Sunday, April 1, 2012

கணக்கு தப்புங்க மிஸ்




எப்படித்தான் இந்த மிஸ் மட்டும் மணி அடித்ததும் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறார்களோ? என்று எல்லா பிள்ளைகளுக்கும் எப்பவுமே கௌரி டீச்சரைக் குறித்து ஒரு சந்தேகம் இருக்கும்.

மணி ஒலித்ததும் கௌரி வகுப்பறை வாசலுக்கு வருகிறாரா? அல்லது அவர் வந்ததைப் பார்த்து மணி ஒலிக்கிறதா? என்று ஒரு பட்டிமன்றமே வைத்து விடலாம். சாலமன் பாப்பையா அல்ல நீதியரசர் கிருஷ்ணய்யராலேயே சரியான ஒரு தீர்ப்பினை வழங்க முடியாத விவகாரம் இது.

“குட் மார்னிங் மிஸ்” என்ற குழந்தைகளின் அன்பினை சிந்தாமல் சிதறாமல் ஒரு புன்னகையோடு உள்வாங்கி, “தேன் வந்து பாயுது காதினிலே” என்பது போதாது, இவரது குரலுக்கு எதையாவது புதிதாய் சொல்லவேண்டும் என்று, ரசணை என்றால் என்ன என்று கேட்கும் கூர் மழுங்கிப் போன மொக்கையையும் எண்ண வைக்கும் தனது குரலால் “குட்மார்னிங் குட்டீஸ்” எனத் திருப்பும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் தேனைவிட இனிய எதையோ தேனோடு கலந்து செய்த ஏதோ ஒன்று தங்கள் காது வழி உள்ளிறங்கி தங்கள் உசிரோடு ஒன்று கலப்பதை உணர முடியும். தினமும் தினமும் இது வாடிக்கையாய் நிகழ்ந்தாலும் இது பிள்ளைகளுக்கும் திகட்டியதில்லை, கௌரிக்கும் திகட்டியதில்லை.

“கணக்கு, பிணக்கு, ஆமணக்கு” என்று சொல்லுமளவிற்கு வேப்பங்காயைவிடவும் கசந்த பாரதிக்கே கௌரி மிஸ் கணக்கு நடத்தினால் இனித்துப் புரிந்திருக்கும்.

வீட்டுப் பாட நோட்டுகளை ஆசிரியர் அறையிலுள்ள அவரது மேசையில் வைத்து விட்டால் போதும். ஓய்வு பட்ட நேரத்தில் திருத்தி வகுப்பிற்கு வரும் பொழுது அனைத்து நோட்டுகளையும் தானே எடுத்து வந்து விடுவார். மாணவர்களை அந்த வேலைக்குப் பயன்படுத்த மாட்டார்.

அன்று இடைவேளைக்கு அடுத்த வகுப்பு 3A. வழக்கம் போல நோட்டுகளை சுமந்தபடியே வகுப்புக்குள் நுழைந்து வணக்கம் ஏற்று, வணங்கிய பிறகு,

“நாளைக்கு ஹோம் வொர்க் என்னன்னு நோட்ல எழுதியிருக்கேன். அம்மாகிட்ட காட்டி சரியா செஞ்சு வரனும், ஓகே”

“ஓகே மிஸ்”

அவர் எப்போதும் எல்லா வகுப்புகளிலும், எதுவாயிருந்தாலும் அம்மாவிடம்தான் கேட்க சொல்வார். அதே போல் எதற்காகவும் எப்போதும் அப்பாக்களை அழைத்து வரச் சொன்னதும் இல்லை. அது ஏனென்று தெரியவில்லை என்று சொல்வதை விடவும் ஏனென்று அவருக்கே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்று கழித்தலையும், இன்றைய தேதியில் அவசியம் தேவைப் படுகிற கடன்வாங்கி கழித்தலையும் யாருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுத்தவர்,

“புரியுதா குட்டீஸ்?”

“ நல்லாப் புரியுதுங்க மிஸ்”

“சரி , அப்ப ஒரு கணக்கு தரேன் செய்றீங்களா?”

”செய்றோம் மிஸ்”

“தள்ளுவண்டிக் காரரிடம் 57 ரூபாய்க்கு பழங்களை வாங்கிய ராணி அவரிடம் 80 ரூபாய் தந்தால் அவர் ராணிக்கு எவ்வளவு மிச்சம் தருவார்?”

கணக்கை எழுதிப் போட்டுவிட்டு வகுப்பறையை சுற்றி சுற்றி வந்தவர் எப்போதும் சொன்ன வேலையை ஒழுங்காகவும் உற்சாகத்தோடும் செய்யும் ரிகாஷ் கணக்கை செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து விட்டார்.

“ஏன் ரிகாஷ், உடம்பு சரியில்லையா?”

“இல்லீங்க மிஸ். ஜொரமெல்லாம் இல்ல”

“அப்புறம் என்னடா? வீட்ல அம்மா ஏதும் தம்பிய அடிச்சாங்களா?”

“இல்லீங்க மிஸ். முத்தம் கொடுத்துதான் என்னைய வேன்ல ஏத்துனாங்க”

“அப்புறம் ஏண்டா கணக்குப் போடாம இருக்குற?”

எதுவும் பேசாமல் நின்றான்.

“ஏம்பா புரியலையா?”

“புரியுதுங்க மிஸ்”

கோவப் பட்டே பழக்கம் இல்லாத கௌரிக்கும் சன்னமாய் கோவம் வந்தது.

“அப்புறம் ஏண்டா கணக்கப் போடல”

நின்றான்.

”சொல்லுடா, அப்புறம் ஏன் போடல ?”

“கணக்கு தப்புங்க மிஸ்”

அப்படியே மிரண்டு போனார் கௌரி. “கணக்கு தப்பா?”

“ஆமாங்க மிஸ்.”

தெளிவாய் தெரித்தது பதில்.

“கணக்கு தப்பா? ஏம்பா மத்த பசங்க எல்லாம் சரியா போட்டிருக்கீங்களா?”

எல்லோரும் 80 ரூபாயில் 57 ரூபாய் போக 23 ரூபாய் மிச்சம் என்று சரியாக பொட்டிருந்தனர்.
கொஞ்ச நேரம் அப்படியே அசைவற்று நின்றிருந்த கௌரி செல்லில் ரிகாஷ் அம்மாவை பிடித்தார்.

“வணக்கம் மிஸ்”

“கொஞ்சம் ஸ்கூலுக்கு வாங்க மேம். கணக்கு போட மாட்டேன்னு ரிகாஷ் அடம் பிடிக்கிறான்”

ஈகோவே இல்லாதிருந்தது போல தோற்றமளித்த கௌரிக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் அது சத்தமே செய்யாமல் இருந்திருக்கிறது.

இதற்குள் மணி அடித்துவிடவே கௌரி வெளியேறினார்.

மிஸ் கிட்டயே எதிர்த்து பேசியதாக ரிகாஷ் மீது ஒரு பிம்பம் விழுந்து விட்டது. யாரும் அவனோடு பேசவே பயந்தார்கள். உண்மையை சொல்லப் போனால் அந்த வகுப்பில் அவன் அந்நியப் பட்டுத்தான் போனான்.

இதைக் கேட்டவுடன் போட்டது போட்டபடி அப்படியே போட்டுவிட்டு பள்ளிக்கு வந்தார் ரிகாஷின் அம்மா உமா.

வழக்கத்திற்கு மாறாக நிலை குழைந்த நிலையில் மேசையில் தலை கவிழ்த்தவாறு கிடந்தார் கௌரி. இதுவரை இந்த நிலையில் அவரை யாரும் பார்த்தது இல்லை.

“குட் மார்னிங் மிஸ்”

குரல் கேட்டு நிமிர்ந்த கௌரியின் கண்கள் சிவந்திருந்ததையும், ஈரம் பூசிக் கொண்டிருப்பதையும் உமாவால் பார்க்க முடிந்தது.  

“வாங்க”

சுரத்தே இல்லாமல் வந்தது.

“சொல்லுங்க மிஸ். ரிகாஷ் ஏதும் தப்பு பன்னிட்டானா?”

”என்னோட இத்தன வருஷ சர்வீஸ்ல யாரும் ஏங்கிட்ட இப்படி பேசினதில்லங்க மேடம்.”

கௌரியால் பேசவே முடியவில்லை. விட்டால் கதறியேவிடுவார் போல இருந்தது. கணக்கு ஆசிரியை என்பதாலோ என்னவோ கண்ணீர் ஸ்கேல் வைத்து கிழித்ததுபோல் நேர்கோட்டில் வழிந்து கொண்டிருந்தது.

உமாவிற்கு உதறவே ஆரம்பித்திருந்தது. ஏதோ பெரிதாய் பேசி மிஸ்ஸோட மனதை கிழித்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.

“என்ன மிஸ் செஞ்சான்?”

“விடுங்க எல்லாம் என் தலை எழுத்து. வேற என்ன சொல்றது? உச்சா போக டவுசர் கழட்டத் தெரியாத பிள்ளைகிட்டல்லாம் வாங்கனும்னு எழுதி இருந்தா வேற என்ன செய்ய முடியும்.”

“அவன் ஒரு மனுசன்னு இப்படி போய் உடையுறீங்களே மிஸ். குச்சிய எடுத்து நாலு வெளுத்தா அடங்குறான். என்னங்க மிஸ் சொன்னான்?”

கௌரியும் உமாவும் பேசிக் கொண்டெ வகுப்பருகே வந்திருந்தனர். உமா ரிகாஷின் அம்மா என்பதை நன்கு உணர்ந்திருந்த ஆங்கில ஆசிரியை அவனை வெளியே அனுப்பினார்.

வந்த ரிகாஷ் எதுவுமே நடக்காதது போல் கௌரியைப் பார்த்து “குட் மார்னிங் மிஸ்” சொல்லிவிட்டு அம்மாவின் அருகில் வந்து ஒட்டிக் கொண்டான்.

“மிஸ்ஸ என்ன சொன்ன?” ஒரு கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு அதலட்டாகக் கேட்டாள்.

“ஒண்ணும் சொல்லலையே. ஒன்னும் சொல்லலதானேங்க மிஸ். நீயே வேணா மிஸ்ஸக் கேளேன்”

“பொய் சொல்லாத, வாய்ல சூடு வச்சுருவேன் ஆமா”

ரிகாஷ் அழ ஆரம்பித்திருந்தான்.

“சொல்லுங்க மிஸ், என்ன சொன்னான்? அப்படியே அடுப்புல வச்சு எரிச்சுப் புடறேன்.”

கௌரி எதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தார். இருவருமே ஒன்றும் சொல்லாததால் உமாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஆங்கில மிஸ்ஸோட மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காக வந்த ரிகாஷின் வகுப்புப் பெண் கோகிலாவை நிறுத்தி,

“ரிகாஷ் என்ன பாப்பா செஞ்சான்?”

“அவன் மிஸ் கொடுத்த கணக்கே தப்புங்கறான். எல்லாரும் சரியா கணக்கப் போட்டுட்டோம். அவன் மட்டும் கணக்கு தப்பு, போட மாட்டேங்கறான் ஆண்ட்டி”

நிற்காமல் ஓடினாள்.

“ஏண்டா மிஸ் கொடுத்தக் கணக்கப் போட்டியா?”

அவனது மௌனம் அவளைக் கோபப்படுத்தவே, “கேக்கறேன்ல. மிஸ் கொடுத்தக் கணக்க ஏண்டா போடல?”

”அந்தக் கணக்கு தப்பு”

தான் கொடுத்த கணக்கையும் இவனைத் தவிர எல்லோரும் அந்தக் கணக்கை செய்ததையும் சொன்ன கௌரி, “எங்க ப்ரின்சியே ஏங்கிட்ட இப்படி பேசினது இல்ல”

”இதுல என்னடா தப்பு?”

”57 ரூபாய்க்கு எப்படிம்மா 80 ரூபா கொடுப்பாங்க?”

“ஏண்டா நேத்து அம்மா அஞ்சு ரூபாய்க்கு தக்காளி வாங்கிட்டு பத்து ரூபா கொடுத்து மீதி அஞ்சு ரூபா வாங்கல. அது மாதிரிதான் இதுவும்”

“அஞ்சு ரூபா தக்காளிக்கு அஞ்சு ரூபா தரலாம், பத்து ரூபா தரலாம், இருபது ரூபா தரலாம், ஐம்பது ரூபா தரலாம், நூறும் தரலாம். ஆனா பதினஞ்சு ரூபா தருவாங்களா?”

கொஞ்சம் புரிந்தது போல இருந்தது உமாவிற்கு.

“இப்ப என்னதாண்டா சொல்ற கட்டையிலப் போறவனே? எண்பது ரூபாயில ஐம்பத்தி ஏழு போச்சுன்னா மீதி இருபத்திமூணுதானே?”

“அதுதான் தப்பும்மா”

“கட்ட வெளக்கமாறு பிஞ்சுடும் ஆமாம்”

“லூசாம்மா நீ. 57 ரூபாய்க்கு எப்படிம்மா 80 ரூபா கொடுப்பாங்க. ஐம்பது ரூபாத் தாள் ஒன்னும் பத்து ரூபாத் தாள் ஒன்னும் ஆக 60 கொடுக்கலாம், இல்லாட்டி மூனு இருபது ரூபாத் தாளா 60 கொடுக்கலாம், அல்லது ஐம்பது ஒன்னும் இருபது ஒன்னும் ஆக 70 கொடுக்கலாம் 80 ரூபா எப்படிம்மா கொடுப்பாங்க”

ரிகாஷ் சொல்வதின் நியாயம் உமாவிற்குப் புரிந்தது. ஆனாலும்,

“குதர்க்கமாவா பேசற வீட்டுக்கு வா வாய் வாயா சூடு வைக்கிறேன்,” என்றவள்,

“அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் மிஸ். சின்னப் பையன், தெரியாமப் பேசிட்டான். தயவு செஞ்சு மன்னிச்சுக்கங்க. நானும் கண்டிச்சு வைக்கிறேன். இப்படி ஏதாவது அதிகப் பிரசங்கித் தனமா செஞ்சான்னா கண்ண மட்டும் வச்சிட்டு எல்லாத்தையும் உறிச்சு எடுத்திடுங்க மிஸ். அத உட்டுட்ட்டு நீங்க ஏன் இப்படி ஒடஞ்சு போகனும். வீட்டுக்கு வரட்டும் கொதிக்கிற ஒலையில போட்டு வேகவைக்கிறேன்.“

கை எடுத்து கும்பிட்டவாறு விடை பெற்றாள்.

“கணக்கு தப்புங்க மிஸ்” என்ற ரிகாஷின் கூற்றில் இருந்த நியாயம் உமாவிற்கு மட்டுமல்ல கௌரி டீச்சருக்கும் விளங்கவே செய்திருக்கும்.

நன்றி: கல்கி 31.03.2012

17 comments:

  1. அருமை.
    ரிகாஷ் சொல்வது சரி தான்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. “கணக்கு தப்புங்க மிஸ்” என்ற ரிகாஷின் கூற்றில் இருந்த நியாயம் உமாவிற்கு மட்டுமல்ல கௌரி டீச்சருக்கும் விளங்கவே செய்திருக்கும்.

    குழந்தைகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழ்கவேண்டும்..

    ReplyDelete
  3. “கணக்கு தப்பா?”

    “ஆமாங்க மிஸ்.”

    தெளிவாய் தெறித்தது பதில்.

    தெளிவான மாணவனையே விளக்கமளிக்க விடாமல் அடக்க நினைக்கும் ஈகோ,, ஆசிரியர்கள் விலக்கவேண்டிய ஒன்று என தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.


    ’ஈகோவே இல்லாதிருந்தது போல தோற்றமளித்த கௌரிக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் அது சத்தமே செய்யாமல் இருந்திருக்கிறது.’

    ஆனால் அதற்காக் கௌரியின் கண்கள் சிவந்திருந்து என வர்ணிப்பதெல்லாம் டூ மச்....

    ReplyDelete
  4. அழகான சிறுகதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. யாரைத் தான் விட்டு வைக்கிறது இந்த ஈகோ. கௌரி டீச்சர் மாதிரி, . அதை புரிந்து ஏற்றுக் கொள்கிற மனம் இருக்கும் வரை பிரச்சனை இல்லை..

    ReplyDelete
  6. ////Rathnavel Natarajan said...
    அருமை.
    ரிகாஷ் சொல்வது சரி தான்.
    வாழ்த்துகள்.\\\\
    குழந்தைகள் எதை சொன்னாலும் அருமையாகவும் இனிப்பாகவும் இருக்கும்

    ReplyDelete
  7. ///இராஜராஜேஸ்வரி said...
    “கணக்கு தப்புங்க மிஸ்” என்ற ரிகாஷின் கூற்றில் இருந்த நியாயம் உமாவிற்கு மட்டுமல்ல கௌரி டீச்சருக்கும் விளங்கவே செய்திருக்கும்.

    குழந்தைகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழ்கவேண்டும்..\\\\
    மிக்க நன்றி தோழர். குழந்தையளவுக்கு நாம் கூர் படுத்திக் கொள்ள இருக்கவே செய்கிறது என்பதையே குழந்தைகள் ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார்கள்

    ReplyDelete
  8. ///Uma said...
    “கணக்கு தப்பா?”

    “ஆமாங்க மிஸ்.”

    தெளிவாய் தெறித்தது பதில்.

    தெளிவான மாணவனையே விளக்கமளிக்க விடாமல் அடக்க நினைக்கும் ஈகோ,, ஆசிரியர்கள் விலக்கவேண்டிய ஒன்று என தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.


    ’ஈகோவே இல்லாதிருந்தது போல தோற்றமளித்த கௌரிக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் அது சத்தமே செய்யாமல் இருந்திருக்கிறது.’

    ஆனால் அதற்காக் கௌரியின் கண்கள் சிவந்திருந்து என வர்ணிப்பதெல்லாம் டூ மச்....\\\

    மிக்க நன்றி உமா.

    இதில் கொஞ்சம்தான் புனைவு.

    நானும்தான் போயிருந்தேன்.

    மிக அருமையான ஆசிரியை. கணக்கைப் போடாமல் அடம் பிடித்திருந்தால் அவர்கள் அம்மாவை அழைத்து இருக்கவே மாட்டார். அவங்க கணக்கை தப்பு என்று சொன்னதில் கண்கள் சிவக்க கைகள் நடுங்க நின்றிருந்ததைக் கண்ணாலக் கண்டவன்.

    ReplyDelete
  9. \\\G.M Balasubramaniam said...
    அழகான சிறுகதை. பாராட்டுகள்.///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  10. |||| manichudar said...
    யாரைத் தான் விட்டு வைக்கிறது இந்த ஈகோ. கௌரி டீச்சர் மாதிரி, . அதை புரிந்து ஏற்றுக் கொள்கிற மனம் இருக்கும் வரை பிரச்சனை இல்லை.. |||||

    மிக்க நன்றி மணிச்சுடர்.

    ReplyDelete
  11. Childrens are naturaly cute only thing we need to follow them

    I like it very much

    ReplyDelete
  12. உண்மை தோழரே..இது போன்று நிறைய அனுபவஙகள் கொட்டிக்கிடக்கின்றன.... ஆசிரியருக்கு தான் தெரியும் உண்மையான மாணவ மனநிலை. அனுபவம் கதையாக வடிக்கப்பாட்டதால் சுவையாக உள்ளது. உண்’மை’ யை கொண்டு எழு தியிருப்பதால் சுவை கூடியிருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க சரவணன்

      Delete
  13. antha paiyan correct aa thana solran.... nice story....

    ReplyDelete
  14. இன்றைய குழந்தைகளின் நிலைமை பெருவாரியான பள்ளிகளில் இதுதான் ஐயா...காலம் காலமாக ஆசிரியர்கள் இவ்வாரே பழக்கப்பட்டு விட்டார்கள் ...முதலில் ஆசிரியர் பயிற்சியின் போதே ஈகோவைப் புறம் தள்ளுவதுஎஎப்படி என பயிற்றுவித்தால்...ஆசிரியர் மாணவர் உறவு மேம்படும்...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...