன்ன வேலையை செய்ய வில்லை என்றாலோ அவர்களைத் தண்டிக்க மாட்டார். மாறாக தன்னையே வருத்திக் கொண்டு, பல நேரங்களில் சாப்பிட மறுத்து அடம் பிடித்து இப்படித்தான் தன்னையே வருத்திக் கொள்வார். அதனால்தான் அப்படிக் கேட்டேன்.

“என்ன எட்வின் மனசாட்சியே இல்லாம இப்படி பன்றாங்க. கேட்டதுல இருந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எட்வின்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, இன்னிக்கு காலைல பசங்கள கூட்டீட்டு இருங்களூர் போனோம் இல்ல...”

புரிந்தது, இப்போதெல்லாம் ஜனவரிக்குப் பிறகு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடிக்கடி யாரேனும் புத்துணர்வு முகாம், அல்லது அவர்களுக்கான பிரார்த்தனை என்கிற வகையில் மாணவர்களைத் திரட்டி விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் தங்களது கல்லூரிக்கான சேர்க்கையை கவனத்தில் கொண்டு பள்ளிகளுக்குப் பேருந்துகளை அனுப்பி புத்தாக்க முகாம்களுக்கு மாணவர்களைத் திரட்டுகின்றனர்.

அது போல அன்று காலை இருங்களூரில் இருக்கும் ஒரு போதகர் சிறப்பு வழிபாட்டிற்காக பள்ளிகளிலிருந்து மாணவர்களைத் திரட்டியிருந்தார்.

பிள்ளைகளோடு அண்ணனும் போயிருந்தார். அங்கு நடந்த ஏதோ ஒன்று அவரது மனதை சிராய்த்திருக்க வேண்டும்.

“ என்ன நடந்துச்சுங்க அண்ணே?”

“எல்லாம் நல்லவிதமாத்தான் நடந்துச்சு எட்வின். அதிலுங் குறிப்பா அந்த பாஸ்டர் பிள்ளைகளுக்காக உருகி அழுது ஜெபம் செய்தது மனச அப்படியே உருக்கிடுச்சு எட்வின்”

“அப்புறம் என்னங்க அண்ணே?”

“ ஒரு பாப்பா சாட்சி சொல்ல வந்துச்சு. அது சொல்லுது, நான் போன வருஷம் ஒரு பேப்பர்ல இருபது மார்க்குக்குத்தான் எழுதினேன். ஆனால் கர்த்தர் மனதிறங்கி, பேப்பர் திருத்திய ஆசிரியரின் மனதை இறங்க வைத்து எனக்கு எண்பது மதிப்பெண்களை வாங்கித் தந்தார் என்கிறது.

இது பசங்கள கெடுத்துடாதா எட்வின்.படிக்காம சாமி கும்பிட்டாப் போதும் என்கிற மன நிலையை உண்டாக்கிடாதா?”

“ ஆமாம் , விடுங்க அண்ணே.” என்று அவரை ஒருவழியாய் சமாதானப் படுத்திவிட்டு இருந்த சமாதானத்தைத் தொலைத்தவனாய் நகர்ந்தேன்.

அவரைப் பொருத்தவரை இத்தகைய சாட்சிகள் மாணவர்களை ‘எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவார்’ என்ற மன நிலைக்குத் தள்ளி படிக்க விடாமல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்ற கவலை. அது கடந்து அவர் அதை அரசியல் படுத்தவில்லை.

ஆனால் நமக்கோ அதில் அலச சில இருக்கின்றன. அதற்குள் போகுமுன் ஒரு வழக்கை நாம் தெரிந்து கொள்வது நலம்.

அது ஒரு விசித்திரமான வழக்கு...

பொதுவாக தேர்விலே ஏதேனும் ஒரு பாடத்தில் அல்லது சில பாடங்களில் தோல்வி அடையும் மாணவனோ மாணவியோ தான் நல்ல முறையில் தேர்வினை எழுதியிருப்பதாகவும் எனவே தனது தாளினை அல்லது தாள்களை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிட வேண்டும் என்று நீதி மன்றத்தை அனுகுவது வாடிக்கை.

சில நேரங்களில் தான் பெற்றிருக்கிற மதிப்பெண்ணிற்கும் தான் எழுதியதற்கும் கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் இருப்பதால் தனது தாளினை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிடக் கோரி சிலர் நீதி மன்றத்தை அனுகுவதும் உண்டு.

பல நேரங்களில் இதில் அவர்கள் வெற்றி பெறுவதும் உண்டு

.இன்னும் சொல்லப் போனால் மறு மதிப்பீட்டிற்குப் பிறகு அந்தக் குழந்தை மாநிலத்தில் முதலிடத்திற்குப் போனதும் உண்டு. இதில் இரண்டு வகையான துயரங்கள் உண்டு.

ஒன்று, யாரோ ஒரு ஆசிரியரின் பிழையால் அல்லது கவனக் குறைவால்அந்தக் குழந்தை தனக்கு உரிய இடத்தை சில காலம் இழந்திருந்தது,

இன்னொன்று, அதே ஆசிரியரின் கவனக் குறைவால் தனக்கு உரியதற்ற இடத்தில் கொஞ்ச காலம் இருந்து தற்போது அந்த இடத்தை இழந்த மற்றொரு குழந்தை.

ஒரே ஆசிரியரின் சன்னமான ஒரு கவனக் குறைவால் இரண்டு குழந்தைகள் அனுபவித்த மன உளைச்சல் சொல்லி மாளாது.

ஒருக்கால் அந்தக் குழந்தை நீதி மன்றத்தை அனுகியிருக்காவிட்டால் அந்தக் குழந்தைக்கு உரிய இடம் கிடைக்காமல் போனது, அந்த இடத்திற்கு தகுதியற்ற குழந்தையிடம் அந்த இடம் போனது என்ற வகையில் அது ஒரு இரட்டைக் குற்றமாகவே அமைந்திருக்கும்.

இப்போது கேட்கலாம்,

முதலிடத்திற்கு தகுதியற்ற ஒரு குழந்தை அந்த இடத்திலிருந்து கீழிறக்கம் செய்யப்பட்டது நியாயம்தானே. அதில் அந்தக் குழந்தை மன உளைச்சல் அடைவதற்கு என்ன இருக்கிறது?

மேலோட்டமாய் பார்த்தால் இது நியாயமாகக் கூடப் படும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்,

தன்னை முதலிடத்தில் அமர்த்தும்படி அந்தக் குழந்தை யாரிடத்தும் மணு எதுவும் கொடுக்க வில்லை.யாருடைய தவறாலோ அந்த இடத்தில் இருந்து விருதுகள், பராட்டுக்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு தற்போது அவை தனக்குரியவை அல்ல என்றானபின் தனது உறவினர்களை, நண்பர்களை மற்றவர்களைப் பார்க்க எப்படி கூனிக் குறுகியிருப்பாள்.

ஆனால் இது மாதிரி வழக்குகள் வழக்கம்தான்.

ஆனால் ஒரு மாணவன் தான் கணிதப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றது சாத்தியமே இல்லாத ஒன்று என்று வழக்குக்குப் போனான். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தான் கணக்கிலே எழுபது மதிப்பெண்கள் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும். ஆகவே முறையாக மறு மதிப்பீடு செய்து தன்னை கணிதத்திலே தோல்வியடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் போனான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“ இப்படியெல்லாம்கூட நடக்குமா?” என்று கூட நினைக்கத் தோன்றும்.

ஆனால் நடந்தது.

அதிகப் பட்சம் அறுபத்தி ஐந்து மதிப்பெண்களுக்குமேல் தான் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும், அறுபத்தி ஐந்தே மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டிய தனக்கு எழுப்து மதிப்பெண்கள் வழங்கி தனது எதிர்காலத்தை பாழாக்கியிருக்கிறார்கள் என்பதே வழக்கின் சாரம்.

சொன்ன மாதிரியே அவன் அறுபத்தி ஐந்து மதிப்பெண்கள்தான் பெற்றிருந்தான்.

நடந்தது இதுதான்,

அவன் மற்ற எல்லாத் தாள்களிலும் 195 மதிப்பெண்களுக்கும் மேலே வாங்கியிருந்தான். கணிதத் தேர்வன்று வினாத்தாளை வாங்கியதும் 170 மதிப்பெண்களே வாங்க முடியும் என்பது புரிந்திருக்கிறது . 170 மட்டுமே வாங்கினால் பொறியியல் சேர்க்கைக்கான கட் ஆஃப் குறையும் என்பது புரிந்திருக்கிறது.

ஆனால் 170 வாங்குவதற்கு பதிலாக தோல்வி அடைந்தால் உடனடித் தேர்வில் நன்கு எழுதி கட் ஆஃப் மதிபெண்களை அதிகப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தவன் 65 மதிப்பெண்கள் வருமளவு மட்டும், எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டான்.

திருத்திய ஆசிரியருக்கு இது தெரியாது. பாவம், 65 வாங்கி தோல்வி அடைகிறான் என்று கருதிய அவர் ஒரு 5 மதிப்பெண்களை அங்கும் இங்கும் போட்டு எழுபதாக்கி தேர்ச்சி பெறச் செய்துவிட்டார்.

அதற்கு அவர் கொடுத்த விலையும் பெற்ற தண்டனைகளும் , அப்பப்பா எழுத்தில் சொல்லி மாளாது.

இப்போது அந்த சாட்சிக்கு வருவோம்.

20 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுதிய ஒரு குழந்தைக்கு எந்த ஒரு ஆசிரியனும் எண்பது போட முடியாது. இது எனது இருபத்தி ஐந்து ஆண்டுகால பணி தந்த அனுபவப் பாடம்.

மூன்று விஷயங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று ஒரு ஊழல் நடந்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றே படுகிறது.

இரண்டு அந்தக் குழந்தை பொய் சொல்லியிருக்க வேண்டும் .

அல்லது , மூன்றாவதாக ஒருக்கால் ஏசு நாதரே திருத்திய ஆசிரியரின் மனதை இறங்க வைத்து இருபது மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுதியிருந்தக் குழந்தைக்கு எண்பது மதிப்பெண்கள் வாங்கித் தந்திருக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மூன்றுக்கும் வாய்ப்பே இல்லை எனலாம்.

ஊழல் நடந்திருக்கிறது எனில் அது சாட்சிக்குரிய செய்தியன்று. அது கிரிமினல் குற்றம்.

இரண்டாவது எனில் அது மத அரசியலை நோக்கி நகர்த்தும். அது மிக மிக ஆபத்தானது.

மூன்றாவது எனில்,

ஏசு ஆசிரியரிடம் பேசி இருபதை எண்பதாக்கிக் கொடுத்தக் குற்றவாளியாகிறார்.

ஒன்று சொல்வேன்,

சாமி இல்லை என்று சொல்கிற நாங்களே ஒரு கடவுளை இந்த அளவிற்கு கேவலப் படுத்த மாட்டோம்.




Thursday, May 24, 2012

ஷெல்லியை ஷெல்லியாக...


ஆத்திகம் எவ்வளவு பழசோ அதற்கு ஒரு நொடியும் குறையாத பழசு நாத்திகம்.

ஏதோ கலி கெட்ட காலத்தில் நாத்திகம் தோன்றியதாகவோ அல்லது நாத்திகம் தோன்றியதன் விளைவாக கலி முற்றியதாகவோ கொள்ள இயலாது.

“கற்றதனாலாய பயனென்கொள்
வாலறிவான்ன்
நற்றாழ் தொழான் எனில்”

என்கிறார் வள்ளுவர். இறைவனின் அடி பணிந்து வணங்காது போனால் நீ படித்த ஆழமான கல்வி உனக்கு எந்த நற்பலனையும் தராது என்பதே இதன் பொருள் எனக் கொள்ளலாம்.

ஆக வள்ளுவர் காலத்திலேயே யாரோ ஒருவன் ,

“ கடவுள் இல்லை. இல்லாத கடவுளை நான் வணங்க மாட்டேன்” என்று வள்ளுவரது முகத்துக்கு நேராக சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது. மட்டுமல்ல அப்படி சொன்னவன் நன்கு கற்று தேர்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வள்ளுவர் “ நீ எவ்வளவுதான் படித்திருந்தாலும், ஞானஸ்த்தனாக இருந்தாலும் இறைவனைப் பணிந்து தொழாவிட்டால் உன்னிடம் இருக்கும் ஞானத்தினால் எந்தப் பயனும் இல்லை”  என்று சொல்லியிருக்கிரார்.

ஆக வள்ளுவர் காலத்திலேயே நாத்திகன் இருந்திருக்க வேண்டும். எனில் வள்ளுவர் காலத்திலேயே நாத்திகமும் இருந்திருக்கிறது என்றும் கொள்ளலாம்.

இது ஏதோ தமிழ் பூமியில் மட்டும் அல்ல, ஏசு நாதருக்கு ஏகத்துக்கும் முன்பே எழுதியதாக கிறிஸ்தவர்களால் நம்பப் படுகிற “ நீதி மொழிகள்” என்ற புத்தகத்தில் (இது பழைய ஏற்பாட்டில் இருக்கிறது) “கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் துவக்கம்” என்று இருக்கிறது. எல்லோருமே கடவுளை விரும்பி ஏற்ருக் கொண்டிருக்கிற ஒரு சமூகத்தில் இப்படி ஒன்றை எழுத வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஏசு நாதருக்கு முன்பே நீதி மொழிகள் எழுதப்பட்ட காலத்திலேயே நாத்திகனும் இருந்திருக்க வேண்டும்.

நாத்திகம் பெரிதா, ஆத்திகம் பெரிதா ? இரண்டில் எது சரி? என்பது பற்றியெல்லாம் நமக்கு இந்த இடத்தில் கவலை இல்லை.

எல்லா இடங்களிலும் நாத்திகர்களை ஆத்திகர்கள் என்று ஆத்திகர்கள் நிறுவ முயன்றிருக்கிறார்கள் . தந்தை பெரியாரை ’யாருக்கும் தெரியாமல் பிள்ளையாரை வணங்குவார்’  என்று இங்கு தொடர்ந்து பிரச்சாரம் நடப்பது போல உலகில் எல்லா திக்குகளிலுமே நடந்திருப்பதாகவே படுகிறது.

 ஷெல்லிக்கு படகில் பயணிப்பது பிடித்தமான ஒன்று. அது போன்ற ஒரு சமயத்தில்தான் அவரது படகு அலைகளின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகி கவிழ்ந்தது.

அவரது மரணச் செய்தி பரவவே கரையில் ஒரு பெரும் கூட்டம் நின்றது. அதில் ஒருவர் ஆத்திகர். ஷெல்லியின் நண்பர். ஷெல்லியிடம் அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அவர் நாத்திகராய் இருந்ததுதான்.

ஷெல்லியின் உடல் கரைக்கு கொண்டு வரப் படுகிறது.

அந்த ஆத்திக நண்பர் அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கை நண்பர் ஒருவரிடம் “ஷெல்லியின் கோட்டுப் பையில் ஒரு வேதாகமம் இருந்தது. அவர் ரகசியமாய் பைபிள் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்” என்று எழுதுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எரிச்சலடைந்த பைரன் அந்த நண்பரிடம் சொன்னது நமக்கும் ரொம்பப் பொருந்து. பைரன் சொன்னார்,

“ நண்பரே, அருள்கூர்ந்து ஷெல்லியை ஷெல்லியாகப் பாருங்கள்”

ஆமாம் ,

நாமும் கொஞ்சம் பாரதியை பாரதியாகவும், காந்தியை காந்தியாகவும், எந்த ஒருவரானாலும் அவரை அவராகவும் காய்தல் உவத்தல் இன்றி எப்போது பார்க்கத் தொடங்குவோம்?

நன்றி : “காக்கச் சிறகினிலே”

Sunday, May 20, 2012

எட்டப்பன் என்பதன் அரபு மொழியாக்கம்தான் மீர்சாதிக்கோ?


04.05.1799

ஸ்ரீரங்கப் பட்டிணம்.

ஆற்றங்கரையின் அந்தப் பகுதியில் ஆங்கிலப் படைகள் ஏதோ ஒரு தகவலுக்காக காத்திருக்கின்றன. பரபரப்பும் ஆர்வமும் படையின் முன்னிலிருந்த வீரன் முதல் இறுதியாக நின்ற வீரன் வரைக்கும் எல்லோர் முகங்களிலும்.

கோட்டையின் மேற்குப் பகுதியில் திப்புவின் படைகள். அங்கு வருகிறான் திப்புவின் நிதி அமைச்சர் மீர் சாதிக்.

“ வணக்கம் துரை”

“வணக்கம்”

“என்ன கட்டளை?”

“ எதுவும் இல்லை. எல்லோரும் அங்கு சென்று ஊதியம் பெற்று கொஞ்சம் ஓய்வெடுங்கள்”

அவன் காட்டிய திசை நோக்கி தங்கள் வியர்வைக்கான கூலியைப் பெறும் மகிழ்ச்சியில் வீரர்கள் நகர்கிறார்கள்.

இந்தத் தகவலை காத்திருந்த ஆங்கிலப் படைகளுக்கு அனுப்புகிறான்

எட்டப்பன் என்பதன் அரபுமொழியாக்கம்தா மீர் சாதிக்கோ.

ஆட்களே இல்லாத அந்தப் பகுதிக்குள் ஆங்கிலப் படைகள் எவ்வித தடங்கலுமின்றி நுழைகின்றன”

யாரோ ஒரு ஆங்கிலன் சொல்கிறான்,

“ மீர் பாய் மட்டும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. அவருக்கு கடமை பட்டுள்ளோம்.”

அந்த ஆங்கிலனுக்கு இருந்த நன்றியுணர்ச்சியில் ஒரு சதம் கூட மீர் சாதிக்கிற்கு இல்லை.

தனது நிதி அமச்சனும் ஒரு துரோகிதான் என்பதை உணராமல் மதிய உணவை எடுத்துக் கொண்டிருந்த திப்புவின் கவனத்திற்கு செய்தி வருகிறது.

பாதியில் கை கழுவி விட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கிழம்புகிறான்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடிந்து விடுகிறது.

திப்புவைப் பிடிக்கத் தேடுகிறார்கள். எங்கும் காணாது போகவே, தப்பி ஓடிவிட்டானோ என்று சந்தேகிக்கிறார்கள்.

குவிந்து கிடக்கும் வீரர்களின் பிணங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த ஒருவன் அலறினான்.

அலறல் வந்த திக்கை நோக்கி ஓடினார்கள்.

கோட்டையின் வடக்கு மதில் சுவரில் வீரர்களோடு வீரனாய், பிணமாய் திப்பு.

திப்புவின் உடலருகே நின்று வெல்லெஸ்லி கொக்கரித்தான்,

“ மைசூரின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சி, இந்தியா இறந்து பிணமாக என் காலடியில் கிடக்கிறது”

எனது இன்றைய சுதந்திர சுயேட்சையான வாழ்விற்கான உன் பங்களிப்பு மிகவும் உசத்தியானது திப்பு.

சில சொட்டு கண்ணீரும், நன்றியும், வீர வணக்கமும்.

Wednesday, May 16, 2012

வள்ளலாரை விடவும்....


தற்செயலாக ஆர்த்தி வேந்தன் அவர்களது முக நூல் பக்கம் போனேன்.

இவ்வளவு நாள் பார்க்காமல் போனோமே என்ற எண்ணம் வந்தது.

கொஞ்சம் கூடுதலாக ஈர்க்கவே ப்ரொஃபைல் உள்ளே போனேன்.

மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்றிருந்தது. உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஆஹா நம்ம ஜாதி. ஆமாம் , நம்மைப் பொருத்தவரை நமது மதமும் நாத்திகம் தான், ஜாதியும் நாத்திகம்தான்.

பிடித்த மேற்கோள் என்ற இடத்தில்

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நீரூற்ரினேன் “ என்றிருந்தது.

அடடா, அடடா ஆர்த்தி. எனக்கு மகள் வயது இருக்குமா?

குறைந்த பட்சம் சித்தப்பா வயது இருக்கும் எனக்கு. நல்ல மகள்.

” வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார்

வாடிய பயிரைக் கண்டு வாட எவ்வளவு பரந்த மனது வேண்டும். அது மனிதம் தாண்டிய மனப் பக்குவம். கொண்டாடினோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காவேரி டெல்டா பகுதியில் வாடிய பயிர் கண்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டான்.

அதிர்ந்து போனேன்.

வள்ளலாரே வாடிய பயிர் கண்டு வாடத்தானே செய்தார். இவன் தற்கொலைக்கே போனானே.  வள்ளலாரை விடவும் இவனது மனது பெரிதா? குழம்பி, வருவோர் போவோரிடமெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தேன். தாங்க மாட்டாமல் ஒரு நாள் கிஷோர் சொன்னான்,

“வள்ளலார் பார்த்த பயிர் அவரோடது அல்ல, அதனால் வாடும் எல்லைவரை போனார். விவசாயி பார்த்த வாடிய பயிர் அவனோடது. செத்தான்”

இது சரியா தவறா தெரியவில்லை. ஆனால் மகனின் கூற்று சிந்திக்க வைத்தது.

“ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நீரூற்றினேன்”
என்பது வள்ளலாரது நிலைபாட்டை விடவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயியைக் காட்டிலும் சரியான நிலையாகப் படுகிறது. கேட்கலாம்,

ஊற்ற நீரின்றித்தானே செத்தான்?

ஆமாம், ஆமாம்.

ஆனால் நீர் கேட்டு போராடும் யோகியமான சக்திகளோடு இணைந்து போராடி ஒருக்கால் அந்தப் போராட்டத்தில் சாவது கூட சரியான நிலையாகும்.

அருமை ஆர்த்தி.

நண்பர்களுக்கு ஆர்த்தி வேந்தனின் முக நூல் பக்கத்தை சிபாரிசு செய்கிறேன்.

போய் உப்பு காரம் பார்த்து சொல்லுங்கள்.

(இப்படியான முக நூல் பக்கங்களைப் பற்றி எழுதினால் என்ன? சொல்லுங்கள்)

Monday, May 14, 2012

வேட்டி கட்டிய அம்மாயி டீ ஆத்திக் கொண்டிருக்கிறாள்

“சிரபுஞ்சியில் மழையே சரியாப் பெய்றது இல்லையாமேப்பா?”

படிக்கட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது கீர்த்தி கேட்டாள்.

“ஆமாண்டா”

“அப்புறம் ஏன், இன்னமும் உலகத்துலேயே அதிகமா மழை அங்கதான் பெய்யுதுன்னு பொய் பொய்யா நடத்துறீங்க”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் சொல்லித் தருகிற பொய் இது ஒன்று மட்டும்தானா மகளே என்று கேட்கத் தோன்றியது.

ஏன் ஒன்றைச் சொல்லி ஒரு நூறை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று எண்ணி மௌனத்தைவிரித்துக் கொண்டிருந்தேன். அவளாகவே அடுத்ததைக் கேட்டாள்,

" நம்ம ஊரப் போலவே அங்கையும் மழை இல்லன்னா நம்ம ஊரைப் போலவே அங்கையும் பூமி வறண்டு வெடித்துடான் கிடக்குமா?”

எனக்கு வேலை வைக்காமல் இடை மறித்த விக்டோரியா,

“ நம்ம ஜனங்க மாதிரி எல்லா ஊர் ஜனக்களுக்கும் மனசு வறண்டுதானே கிடக்குது. மனசு வறண்டுக் கிடந்தா பூமியும் வறண்டுதானே கிடக்கும்.

மனசு ஈரப் பட்டாதானே பூமியும் ஈரப்படும்”

“அதானே”

ஏதோ பெரிதாய் புரிந்ததுபோல் கீர்த்தி சொல்லி வைத்தாள்.

ஆமாம்,ஜனங்களின் மனதில் ஈரமே இல்லையா?

கோடைக் கரிசலாய் மனித மனங்கள் வறண்டு வெடித்துதான் கிடக்கின்றனவா?

இல்லை என்று முகத்தில் அறைந்து சொல்லின போனமுறை சென்னை வந்து திரும்பிய போது நிகழ்ந்த இரு சம்பவங்கள்.


பொதுவாகவே “தாய்மை” என்பதை புனிதம் என்று சொல்வது கூட பெண்களை இன்னும் கொஞ்சம் கசக்கி வேலை வாங்கத்தானோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டுதான்.

தாய்மைக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதன் மூலம் தகப்பனது பொறுப்பை, வேலைப் பகிர்வை தள்ளுபடி செய்து பெண்ணின் உழைப்பை இந்தச் சமூகம் சுரண்டுவதாகவே படும்.

ஆனால் எல்லாம் கடந்து தாய்மை ஈரமானது என்பது மீண்டும் இன்னொரு முறை நிரூபனமானது அன்று காலை.

அன்று காலை பயணச்சீட்டு வாங்குவதற்காக சைதாப்பேட்டை ரயிலடியில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.கொஞ்சம் நீண்ட வரிசை. வெளியே சைக்கிள் ஸ்டாண்ட் வரைக்கும் நீண்டிருந்தது.

சன்னமாகத் தூறத் தொடங்கியது.

உள்ளே ஓடிவிடலாம் என்றால் எனக்கும் கட்டிடத்திற்கும் இடையில் நான்கைந்து பேர்களே இருந்தனர். எனக்குப் பின்னே ஏறத்தாழ அறுபது அல்லது எழுபது பேர் நின்றிருந்தனர். கொஞ்சம் நனைவதற்குப் பயந்து உள்ளே போனால் பிறகு கடைசி ஆளாய் நின்று பயணச்சீட்டு வாங்க ஒரு மணி நேரம் கூடுதலாக செலவளிக்க நேரிடும். எனவே சன்னமாக நனைந்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.

ஓரத்தில் சாக்கு விரித்து அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அம்மா சொன்னார்,

“இந்த ரயிலு இல்லேன்னா அடுத்த ரயிலு. ஓடியா போகப் போகுது. நனையாமக் கொஞ்சம் ஒதுங்குப்பா. ஏற்கனவே தும்முற. காச்ச கீச்ச வந்துறப் போகுது.”

ஒரு தாய் எந்த நிலையில் இருந்தாலும் பொங்கிப் பிரவாகிக்கவே செய்யும் ஈரம்.

ஒருவழியாய் ரயில் பிடித்து தாம்பரம் இறங்கி அங்கிருந்து பெரம்பலூருக்கு பேருந்து ஏறினேன்.


நல்ல பசி.

எங்கேனும் சாப்பிட நிறுத்த மாட்டார்களா என்று வயிறு கிடந்து அலைந்தது.

இன்னும் கொஞ்சம் விட்டால் பெருங்குடல் சிறுகுடலைத் தின்றுவிடும் என்கிற ஒரு உச்சத்திற்கு பசி போன நிலையில் ஒரு வழியாய் பேருந்து ஒரு மோட்டலுக்குள் நுழைந்தது.

நடத்துநருக்கும் ஓட்டுநருக்கும் நன்றி சொல்லச் சொன்னது வயிறு.

இறங்கியதும் இளநீர் விற்குமிடத்தைத் தேடினேன்.

இரண்டு காரணங்களுக்காக நான் மோட்டல்களுக்குள் நுழைவதில்லை.

ஒன்று,
அங்கு கிடைக்கும் உணவின் தரம்.

மற்றொன்று,
மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து மோட்டலில் சாப்பிடும் காசை வைத்து சின்னதாய் ஒரு சாப்பாட்டுக் கடை வைத்து விடலாம். அப்படியொரு கொள்ளை விலை.

நமக்கென்றுதான் ஒரு ராசி உண்டே. மோட்டலைச் சுற்றி சுற்றி வந்தும் இளநீர் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லை. உள்ளே போய் விட வேண்டியதுதான் என்று எட்டிப் பார்த்தேன்.

குழம்பின் நிறமே வயிற்றுக்கு எரிச்சலைக் கொண்டு வந்தது.

சரி என்று சொல்லி தேநீர் ஸ்டாலுக்குப் போனேன். கடும் வெய்யிலாக இருந்ததால் கூட்டமே இல்லை. ஒரு சம்சாவை எடுத்தேன். முடித்ததும்

“ஒரு காபி கொடுங்க”

இன்னொரு சம்சாவை எடுக்கப் போனேன்.

“சார், வேணாம் சார். வெய்யில். வயித்துக்கு ஒத்துக்காது. பன்னோ பிஸ்கட்டோ சாப்பிடுங்க சார்”

யாரும் பார்க்கிறார்களா என்ற பயத்தோடு சன்னமான குரலில் சொன்னார் டீ மாஸ்டர்.

“ஏண்டா ராஸ்கோலு இப்படி வடை சம்சாவ வாங்கிட்டு வர. கண்ட கண்ட எண்ணெயில சுத்தமில்லாத மாவுல செஞ்சு தொலச்சிருப்பானுங்க. புள்ளைங்களுக்கு ஒத்துக்காதுன்னு எத்தன முறை சொல்றது” என்று பிள்ளைகளுக்கு வடை அல்லது சம்சா வாங்கி வரும்போதெல்லாம் அம்மாயி திட்டுவது நினைவுக்கு வந்தது.

மீண்டும் டீ மாஸ்டரைப் பார்த்தேன்.

அங்கே வேட்டி கட்டிய எங்க அம்மாயி டீ ஆத்திக் கொண்டிருப்பதாகவே பட்டது.





Sunday, May 6, 2012

மெய்ப் பொருள் காண்பது....


சௌத் ஏசியன் பாலாஜி,

புத்தகம் தொடர்ந்து வாசிக்கிற அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பெயர்.

ஏராளமான நல்ல நூல்களை மொழிபெயர்ப்புகளைப் பதிப்பித்தவர். யாரும் கொண்டுவரத் தயங்கும் இடது சார்பு நூல்களை எவ்வித லாப நோக்கமும்  இன்றி என்று சொல்வதுகூட போகிற போக்கில் போட்டுவிட்டு போகிறமாதிரி ஆகிவிடும்.

ஒரு நூல் சமூகத்திற்கு தேவைப் படுமென்றால் நட்டப் பட்டும் அதைக் கொண்டு வந்தவர்.

நல்ல இடதுசாரி.

தோழர்கள் ஈ.எம்.எஸ் , பி.ராமமூர்த்தி, ஜோதிபாசு, ஜீவா, நல்லக்கண்ணு என்று நீளும் அர்ப்பணிப்பு மிக்க இடதுசாரித் தலைவர்கள் அனைவரும் “ நான் ஏன் இடதுசாரி ஆனேன்” என்று ஏதோ ஒரு புள்ளியில் சொல்லியிருக்கிறார்கள்.

எதோ ஒரு மகத்தான போராட்டம், மக்கள் அனுபவித்த கொடுந்துயர், அரசின் மக்கள் விரோத போக்கு, இடது சாரி சார்பு இலக்கியம் அல்லது எழுத்து அல்லது யாரேனும் ஒரு இடதுசாரித் தலைவரின் தொடர்பு என்பது மாதிரி ஏதோ ஒன்றுதான் பெரும்பாலும் அவர்களை இடதுப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தியிருக்கும்.

சவுத் ஏசியன் பாலாஜியும் ஒருமுறை தன்னை இடதுபக்கமாய் இழுத்துப் போன சக்தி எது என்று சொல்லியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் சந்திரசேகர் என்ற ஒரு பேராசிரியர் இருந்தார் அதிதீவிர இடது எதிர்ப்பாளர். எடத்தை எதிர்த்து எவ்வளவு வேண்டுமானாலும் பேசியவர், எழுதியவர்.  

தான் பேராசிரியர். சந்திரசேகர் எழுதிய “சீனா அன்றும் இன்றும்” என்ற நூலை வாசித்ததனால்தான் இடதுசாரியாய் மாறினேன் என்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் சந்திரசேகர் அவர்கள் ஒரு ஆழமான இடதுசாரி எதிர்ப்புக் கண்னோட்டத்துடன் சீனாவின் மீதான தனது விமர்சனமாகத்தான் அவர் அந்த நூலை எழுதியிருந்தார்.

கம்யூனிச எதிர்ப்பாளர் ஒருவர் எழுதிய ஒரு நூல் அதன் வாசகன் ஒருவனை எப்படி இடதுசாரியாய் மாற்றும்?

பாலாஜி தரும் பதில்தான் ஒரு நல்ல நூல் ஆசிரியன் எவ்வளவு யோக்யமாயிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு நல்ல அளவு கோளாக விளங்குகிறது.

அவர் சொல்கிறார்,

சந்திரசேகர் இடதுசாரி எதிர்ப்பாளர் என்பதற்காக அந்த நூலில் சீனாவைப் பற்றி எந்த பொய்யான தகவல்களையும் தராததோடு சீன வளர்ச்சியையும் மறைக்காது உள்ளது உள்ளபடி தந்திருந்தார். சீன இடதுசாரிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை அதன் விளைவுகளை அந்த நூலில் இருந்து கண்டு கொண்டதின் விளைவே நான் இடதுசாரியானேன்

கிழவன் சரியாத்தான் சொல்லியிருக்கிறான்,

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....”

Saturday, May 5, 2012

பத்தொன்பது முடிகிறது


எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னால் தோழர் ஆ.குமரேசன் அவரது திருமண நாளன்று சொன்னதுதான்

வம்புக்கு இழுத்து விளையாடும் போதெல்லாம் கீர்த்தி சொல்வாள்,

“ஏம்மா இந்த லூசு அப்பாவ டைவர்ஸ் பண்ணி வீட்ட விட்டு விறட்டேன்மா. ஒரே இம்சையா இருக்கு”

கிஷோர் அந்த நேரங்களில் இருந்தால் இடைமறித்து சொல்வான்,

“வீட்ட விட்டுகூட விறட்ட வேணாம். நாம வேணாலும் வாடக வீட்டுக்கு போய்க்கலாம். வக்கீலுக்கு காசு வேணும்னா முத்தண்ணன்கிட்ட வாங்கிகலாம்”

இப்படி சொல்லும் பிள்ளைகள் நேரா நேரத்துக்கு தவறாமல் கேட்பார்கள்,

“அப்பா, சாப்ட்டியாப்பா?, மாத்திரைய ஒழுங்கா போட்டியாப்பா?,”

குடும்பத்தில் இருக்கிறது தோழர்.

இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எதையும் சாதிக்க வில்லை.

எங்கள் குடும்பத்து மதச் சாயல் இல்லாத பெயர்களாக குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன்.

தமிழ்ப் பெயராக இல்லை என்பதில் வருத்தமே. ஆனாலும் பகத்தோடு சிறை பட்ட அவனது தோழனான கிஷோரிலால் என்பவனின் நினைவாக பையனுக்கு கிஷோர் என்றும், இசை , புகழ் என்று பொருள்படும் கீர்த்தி என மகளுக்கும் பெயர் வைத்தேன்.

ஊர் ஊருக்கு போய் தமிழ் வழிக் கல்வி குறித்து பேசுவது போலவே பிள்ளைகள் இருவரையும் தமிழ் வழியில் படிக்க வைக்கிறேன்.

பிள்ளைகளிடம் தோழனாகவே பழகுகிறேன்.

என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை தோழர்களே சொல்லிக் கொள்வதற்கு.

எனக்கும் சந்தேகமே, இவ்வளவு காலம் என்னை விவாகரத்து செய்யாமல் எப்படி விட்டுவால் என்னோடு குடும்பம் நடத்த முடிகிறது என்று.

19 ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தப் பொழுதில் சன்னமாக வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி விக்டோரியாவை கை குவித்து வணங்கிக் கொள்கிறேன்.

Friday, May 4, 2012

குடிமகன் திப்பு

“ஏழை மக்கள் தங்கள் வயிற்றுக்காக இரவும், பகலும் உழைக்கிறனர்.உழைத்துக் கொண்டே இறந்தும் போகின்றனர். ஓடும் ஆறுகளின் அழகைக் காணவோ, மேகத் திரள்களைக் கண்டு மகிழவோ, வனங்களையும், சோலைகளையும் ரசிக்கவோ சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை.”

இப்படி ஏழைகளின் இயலாமையை மிகுந்த பரிவோடும், மிகுந்த அக்கறையோடும் பதிந்திருப்பவன் ஒரு பொது உடைமை வாதியாகவோ, ஒரு தொழிற்சங்க வாதியாகவோ, அல்லது இத்தனை இன்னல்களையும் அனுபவிக்கும் ஒரு ஒடுக்கப் பட்ட ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவனாகவோ இருந்தால் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.

ஆனால் உழைக்கும் மக்கள் இயற்கையை, வாழ்க்கையை ரசிக்க இயலாமல், அனுபவிக்க இயலாமல் உழைத்து உழைத்தே சாவது கண்டு ரத்தம் கசியக் கசிய ஆதங்கப் பட்டவன் ஒரு மன்னன் என்றால் உறைந்தே போய்விடுவோம். ஆனால் அதுதான் உண்மை.சாகும் வரைக்கும் “ குடிமகன் திப்பு” என்றே தன்னை அழைத்துக் கொண்ட திப்புவின் வார்த்தைகளே மேலே சொல்லப் பட்டவை.

அதிகமாய் திரிக்கப் பட்ட, அளவுக்கதிகமான பொய்களால் எழுதப் பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரன் திப்பு. திப்புவின் தந்தை ஹைதர் அலிக்கும் இது முற்றிலும் பொருந்தும்.

மைசூர் ராஜ்யத்தின் மன்னன் சிக்கத் தேவராயரின் மகனுக்கு காதும் கேட்காது, பேச்சும் வராது. அவன் மன்னனானதும் அவனை ஒரு பொம்மை போலாக்கி ராஜ்யத்தைத் தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் அவனது அமைச்சர்கள் நஞ்சராஜும், தேவராஜும்.

அப்போது ராஜ்யத்தின் தளபதியாக இருந்த ஹைதர் அந்த அமைச்சர்களிடமிருந்து ஆட்சியைக் கைப் பற்றினார். இந்துக்களிடமிருந்து ஹைதரை அந்நியப் படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் அவன் ஆட்சியை உடையார்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதாய் கதைகட்டி விட்டனர்.  திப்புவைப் பற்றி எழுதும் போது கூட அவன் இந்துக் கோயில்களை அழித்தவன்,    கோவில் சொத்துக்களாஇ சூறையாடியவன், போரில் வென்ற பூமியின் மக்களை வாள் முனையில் மதம் மாற்றிய மத வெறியன் என்றே திரித்து வரலாறு எழுதினர் பரங்கியர்.

திப்பு ஒரு ஆழமான இஸ்லாமியன். தீவிரமான மதப் பற்றாளன். இன்னும் சொல்லப் போனால் ஜோசியம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டிருந்தவன் என்பதையெல்லாம் மறுக்கத் தேவையில்லை. அவரது தோல்வி உறுதியான நிலையிலும் முல்லாக்களையும் , பிராமணர்களையும் வரவழைத்து கணிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அவர்களின் ஆலோசனைப்படி அவர்களுக்கு நிறைய தானமாக வழங்கி தோஷம் போக்கியிருக்கிறார். இந்த அளவிற்கு மூட நம்பிக்கையோடுதான் இருந்திருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் மத வெறியனாக இருந்ததில்லை. மாறாக மாற்று மதத்தை மதிக்கிறவராக மாற்று மதங்களுக்கு குறிப்பாக இந்து மதத்திற்கு நிறைய செய்தவராக இருந்திருக்கிறார் என்பதையே சான்றுகள் சொல்கின்றன.

முனைவர் மு. அகமது உசேன் தரும் திப்புவின் நன்கொடைப் பட்டியலைப் பார்ப்போம்.

1) இந்து அறநிலையங்கள் மற்றும் அக்ரஹாரங்கள்.........1,93,959 வராகன்கள்
2) பிராமண மடங்கள்........................................................................20,000 வராகன்கள்
3) இஸ்லாமிய மத நிறுவனங்கள்...............................................20,000 வராகன்கள்
ஆக கூடுதல்.........................................................................................2,33,959 வராகன்கள்.

ஆக 2,33,959 வராகன்கள் நன்கொடையில் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு வெறும் 20,000 வராகன்களை மட்டுமே வழங்கிய திப்புவை, சீரங்கப் பட்டிணம், குருவாயூர் மற்றும் சிருங்கேரி மடங்களுக்கு ஏராளமாய் அள்ளிக் கொடுத்த திப்புவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே உண்மை பேசுபவனால்கூட மதவெறியன் என்று கூற முடியாது.

உலகமயமாக்கல் வளரும் நாடுகள் ஒவ்வொன்றையும் காவு கொண்டுவரும் வேளையில் கணினி முதல் கண்மை வரை இந்தியச் சந்தையை உலக நாடுகளுக்கு , வெளிப்படையாகச் சொல்வதென்றால் அமெரிக்காவிற்குத் தாரை வார்க்கும் பிரகஸ்பதிகளுக்கு திப்புவின் சந்தை நிர்வாகம் பாடம் தருவதாகவே உள்ளது. உள்ளூர் சந்தையில் அவனது பொருளை விற்பதற்கு மட்டுமல்ல, சுதேசி பொருளை அந்நியன் வாங்குவதற்கும் தடை விதித்திருந்த மன்னன் திப்பு.

அரசு முதலாளித்துவம் என்கிற வடிவத்தை மிக நேர்த்தியாக சமைத்துள்ளான். குறைந்த முதலீடு செய்யும் ஏழைகளுக்கு லாபத்தில் அதிக பங்கும், அதிக முதலீடு செய்யும் பணக்காரர்களுக்கு லாபத்தில் குறைந்த பங்கும் வழங்கி பொருளாதார சமனைக் கொண்டுவர முயற்சி செய்தவன் அவன். இப்படியாக நிதி அமைச்சர்களுக்குப் பாடம் நடத்தியவன் அவன்.

அதிலிருந்து இன்றைய அமைச்சர் பெருமக்கள் ‘பாஸ் மார்க்’ வாங்குமளவிற்கும் பாடம் படிக்காததற்கு எந்த விதத்திலும் அவனைப் பொறுப்பாளியாக்க முடியாது.

தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கசக்கிப் பிழிந்து பெருமுதலாளிகளுக்கு சலுகைகளாய் வாரி வழங்கும் இன்றைய ஆட்சியாளர்கள் மத்தியில் திப்புவின் வரி வசூலிப்பு முறையும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகவே உள்ளது.விள்:ஐச்சல் குறையும் போதும் வறட்சி பூமியை வறுத்தெடுத்தக் காலங்களிலும் யாரும் கேட்காமலேயே வரி வசூலிப்பதை நிறுத்தியவன் என்பதும், இயற்கை பொய்க்கும் காலங்களில் இன்றைய விவசாயி அவஸ்தைகளும் திப்புவின்மேல் உள்ள மரியாதையை அதிகப் படுத்துகின்றன.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவன் என்பது மட்டுமல்ல யாரிடம் நிலம் இருக்க வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தான். அதனால்தான் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றான். கலப்பை வாங்க எளிய கடன், தரிசு நிலத்தை மேம்படுத்த முன்பணம்,தேக்கு மற்றும் சந்தனம் போன்ற ஏற்றுமதிக்குரிய மரம் வளர்ப்போருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் சலுகைகள் என்பன அவனது கூரிய விவசாயப் பார்வையை உணர்த்துகின்றன

1790 ஆம் ஆண்டு காவிரியில் கட்டப் பட்ட அணையில் “ இறைவனின் இந்த அரசு கட்டும் அணையின் நீரால் தரிசு நிலங்களை விளை நிலமாக்குவோருக்கு நிலம் உடமையாகும்,” என அவன் எழுதி வைத்திருப்பதைப் பார்க்கும் போதும், “ 15 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து ஒரே நிலத்தில் குத்தகைக்கு உழுதிருந்து குத்தகைப் பணமும் முறையாக செலுத்தியிருப்பின் அந்த நிலத்திலிருந்து அவனை வெளியேற்றக் கூடாது” என்ற அவனது பிரகடனத்தைப் பார்க்கும் போதும் அவன் காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது.

குற்றம் புரியும்விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவை மூன்று அடி வளரும்வரை அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்ற அவனது தண்டனை முறை அபூர்வமானது மட்டுமல்ல ஆக்கப்பூர்வமானதும்கூட.

அருமையான நூல் நிலையம் ஒன்று அவனிடம் இருந்திருக்கிறது.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளி என்ற அவனது திட்டம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம்.

“ஆடுகள் போல 100 ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் புலியைப் போல சில நாட்கள் வாழ்வதே பெருமை தரும்” என்பான். அவனது சிறப்புகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது அவனது மரணம்.


04.05.1799

ஸ்ரீரங்கப் பட்டிணம்.

ஆற்றங்கரையின் அந்தப் பகுதியில் ஆங்கிலப் படைகள்  ஏதோ ஒரு தகவலுக்காக காத்திருக்கின்றன. பரபரப்பும் ஆர்வமும் படையின் முன்னிலிருந்த வீரன் முதல் இறுதியாஇ நின்ற வீரன் வரைக்கும் எல்லோர் முகங்களிலும்.

கோட்டையின் மேற்குப் பகுதியில் திப்புவின் படைகள்.  அங்கு வருகிறான் திப்புவின் நிதி அமைச்சர் மீர் சாதிக்.

“ எல்லோரும் அங்கு சென்று ஊதியம் பெற்று ஓய்வெடுங்கள்”

அவன் காட்டிய திசை நோக்கி தங்கள் வியர்வைக்கான கூலியைப் பெறும் மகிழ்ச்சியில் வீரர்கள் நகர்கிறார்கள்.

இந்தத் தகவலை காத்திருந்த ஆங்கிலப் படைகளுக்கு அனுப்புகிறான்.

மதிய உணவை எடுத்திக் கொண்டிருந்த திப்புவின் கவனத்திற்கு செய்தி வருகிறது.

பாதியில் கை கழுவி விட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கிழம்புகிறான்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடிந்து விடுகிறது.

குவிந்து கிடக்கும் வீரர்களின் பிணங்களை புரட்டி பார்க்கிறார்கள்.

கோட்டையின் வடக்கு மதில் சுவரில் வீரர்களோடு வீரனாய், பிணமாய் திப்பு.

திப்புவின் உடலருகே நின்று வெல்லெஸ்லி கொக்கரித்தான்,

“ மைசூரின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சி, இந்தியா இறந்து பிணமாக என் காலடியில் கிடக்கிறது”

எனது இன்றைய சுதந்திர சுயேட்சையான வாழ்விற்கான உன் பங்களிப்பு  மிகவும் உசத்தியானது திப்பு.

சில சொட்டு கண்ணீரும், நன்றியும், வீர வணக்கமும்.




Thursday, May 3, 2012

ஒரு பிணம் இரண்டு பாடைகள்

மயானம் வரைக்கும் பிணங்களைக் கொண்டு செல்வதற்குத்தான் பாடை என்பது பொதுப் புத்தி. எவ்வளவுதான் வசதியானவர்களாக இருந்தாலும் இதுதான் நடக்கும். வசதிக்கு ஏற்ப அலங்காரங்களும் ஆடம்பரங்களும் வேண்டுமானால் கூடவோ குறையவோ செய்யும். ஆனால் ஒரு வீட்டில் ஒரு பிணம் விழுந்தால் ஒரு பாடைதான் கட்டுவார்கள்.

இப்படித்தான் நானும் நினைத்திருந்தேன் 1987 வரை.

அந்த ஆண்டுதான் அது நடந்தது.

ராஜஸ்தான் மாநிலம், தியாரோலே கிராமம்.

ஒரு இழவு வீடு.

வாசலில் இரண்டு பாடைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ரூப் கன்வர் என்ற இளம் பெண்ணின் கணவர் நோய் வாய் பட்டு இறந்து போகிறார். ஏகத்துக்கும் கூட்டம்.

எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். ரூப் கன்வர், இறந்து போன அவரது கணவரின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

பொதுவாகவே ஒரு மரணம் நிகழுமானால் அவரது உறவினர்களும் அவரைச் சார்ந்தவர்களும் இறந்து போனவரின் இழப்பின் சுமை அழுத்த அழுவார்கள்.

ஆனால் ரூப் கன்வர் அன்று தனது கணவரது பிணத்தின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது அதற்காக மட்டுமல்ல.

அந்தி சாய்ந்த போது எரியூட்டுவதற்காக இறந்து போன மனிதனின் பிணத்தை ஒரு பாடையில் ஏற்றுகிறார்கள். இன்னொரு பாடையில் ரூப் கன்வரை ஏற்றுகிறார்கள். ஊர்வலம் தொடங்குகிறது. கன்னங்கறைய அழுதபடியே அந்தச் சின்ன மகள் இரு புறமும் இருப்பவர்களைப் பார்த்து கை கூப்பி தொழுதபடியே போகிறாள்.

போகும் வழியெங்கும் திரண்டிருந்த கூட்டம் ரூப் கன்வரை பதிலுக்கு தொழுத படியே உரத்த குரலில் கூச்சலிடுகிறது

“சதி மாதாக்கி ஜே”

அவரது கணவருக்கு கொள்ளி வைக்கப் பட்டு தீ கொழுந்து விட்டு எரிகிறது.

ஒரு மருத்துவர் வருகிறார். கதறக் கதற, திமிறத் திமிற அந்த பேதைக்கு மயக்க ஊசி போடப் படுகிறது.

மயங்கிய நிலையில் இருந்த ரூப் கன்வரை அவரது சகோதரர்களும் உரிமை கொண்ட உறவினர்களும் எரியும் சிதையில் வீசுகிறார்கள்.

தொழுத படியும் ,அழுத படியும் திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பறிக்கிறது,

“சதி மாதாக்கி ஜே”

இதே மாதிரி ஒரு பின்னந்தியில் இதே மாதிரி எரியும் ஒரு சிதையில் வீசி எறியப்பட்டு எரிந்து சாம்பலாகிறாள் ஒரு யுவதி. பார்த்துக் கொதித்துப் போன நெருடா எழுதினான்,

“ இந்தியா எனும் தேசத்தில்
ஒரு அந்தி வேலை நேரத்தில்
ஒரு நதியின்
பசுங்கரை தன்னில்
நான் கண்ட நெருப்புதான்

பெண்ணா
பெரு நெருப்பா?

சிதையா
சிதறும் சாம்பலா?

ஏதென்று
தெரியா வண்ணம்
எல்லாமே
எரிந்து தணிந்தது

அந்த
இறப்பில்

அந்தத்
துர் மரணத்தில்

அங்கே
எதுவும்
உயிரோடு இல்லை”

எப்படியோ ரூப் கன்வரின் கொலை வழக்காகிறது. மயக்க ஊசி போட்ட மருத்துவர் உட்பட முப்பத்தி இரண்டு பேர் கைது செய்யப் படுகிறார்கள். வழக்கு நடக்கிறது. கொடுமை என்னவெனில், கதறக் கதற , திமிறத் திமிற எரிந்த தீயில் அந்த இளைய மகள் வீசப் பட்டதற்கு சாட்சியே இல்லை என்று அந்த வழக்கு தள்ளுபடியானது.

அதைவிடக் கொடுமை என்னவெனில் தியாரோலா இன்றைக்கு ஒரு பரபரப்பான சுற்றுலாத் தளம்.

அங்கு ரூப் கன்வருக்கு ஒரு சதி மாதா ஆலயம் உண்டு. நுழைவுக் கட்டணமும் உண்டு. நல்ல வசூலும் குவிவதாய் தகவல்கள் சொல்கின்றன.

போதுமன அளவிற்கு எதிர்ப்பியக்கங்கள் இல்லாது போனது.

விளைவாக,

1999 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் காச நோயினால் இறந்துபோன கணவரின் சிதையில் தள்ளப்பட்டு சரண்ஷா என்ற பெண் சாம்பலகிறாள்.

அப்போதும் திரண்டிருந்த கூட்டம் ,

“சதி மாதாக்கி ஜே” சொன்னதோடு கடமையைக் கத்தறித்துக் கொண்டது.

நெருடா எழுதினான்

அசையவில்லை தேசம்.

ரூப் கன்வர் எரிந்து போனாள்.

ரூப் கன்வர் எரிந்த போதும் அசையவில்லை தேசம்,

சரண்ஷா எரிந்தாள்.

இதற்கும் தேசம் தேவையான அளவு அசையவில்லை.

விளைவாக,

பீஹாரிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில், நம் தமிழ் மண்ணில் ஒரு ஆண் இறந்து போகிறான். அவனது சிதையில் தள்ள அவளது மனைவியை நெருங்குகிறார்கள் . உசிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்து குழந்தைகளோடு ஓடுகிறாள். விரட்டுகிறார்கள். இறுதியாக ஒரு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து விடுகிறாள்.

பஞ்சாயத்து செய்து காவலர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள்.

இது தமிழ் நாட்டுக் காவல் நிலையம். அவள் காப்பாற்றப் பட்டு விட்டாள். இதுவே அவர்களது மாநிலமாக இருந்திருந்தால் சதி மாதாவின் எண்ணிக்கை ஒன்று கூடியிருக்கக் கூடும்.

இரண்டு மாதங்கள் கூட இருக்காது இது நடந்து.

நம் கவனத்திற்கு வராமல் எண்ணற்ற பெண்கள் சதி மாதாக்களாக மாறிக்கொண்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு.

நாம் அசைவற்று இருந்தால்

“சதி மாதாக்கி ஜே” சொல்லிக் கொண்டே

பாடைகளில் உசிரோடு மனுஷிகளை கொண்டுபோகவே செய்வார்கள்.

நன்றி :  “குறி” இதழ்





இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...